Monday, September 30, 2024

தொடுகை

 

தொடுகை


சின்னக்கண்ணுக்கு கண் தெரியாது. அத்தகையவர்களுக்கு இயல்பிலேயே உள்ள கூர்மையானப் புலனுணர்வு அவருக்குச் சற்று அதிகமாகவே இருந்தது. எனவே செவியாலும் நாசியாலும் அவரது உலகம் பின்னப்பட்டிருந்தது. அபூர்வமாக எங்கேனும் தடுக்கியோ தவறியோ விழ நேர்ந்தாலன்றி அவருக்கு தன் குறை பற்றிய போதமே எழாது. குள்ளத்திற்கும் இரு விரற்கடையளவுக்கு கூடுதல் உயரம். எழுதாத கரும்பலகை போன்ற நிறம்ஒண்ட வெட்டிய தலையில் சிறு கோரைப்புற்கள் நீண்டிருப்பது போல காணப்படும் முடியில் எப்போதும் தேங்காய் எண்ணெய்யின் மினுமினுப்பு பளிச்சிடும். மூன்று நாளத்திய ரோமம் போல மீசை. பிரதான கட்சியொன்றில் கழக ஒன்றிய இணைச் செயலாளராகவும் இருந்ததால் கூடுதல் மதிப்புடன் திகழ்ந்தார். அங்கு நாளிதழை அவருக்கு வாசித்துக் காட்டும் நேரம் அறிந்து படிக்காத சிலரும் கட்சி ஆபிஸின் வாசற்படிக்கருகிலிருந்து கேட்பதுண்டு. கையடக்க டிரான்சிஸ்டர் மூன்றாவது காது போல இடது காதின் ஓரம் எப்போதுமிருக்கும். அதில் ஒலிக்கும் பாடல்கள் கூட்டிச் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவரால் மிதந்து செல்ல முடியும். அப்போது முகமே வேறு மாதிரி ஆகிவிடும். அரசியல் செய்திகளில் அவருக்கு உவக்காததைக் கேட்க நேர்ந்தால் பச்சையாக கெட்ட வார்த்தைப் பேசுவார். பிறகு அங்குள்ள எவரையேனும் பெயர் சொல்லி அழைத்து 'போலமா?' எனச் சத்தமாக கேட்பார். சிறுவயதில் காது கேளாதவர்களுடன் புழங்கியது போல கொஞ்சம் இரைந்து தான் பேசுவார். 'படிக்கட்டுங்க சின்னு, பள்ளம், கல்லு கிடக்கு' என்கிற அறிவிப்புக்கு ஏற்ப பற்றி இருப்பவரின் கையை இறுக்குவதும் தளர்த்துவதுமாக நடப்பார். அப்போது மட்டும் தான் கவனம் நடையில் தெரியும். அவருக்குப் பார்வை போனது பிறவியிலிருந்தா, அம்மை நோய் தாக்கியதாலா, கடும் காய்ச்சல் மூலமாகவா என்கிற ஹேஸ்யங்கள் அவ்வப்போது உலவி காற்றில் மறைந்து விடும். அவர் நடந்து செல்லும் போது தெருவாசிகள் அவரைக் கண்டு விட்டால் தங்கள் வறண்ட பகல்களுக்கு சளசளப்பைக் கொண்டு  வர பேச்சை அவர் பக்கமாக அந்த ஹேஸ்யங்களை உறுதிப்படுத்தும் முனைப்புடன் வாயாடுவார்கள். தாம்பாளத்தின் விளிம்பு போன்றிருக்கும் மோவாயைத் தூக்கி மென்ற வெற்றிலையின் கொழகொழப்பை தெரு மணலில் உமிழ்ந்த பின் பேச்சைத் தொடர்வார்கள். அது அப்படியே ஒவ்வொரு வீடுகளின் படியேறிச் சென்று  படுக்கையறைகளைத் துழாவி பார்த்து திரும்ப வரும் போது எங்கோ பிசிறு தட்டிச் சிக்கலாகிவிடும். அதன் காரணகர்த்தர்கள் ஜாடைமாடையில் ஒருவர் மற்றவரின் நடத்தை பற்றின அபிப்ராயங்களை நேர்த்தியாகக் கோர்த்து தோரணமாக்கிப் பிறர் முன் அசைத்துக் காட்டுவார்கள். சட்டென பூசல் உருவாகிவிடும். அவர்கள் போடும் சத்தத்தில் மரத்திலிருக்கும்  காக்கைகள் பயந்து எழுந்து பறந்து வீட்டு கூரைகளில் அமர்ந்து கழுத்தை எல்லா பக்கமும் திரும்பி பார்த்தபின் யார் வரவையோ அறிவிப்பது போலக் கரையும். வாய்ச்சண்டையில் யாரை அடக்குவதென தெரியாமல் ஆளுக்கொருவராக எழுந்து சென்றதும் தான் அந்த ஜமா கலையும். அங்கு சில நிமிடங்கள் சிரிப்புடன் நின்று அவர்கள் பேசுவதைக் கேட்கும் சின்னக்கண்ணு அவர்களின் யூகங்கள் எதையும் ஆமோதிப்பதுமில்லை, மறுப்பதுமில்லை. மாறாக பேச்சின் நடுவே அவர்களில் எவரேனும் ஏப்பம் விட்டால் கூட அது யாரென்று சரியாகச் சொல்லி அதன் மணத்தை பிடித்து என்ன உண்டார் என்பது வரை அம்பலப்படுத்துவார். சம்பந்தப்பட்டவரின் பிளந்த வாய் மூடுவதற்கு முன் அவர் தெருமுனையைக் கடந்து விட்டிருப்பார். ஏனெனில் அவரது நடை நிதானமானதல்ல. கடைசி பேருந்தைப் பிடிக்கச் செல்லும் வேகம் நடையில் தெறிக்கும். சில சமயங்களில் கூட்டிச் செல்லும் ஆட்களை அவர் இழுத்துச் செல்கிறாரோ என்று தோன்றும். உள்ளங்காலில் ரப்பர் செருப்பு அடிக்கும் தப் தப் என்கிற ஓசை தொலைவிலெங்கோ கல்லில் துணி அடித்து துவைப்பதை கேட்பது போலிருக்கும். அழைத்துச் செல்லும் ஆட்களுக்கு ஏற்ப அவர் ஓயாமல் பேசியபடியே நடப்பவராகவோ  ’ம்..’ மட்டும் கொட்டி வெறுமனே பின் தொடர்பவராகவோ மாறுவார்.




