வேட்டை
ஜீப்பின் தடதடத்த சத்தம்
மலை மீது ஒலிப்பது போல தொலைவிலெங்கோ கேட்டது. பாபு தலையாட்டிப் புன்னகைத்தபடி எழுந்ததும்
அவனது நிழலுக்கு இணையாக பைரவனும் எழுந்தது. விசுறுவது போல அதன் வால் ஆட்டல் நிற்கவேயில்லை.
மூக்கைத் தூக்கி காற்றில் மணம் பிடித்து மெலிதாக ஊளையிட்டது. தோளில் கிடந்தத் துண்டை எடுத்து அடிப்பது போல ஓங்கியதும்
பயந்தது போல பம்மி முன்னால் ஓடி அரைவட்டமடித்து திரும்பவும் அவன் காலடியில் வந்து முகம்
தூக்கிப் பார்த்து ‘அவ்வ்ம்ம்..’ என தலைகவிழ்ந்தது. ‘டேய். ஊமையா..’ என பாபு இரைந்தான்.
பைரவன் சமையலறை பக்கமாக திரும்பி நின்றது. எப்படியும் அவனை விட ஏழெட்டு வயது அவனுக்குக்
கூடுதலாக இருக்கும். ஆனால் அடுப்படியில் போட்டது போட்டபடியே ஓடிவந்து பணிந்து இன்னொரு நாயாக நின்றான். பைரவனைக்
கைகாட்டி ‘இவஞ் சொந்தக்காரங்க வந்துட்டாங்க போலிருக்குது. போய் கேட்ட தொறந்து வுடு..’
என்றவாறு சிரித்தபடியே அவனைப் பார்த்தான்.
ஊமையன் கொட்டைப் பற்களை ஈறு தெரிய காட்டிச் சிரித்து எரியும் விறகுக்கட்டைகளை
வெளியே இழுத்து விட்ட பின் சாவிக்கொத்துக்களை தூக்கிக் கொண்டு மழையால் ஊறிக்கிடந்த
மண்சாலையில் ஓடினான். சீட்டாட்டக்காரனைப் போல கொத்துக்களைப் பரப்பி வைத்து சரியான சாவியை
தேடுவதற்குள் அருகில் வந்து விட்டிருந்த பைரவன் அவன் மீது கால்களைத் தூக்கி வைத்து
கைகளில் எதையோ தேடியது. அடிப்பது போல கை ஓங்கி விரட்டினான். அது முகத்தை மட்டும் விலக்கிக்
கொண்டு மீண்டும் அவனைப் பற்றியது. அவன் கைகளிலிருந்த இறைச்சியின் மணத்திற்கு தவித்தது.
ஜீப், கைகளை விரித்த அளவுக்கு வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி மேட்டில் முனகிக் கொண்டு
வந்து கொண்டிருப்பது தெரிந்தது. சேறு படிந்த அதன் அகலமான சக்கரங்களில் அப்பிக்கிடந்த
செம்மண்ணால் அந்த டயர்கள் மேலும் தடித்து பெருத்து விட்டது போல தோன்றியது. போர்ட்டிகோவிற்கு வரும் வழி நெடுகிலும் தன் அச்சுக்களை
பதித்தபடியும் சேற்றுண்டைகளை உதிர்த்தபடியும் கனைத்து வந்து நின்றது. இரை கவ்வக் காத்திருக்கும்
மிருகம் போல அதன் உறுமலின் ஒலியளவு மெதுவாக
ஏறியபடியே வந்து அடங்கியது. கருக்கல்லால் ஆன
அந்த பங்களாவைச் சுற்றிலும் மண்டியிருந்த செடி கொடிகளும் அடர்ந்திருந்த மரங்களும் ஒரு
அமானுஷ்ய உணர்வை தோற்றுவித்தன.
