அழைப்பு
எங்கிருந்தோ ஓயாமல் இறைஞ்சும் சத்தம்
கேட்டது. தன்யா உடனடியாக யாரெனக் கண்டுகொண்டாள். ஆறேழு நாட்களாக வராமலிருந்து விட்டு (அம்மா ‘அது லீவு போட்ருக்குது மயிலு..’ என சொன்னதை நினைத்ததும் இப்போதும் சிரிப்பு வந்தது) நல்லபிள்ளை போல குரல் கொடுக்கிறதா? போகக்கூடாது என்றெண்ணி அம்மாவுக்கு விட்ட இடத்திலிருந்து தலைசீவி விட ஆரம்பித்தாள்.
சில நிமிடங்களுக்குப் பின் அது ஒரு மன்றாடல் போலயிருப்பதாக சரவணனுக்கு தோன்றியது. விஜியைப் பார்த்தான். இருவரின் அந்த பார்வையில் எதையோ புரிந்து கொண்ட மகள் அவன் மடியிலிருந்து குதித்து,
பொம்மையை
அணைத்தபடியே ஓடி
வெளியே
நின்று
எல்லா பக்கங்களிலும் தலையை திருப்பி பார்த்து ஏமாந்து மூக்கின் மேல் விழுந்துக் கிடந்த சுருள்முடியை பின்னொதுக்கி தலை தூக்கி பார்த்து முகம் மலர 'மெல்டி’ என மேலே கைகாட்டிக் கூவினாள். அது அவளது செல்லப் பூனையின் பெயர். அவள் இட்டது. தன் அப்பா எப்போதும் சொல்லிக் கொண்டே அலையும் ’மெலடி’ எனத் தான் அவள் பெயரிட நினைத்தாள். சில தடவை உள்ளுக்குள் கூப்பிட்டு திருப்தியான பின் வீட்டினரை தன் முன் கூட்டி வைத்து
சொன்னாள், ’மெல்டி’. இன்னொரு முறை கூட சொல்லிப் பார்த்தாள். அப்படியே தான் வந்தது. அவளது செல்லம் பின் அவர்களுடையதுமாக ஆனது.
கீழிருந்து ’மெல்டி’ என உரக்கக் கூவினாள். அதைப் பார்த்ததுமே அவளது கோபம் சற்றே பின் வாங்கியது. அது திரும்பி பார்த்த பின் கேட்காதது போல ஓடுகளின் மீது அங்குமிங்கும் அலைபாய்ந்தபடி பரிதவிப்புடன் அழைத்துக் கொண்டே இருந்தது. எதையோ தேடுகிறது என்பதை மட்டும் அறிந்து கொண்டாள். தன்னைக் கண்டுகொள்ளாதவர்களிடம் முகத்தை முற்றாகத் திருப்பிக் கொள்வது போலவே இப்போதும் அதற்கு
உதவக்கூடாது என முகத்தைத் தூக்கி
வேறு பக்கம் வைத்துக் கொண்டாள். வகுப்பில் நிவி தன்னுடன் பேச வேண்டாம் எனச் சொன்ன அடுத்த வினாடியே தன் பையை வாரியெடுத்து எழுந்து போய் இரண்டு பெஞ்ச் தள்ளி அமர்ந்து மூன்று தினங்களுக்குப் பின் அவளாக வந்து கெஞ்சியபடியே பேசி சாக்லேட் தந்து ’ப்ளீஸ்..’ கேட்கும்வரை பேசாதிருந்தவள் அவள்.