அரசு அவருக்கு வழங்கியிருந்த டெலிபோன் பூத் வரைக்கும் வந்து விட்டு செல்லும் ஆட்களில் சிலர், அவர் அந்த தகரப்பெட்டிக்குள் நுழைந்ததும் எந்திரம் போல மடமடவென ஒயர்களை இணைத்து நாற்காலியை எடுத்துப் போட்டு ஒரு கணிதச் சமன்பாட்டை ஆர்வத்துடன் விடையை நோக்கி கொண்டு செல்லும் ஊக்கமிக்க மாணவனைப் போலச் செயலாற்றுவதைக் கண் மூடாமல் பார்த்தபடி நிற்பார்கள். அதது அந்த இடங்களில் மிகச் சரியாக நகர்ந்தப்பட்டு அவர் தன் இருக்கையில் அமர்ந்து ஒலிவாங்கியைக் காதில் வைத்து சோதித்துத் திருப்தியாகத் தலையசைத்த பின் நாணயங்களை கூறுகளாக்கிப் பிரித்து வைப்பார். சந்தைக் கடையில் காய்கறிகள் போல அவை நாளிதழின் மேல் பரப்பப் பட்டிருக்கும். அது பேருந்து நிலையத்தின் முகப்பு என்பதால் உடனடியாக ஆட்கள் தொலைபேச வந்து விடுவார்கள். கூண்டுக்குள் சென்று அழைப்பை பிடிக்க முடியாதவர்களுக்கு, படிப்பறிவற்றவர்களுக்கு இவர் அந்த டெலிபோன் எண்களை துல்லியமாகச் சுழற்றி அத்தனை இரைச்சலுக்களுக்கிடையே ஏதோ ரகசியம் போல நன்றாகக் குனிந்து சிரித்தவாறே நிமிர்வார். எதிர்ப்பக்கத்து  'ஹலோ..' வை புன்னகையால் வரவேற்பார்பிறகு ஐயத்துடன் நிற்பவரைப் பார்த்துச் சாதாரணமாக 'உள்ள போயி எடுத்து பேசு கண்ணு..' என்பார். நம்பிக்கையற்று உள்ளே செல்பவர்கள் அந்தக் கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தபடியே பேசிக் கொண்டிருப்பார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றாலும் உண்டியல் ஏந்தி வரும் சிவப்பு, மஞ்சாளாடை பெண்களுக்கு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து விரல்களால் அதன் சுற்றளவை அளந்து பார்த்த பின் இடுவார். 50 பைசாவுக்கு  அரைமணி நேரம் சைக்கிள் வாடகைக்கு கிடைத்த காலம் அது. தேவையின்றி ஒரு பைசா கூட வெளியே போகாது. படிக்க யாரேனும் கேட்டால் மனமுவந்து தருவார். 'ண்ணா ஓரமா போயி சிகரெட் குடிங்ணா..' அலட்சியமாக அதை மதிக்காமல் மீண்டும் புகை அவரை எட்டினால் 'நல்ல வார்த்தையில சொன்னா கேட்க மாட்டீங்க.' குரலில் கடுகடுப்பு மிகுந்திருக்கும். 'ரோட்ல நின்னுட்டு புகை உடுறதுக்குல்லாம் பண்ணாடித்தனம் பண்ணா யெப்படி? என கேட்பதற்குள், நாளிதழ் பறக்காமல் இருக்க வைக்கப்பட்ட கட்டையை அவனை நோக்கி எறிந்து விட்டிருந்தார். சுதாகரித்து அவன் விலகாது போயிருந்தால் மண்டை பிளந்திருக்கும். 'மிதிச்சன்னா உங்காயா கிட்ட குடிச்ச பாலெல்லாம் வெளிய வந்திரும் தாயளி..' அவர் எழுந்து கைகளால் காற்றைத் துழாவி திசையறிந்து கடைக்கு வெளியே வந்திருப்பார். அவரை நன்றாக அறிந்தவர்கள் அருகில் இருந்திருந்தால் கோபத்தில் உச்சந்தலை முடி நிமிர்ந்து நிற்பதைப் பார்த்திருக்க முடியும். பணிந்து பிறகு தாங்காமல் வீறு கொண்டெழுந்தால் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அவரது கோபம் பிரசித்திப் பெற்றது