’ஸ்டீவ்’ என்றான் கேசவன். புரண்டு எழுந்து நின்றது. ஜீப் கதவை திறந்து விட்டதும் நிதானமாக இறங்கி அந்த புதிய இடத்தை ஆராய்ந்தது. அது நாட்டு நாயுடன் அயல்தேச நாயைக் கூட வைத்து உருவான சந்ததி. சொல்லி வைத்து அதன் மூர்க்கத்திற்காகவே கேசவன் வாங்கியிருந்தான். அதன் கண்களில் இருந்த விரோதம் பைரவனை அச்சுறுத்தியது. ஓநாயின் உடலமைப்பை ஒத்திருந்த ஸ்டீவ்-ன் பற்கள் சிறிய கோடாரி அளவுக்கு நீளமாக வலுவுடன் இருந்தது. பின் கதவைத் திறந்த கேசவன் இளவரசியை வரவேற்பது போல ஒதுங்கி நின்றான். மஞ்சளும் சிவப்பும் கலந்த நிறத்தில் வடிவத்தின் லட்சணங்களுடன் ராணி இறங்கினாள். உறக்கத்தின் களைப்பும் பயணத்தின் அலுப்பையும் மீறி விகசிக்கும் ஏதோ ஒன்றால் ஆட்கொள்ளப்பட்டு தூண் இருளில் நின்று ஊமையன் எவருக்கும் தெரியாமல் அவளை விழுங்கிக் கொண்டிருந்தான். பாபுவின் நிழல் வாசலில் விழுவது தெரிந்ததும் நழுவி மறைந்தான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்குப் பிறகு பார்க்கும்படி நேர்ந்த விட்டதால் பழைய நினைவுகளில் இருவரும் மூழ்கினர். நேரத்திற்கு ஆகாரம். பிறகு ஊர்ப்புழுதி உடம்பில் படியச் சுற்றியலைவது. அந்த அழுக்குகளைக் கழுவிக் குளிக்க குளத்தில் எருமைகள் போலக் கிடந்து அங்கு வரும் பெண்களிடம் வம்புகளில் ஈடுபடுவது, சண்டை மூண்டால் அதை சம்பந்தப்பட்டவர்களின் வீடு வரை இழுத்துப் போய் ரகளைகளைத் தொடர்வது எனக் கழிந்தப் பதின்பருவத்தின் தொடக்க நாட்களுக்குள் உலவிக் கொண்டிருந்தனர். இருளுக்கு தீப்பிடித்தது போல சிவப்பு உடையில் பதுமை போல வந்து நின்ற ராணியை ஒரு பார்வைப் பார்த்து பின் தலை கவிழ்ந்தான். உடனேயே இன்னொரு முறை பார்க்கலாமா இல்லை சற்று நேரம் கழித்து பார்த்துக் கொள்ளலாமா எனத் தனக்குள் கேட்டுக் கொண்டான்.
அந்த குழல்விளக்கினடியில்
அவளது தோற்றம் அவனைத் தடுமாற வைத்து விட்டிருந்தது. தன்னை சகஜமாக மாற்றிக் கொண்டு புருவம்
உயர்த்தி, ‘யாரு..?’ என்றான். அது அவளுக்குப் பிடிக்கவில்லை. முகத்தைச் சுருக்கினாள்.
‘பேபி இங்க வா..’ என கேசவன் தன்னருகில் அழைத்து
நிற்க வைத்தான். ‘அந்த எஸ்டேட் பேரம் படிஞ்சு கைக்கு வந்தவுடனே மேரேஜ் பண்ணிக்கப் போறோம்..’
என்றான். ஏற்கனவே அது பற்றி கடிதத்தில் குறிப்பிட்டுப் பேசியிருந்தான். பாபுவே கூட
அதை வாங்க கூட்டாளியாக இணைந்து கொள்வதாக இருந்தது. பிறகு கேசவன் எழுதிய கடிதங்களில்
அதைக் குறிப்பிட்டிருக்கவில்லை. ‘அப்போ லட்சுமி..?’ என்றான் ஐயத்துடன். ‘ஹேய் கமான்..அவ
அங்க இருப்பா. இவ எஸ்டேட்ல இருப்பா..’ என்றான் தோளைக் குலுக்கியபடி. பாபுவின் சொத்துக்கள்
கரைந்து விட்டன. இருப்பவையனைத்தும் பழைய பாளையக்கார ராஜ பரம்பரையில் வந்த அவன் மனைவி
பானுவுடையது. அதுவே விரிந்து பரந்து கிடந்தது. இந்த காட்டுப் பங்களா அவன் வீட்டுச்
சொத்து. பிரிட்டிஷ்காரர்களுடன் வேட்டைக்குச் செல்வதற்கென்றே அவன் தாத்தா கட்டிய கருங்கல்லால்
அமைந்த கோட்டை போன்ற கட்டிடம் அது. அங்கு அவரும்
