Friday, May 3, 2024

மகவு

 

மகவு


மூன்றாவது  குழந்தைக்காக  ஜனார்த்தனன் காத்திருந்தார். அவருக்கு சேதி கொண்டு வந்தவன் போல காணப்பட்ட சித்தப்பா மகன் பொறுமையின்றி அவரை தேடுவது கண்ணில்பட்டது. வாய்கொள்ளாச் சிரிப்புடன் 'நீ சொல்ல வந்தது முன்பே தெரியுமே..' என்கிற உறுதியுடன் பூமியை பின்னுக்கு தள்ளிவிட்டு விரைந்து நடந்தார். விஷேச நாள் அது. கோவிலெங்கும் தலைகள். ஜனங்களின் வயிற்றை பிளந்து கொண்டு போவது போல விலக்கி விட்டு முன்னேறினார். இன்று பிறந்திருக்கிறானா? இதற்கு தான் மூன்று முறை வலி வந்து விலகிச் சென்றதா? வேண்டிக்கொண்டவைகளின் வரிசையில் மேலும் சிலவற்றை சேர்த்துக் கொண்டார். தூக்கிச் சுமந்த பெருங்கல் ஒன்றை இறக்கி வைத்த ஆசுவாசம். காண்பவர்களையெல்லாம் சிரிப்பால் வணங்கினார். பூரித்துக் கிடந்த அவரது முகத்தில் கண்கள் பிரகாசத்துடன் ஒளிர்ந்தன. மனத்துள்ளலை எப்படி அடக்குவது எனத் திணறினார். நடக்க வேண்டிய இடங்களை தாண்டிக் குதித்தார். தன் கால்களில் மோதும் குழந்தைகளின் கன்னங்களை செல்லமாகக் கிள்ளினார். சிலரை அள்ளி தூக்கி இறக்கி விட்டார். அவரிடம் ஒரு கயிறு மட்டும் இருந்திருந்தால் எந்த மலையையும் இழுத்து வந்து அங்கு நிறுத்தி இருக்க முடியும். மேலெல்லாம் ஒழுக நீர் அருந்தி விட்டு மொத்த ஆட்களையும் ஏதோ வரமருள வந்த தெய்வம் போல மிதப்புடன் ஒரு பார்வை பார்த்தார். மணியோசை கேட்டது. நின்ற இடத்திலேயே மெய்யுருக வணங்கி நன்றி சொன்னார்.  தம்பியை இன்னும் சில நொடிகளில் அடைந்து விடுவார். ஆனந்தம் கையெட்டும் தொலைவிற்கு வந்து விட்டது. வசந்த காலத்தின் காற்று அவரது வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கூட கேட்கிறது. அவர் தான் சாளரத்தையும் திறந்து வைத்திருக்கிறாரே..! எண்ணியவை கைகூடும் பொழுதில் இப்படி தான் இருக்குமா? மழைப்பொழிவின் சுகந்தமும் குளுமையும் அவருக்காக காத்திருக்கின்றன. திரைச்சீலையை விலக்க வேண்டும். இரண்டே அடிகள் தான். இதோ விலக்க அவரது கைகள் மேலே உயர்ந்து விட்டன.

 