சிறிது காலம் கட்சி ஆபிஸில் தங்கியிருந்தவர் வேறு பக்கம் மாறினார். அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடன் அழைத்துச் செல்லும் ஆட்களுக்கும் தட்டுப்பாடு உண்டான போது திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தார். ‘கனி..’ என்றழைக்கப்பட்ட சற்றே மனம் பிசகிய பெண் அவளுக்கு வாழ்க்கைத்துணையானாள். ஓயாமல் பேசிக் கொண்டே இருப்பாள். இவர்ம்..’ மட்டும் தான். அவள் வெறும் வழித்துணை மட்டும் தான் என நினைத்தவர்கள்  அடுத்த இரண்டாவது மாதத்தில் தங்கள்  சேலை முந்தானையால் வாய் பொத்திக் கொண்டார்கள். அவள் கருவுற்றிருந்தாள். நமட்டுச் சிரிப்புகளில் அந்தரங்கங்கள் விழுங்கப்பட்டன. அதைப் பற்றிப் பட்டவர்த்தனமாகப் பேசிய இடங்களிலிருந்து பெண்கள் மனமேயின்றி பிறரது பார்வைக்கு நாணி நின்று கேட்டால் என்ன சொல்வார்களோ என நினைத்து அங்கிருந்து நகர்ந்தார்கள். கிழவிகள் கால் நீட்டி அமர்ந்து தாங்கள் கரு உண்டான காலத்தை ரசம் கூட்டி வக்கனையாக பேச ஆரம்பித்தார்கள். குமரன்கள் வெட்கி அப்பால் செல்லும்படி பேச்சில் கூடலின் தினுசுகள் விவரிக்கப்பட்டன. தொலைவில் தடியூன்றியபடி அவர்களை நோக்கி வரும் கிழவனைக் காட்டிஇந்தா எங்காளு வருது. வாலிபத்துல எப்படி இருப்பான் தெரியுமா..? ராத்திரியாவது பகலாவது ஒரே கும்மாளம் தான் போ..ரத்தம் சுண்டுச்சுனா பொறகு யென்னயிருக்கு? ஆனா இன்னும் தடி கனமா தான் இருக்குமாட்டயிருக்குது..’ என அண்ணாந்து நூல்கட்டின கண்ணாடியை சரிசெய்து கிழவனைப் பார்த்தாள். அதன் உள்ளர்த்ததைப் புரிந்து கொண்ட கிழங்கள் வாய் கொள்ளாச் சிரிப்புடன் அவளை செல்லமாக அதட்டி அடக்கினார்கள். அதற்குள் அவர் அருகில் வந்து விட்டிருந்தார். ‘உன்ற கங்காச்சியை தான் சொல்லீட்டிருந்தேன்..’ அவருக்கு அதற்குள் மூச்சு வாங்கியது. சுள்ளென்ற வெயில். கல் மீது அமரப்போனவர் சரிந்து விழுந்தார். கிழவி பதற்றமாகிஏன்யா சித்த நின்னு வரலாமல்ல. நானென்ன கொமரியாவா இருக்கேன். என்னப்பாக்க இப்படி ஓடியாற..’ ஆனால் அவரால் பேச முடியவில்லை. ‘டேய்..’ எதிர்வீட்டைப் பார்த்து குரல் கொடுத்தாள். ‘சொம்புல தண்ணிய கொண்டு வா. எங்கூட்டு ஆம்பளைக்கு..’ நீர் வந்ததும் அவரது தெளிந்த முகத்தைப் பார்த்த பிறகு நிம்மதியாளாள். அவரும் அவளிடம் அதைச் சொல்ல  தான் வந்திருக்கிறார். சின்னக்கண்ணு அவரது மகன் வயதுடையவர். ஏழெட்டு ஆண்டுகள் ஆகியும் மகனுக்கு இன்னும் குழந்தையில்லை. கிழவி எழுந்து அவர்கள் இருவரும் செல்லும் திசை பார்த்துஒனக்கொரு நிழல் கிடைச்சது சின்னு. இனி உன்ன காப்பாத்த ஆளும் வரப்போகுது. அது பூ மாதிரி உலகத்துக்கு வந்தரணுஞ்சாமி..’ என்ற போது கண்களில் நீர் உருண்டு மண்ணில் விழுந்தது. கிழவர் மூக்கை மட்டும் உறிஞ்சினார்அவர் தன் மகள் வழி பேரனை எண்ணிக் கொண்டார் போலும், ‘ராசம்மா பய்யன ஒரெட்டு போய் பாத்துப்போட்டு வர்லாமா? கண்ணுக்குள்ளயே நிக்கறான்என்றார். ’செரி வேட்டிய மாத்திட்டுக் கிளம்பு . ஒன்றரை மணி பஸ்ஸிக்கு போலாம்..’ எனக் காத்திருந்தவள் போல சட்டென எழுந்து விட்டாள். அவளுக்கு பின்னால் செல்லும் கிழவரின் நடையில் வரும் போதிருந்ததை விடவும் வேகம் மிகுந்திருந்தது.