பிறகு தந்தையும் வேட்டையாடிய மிருகங்கள் பாடம் செய்து சுவர்களில் மாட்டப்பட்டிருப்பதை
பார்த்து அவளுக்கு வினோத உணர்வு ஏற்பட்டது. ஏதோ காலம் மாறி வந்து வேறோரு காலத்தில்
நின்று கொண்டிருக்கிறோமோ என நினைத்தாள். அவள் தன்னை விடவும் இருபது வருடம் மூத்த ஒருவனுக்கு
வலுக்கட்டாயமாகக் கட்டி வைக்கப்பட்டு, கேசவனை
கோவிலில் பார்த்து அவனது சொல்லை நம்பி மறுவாரமே கிளம்பி வந்தவள். பணமுள்ள இடத்தில்
எந்த நியாய அநியாயங்களுக்கும் ஒரே மதிப்பு தான் என்கிற பாடம் ஒன்றே அவளறிந்தது. பிறகு
அவளுக்கு ஆண்களை நன்றாகவே தெரியும். அவளுடைய
படிப்பு கேசவனை அவளிடம் அஞ்ச வைத்தது. கேசவன் அவளை முன்னறையில் விட்டுவிட்டு ஸ்டீவ்க்கு
உணவிட சென்று விட்டான். எனவே இப்போது பாபு அவளை நன்றாக ஊடுருவி நோக்கினான். எஸ்டேட்டுக்கு
எடை போகக்கூடிய அழகி என்று பட்டது. அடர்ந்தியான முடியும் இறுகிய தோள்களும் கொண்ட பாபுவை
அவள் ஓரக்கண்களில் பார்த்தபடி தான் இருந்தாள். சட்டென்று அவள் கண்கள் அங்கு மாட்டப்பட்டிருந்த ஒரு
புகைப்படத்தையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. கழுத்தை மூடும் கோர்ட் அணிந்து வெள்ளை
நரைமீசையை முறுக்கி விட்டு தலைப்பாக்கட்டுடன் கம்பீரமாக சிரித்துக் கொண்டிருந்த அவனது
தாத்தாவின் படம் அது. ரத்தின சபாபதி. உண்மையில் அவள் கண்கள் அதற்கு கீழே இருந்த வைர
கழுத்துமாலையை தான் பார்த்தபடி இருந்ததைக் கண்டான். தயக்கம் நீங்கியவனாக,
‘எங்க தாத்தா அஞ்சு யானைகளைக் கொன்னு அதோட தந்தத்தையெல்லாம் ராணியம்மாவுக்குப் பரிசாகக் கொடுத்தாரு. அப்போ இறக்குமதியான வைரநகைகள்ல ரெண்டு வைரக் கழுத்து மாலையை தாத்தா வாங்கி அவங்களுக்கு ஒன்னு. என் பாட்டிக்கு ஒன்னு கொடுத்தாரு. அதுக்கு பரிசா ஒரு ஊரையே எங்க தாத்தாவோடதுனு சொன்னாங்க..’ என்றான்.
எந்த கடும் சூழலிலும் அதை எடுத்துப் பயன்படுத்தியதில்லை.
அது அவர்களின் அடையாளம் போல பேழையில் ஒளிர்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு முறை திருட
வந்தவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதைத் தெரிந்து கொண்டவர்கள் இன்னொரு முறை முயற்சிக்கவே
இல்லை.. பேய்கள் குடிக் கொண்டிருக்கும் பங்களா, காட்டில் இறந்த ஆவிகள் அங்கு நடமாடுகின்றன,
அதை சில பாம்புகள் காவல் காத்துக் கொண்டிருக்கின்றன போன்ற கட்டுக்கதைகளும் கிளப்பி
விடப்பட்டன.
அந்த ’ராணியம்மா’வை அவன் சாதாரணமாகத்
தான் சொன்னான். சொல்லி முடித்ததுமே இருவரும் அந்தரங்கமாக ஒருவர் மற்றவருக்குத் தெரியாமல்
புன்னகைத்துக் கொண்டனர். அவர்கள் பேசுவதை ஊமையன் சமையலறையின் ஜன்னலுக்கு பின்னால் ஒளிந்தபடி
நின்று அவளின் பின்புறத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். அவனது ஆண்மைக் கிளர்ந்தெழுந்து
சுவரில் முட்டி நின்றது. எதுவோ சட்டென்று நினைவு வந்தவனாக விடுவிடுவென கேசவன் குறுக்காக
ஓடி ஜீப்பின் பின்சீட்டிற்கடியிலிருந்த துப்பாக்கியை எடுத்து வந்தது கூட அவனுக்கு தெரியவில்லை.