ஆனால் மெல்டியை கொஞ்ச நேரத்துக்குப் பின் அரைக்கண் மட்டும் மேலே தூக்கி அது என்ன செய்கிறது என ஆராய்ந்தாள். அவளை அது கண்டுகொள்ளவேயில்லை. உண்மையில் அது மெல்டியா என சந்தேகித்து கண்களை ஒருமுறை தேய்த்து விட்டு உற்று பார்த்தபின் உறுதி ஏற்பட்டது. அப்பாவைக் கூட்டி வர ஓடினாள். ஏனென்றால் அவளைக் கண்டதுமே பாய்ந்து வந்து தலையால் முட்டி விட்டு அவள் பிடிப்பதற்குள் போய் பதுங்கி ஒளிந்து போக்குக் காட்டுவது, இப்படி நடந்து திரிவதை அவளால் ஏற்கமுடியவில்லை.
வீட்டுப்பக்கம்
வந்து ஒரு வாரம் ஆயிற்று. வெள்ளையில் சிறிய செம்மண் மேகங்கள் படர்ந்தது போன்ற நிறத்திலிருக்கும் பூனையை எங்கேனும் கண்டால் அவள் பின்னால் ஓடுவாள். விஜி தான் இழுத்துக் கொண்டு வருவாள். மெல்டி நிறைமாதமாக இருப்பதைப் பார்த்ததும் அம்மாவிடம் காட்டி ஏனென்று கேட்டாள். ’நிறைய சாப்பிட்டிருக்கு அதான்’, சொன்னதும் சமாதானம் ஆகி விட்டாள். அது சில நாட்கள் குட்டி போடுவதற்கான இடத்தை அலசுவதற்காகத் தெருவிலிருக்கும் வீடெங்கும் சென்று சோதித்துப் பார்த்து விட்டுத் திரும்பியது. பிறகு ஆளைக் காணோம். மகள் கேட்டு நச்சரித்த போது
’லீவ்ல போயிருக்கு..’
எனச் சொல்லிப் பேச்சை மாற்றினாள். ஏனெனில் தன்யாவிடம் சண்டையிட்டு இருவரும் மாற்றி மாற்றி துரத்திக் கொண்டு அந்த வீட்டிற்குள் ஒரு உறுப்பினர் போல நடந்து திரிவது மட்டுமல்ல, அவளிடம் எதையும்
தட்டிப்பறிக்கும் உரிமையும் கொண்டது.
மூவரும் தன்னை கண்டுகொள்ளவேயில்லை என்பதை உணர்ந்து சத்தமாகக் கத்தியது. மெத்தையை முன்னங்காலால் பிறாண்டியது. விஜி வெடுக்கென எழுந்து,
'ஏதாவது கொடுத்துக்கீது வைச்சிருக்கயா..? இப்படி அதட்டுற..வாய்க்கு அத்தன ஒனத்தி கேக்குது உனக்கு..!பேசாம போயிரு...' என்ற பின் மீண்டும் படுத்துக் கொண்டாள்.
மெதுவாக நகர்ந்து இந்தப் பக்கம் வந்து இவனைப் பார்த்தபடி ஏதுமறியாதது போல முகத்தை வைத்துக் கொண்டு
அவன் கவனத்தை ஈர்க்க மிகச் சன்னமாக பேசியது, ‘ம்யாவ்..’
படுத்திருந்த விஜியின் பின்புறத்தைத் தட்டி, ‘ஏய் இங்க பாருடி..எப்படி வந்து நிக்கிதுனு..ரொம்ப பாவமா இருக்கு...’ எழுந்து நிமிர்ந்து பார்த்தவளின் முகம் மாறியது. முன்னர் அப்படி தன் முன் பாவமாக நின்றவர்கள் நினைவு அவளுக்கு வந்திருக்க வேண்டும். இல்லை, இனி அவளால் எழ முடியாது. கடந்த காலத்திற்குள் சென்று விட்டவர்களுக்கு நிகழ் காலம் வெறும் மனமயக்கம் மட்டுமே. தன்யா அப்பாவின் கையை பிடித்து ஓயாமல் இழுக்கவும் அவன் எழுந்தான். பூனையை அவள் துரத்த அது இவளுக்காக ஒதுங்க இருவரும் விளையாடியபடியே சமையலறைக்குள் நுழைந்தனர். அதற்காக எடுத்து வைக்கும் வழக்கமான பாத்திரத்தைத் தேடித் துழாவினான். எப்போதையும் விட சற்றே அதிகமாகவே பால் எடுத்து வைக்கப்பட்டிருந்தது.
