Tuesday, June 24, 2014

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி” நாவல்

               
மதிப்புரை





 "கண்ணீர்த் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதைச் சட்டென்று நிறுத்திவிட்டான். கண்ணில் நிறுத்தப்பட்ட நீர் நெஞ்சில் நெருப்பாக எரியத் தொடங்கியது." (பக். 91)

                       நாவல் என்னும் பெருங்கனவைச் சுமந்து திரியும் காலம் படைப்பாளியின் வாழ்நாளில் மறக்க முடியாதது. புதுலாகிரி வஸ்துவை உட்கொண்டது போல போதை நிரம்பியவை. பிரக்ஞையின் ஊசிமுனையில் நிற்கும் போதை அது. தடுமாற்றங்களுக்கும் அலைக் கழிப்புகளுக்கும் இடையில் அவனது உள்ளுணர்வின் பரவசமும் அகங்காரமும் பூட்டிய இரட்டைச் சேணங்களாக அவனை வழிநடத்தி, வினாக்களின் பெரும்வெளியில் - முச்சந்தியில் அல்ல - நிற்கவைத்துவிட்டு மறைந்துபோகும். ஒருபோதும் அவ்வினாக்களைக் கண்டு அவன் திகைப்பதில்லை. திகைப்பை நோக்கி அவன் மனித நாடிமுள் நகர்ந்த மறுவினாடியில் அவன் சாதாரண மனிதநிலைக்குத் திரும்பிவிடுவான். ஓயாத சமர் ஒன்றை அந்த வினாக்களுடன் அவன் மனம் நிகழ்த்தியபடியே இருக்கும். இந்த யுத்தத்தில் அவன் நினைத்துப் பார்த்திராத கதவுகள் திறந்து வழிவிடும். அவன் வேண்டுவதும் அதுதானே? பெரும் படைப்புகள் உருவாகும் பின்னணி இதுதான்.



                      நாவல் உலகில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைக்கும் தற்போது மாற்றம் கண்டுவிட்ட சூழலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் கலையாற்றலோடு கூடிய பெரிய நாவல்கள் தோன்றித் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டன. இந்த வரிசையில் வரக்கூடிய நாவலாக பிரான்சிஸ் கிருபா 'கன்னி'யை உருவாக்கியிருக்கிறார். இங்கு மிகப் பல விமர்சகர்களும் செய்யும் பெரும்பிழை நாவலின் கதைச் சுருக்கத்தைக் கூறுவது. எந்த மன எழுச்சிக்கு ஆட்பட்டு ஒருவன் ஓங்கி எரியும் தன் கனவின் சுடரைப் படைப்பின் பக்கங்களில் எரியவைத்தானோ அந்த எழுச்சியை அது கேவலப்படுத்துவதன்றி வேறல்ல. வாசகனின் புத்தியை மந்தப்படுத்தி அவனைச் சோம்பேறியாக்குவதும் அப்படியான விமர்சகர்களின் கைங்கரியம்தான்.







                        மனப் பிறழ்வுகளைப் பற்றிப் பேசும் நாவல்கள் தமிழில் அரிதாகவே வெளி வந்திருக்கின்றன. நகுலனின் நாவல்களும் கோபிகிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', எம்.வி. வெங்கட்ராமின் 'காதுகள்' (ஓரளவிற்கு), ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரல்' (அருணாசலம்) போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இந் நாவல் மற்றவற்றிலிருந்து மாறுபடுவது காதல் எனும் மகத்தான உணர்வு மூலம் அந்நிலையை அடைவதனாலேயே. 'மோகமுள்'ளை ஒரு காதல் கதையாகக் கருதினாலும் முதிர்ச்சி பெற்ற வாசிப்பிற்குப் பின் அதில் மேலும் பல உட்கூறுகள் இருப்பதை அனுமானிக்க முடியும்.




                          வாழ்வின் நிமித்தம் துடுப்பசைத்துப் பருவத்தின் கரைக்குப் பலரும் வந்து சேர்வது போலத்தான் சந்தனப் பாண்டியும் காதலி சாராமீது அவன் கொண்டிருக்கும் விருப்பமும் பிரியமும் சொல்லி விளக்க முடியாதவை. அவளைக் கண்டபின் அவன் மனம் ஒரு நாளும் அமைதியாக உறங்கியதில்லை. எண்ணற்ற ஆட்கள் காதலைச் சாலை போலக் கடந்து சென்றுவிடும்போது பாண்டி மட்டும் ஏன் நிம்மதியிழக்கிறான்? நுட்பமாகப் பின்தொடர வேண்டிய கேள்வி இது. காரணம் 'மிக சூசகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் கூச்ச சுபாவி. பத்துப் பேர் இருக்கும் இடத்தில் பதினொன்றாகப் போய்ச் சேர ஆசைப்படுவானே தவிர, முதல் ஸ்தானத்திற்கு முண்டுபவனல்ல. அவன் மனவயல்களில் விளைந்திருக்கும் தானியத்தைப் பிளக்கும்போது அதில் நாம் கண்ணீரின் துளியையே காண்கிறோம்.