ஸ்டீவ்-ம் பைரவனும் குரைத்துக் கொள்ளும் சத்தம்
கேட்டு, ராணி தன் முதுகைத் துளைக்கும் கண்களை உணர்ந்து திரும்புவதற்குள் ஊமையன் அங்கிருந்து
அகன்று விட்டிருந்தான்.
காடையும் முயலும் வறுத்து
வைக்கப்பட்டிருந்தன. விருந்தினருக்காக அவை மூடி வைக்கப்பட்டிருந்தது. ஊமையனின் கைப்பக்குவம்
ஏழூருக்குப் பேர் போனது. நாக்கை மேல் அன்னத்தில் வைத்துக் கொண்டு அங்கு ஒட்டிக் கொண்டிருக்கும்
சொற்களைத் துழாவி பிறகு ஏமாற்றத்துடன் பாதியை ஏகதேசமாக உளறுவான். அவனுடன் ஒரு வருடப்பரிச்சயம்
உள்ளவர்கள் கூட, அவன் கூற விரும்புவதை பிறருக்கு
கிளி போலத் திருப்பிச் சொல்லி விட முடியும்.
பாபுவின் வீட்டிலேயே வளர்ந்தவன்
அவன். பாபுவின் அம்மாவுடன் தான் ஒட்டுதல் அதிகமும். தன்னை ராஜாமணி என முழுப்பெயர் சொல்லி அழைக்கிற வெகுசிலரில்
அவரும் ஒருவர். அவனது திருமணத்தை முன் நின்று நடத்தியவரும் அவர் தான். பாபு எங்கு சென்றாலும்
ஊமையன் உடனிருப்பான். அவனது கைச்சமையலின் மகிமை
அப்படி. பாபுவுக்கு மிகப்பிடித்தமான ஆட்டிறைச்சியும் கெளதாரியும் இருந்து விட்டால்
தட்டு காலியாகும் வேகம் அசாதாரணமாக இருக்கும். எனவே அதுவும் பொறித்தும் வேக வைக்கப்பட்டும்
இருந்தது. ராணி இரவுடையில் வந்து அமர்ந்தாள். ஊமையன் ரத்தம் உறைய அப்படியே ஸ்தம்பித்து
பிறகு இயல்புக்கு திரும்பினான். உடையிலிருந்து எழுந்த வாசனைத் திரவியத்தின் மிருதுவான
மணத்தைத் தாங்க முடியாமல் கண்களை மூடிக் கொண்டான். அதை உடலெங்கும் நிறைத்துக் கொள்ள
விரும்பியன் போல மூச்சிழுத்து விழுங்கினான். ஊமையனை அவள் கண்டுகொண்டு விட்டாள். தன்னை
மேயும் கண்களை பெண்கள் விட்டுவிடுவதேயில்லை. பாபுவும் கேசவனும் விஸ்கியில் திளைத்தபடி
உள்ளறையில் கிடந்தனர். ராணிக்குத் தன் கடந்த காலம் திடீரென ஞாபகத்திற்கு வந்தது. தன்
தங்கைகளின் திருமணத்தின் பொருட்டு தன்னை விலை கொடுத்து மணந்து சென்றவனுக்கு பார்வையால்
தான் புணர்ச்சி சாத்தியம். செயலில் இறங்க முடியாமல் தள்ளிச் செல்பவன் அவன்.
தனக்குள் சிரித்தபடி ராணி
ஊமையனைச் சீண்ட விரும்பினாள். அவ்விருவருக்காகக் காத்திருக்கும் இடைவெளியில் எதையோ
மறந்தவள் போல தன் உடையை சற்றேக் கணுக்கால்வரைத் தூக்கி மரப்படிக்கட்டுகளில் ஏறிப் பிறகு
இறங்கி வந்தாள். ஊமையனின் மொத்த உடலும் பஞ்சு
போலாகி அவள் பின்னாலே சென்றது. காலில் விழுந்தது. கெஞ்சியது. ஒரே ஒரு முத்தம். அந்த
இதழ்களில் வேண்டும். முறைத்தாள். தன் தலையை அவள் கால்களில் மோதி இறைஞ்சினான். அவள்
அருளினாள். கத்தியை எடுத்துக் கொண்டு பின்னாலேயே சென்று மிரட்டினான். வேறு வழியே இல்லை.