தன்யா அதன் அருகில் அமர்ந்து கொண்டு ’குடி..ஸ்லோவா குடி..’ என மெல்ல அதன் தலையிலிருந்து முழு உடம்பையும்
நீவி விட்டபடியே அமர்ந்திருந்தாள். அதுவும் சொக்கி கண்களை மூடியபடியே கிண்ணத்தை காலி செய்து கொண்டிருந்தது. சரவணன் திரும்பி மகளைப் பார்த்தான். அதன் அன்னிச்சையான வாலசைவில் அவள் லயித்திருந்தாள்.
அன்று பார்த்ததை விடவும் அதன் முகம் வெளிறிப் போய் கிடந்தது. அதற்குள் அண்டை வீட்டுக்காரர்களின் தலைகளும் வெளியே தெரிந்தன. இரு தினங்களுக்கு முன் அது ஏழு குட்டிகள் போட்டு அதை வெவ்வேறு இடங்களில் வைப்பதும் மாற்றுவதுமாக குறுக்கு மறுக்காக நடந்து கொண்டே இருந்ததும் அவர்களுக்கு தெரியும். சிலர் ஒன்றிரண்டு குட்டிகளை ரிசர்வ் செய்தும் வைத்து விட்டனர். சரவணன் அங்கிருந்தவர்களை துணைசேர்த்து அந்தப்பகுதி முழுவதுமே துப்புரவாகப் பார்த்து விட்டான். குட்டிகளை எங்குமே காணோம். பின்பக்க வீட்டிலிருந்த சிறுவர்களும் அதற்குள் வந்து குழுமி விட்டனர். அவர்களில் ஒருவன்பூனையை அதட்டி இறங்கச் சொல்லி கைகளை வீசினான்.
சரவணன் அவனை அடக்கினான். விஜியும் அவள் சினேகிதியும் சேர்ந்து எதையோ பேசிய பின் அவனை அழைத்து விஷயத்தைச் சொன்னாள். ‘அப்படி இல்லாதிருந்து விட்டால்?’ எனும் கேள்வி அவன் முகத்தில் விழுந்தது. அதை படித்து விட்ட விஜி கண்களை அகல விரித்து ஒரு முறை முறைத்தாள். பிறகு பணிவதைத் தவிர அவனுக்கு வேறு வழி இருக்கவில்லை. அங்கிருந்த பையன்களில் குச்சியாக இருந்தவனை வரச்சொல்லி ஏணி வைத்து மேலே போகச் சொன்னான். அவன் தண்ணீர் சிந்திய தரையில் நடப்பது போல அங்கொன்றும் இங்கொன்றுமாக கால்களை அகலமாக வைத்து மெதுவாக ஓடுகளின் மீது போனான். தன்னைத் தாண்டி செல்ல விடாமல் மறித்து நின்று பற்களைக் காட்டி மிரட்டுவது போல பூனை அவனைச் சுற்றி வளைத்தது. அவன் சட்டையைக் கழற்றி அதை அடிப்பது போல வீசவும் மிரண்டு விலகியது. அந்த இடைவெளியில் அவன் அப்பால் நகர்ந்து எட்டி பார்த்தான். கண்கள் விரிய அவர்களை நோக்கி ‘ரெண்டு குட்டிக உள்ள கிடக்குதுணா..’ என்று கத்தினான். இரு வீட்டுச் சுவர்களுகளுக்குமிடையே சந்து போன்ற இடைவெளி இருந்தது. இரு பக்கமும் அடைத்து வைக்கப்பட்டிருப்பதால் யாரும் செல்ல முடியாது. அதற்குள் விழுந்து ஒரு மேட்டில் அவை கிடக்கின்றன. எப்படி அங்கு போயிருக்க முடியும்? எடுத்துச் செல்லும் போது தவறி இருக்குமோ..!