                       இருவேறு பின்னணி கொண்ட பெண்களோடு அவன் மனம் நெருக்கம் கொள்கிறது. பாண்டி பால்ய வயதிலிருந்தே பெரியம்மா மகளான அமலாவின் நிழல்போல வளர்கிறான். அவளைப் பழிச்சொல் பேசியவனைப் பள்ளியில் ஓடவிட்டு விரட்டிப் புரட்டுகிறான். அவன் புனைபெயரை 'அமலா தாஸ்' என மாற்றிக்கொள்ளுமளவு அது தீவிரம் பெறுகிறது. வீட்டின் செல்லக் குட்டி என்றாலும் அமலாமீது கர்த்தரின் குழந்தை என்னும் புனிதம் சுற்றியிருப்பவர்களால் கவிழ்க்கப்படுகிறது. அது பற்றிய எந்த உயர்ந்த அபிப்ராயமும் அவளுக்கில்லை. லௌகீக உலகின் மீது சிறு சலனம் அவளுக்கு உண்டென்றாலும் அதை இறையியல் மூலம் கடந்து சென்றுவிடுகிறாள் ("பியூரிடிக்கு ஒருபவர் இருக்கு, எல்லா விதத்திலயும் வணங்கித்தான் ஆகணும். வேற வழியேயில்ல - குறிப்பா ஆண்களுக்கு" - அமலா). பாண்டிக்கு அவன் தொழும் நிலையிலேயே இருக்கிறாள். அவன் வாழ்விலிருந்து அமலா நழுவிச் செல்கையில் முதல் அடி அவன்மீது இறங்குகிறது.



                         இடையீடாகக் குறுக்கிடும் வேறு இரு பெண்களை (விஜிலா, மரிய புஷ்பம்) நிராகரித்ததற்கான மனக்குறை பாண்டியின் மனத்தில் விழுந்திருப்பது அவனைப் போலவே நமக்கும் தாமதமாகத்தான் தெரியவருகிறது.

                      சாராவின் முக்கியத்துவத்தை அமலாவோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும். சாராவின் பின்னணி எதுவும் நாவலில் இல்லை. புத்தியில் பிறழ்வுக்கான சமிக்ஞைகள் ஏற்படத் தொடங்குகிறபோது, தன் பெயரைச் 'சாரோன்' என்கிறான். அதுபோலவே பாண்டிக்கு சாரா அறிமுகமான கணத்திலிருந்து இருவருக்குமிடையில் ஒருவருமில்லை. அவ்வப்போது வந்து செல்பவர்கள் கார்ட்டூன் பாத்திரங்களைப் போலத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஏலம் சம்பந்தப்பட்ட இடம் தவிர, கொடியேற்ற உற்சவத்தின்போது இருவரது சந்திப்பும் நிகழ்கிறது. அத் தருணம் நாவலில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முடிவற்ற யாத்திரையின் வாயிலாக யாத்ரீகன் கண்ட அற்புதமான விடிகாலையைப் போன்றது அது. அது அவன் வாழ்வில் பொற் கணம் அல்லவா? பாண்டி, சாராவின் கண்கள் பரஸ்பரம் இமைக்காமல் சந்திக்கும்போது, கம்பத்தின் உச்சிக்குக் கொடி சென்றுவிட்டிருக்கிறது. இருவருக்குமான ஊடாட்டங்களும் நுட்பமான புறக்கணிப்புகளும் மனத்தில் காட்சியாக விரியும்போது, நம் சுய நினைவிலிருந்து ரகசியமான பக்கமொன்றைக் கிழித்தெடுத்து நம்முன் காட்டுவதுபோல இருக்கிறது. உள்ளூர நடுக்கத்தை மறைத்தபடியே புன்னகையோடு அதை அசைபோட்டுக் கொள்கிறோம்.



                       பாண்டிக்குச் சிறுவயதில் அப்பமொன்றைத் திருடிவந்து அமலா ஊட்டுகிறாள் (பாதிரிகளே அப்பத்தைத் தர முடியும்). பின்பு சாராவைக் கண்ட மற்றொரு நாளில், பிரார்த்தனைகள் முடிந்து அப்பத்தைப் பெற வரிசையில் அவளுக்கு முன் அவன் நின்று, பாதிரியிடம் பெற்றுக்கொள்ளும் தறுவாயில் அப்பத்தை நழுவவிடுகிறான்.