விடுமுறை நாள் அது. வீட்டில் ஒருவருமில்லை. அவரது இரண்டு பெண் பிள்ளைகளையும் அவர்களது பெரியம்மா வந்து கூட்டிக் கொண்டு போயிருந்தார். வீடே வெறிச்சிட்டிருந்தது. அம்மா, வனிதாவின் முதல் வலிக்கு ஆஸ்பத்திரிக்கு சென்றவள் இன்னும் திரும்பவேயில்லை. குடங்களிலும் பாத்திரங்களுக்கெல்லாம் நீர் பிடித்து நிறைத்த பின்பும் நாளிதழை வரிவிடாமல் மேய்ந்த பின்னரும் நேரம் நீண்டு கிடந்தது. மூத்தவள் சொல்லி விட்டு போயிருந்தாள், கோவிலுக்கு எண்ணெய்யும் பாலும் வாங்கி வைத்திருக்கிறது. மறக்காமல் கொடுக்க வேண்டும். கூடவே பெரிய சம்பங்கி மாலையையும் வாங்கிச் சென்றிருந்தார். அவர்கள் குடும்பம் சகிதம் அமர்ந்து தெரிவு செய்த பெயரில் அர்ச்சனை செய்தார். காலண்டரில் நட்சத்திரம் பார்த்து வந்திருந்தார். பூக்களும் பழங்களுமாக அர்ச்சகர் வந்த போது கையில் சிக்கிய பணத்தைக் காணிக்கையாகப் போட்டு  நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். வீட்டில் அலைந்து திரியும் இரண்டு தெய்வங்களை எப்படி மேடேற்ற போகிறோம் என்கிற கவலை அவரை அரித்து தின்றது. சேமிப்பு பற்றிய அம்மாவின் ஓயாத நினைவூட்டல்கள் வேறு. ஆரம்பத்தில் ஒத்து வராதிருந்து முதல் குழந்தை பிறந்ததும் இருவருக்குள்ளுமிருந்த இடைவெளி நீங்கி பரஸ்பரம் புரிந்து கொள்ளும் இணையாக வனிதா இருந்தாள். முதல் ஆறு மாதங்கள் எதற்கெடுத்தாலும் முரண்டும் பிடிவாதமும் வாய் துடுக்குமாக இருந்தவளா இவள்? பக்குவம் என்று அம்மா அதை அழைத்தாள். வனிதா மெல்லிய சிரிப்புடன் அதைக் கடந்து போனாள்.

 

அவருக்கு தோள் கொடுக்க ஒரு மகன் வேண்டும். மொத்த வீட்டின் பிராத்தனையும் அது ஒன்றாகவே இருந்தது. அப்படி அவர் நினைத்தார். தன் பாரத்துக்கான பலிகடா அவனா எனச் சில சமயம் தோன்றும். ஆனால் அவரால் முடியவில்லை. வீட்டில் பெண் பிள்ளைகளை விட்டுவிட்டு எங்குமே அவரால் செல்ல முடியாது. அவரது ஆசைகள் இரண்டாவது பிறந்ததோடு தொலைந்து விட்டன. புலப்படாத கயிறு அவரை வீட்டுடன் இறுக்கி இருந்தது. தன் மனைவிக்கும் அப்படி தானே தோன்றும் என ஒருமுறை கூட அவர் நினைத்ததில்லை. அம்மா கண்கொத்தி பாம்பாக சிறிய தவறுகளுக்கு கூட கூண்டிலேற்றி விசாரணை நடத்துவாள். பாட்டியுடன் பேத்திகளுக்கு ஒட்டுதல் உண்டு என்றாலும் அவளது கட்டுப்பாடுகள் அவர்களை எரிச்சலடைய வைத்தன. எந்த வழியும் அவருக்கிருக்கவில்லை. அந்த வீடு அம்மா பெயரில் இருக்கிறது. அப்பாவின் பென்ஷன் அம்மாவுக்கு வந்து கொண்டிருக்கிறது. இரண்டையும் கழித்து விட்டால் அவரது சம்பாத்தியம் அந்த குடும்பத்தின் வண்டிக்கு எண்ணெய் விட மட்டும் தான் போதுமாக இருக்கும். சக்கரங்கள் அவரது அம்மா என்றால் அச்சாணி அவரது மனைவி. அவர் சண்டையிட்டு வெளியே வந்து விட முடியும். ஆனால் அவரது அக்கா கபளீகரம் செய்ய காத்துக் கொண்டே இருக்கிறாள்.