அவளுடன் ஆசைத் தீர முயங்கினான். அவளது உணவில் மயக்கமருந்தைக் கலக்கி வைத்தான். அசந்து
உறங்கியவளை முன்னும் பின்னும் அவளுள் புகுந்து
இச்சைகளை தணித்துக் கொண்டான். அவளைத் தொட்டதும் கத்திய அலறலிலேயே விழித்துக்
கொண்ட பாபு அவனைத் துப்பாக்கியால் சுட்டுக்
கொன்றான். அவனது தாபத்தைக் கண்டவள் அவனுடனேயே வாழ வந்து விடுகிறாள். அவளுடன் பிள்ளை
பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்து அவள் மடியிலேயே உயிர் விடுகிறான். ‘டேய்..’ பாபுவின் கர்ஜனை அவனை திடுக்கிட வைத்து
இவ்வுலகிற்கு இழுத்து வந்தது. ஒரே நிமிடத்தில் வாழ்ந்து முடித்த ஆறேழு வாழ்க்கைகளை
எண்ணி ஊமையனுக்கு அச்சமும் உவகையும் ஒருங்கே ஏற்பட்டது. பாபுவும் கேசவனும் சிறு தள்ளாட்டத்துடன் வந்து கொறித்து
விட்டு தலை தொங்கிப் போயினர். கேசவனின் வெளிநாட்டு விஸ்கியின் கைங்கர்யம். பாபுவுக்குக்
குடித்தால் உறங்கி விட வேண்டும். கேசவனோ நேர்மாற்றி. பேசிக் கொண்டே இருப்பான். ’உம்..’
கொட்ட நான்கு ஆட்கள் இருந்தாலும் போதாது. மீண்டும் அவர்களை உசுப்பியபடியே மூடி வைக்கப்பட்டிருந்த
உணவு வகைகளைத் திறந்தான். கேசவனை விட ராணி முகம் விரியச் சிறிதும் மிச்சமின்றி உண்டு
முடித்தாள். ஏதேனும் சொல்வாள் எனக் காத்திருந்தான். அலட்சியமாக எழுந்து கை கழுவச் சென்றாள்.
பாபுவைக் கொண்டு போய் படுக்க
வைத்த போது தான் அவன் ஏதோவொன்றை சொல்வதாகத் தோன்றியது, ‘எங்கிருந்து புடிச்சான்னு தெரியல.
நாலு நாளைக்கு வைச்சு ஊனுனாலும் தாங்குவா போலிருக்குது. சும்மா தள தளன்னு தக்காளி மாரி.’
ஊமையன் அதிர்ந்து விட்டான். பிறகு அவனுக்குச் சிரிப்பு வந்தது. அன்றிரவு ஊமையன் இரண்டு
தடவைகள் கோமணத்தை மாற்ற வேண்டியிருந்தது. சோர்வுடன் முன்னறையில் புரண்டு படுத்தான்.
மாடியில் விளக்கெரிந்து கொண்டு தான் இருந்தது. கேசவன் மீது பகையுணர்ச்சி ஏற்பட்டது.
பாபு அலாரம் வைக்கப்பட்டது போல எழுந்தமர்ந்தான். சுருட்டைப் பற்ற வைத்துக் கொண்டபடியே ‘டேய்..’ என அலறினார். மணி மூணரை. இரவே ஜீப்பில் அனைத்தும் எடுத்து வைத்து விட்டுத் தான் படுத்திருந்தான் என்பதால் அவனிடம் அடி வாங்க வேண்டிய அவசியமிருக்கவில்லை. ஏதேனும் தாமதமாகி இருந்தால் அவனை வெளுத்துக் காய வைத்திருப்பான். கேசவனும் ராணியும் இறங்கி வந்தனர். ஊமையன் பாபுவைப் பார்த்தான். அவனது கண்கள் அவளை முழுதாக அளந்து தணிவதைக் கண்டான்.
பளிச்சென்று இரு ஜீப்புகளும்
துடைத்து வைக்கப்பட்டிருந்தன. ஊமையனைப் பார்த்து ‘குட்’ என்றான் கேசவன். ராணியின் இதழோரம்
சிரிப்பு தேங்கி நின்றது. பாபுவின் ரைபிள் கன்-னை பார்த்ததும் கேசவனுக்குப் பொறாமை
மூண்டது. அவனுடையதை விடவும் துல்லியமானது. அதிகச் சுற்றுகள் தாங்கக் கூடியது. அதை மறைத்தபடியே
வாங்கிச் சோதித்தான். கட்டையின் வழுவழுப்பு இரவு அவன் கையாண்ட ராணியின் தொடையை நினைவூட்டியது.