எப்படியோ இருக்குமிடம் தெரிந்துவிட்டது. கணவனை விஜி
பெருமையுடன் பார்த்து சிரித்தாள். தன்யா பயத்தில் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். உடனடியாக கூடைகள் கொண்டு வரப்பட்டன. கயிறு எங்கு தேடியும் கிடைக்காமல் பக்கத்து தெருவிற்கு போய் பையன் வாங்கி வந்தான்.
சரவணன் எத்தனை நிதானமாக கால் வைத்த போதும் சில ஓடுகள் நொறுங்கத் தான் செய்தன. மூவர் உடன் நிற்க கூடையை மெதுவாக கீழிறக்கியதும் தாய் பூனை முன்னை விடவும் வேகமாக நடப்பதும் நிற்பதும் பரிதாபகரமாக அவர்களை பார்ப்பதுமாக அவர்களிடம் கண்களால் எதையோ சொல்ல முயன்றது. கூடையைக் கண்டதுமே இரண்டு குட்டிகளும் முன்பை விட மோசமாக பயந்து கண்களை மூடிக் கொண்டன. நீண்ட கழியை எடுத்து வந்து அவை படுத்திருந்த சிறு மேட்டு மீது வைத்து அவற்றை உள்ளே தள்ளவும் கூடை விலகவும் சரியாக இருந்தது. கழி சிறிய துளைக்குள் சிக்கி விட்டதால் குட்டிகள் அங்கேயே இருந்தன. கைகள் நடுங்க கழியை சரவணனிடம் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார். அவன் மூன்று நான்கு வழிகளை ஆராய்ந்த பின் கூடையையும் கழியையும் ஏக காலத்தில் நிறுத்தி குட்டிகளை மெல்ல புரட்டினான். அவை சருகு போல நழுவி கூடைக்குள் விழுந்தன. அந்த பையன் கைதட்டிப் போட்ட கூப்பாடு கீழே எதிரொலித்திருக்க வேண்டும். அங்கும் கைதட்டல்கள் எழுவது கேட்டது. சரவணன், விஜியைப் பார்க்கத் திரும்பிய போது தான் மொத்த தெருவும் திரண்டு நிற்பது கண்ணில் பட்டது. எந்த சேதாரமும் இன்றி ஒவ்வொருவராக கீழிறங்கி வந்ததும் தன்யா அப்பாவின் கால்களைக் கட்டிக் கொண்டு தூக்கச் சொன்னாள்.
ஈரம் படர்ந்த உடம்புடன் அந்தக் குட்டிப்பூனைகள் இரண்டும் கீழே விடப்பட்டதும் கோலிக் குண்டுகள் போல விழுந்து புரண்டெழுந்தன. ’மெல்டி’ அவர்களின் கால்களுக்கிடையில் நுழைந்து உள்ளே செல்லும் வழியற்றுத் திணறிக் கொண்டிருந்தது. ஆளாளுக்கு அந்தக் குட்டிகளை தூக்குவதும் கொஞ்சுவதுமாக இருந்ததால் பூனையின் இறைஞ்சும் ஒலி அவர்களை எட்டவே இல்லை. விஜி மகளிடம் ‘நீ யெனக்கு எப்படியோ அதே மாதிரி அந்த இரண்டும் இதுகளோட பாப்பா..’ எனச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அந்த தருணத்தில் பூனை தன்யாயைப் பார்த்து சற்றே நின்றது. விஜி இறக்கி விட்ட பின் அதை மெதுவாக நீவி விட்டாள். அது கண் மூடி படுத்துக் கொண்டு மெல்ல மீண்டும் முறையிட்டது, ’ம்யாவ்’.
