இருபதாம் ஆண்டு
சுந்தர ராமசாமியுடனான அறிமுகமும் இலக்கியத்துடன் எனக்கேற்பட்ட உறவும் வெவ்வேறானவை அல்ல. அது முன்னும் பின்னுமான பக்கங்கள் கூட அல்ல. இரண்டுக்கும் ஒரே முகம். சொல்லப்போனால் கண்விழித்த முதல் முகம் அவர்.
20,21 வது வயதில் விபத்து போல இலக்கியத்திற்குள் (அதை பற்றி எழுதியிருக்கிறேன்)வந்தேன். அதாவது சு.ரா-வை படித்தேன். ஊர் நூலகத்தைத் திருப்பிப் போட்டு உலுக்கியதில் அவரது ஆக்கங்கள் நல்லூழ் போல அடுத்தடுத்துக் கிடைத்தன. தாமதிக்காமல் கடிதம் எழுதினேன். அதற்குள் பரவலாக பிறரையும் வாசித்து விட்டிருந்தேன். அவருடன் தொடர்பு ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குள் நாகர்கோவில் சென்று அவரை சந்தித்துத் திரும்பினேன். மேலும் கடிதங்கள் தொடர்ந்தன. அவரது புனைவுகளும் கட்டுரைகளும் எனக்கெழுதிய கடிதங்களும் எழுதும் கனவை என்னுள் விதைத்திருக்கலாம். போதாததற்கு ஒரு வாரம் கடிதம் எழுதத் தாமதித்தால் ஏன் எழுதவில்லை எனக்கேட்டு அவரிடமிருந்து கடிதம் வந்துவிடும்.
22-வது வயதில் முதல் கதையை எழுதி விட்டிருந்தேன். சுவாரஸ்யம் என்னவென்றால் இரண்டாவது சந்திப்பில் இந்த கதையை அவரிடம் சொன்னேன். எவ்வளவு பேரைப் பார்த்திருப்பார்..! ஆர்வக்கோளாறாக பையன் இருக்கிறானே என நினைத்திருக்கலாம். சில நிமிடங்களிலேயே சிரித்த முகத்துடன் ‘எழுதிருங்களேன். வாசிச்சறலாம்.’ எனத் தடுத்து நிறுத்தி வேறொரு தலைப்பை நோக்கி பேச்சை மாற்றிவிட்டார். அதில் சமர்த்தர் அவர். ஏனென்றால் அது நமக்கு தெரியவும் தெரியாது.
கதையை காலச்சுவடுக்கு அனுப்பினேன். மூன்று மாதங்கள் ஆகியும் பதிலில்லை. அவர்களுக்கு விஷயத்தை விளக்கி கடிதம் எழுதினேன். இரு மாதங்கள் கடந்த பின்னும் கப்சிப். விட்டேனா பார், என மீண்டும் ஒரு கடிதம். பிறகு தான் விஷயம் புரிந்தது. கதையை தொலைத்து விட்டிருக்கிறார்கள். கைவசம் பிரதி இருந்தால் அனுப்பவும் எனக் கடிதம் வந்தது. புது எழுத்தாளன் என்றால் அதுவும் கத்துக்குட்டி என்றால் ஒரு அசால்ட் தானே..! ஜெராக்ஸ் காப்பியை அனுப்பினேன். அன்றைய பொறுப்பாசிரியர் அரவிந்தனிடமிருந்து அடுத்த மாதம் கடிதம் வந்தது (இக்கடிதத்தை எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை) கதையின் சிறப்புகளைப் பாராட்டி விட்டு பலகீனமாக இடங்களை சுட்டிக் காட்டி கதையில் ’ஏதோவொன்று’ குறைகிறது. அதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும். திருத்தி எழுதி நீங்கள் திருப்தியாக உணர்ந்தால் அனுப்புங்கள் என்றது கடிதம் (இன்று இதெல்லாம் வழக்கத்திலேயேயில்லை. திருத்தியோ மாற்றியோ எழுதச் சொன்னால் வேறு அச்சு, இணைய இதழ்களில் வெளியிட்டுக் கொள்கிறார்கள்).
இரண்டு முறை வெவ்வேறு அமர்வுகளில் இக்கதையை திருத்தியும் சிலவற்றை நீக்கி சிலதைச் சேர்த்து
எழுதினேன்(என் முதலிரு தொகுப்புகளில் உள்ள கதைகள் அனைத்துமே கைகளால் எழுதி அனுப்பியவையே). அதற்குள் 7,8
மாதங்கள் ஓடிவிட்டன. அனுப்பிய மூன்று நான்கு மாதங்களுக்குப் பின் காலச்சுவடு ஆகஸ்ட்2005 இதழில் என் முதல் கதை ’கதவு எண் 13/78’ பிரசுரமானது.