அதற்கு மேல் அவள் அனுமதிக்கவில்லை. முன் விளையாட்டுகளிலும் சிற்றின்பத்திலுமே திருப்தியடைய
வேண்டியிருந்தது. எஸ்டேட் பெயர் மாறும் வரை அப்படித்தான்.
அந்த அதிகாலை வேளையில் ‘ஸ்டீவ்..’
வின் குரைப்பொலி நடுங்க வைப்பதாக இருந்தது. பைரவனை அதற்கு ஒத்துவரவில்லை. அச்சத்தில்
கால்களுக்கிடையில் வாலைச் சுருட்டியபடியே இருந்த பைரவன் ஒரு கட்டத்திற்குப் பிறகு மூர்க்கமாகி
எகிறி வந்தது. இந்த தாக்குதலை எதிர்பாராத ஸ்டீவ் குரைப்பை நிறுத்தி கேசவனின் கால்களை
நோக்கி ஓடிச் சென்றது. பாதுகாப்பான இடத்திற்குள் வந்து விட்டோம் என அறிந்ததும் மீளவும்
குரைக்கத் தொடங்கியது. இரண்டின் குரைப்பொலிகளால் அந்த பகுதியையே நிறைத்தது. இருவரும்
தத்தம் நாய்களை அடக்க முயலுந்தோறும் அவைகளின் வேகம் அதிகரித்தது. ஜீப்பை ஸ்டார்ட் செய்ததும்
இரண்டுமே பயந்த சிறுவர்களாக எதுவும் பேசாமல் ஏறி அமர்ந்து கொண்டன.
‘டேய்..நானும் பைரவனும் இதுல
வர்றோம். நீ அவங்க கூட ஏறிக்க. வழி சொல்லிக் கூட்டிட்ட்டு வா. இங்கிருந்து வடக்கால
ரெண்டு பர்லாங் போனதீம் பள்ளம் வருதல்லோ. அங்க எறங்கி கிழக்கால கூட்டிக்கிட்டு வா.
வழிமறிச்சான் ஓடைக்கிட்ட வந்து அங்கயே நில்லுங்க. தனியா வுட்டுப் போட்டு மயிரே போச்சுனு
போயராதடா..யானை, நரினு சுத்திக்கிட்டு கிடக்கும்.
அப்பறம் பெரும்பாடா போயிரும்..’
ஊமையன் தலையாட்டிக் கொண்டே
இருந்தான். ‘நல்லா ஆட்டு. நைட்டாச்சுன்னா அதையை கைல புடுச்சு ஆட்டி ஒழுக்கி வுடு...த்தூ..போய்
ஏறிக்கடா தாயோளி..’ என்றார். காலையில் ஜீப்பில் ஏறும் முன் பாபு கண்டிருந்த ராணியின்
அசைவுகள் அவனை இம்சித்துக் கொண்டிருந்தன.
பின்னால் சாமான்களோடு ஒன்றாக
ஊமையன் ஏறி அமர்ந்து கொண்டான். காடு இருளுக்குள் கிடந்தது. ஜீப்பின் ஹெட் லைட் வெளிச்சம்
மலை மேல் விழுவது போலத் தோன்றியது. ஆனால் நீண்டிருந்த சாலையின் இருளை சில மீட்டர்களுக்கு
அகற்றி ஒளிர்ந்தது. இரவும் சுமாராக மழை பெய்திருக்க வேண்டும். அவள் கால்கலுக்கருகிலேயே
ஸ்டீவ் ஏதோ துணிப் பொட்டலம் போல சுருண்டுக் கிடந்தது. கேசவனின் வலது கை ஸ்டேரிங்கைச்
சுழற்ற இடது கை அவளது தொடையை நீவிக் கொண்டிருந்தது. நெளிந்தாள். அவனைத் தள்ளி விட்டு
விட்டு அவளைத் தூக்கிச் சென்றாள் என்ன? என்று ஒருகணம் ஊமையனுக்குத் தோன்றியது. ஊரில்
பெண்டாட்டியும் குழந்தைகளும் கண்களுக்குள் வந்து போயினர். அமைதியாகி அவள் முதுகுச்
சருமத்தின் பளபளப்பில் அதன் மீது அவளது மயிர்க்கற்றைகள் விழுந்து எழுந்து அசையும் தோற்றத்தைப்
பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான். ஆனால் நினைப்பு அவனை வேறொங்கோ இழுத்துச் சென்று
விட்டிருந்தது.