                         அமலா கன்னியாஸ்திரி ஆகும் முன் அவளுக்கு அவன் மஞ்சள் சுடிதாரைப் பரிசளிக்கிறான். தேர் பவனி நடக்கும் இரவொன்றில் நேசம் கொண்ட இருமனங்கள் தங்கள் உடலின் ஊடாகப் பிரியத்தைப் பதற்றமாக அறிகின்றன. அவ்விரவிற்கு மறுநாள் சாராவும் மஞ்சள் வெயிலில் பாண்டியை நிற்கவைத்துவிட்டுப் பிரிந்துபோகிறாள்.   முந்தைய இரவில் மஞ்சள் பூவைப் பற்றி இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவனைப் பிரியும்போது அவள் மஞ்சள் சுடிதாரை அணிந்திருக்கிறாள். மஞ்சள் நிறத்திற்கும் மனப்பிறழ்வுக்குமான நெருக்கத்தை இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

                    மனம் பிறழ்ந்து விலங்கிட்டுக்கிடக்கையில் அவனுக்குள் உண்டாகும் வினோதமான கற்பனைகள் வெறும் காட்சிகள் அல்ல. அவற்றிற்கும் அவனது கடந்த காலத்திற்கும் மிக நுண்ணிய இழைகளினாலான தொடர்பிருக்கிறது. அவ்வாறு உணரும் பட்சத்தில் அதனைத் தரிசனமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். கரையில் வரிசையாக விளக்கேந்தி வரும் பெண்களில் சுடர் அணைந்துபோகும் விளக்குடையவள் சாராவாக அன்றி வேறுயாராக இருக்க முடியும். கண்ணீரால் நிரம்பிய செப்புத் தலை மனிதன் அவனின்றி வேறு யார்?




                          கரைமணலைக் களங்கப்படுத்திவிட்டு வரும் பொழுதுபோக்கியல்ல அவன். அவன் மனதிலும் கவிதைகளிலும் சதா அலைச் சத்தம் கேட்டபடியேயிருக்கிறது ("கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்றுவிட்டுவருகிறேன்"). நாவலை, கிருபா படிமங்கள் மூலமே நகர்த்திச் செல்கிறார். மிக அருகருகே அமைந்த படிமங்கள். கவிமொழியை எட்டித் தொட்டுவிடும் அண்மையில் உரை நடையை அனாயாசமாக உருவாக்கியிருக்கிறார்.

                          கிருபா தனது கவிதைகளைப் பாண்டியன் மூலமாக நாவல் முழுக்கப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். கூடவே தேவ தேவனுடைய கவிதைகளையும் அடர்த்தியான படிமங்களைக் கொண்ட கவிதைகள், சாராவைக் கண்டதும் ரொமான்டிக் தன்மையைக் கொண்டுவிடுகின்றன.

                        நாவலின் முக்கியமான குறையாகப்படுவது யதார்த்தத் தளம் போதுமானதாக இல்லாததுதான். கற்பனைகளில் சஞ்சரிப்பது, காட்சிப் படிமங்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே யதார்த்தத் தளத்தை உருவாக்குவதும். இதில் பாண்டியின் பால்ய காலம் நன்றாக வந்திருக்கிறது. அவன் இளைஞனாகி அலையும் நாட்கள் நாவலில் தொய்வை ஏற்படுத்துகின்றன.




                       நேர்கோட்டுப் பாணியைத் தவிர்த்துவிட்டுக் குறுக்குவெட்டாக, உள்மடிப்புகளைக் கொண்டதாக நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றினூடாக உள்ள இடைவெளிகளை வாசிப்பின் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ளும்போதுதான் ஒரு நாவலின் மகத்துவம் நமக்குப் புரியும்.


                           தனது மூன்று கவிதைத் தொகுப்புகள் மூலம் கவனமும் வலியோடு முறியும் மின்னல் மூலம் அங்கீகாரமும் பெற்ற ப்ரான்சிஸ் கிருபா என்ற கவிஞர் தன் முதல் நாவலை, அதற்குரிய எந்தச் சலுகையையும் கோராமல், சிறப்பாகப் படைத்திருக்கிறார்.

                             நாவலை மிகச் சிறப்பாக, அழகுணர்ச்சி ததும்ப வெளியிட்டிருக்கும் தமிழினி பாராட்டிற்குரியது.

கன்னி -நாவல் -ஜெ.பிரான்சிஸ் கிருபா -தமிழினி பதிப்பகம்

(நன்றி : காலச்சுவடு ஜூன் 2007)

கோட்டோவியம் : அனந்த பத்மநாபன்

No comments:

Post a Comment