கனியின் நடை ஒரு ஆடல் போலிருக்கும். மொத்த உடம்புமே குலுங்குவது போல நடப்பார். உடை சார்ந்த உணர்வு அவருக்கு பெரும்பாலும் இருக்காது. யாரை பற்றியேனும் புகார் கூறியபடியே அவருடன் நடப்பார். வயிறு பெருக பெருக அவர் நடமாட்டம் அருகியது. குழந்தை வயிற்றிலிருப்பது கூட தெரியாமல் படிகளைக் குதித்து தாண்டுவார். எந்நேரமும் வாய் அரைத்துக் கொண்டே இருக்கும். அவரும் கேட்பதையெல்லாம் அடியோடு பெயர்த்து தந்தார். அவளுக்கு கொசுவலை வந்து சேர்ந்தது. அவரது தூரத்துச் சொந்தக்காரக் கிழவியை அவளைப் பார்த்துக் கொள்வதற்காகவே கூட்டி வந்தார். அவளுக்கு வெற்றிலையும் சுண்ணாம்பும் தரும் சாக்கில்நீங்க என்ன ஆளுக?’ என ஒருத்தி அருகில் தத்தியபடி வந்த காகத்தை விரட்டியவாறே கேட்டாள். அவளது பதிலால் அவரை வீட்டினுள் அமர வைத்து நீர் கொடுத்தவர்கள், கையைப் பற்றி அழைத்துப் போனவர்கள், வீடு வாடகைக்கு தந்தவர்களுக்கு ஒரு ஆசுவாசம் பிறந்தது. பிறகு அத்தெருவில் ஒன்றிரண்டு வீட்டில் எது செய்தாலும் அவர் வீட்டிற்கு டம்ளரில் கொண்டு சென்றனர்.