அரைமணியில் அங்கு வந்து சேர்ந்து
விட்டிருந்தனர். ஏற்கனவே தலையில் உருமாள் கட்டோடு பாபு நின்று கொண்டிருந்தான். இரண்டு பெரிய பிரம்புக்
கூடைகள், தோட்டாக்கள், தண்ணீர்புட்டி, தீனிகள்
என ஊமையன் தன் தோளில் சுமந்து கொள்ளும்போதே
தலையில் விளக்குகளைப் பொருத்திக் கொண்டனர். இந்த காட்டிற்குள் எங்கெங்கெல்லாம்
போகலாம், போகக் கூடாது என்பது பற்றி பாபு விளக்கினான்.
பெய்யும் பனிக்காக முக்காடு போட ராணி முந்தாணையை இழுத்த போது இடுப்பின் பிதுக்கங்களை
பாபு கவனிக்காதது பாவனை செய்தான். ஊமையன் அவனுக்குப்
பின்னால் நின்றபடி அவளது அந்தத் தோற்றத்தை மனதிற்குள் பதிய வைத்துக் கொள்ளக் கண்ணெடுக்காமல்
அக்காட்சியைப் பார்த்தபடியே இருந்தான். அவளோ காட்டின் பிரம்மாண்டத்தில் பிரம்மித்துப்
போய் தொலைவிலெங்கோ ஆழ்ந்து நின்றாள்.
நாய்களின் சங்கிலிகள் அவிழ்த்து
விடப்பட்டன. ஸ்டீவ் சில நிமிடங்கள் தான் காற்றில் மோப்பம் பிடித்து நின்றது. பிறகு
பைரவனைக் காட்டிலும் புதர்களுக்குள் சீறியபடியே நுழைந்தது. நினைத்ததற்கும் மாறான வேகத்தில்
இருவருமே குதித்து ஓடினர். வேட்டைகள் அவர்களுக்கு புதியதல்ல. ராணி ஊமையனோடு தனித்து
விடப்பட்டாள். என்றாலும் அவர்களுக்குப் பின்னே கொஞ்ச தூரம் ஓடினாள். பிறகு துப்பாக்கிச்
சத்தங்கள் மாறி மாறிக் கேட்டன. பாபு ஒரு பக்கமும் கேசவன் இன்னொரு புறமும் சுட்டபடியே
ஓடினர். பறவைகள் கலைந்து பறந்தன. பிறகு நிதானித்து ரைபிளை இயக்கியதும் வானில் பறந்து
கொண்டிருந்த உள்ளான், நாரைகள், கூழைக்கடாக்களில் எதை முதலில் சுடுவது எனக் குழம்பினான்.
குக்குறுவான் பறக்கும் திசையில் துப்பாக்கியைத்
திருப்பவில்லை. ஏனெனில் குக்குறுவானின் கூவல் அவன் தோட்டத்தில் எப்போதும் கேட்பதுண்டு.
படுக்கையில் கிடந்தபடியே அதற்கு செவிமடுத்து லயித்திருப்பான்.
இப்போது குண்டடிப் பட்டு
வீழும் பறவைகளின் எண்ணிக்கை கூடியது. பாபு வேட்டையாடியவற்றை பைரவன் கவ்விக் கொண்டு
வந்து ஊமையனின் காலடியில் போட்டான். ஸ்டீவ் எடுத்து வந்து முன்னாலேயே போட்டு விட்டு
உள்ளே திரும்பி ஓடியது. பாபு வேட்டையாடியதில் பாதி கூட இல்லை. ஊமையன் பெருமையுடன் அவளைப்
பார்த்தான். அவனைத் தவிர்த்தபடி தயங்கி வேறு வழியில்லாமல் கேசவனுடையதை எடுத்து மற்றொரு
கூடையில் போட்டாள்.
முயல்களின் வேகத்திற்கு ஈடாகக்
காற்றைக் கிழத்தபடி முன்னேறும் நாய்களின் மூர்க்கம் அசாத்தியமாக இருந்தது. புதர்களில்
முயல்களைக் கண்டு ராணி பின் வாங்கினாள். அப்போதும் குறிப்பிட்ட இடைவெளியில் தூப்பாக்கிச்
சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. இன்னும் கொஞ்ச நேரத்தில் புலர்காலையின் ஒளி காட்டின்
மீது விழுந்து விடும் என்று தோன்றியது.