 

மகனே..’ என்றார் கோவில் தூணோரம் சாய்ந்தபடி. அவர் சொல்லவும் ஆராதனை முழங்கவும் சரியாக இருந்தது. கண்களிலிருந்து கரகரவென கண்ணீர் கொட்டியது. ‘எங்கு ஒளிந்திருக்கிறாய்.. வந்து என்னை இளைப்பாற்று..’ என முனகினார். மூத்த பெண் பொறுமைசாலி. எதையும் மனதிற்குள்ளேயே வைத்து கொள்ளும். அதன் உச்சபட்ச கோபம் என்பது உண்ணாமல் இருப்பது தான். புதிய ஆடைகள் எடுத்து வரும் போதும் அது நீருற்றி வளர்க்கும் செடிகளில் புதிதாக பூக்கள் மலர்ந்திருக்கும் போதும்  மட்டும் அதன் கண்களில் மகிழ்ச்சி தென்படும். பிறகு எதற்குமே ஒரே முகபாவம் தான். உள்ளே என்ன ஓடுகிறது என்பது அவள் அம்மாவுக்கே தெரியாது. காய்ச்சலில் துவண்டு போனாலும் ஒரு வார்த்தை கூட பேசாது. எந்த வலியையும் வெளிக்காட்டாமல் சகித்து மென்று விழுங்க எப்படி பழகியது என்பது புதிர் தான்.  இளையவள் எதற்கெடுத்தாலும் இடக்கு. பாட்டியை எதிர்நின்று பேசுபவளும் அவள் தான். இந்த உலகமே தான் செய்வதை கவனிக்க தான் படைக்கப்பட்டிருக்கிறது என்கிற நினைப்பு. அவரது சட்டைப் பாக்கெட்டுக்குள் கையை விட்டு காசெடுத்து எண்ணி அதை வீட்டிற்கே உரக்க கூவி ஏலம் விட்டு மிரட்டுபவள். அவளுக்கு அப்பா என்றால் உயிர். பெரியவள் கோபித்து கொண்டு பேசாதிருந்தால் சம்பந்தப்பட்டவர் வந்து பணிய வேண்டும். இல்லையெனில் ஒரு புள்ளி கூட மாறாமல் அதே இடத்தில் நிற்பாள். சிறிய பெண் அவர் லேசாக முகத்தை தூக்கி வைத்துக் கொண்டால் கூட அழுங்காமல் வந்து செல்லம் கொஞ்சி சமாதானம் ஆகி விடுவாள். வேடிக்கைகாக பேசாதிருந்தால் அழுது ஆர்ப்பாட்டம் செய்து விடும். ஆனால் வேலையில் மந்தம். அவருக்கு கால்வலி கூடுதலாக இருக்கும் போது சுடுநீர் வைப்பது மூத்தவளாக தான் இருக்கும். அதை சொல்லி நொந்து கொண்டு படுக்கச் சென்று உறக்கத்திலிருந்து பாதி எழுந்து பார்த்தால் இளைய பெண் கால் பிடித்து விட்டபடி அமர்ந்திருக்கும். வெடுக்கென பதறி எழுந்தால் 'ரொம்ப வலிக்குதாப்பா..' என முறையிடும் தொனியில் கேட்கும். வாரி அருகில் போட்டுக் கொண்டு உறங்குவார். அவரது மனைவி நடுநிசியில் எழுந்து வந்து நான்கு திட்டு திட்டி அவளை அவரிடமிருந்து பிய்த்து எடுத்துக் கொண்டு போவாள்.