அந்த பையன்களின் ஒருவன் அந்த குட்டிகளை தூக்கிக் கொண்டு ஓடினான். தன்யா அதை பார்த்ததும் பெரிய கூப்பாடு போட்டாள். வாசலிலேயே தடுக்கப்பட்டு அவன் கூட்டி வரப்பட்டான். சரவணன் அவன் பிடறியில் அறைந்து குட்டிகளை வாங்கி மகளிடம் தந்தான்.
அவை சிறிய கண்களை மெதுவாகத் திறந்து அவளைப் பார்த்தன. கை கால் முளைத்த பந்தென அவளுக்குத் தோன்றியது. கண்ணாடிப் பொருளை இறக்குவது போல நிதானமாக தரையில் விட்டாள். அவை அங்கேயே சுருண்டு படுத்துக் கொண்டன. விஜி மகளைப் பார்த்துக் கொண்டே இருந்தாள். தன்யாவின் கண்கள் பளபளப்பாக மாறுவதாகத் தோன்றியது. அவற்றின் சிறிய வால் அசைவதைக் கண்டதும் முகத்தில் புன்னகை அரும்பிற்று.
கூட்டத்திற்குள் சிக்கிக் கொண்ட மெல்டி அங்குமிங்கும் தாவி அவளருகில் வந்து சேர்ந்து விட்டிருந்தது. அதே பார்வை ஆனால் இம்முறை சிறுகுறும்பு அதற்குள் இருந்ததை தன்யாவால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண் திறக்காது படுத்திருந்தவற்றை மீண்டும் அள்ளியெடுத்து உடம்பை நீவி விட்டு முத்தினாள்.
மெல்டிக்கு அருகே அவற்றை விட்டு ‘போ..’ என்றாள். அவை தன் தாயைக் கண்டு கொண்டன. குட்டிகளையும் கூட்டத்தையும் ஒருமுறை அளந்து பார்த்த பின் வாயில் கவ்விக் கொண்டு ஒரே தாவலில் சுவற்றை அடைந்து அங்கிருந்து ஓடுகளுக்குச் சென்று பிறகு அங்கிருந்தும் தாவி ஒரு மாடி வீட்டிற்குள் பூனை இறங்குவது தெரிந்தது.
தன்யா அம்மாவை இறுக்கமாகக் கட்டிக் கொண்டாள். விஜி மகளின் சுருள்முடியை அளைந்து விட்டுக் கொண்டே இருந்தாள். தன்யாவுக்கு ஓராண்டுக்கு முன் கரு தங்கி நான்காவது மாதத்தில் கலைந்து விட்டது. அந்த சிசு பிறந்திருந்தால் தன் வீட்டிலும் இரண்டு குழந்தைகள் இருந்திருக்கும். பூனை அவற்றை கவ்விச் சொன்ற காட்சியை அவளால் மறக்கவே முடியவில்லை. தன்யாவிற்கு பிறகு அவள் உடம்பு பலகீனமாகி விட்டது. அடுத்த பிள்ளைப் பேறு உயிராபத்து எனச் சொல்லி அனுப்பி விட்டிருந்தனர்.
அம்மா தேம்பும் ஒலி கேட்டு தன்யா தலை தூக்கிப் பார்த்தாள். விஜியின் கன்னங்களில் நீர் வழிந்து கொண்டேயிருந்தது. துடைத்து விட்டுக் கொண்டே இருந்தாள். அப்படி இருந்ததும் கூட அம்மாவின் கண்கள் ஏன் மீண்டும் இப்படி நிறைந்து கலங்குகின்றன என தன்யாவுக்கு தெரியவேயில்லை. தலை தூக்கிப் பார்த்து தோளில் சாய்ந்து ’அது பாவம்மா..’ எனக் காதுக்குள் சொன்னாள்.
விஜி ஆவேசமாக தன் மகளை வாரியெடுத்து அழுகையின் நடுவே முகமெங்கும் ஓயாமல் முத்திக் கொண்டே இருந்தாள்.
No comments:
Post a Comment