ஒத்தாசைக்கு வந்த கிழவி முகப்பொலிவுடன் மாறினாள். கனிக்கு வாங்கி வருபவற்றை அவள் காணும் முன்னரே கிழவி விழுங்கிவிடுவாள். ஆனாலும் கனியின் முகத்தில் சோபை கூடிவிட்டிருந்தது. வளைகாப்பெல்லாம் நடத்தவில்லை. அவளது பிள்ளைப்பேற்றைத் தெருவே ஏதோ லாட்டரி முடிவுக்கு காத்திருப்பதை போல நாட்களை எண்ணிக் கொண்டிருந்தது. சின்னக்கண்ணு நெற்றியில் துலங்கிய விபதிக் கீற்றுடன் கோவிலிலிருந்து வலுவான காலடிகளுடன் வந்து கொண்டிருந்தார். அவர் ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தார். ஏதோ ஒரு வலி அவரது முகத்தில் தெரிவதாக அவர்களுக்குப் பட்டது. ஆனால் அதை பெரிது படுத்தவில்லை. ’குழந்த உதைக்கிறான்என அவரிடம் சொன்னால் சட்டென அங்கிருந்து நகர்ந்து விடுவார். நடக்கும் போது மனதிற்குள் ஓராயிரம் முறை சொல்வார்,’எங் கொழந்த..எங் கொழந்த..’ நடை வேகம் பிடிக்கும். முகம் இளகிப் போயிருக்கும். கடைக்குள் ஏறியதும்  ஏதோவொன்று நினைவுக்கு வரும். அப்படியே நாற்காலியை திருப்பி போட்டு புதிதாக அங்கு மாட்டப்பட்டிருக்கும் கடவுளர் படங்களிடம் வேண்டத் தொடங்கி விடுவார்.


அப்படி மாலை நாளிதழை வாசிக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருந்த அந்தியில் தன் மீது ஏறுக்கு மாறாக மூச்சுக்காற்று படர்வதைக் கண்டு தலை திருப்பினார். நாசி வந்தவனை அடையாளம் கண்டது, ’ஏஞ் சோமு?’. ’பெரிம்மா கையோட கூட்டியாறச் சொல்லுச்சு. வலி எடுத்துட்டுதுணா..’ எழுந்த வேகத்தில் தலை இடித்துக் கொண்டு விட்டது. கீழே விழப்போனவரை சோமு கையால் தாங்கினான்.