எழுதி பிரசுரமாகக் கிட்டத்தட்ட ஒருவருடம் ஆயிற்று. இதழுக்கு வந்திருந்த பல கதைகளை தேவிபாரதியிடம் கொடுத்ததாகவும் அவற்றில் என் கதையை போடலாம் என அவர் தெரிவு செய்ததாகவும் பின்னர் அறிந்தேன். அவர் தெரிவு செய்ததில் தான் மீண்டும் பணி செய்யச் சொல்லி அரவிந்தன் எழுதியிருக்கிறார். இப்படி தான் கே.என்.செந்தில் இலக்கிய உலகத்திற்குள் எழுத்தாளனாக நுழைந்தான். (ஏன் தான் நுழைந்தானோ எனக் கேட்டால், பாவம் அவன் என்ன செய்வான்? அவன் தலையெழுத்தும் வாசகர் தலையெழுத்தும் அப்படி என்பதே பதில்) மேற்சொன்ன அனைவருக்கும் உளமார்ந்த நன்றி. நிற்க.
இன்றுடன் முதல் கதை வெளியாகி இருபதாண்டுகள் ஆகின்றன. இன்று மாலை என் வலைப்பூவில் இக்கதையை வெளியிடவிருக்கிறேன்.
சு.ரா 2005-ம் ஆண்டு அமெரிக்கா செல்வதற்கு முன் எனக்கு சில நூல்கள் அனுப்ப வேண்டும் என விரும்பி தொலைபேசச் செய்தார். அப்போது ‘நான் அங்க போயிடுறதால லெட்டர் போடாம இருக்க வேண்டாம். மெயில் ஐடி கொடுத்துட்டு போறேன். மெயில் பண்ணுங்கோ..’ என்றார். அப்போது தான்
மெயில் ஐடியை கிரியேட் செய்தேன். இரண்டாவது மின்னஞ்சலில் என் சிரமத்தை புரிந்து கொண்டு தமிழை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து அனுப்பிவிட்டு
என் பதிலை எதிர்பார்ப்பதாக மின்னஞ்சல் செய்வார். உண்மையில் நான் அப்படி என்ன எழுதிவிட்டேன்? அப்படி என்ன தான் அவர் புல்லரிக்கும்படி பேசி விட்டேன்? ஒன்றுமேயில்லை. ஆனால் இந்த அக்கறை மிக அபூர்வமாகப்பட்டது. அவர் பார்க்காத எழுத்தாளர்களா? சிந்தனையாளர்களா? கடிதங்கள் மட்டுமே எழுதிய அவரது பேரனை விடவும் இளையவனான அரை நூற்றாண்டு வயது வித்தியாசம் உடைய என்னை ஏன் இப்படி ஊக்கப்படுத்த வேண்டும். நல்லது அவருக்கு எழுதிய கடிதங்கள் வழி இவனுக்கு எழுத ஆசை இருக்கிறது, கொஞ்சம் திறமையும் இருக்கிறது
எனக் கண்டுகொண்டிருக்கலாம். ஒன்றுமே எழுதாதவனிடம் ’உங்களால் நன்றாக எழுத முடியும்’ என ஏன் சொல்ல வேண்டும்? சம்பிரதாயமாகவா? இல்லையே. ஏனெனில் அவருக்குக் கடிதங்கள் எழுதிய எழுத்தாளர் அல்லாத பிறரிடம் கேட்டிருக்கிறேன். அப்படியெல்லாம் சொன்னதில்லை என்பதே பதிலாக இருக்கிறது. அந்த பெரிய ஆத்மா ஏன் இப்படி பிறரை பற்றி இத்தனை கரிசனை கொண்டதாக வாழ்ந்தது? எப்படி அந்த மனத்தை அவர் அடைந்தார்? என் வாழ்க்கையில் நான் பார்த்த மாமனிதர் அவர். சு.ராவை அவர் பிறந்த பிராமண சாதியை வைத்து விமர்சனம் செய்த போது மிகவும் நொந்து போனேன். சாதி உணர்வே அற்றவர் அவர். சாதியை பொதுவெளியில் நிந்திப்பவர்கள் உள்ளே எத்தகைய ஜாதிமான்களாக இருக்கிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம் இல்லையா..! எழுத்தாளர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன்.