 

வனிதா இன்னொரு குழந்தை வேண்டாம் என்றாள். அவர் தான் பிடிவாதமாக இருந்து  சம்மதிக்க வைத்தார். அதற்கு ஒரு வார காலம் ஆயிற்று.  வெட்கத்துடன் எழுந்து போனாள். இரண்டு பிரசவங்களுமே அவளுக்கு சோதனையாக தான் அமைந்திருந்தன. அதிலும் இரண்டாவது வாழ்வா சாவா போராட்டம். அவையெல்லாம் அவருக்கும் தெரியும். ஆனால் சுயநலத்தின் முன் எதுவுமே தூசியாக தானே தெரியும். கர்ப்பம் உறுதியானதும் அவள் தயங்கி தயங்கி அவரது அம்மாவிடம் சொல்லும் போது உடனிருந்தார். பதில்களின் தயாரிப்புக்கு ஏற்ப கேள்விகள் வர வேண்டுமே என அமர்ந்திருந்தார். கரை மீறிப் போனால் சண்டைக்கும் அவர் தயார். நாளை மகன் வந்து குடும்பத்தைத் தூக்கி நிறுத்துவான். ஆச்சரியமாக அருகில் அமர வைத்து தலைக்கு எண்ணெய் வைத்து விட்டாள். பேத்திகளை அழைத்து புத்தி சொல்லி சுருக்கு பை திறந்து ஆளுக்கு வாங்கி தின்ன காசு கொடுத்தாள். அவளது பிள்ளைப்பேறு தான் தன் எதிர்காலம் என்று படும். மறுவினாடியே ச்சீய் என தன் மீது உமிழ்ந்து கொள்வார். இவ்வளவு அல்பமாக இருக்கும்படி ஆனதே என்ற சுயகழிவிரக்கம் அவரை அங்கிருந்து விரட்டிவிடும்.

 

கிட்டத்தட்ட அவர் முறசரைந்து சொல்லியது போல தான். சுற்றமும் நட்பும் சூழ இருந்தவர்களுக்கும் பையன் என்றே அறிவித்து விட்டிருந்தார். மறைவாக அவர்கள் பேசிக் கொண்டதை அவர் அறியவேயில்லை. அவையெல்லாம் காதில் விழுந்திருந்தால் அவர்களுடன் வாழ்நாளுக்கும் உறவை முறித்துக் கொண்டிருந்திருப்பார். சற்று முன் சிரித்து பேசியவர்களுக்குள் அத்தனை கேலியும் வன்மமும் குரூரமும் ஒளிந்திருக்கின்றன என்பதை அவரால் தாங்கிக் கொண்டிருந்திருக்க முடியாது.

 

கோவிலிருந்து வெளியே வரவும் தம்பியிடமிருந்து அந்த செய்தி காதில் விழவும் சரியாக இருந்தது. 'பெண் குழந்தை'. சகலமும் ஸ்தம்பித்து விட்டிருந்தன. அவருக்கு முன்னால் வினோதமான பூச்சிகள் பறப்பது போல தோன்றியது.  வானத்தை பார்த்து அங்கு இருக்கும் யாரையோ பார்த்து சிரிப்பது போல அடக்க முடியாமல் பார்ப்பவர்கள் அஞ்சும்படியாக நிறுத்தாமல் சிரித்தார். பிறகு என்ன தோன்றியதோ, அந்த சுட்டெரிக்கும் வெயிலில் கோவிலுக்கு வெளியே கை கூப்பி அப்படியே விழுந்து வணங்கினார். முதுகு குலுங்கியது. தம்பியிடம்நீ போ வர்றேன்..’ என்றார்.

 