ஆட்டோ வீட்டு வாசற்படியை அடைந்ததும் இறங்கி வனாந்தரத்தில் நிற்பது போல குழம்பி எங்கு செல்வதென தெரியாது பேதலித்து நின்றார். அவர் கால்கள் வீட்டை நோக்கி நகரவேயில்லை. ‘வா மாமா..’ என பக்கத்து வீட்டு பெண் அவரது விரலைப் பிடித்து இழுத்தது. அவரைப் பார்த்தாலே பயந்து ஓடி விடக்கூடியவள். கட்டுப்பட்டவர் போல பின்னால் நடந்தார். குழந்தை பிறந்து ஒருமணி நேரம் ஆகிவிட்டிருந்தது. பிறகு தான் கிழவி அவருக்கு தகவலே சொல்லச் சொன்னாள். அவர் தான் அப்படி சொல்லி இருந்தார். அறைக்குள் அடித்த பச்சை வாசம் அவரது புலன்களை ஒரு கணம் ஸ்தம்பிக்கச் செய்தது. மனைவியின் பெயரை ஓயாமல் அழைத்தபடியே கட்டிலருகே சென்றார். ’ஒனக்கு பய்யன் பொறந்திருக்கான்..’ அவருக்கு சரியாக கேட்கவில்லை. ‘..’ என இழுத்தார். அவள் மீண்டும் சொன்னாள். கிழவி அவரை அமர வைத்து கையிலெடுத்துக் கொடுத்தாள். அவர் ஒருமுறை குழந்தையை கைகளால் வருடினார். பிறகு முகமெங்கும் உடலெங்கும் வருடிக் கொண்டே இருந்தார். அவர் முழங்கையின் ரோமங்கள் சிலிர்த்து எழுந்து நின்றன. உறங்கியவன் அந்த தொடுதலில் எழுந்து சிணுங்கி அழத் தயாரானான்.


என்ன பண்றான்..?’ சத்தம் அறைக்குள் சுழன்று நின்றது.


‘ஒன்ன தான் யாருனு பாக்கறான்..’


பாக்கறானா..ஹா..ஹா..ஹாஅப்பா எப்படி இருக்கறஞ்சாமி.? என்னய பாக்கறயா..! ம்..எல்லோரையும் பாக்கறயா..? சொல்லு கண்ணு அப்பா எப்படி இருக்கறேண்..?


திடீரென அவர் குரல் மாறியது. அடுத்த வினாடியே ஏதோ மிருகம் அலறுவது போல ஒலியெழுப்பி அழுதார். கண்ணீர் கரகரவென்று கொட்டியது. தொழுவத்தில் கட்டப்பட்ட எருமை வலியால அலறுவது போல கத்தினார். ஏற்கனவே அங்கு  வந்து சேர்ந்திருந்த ஜனங்களை அந்த அழுகையொலி விதிர்விதிர்க்கச் செய்தது. பயத்தில் குழந்தை வீறிட்டுக் கத்தியது. கிழவி அவரிடமிருந்து குழந்தையை வாங்கி அவளருகில் படுக்க வைத்த பின்னும் அவர் அழுகை நிற்கவில்லை, ’டேய் சின்னு..சின்னு..சும்மா இருடா..பையன் தங்கமா வந்து பொறந்திருக்காண்டா.. அழுகாதடா..’  கிழவிக்கு குரம் கம்மி விட்டிருந்தது. அவர் நாற்காலியிலிருந்து கீழே இறங்கி கட்டிலில் நுனிக்கு தவழ்ந்தபடியே போய் தன் மனைவியின் கால்களைக் கட்டிக் கொண்டார். அவள் தேம்புவதோ பிறர் அவரிடம் எடுத்துச் சொல்வதோ ஆறுதலாக தோளைப் பற்றுவதோ எதுவுமே அவருக்கு கேட்கவுமில்லை. உறைக்கவுமில்லை.

No comments:

Post a Comment