நான் மிக இயல்பாகவும் சாகவாசகமாகவும் உணர்ந்த ஒரே பிராமண வீடு அது தான். வீட்டிலுள்ளவர்களும் அப்படி தான் இருப்பார்கள். அங்கு சென்ற எத்தனையோ பேர் இதை உணர்ந்துமிருப்பார்கள்.
என் முதல் கதை பிரசுரமான விவரத்தை தெரிவித்து சு.ரா-வுக்கு மின்னஞ்சல் செய்திருந்தேன். அதற்கு முன்பே பல மின்னஞ்சலில் பேசிக் கொண்டு தான் இருந்தோம். படிக்கிறேன் என பதில் எழுதினார். ஆகஸ்ட் 10-15 தேதிகளில் கதையை வாசித்து விட்டு இன்று வரை மனதில் ஏந்தும் வரிகளைக் கொண்ட மின்னஞ்சலை அனுப்பினார். அன்று கைகளால் மேகத்தை கலைத்து விளையாடுமளவுக்கு வளர்ந்து விட்டிருந்தேன். 23 வயதுக்காரனுக்கு அவ்வரிகள் எத்தகைய மகிழ்ச்சியை அளித்திருக்கும்.! வியப்பாக இருக்கிறது. இப்படி எங்கோ ஒரு மூலையில் இருப்பவனுக்கு , தன்னை தேடி வந்தவனுக்கு, உடல்நலம் குன்றிய நிலையிலும் கடிதம் எழுதத் தோன்றியதே.! (கடிதத்தைக் கீழே கொடுத்திருக்கிறேன். நேற்று இரண்டு மணி நேரம் தேடினேன். அன்று என்னிடம் கணினி இல்லாததால் பிரிண்ட் எடுத்து வைத்துக் கொண்டது எவ்வளவு நல்ல முடிவு). நேற்றிரவு கடிதத்தை வாசித்தபோது கண்கள் கலங்கி விட்டன. ஏன் இதையெல்லாம் பெரிய ஆளுமையாக விகசித்துக் கொண்டிருக்கும் ஒருவர், சிறிய பையனுக்குச் செய்ய வேண்டும்?
***********
அன்புடன் செந்தில்,
உடல்நிலை முன்னேறி வருகிறது.
நிறைய படிக்கிறேன்.
கணினியில் உட்காருவது இல்லை.
டாக்டர் பார்த்துக்கொண்டு இந்தியா போகலாம் என்கிறார்.
‘புதிய பார்வை’ பத்தி விரும்பி படிக்கும்படி இருந்தது மகிழ்ச்சியைத் தந்தது.
கே.சி-யில்(காலச்சுவடில்) உங்கள் கதையை விரும்பி படித்தேன். மிகவும் வித்தியாசமாக இருந்தது. மொழியை நுட்பமாகக் கையாண்டு இருக்கிறீர்கள்.
தொடர்ந்து எழுதுங்கள்
பெரிய காரியங்களை உங்களால் செய்ய முடியும்.
என் வாழ்த்துகளுடன்
சு.ரா.
(ஆகஸ்ட் 10-15 தேதிக்குள் எழுதப்பட்டிருக்கலாம். செப்டம்பரில் அவர் உடல்நிலை மோசமடைந்தது. அக்டோபர் 15 2005ல் மறைந்தார்)
மானசீகமாக இன்றும் அவருடன் பேசுகிறேன். எழுத்து சார்ந்து நான் ஏதேனும் அடைந்திருந்தால் அதன் முதற்புள்ளியும் காரணகர்த்தரும் அவரே. அதே எழுத்து வழியாக ஏதேனும் சிறுமைகள் புரிந்திருந்தால் அதன் முழுப்பொறுப்பும் என்னை மட்டுமே சேரும். அவர் அறிமுகம் ஏற்பட்டிருக்கவில்லையென்றால் இந்த இடத்தில் நான் சிறு துளியளவாகக் கூட இருந்திருக்க வாய்ப்பில்லை. சூழ்ந்த கடும் பிரச்சினைகளில் சாதாரணணாக இருந்து தட்டழிந்து போயிருப்பேன்.
‘சார்.. எப்போதும் நான் உங்கள் மாணவன். உங்களுக்கு என்றுமுள்ள என் பணிவான வணக்கங்கள்.
fine
ReplyDelete