பிறகு அவர் திரும்பவேயில்லை. மனம் நின்று போயிருந்தது. கால்களே மனம் என்று ஆயிற்று. முதல் ஆறு மாதங்கள் நெஞ்சில் சுமந்திருந்த வீடு அவரை உறங்க விடாமல் விரட்டியது. அப்படியே எழுந்து நடப்பார். அவருக்கு சாமியார்களுடன் புரோக்கர்களுடன் கடை சிப்பந்திகளுடன் தெருவோர அனாதைகளுடன் சகவாசம் ஏற்பட்டது. அடியும் பசியும் அவமானமுமாக நாட்கள் ஓடிய போதும் அவர் வைராக்கியத்துடன் கிடந்தார். சாமியார் ஒருவர் அவரை தேற்றி அனுப்ப முயன்றார். இரு வருடங்களுக்கு பிறகு தன் குழந்தைகள் மட்டும் பள்ளியிலிருந்து திரும்புவதை ஒளிந்திருந்து பார்த்து விட்டு பேருந்தேறினார். மஞ்சள் வெயிலில் அவர்கள் நெல்லிக்காய்களை சிரிப்பிற்கிடையே கடித்தபடியே வருவதை பார்த்த பிறகு அந்த ஊரை அந்த வீட்டை முற்றாக துடைத்தழித்தார். அவர்கள் தேடியலைந்த அலைச்சல், ஓயாத அழுகை, ஒவ்வொரு நாளும் தேடிச் சென்றவர்கள் நல்ல செய்தியுடன் வருவார்கள் என்கிற நம்பிக்கையுடன் கதவு திறந்து காத்திருந்தது எதையுமே அவர் அறியவில்லை. தன் கோழைத்தனத்தை நினைத்து சில தடவை தூரத்தில் வரும் ரயில் முன்பும் பொங்கி ஓடும் ஆற்றின் முன்பும் நின்றிருக்கிறார். அவரது கோழைத்தனம் அவரை காப்பாற்றியது. பயந்து பின் வாங்கி ஓரமாக அமர்ந்து அழுது விட்டு எழுந்து செல்வார்.

 

பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு சர்க்கரை நோயால் அவரது இருவிரல்களும் அரசாங்க மருத்துவமனையில் நீக்கப்பட்டு நடப்பதே சிம்மசொப்பனம் என ஆன பிறகு ஒரு கோவில் வாசலில் துண்டு போட்டு அமர்ந்தார். பசி எப்படியோ ஆறிற்று. தங்க அருகிலேயே சிறு கூரை. சிரிப்பும் களிப்பும் பொங்க வெள்ளி தண்டியில் துள்ளும் குழந்தையின் வாயிலிருந்து வழியும் அமிழ்தத்தை தன் முந்தாணையால் துடைப்பவளை அடையாளம் கண்டார். வனிதா. தன் மகளை காண முடியாதவாறு குழந்தை முகத்தை மறைத்து விட்டது. குழந்தை தட்டி விட்ட ரப்பர் வளையம் அவரருகில் வந்து விழுந்தது. வனிதா ஓடி வந்து எடுக்கும் போது அவரை ஒருமுறை பார்த்தாள். அற்பப் புழுவாக துடித்தார். அம்மா அங்கேயே நிற்பதை கண்ட மகள் அருகில் வர முயலும் நிழலசைவு தெரிந்தது. வனிதா காறி எங்கோ உமிழ்ந்தபடிவா..’ என மொத்த பேரையும் அழைத்துக் கொண்டு உள்ளே போனாள். திரும்பி பார்ப்பாள் என எழுந்து நின்றார்.

 

அவர்கள் திரும்பி வருவதற்குள் கிளம்பி விட வேண்டும் என மூட்டை முடிச்சுகளை கட்டி எழுந்தார். மறைந்து ஆசைதீர ஒருமுறை பார்த்துக் கொள்ளலாம் என  மறைவிடம் தேடி நின்று கொண்டார்.

அவர்கள் அந்த வழியாக திரும்பி வரவேயில்லை. ஒரு கார் அவர் மேல் புழுதி கிளப்பியபடி கடந்து சென்றது. உள்ளே ஒரே ஒரு வினாடி அவர் பார்வை மின்னல் போல விழுந்தது.

 

அவர் வீட்டை விட்டு கிளம்பிய போது கோவிலின் முன் நெடுஞ்சாண்கிடையாக விழுந்தது போல அந்த கார் சென்ற டயர் சக்கரங்களின் அச்சுகளின் மேல் அப்படியே விழுந்தார். அப்போதும் அவரது முதுகு குலுங்கிக் கொண்டு தான் இருந்தது.


No comments:

Post a Comment