இறுக்கத்திற்குப் பிறகு அவள்
ஊமையனிடம் தண்ணீர் கேட்டாள். இரு கைகளிலும் சுமந்து வந்து கொடுத்தான். அவளுக்கு சிரிப்பும்
கோபமும் மாறி மாறி வந்தது. அவர்கள் இருவரும் வரும் வழியைக் காணோம். ஊமையனோடு என்ன பேசுவது..!
அவள் அவனைக் காணும் போது வெட்கத்தில் தலை குனிந்து கொண்டான். அவன் அவளை கை தட்டி அழைத்து
சில இடங்களைக் கூட்டிச் சென்று காட்டினான். அங்கிருந்த அழகு அவளை பேச்சிழக்க வைத்தது.
குரங்களின் மரத்தாவல்கள் அவனிடமிருந்த கம்புக்கு பழிப்புக் காட்டுவது போலிருந்தது.
ஜாடையால் ஓரிடத்தைக் காட்டி என்னவோ சொல்ல முயன்றான். அவள் இறங்கி நடந்தாள். பேரருவி
இரைச்சலுடன் விழுந்து கட்டாற்று வெள்ளமாகப் பாறையில் மோதி எழுந்த புகை அவர்கள் நிற்கும்
இடம் வரைக்கும் வந்து மறைந்தது.
தூறல்கள் விழத் தொடங்கின.
அங்கிருந்து செல்ல சரிவில் இறங்கும் போது வழுக்கி விழப்போனவளை ஊமையன் இழுத்துச் சேர்த்தணைத்து
மேடேற்றினான். பாறையில் விழுந்திருக்க வேண்டும். திகிலுடன் காட்டை ஒரு தடவை பார்த்தாள்.
அந்த இடத்திலிருந்து அகலும்வரை நிறைந்திருந்த
சரிவுகளை ஊமையனின் கையைப் பற்றியபடியே இறங்க வேண்டியிருந்தது. அப்போது அவனது கால்கள்
மட்டுமே தரையில் இருந்தது. அவன் தலையோ வானத்தில் உரசி மேகங்களைக் கலைத்து விட்டுக்
கொண்டிருந்தது. அவளாக விடுவிக்கும் வரை அவன் விடவே இல்லை. நடக்குந்தோறும் அசையும் பின்னழகை,
கைகளை ஊறல் எடுக்க வைக்கும் மார்பை, உடல் வனப்பை கண்களால் தின்று கொண்டே நடந்தான். பெரிய பாறைக்கு
அழைத்துச் சென்று அடியில் நிறுத்தினான். அவளுக்குக்
கூச்சத்திலும் எரிச்சலிலும் குமட்டியது. அவனை விட்டு விலகி மேல் நோக்கி நடந்தாள். அவனைப்
பார்க்காமல் இருந்தால் தேவலாம் போலிருந்தது. அவனுக்கு இதுவே போதும். பாறைக்கு நடுவே
வானம் பார்த்து மல்லாந்து படுத்துக் கொண்டு விட்டான். கண்களை மூடி சற்று முன் நிகழ்ந்ததை
மீண்டும் மீண்டும் மனதிற்குள் நடத்திப் பார்த்துக் கொண்டிருந்தான்.
இப்போதும் பனி இருந்தது என்றாலும்
ஓரளவு வெளிச்சம் வந்து விட்டிருந்தது. வழித் தவறிப் போனோமே என்றிருந்த போது பாபுவை
எதிர்ப்பட நேர்ந்தது. தைரியமாக அவள் கைகளைப் பிடித்தான். அவள் கோபத்துடன் தட்டி விட்டாள்.
முன்னும் வேகமாக அவளை இழுத்துச் சேர்த்து அணைத்தான். அவள் திமிரும் போது அவள் கண்களின்
முன் அந்த வைரக் கழுத்து மாலையைக் காட்டினான். அவள் கண்களில் உருவானத் தடுமாற்றத்தை
அவன் பார்த்து விட்டிருந்தான். எதிர்ப்பு மெல்ல அடங்கியது. நேற்றிரவே பாபுவின் சொத்துக்களை
கேசவன் உளறல்களுக்கு நடுவே கேட்டிருந்தாள். அவன் முடிக்குள் கையை நுழைத்து முத்துவது
போல முகத்தை இழுத்து முன் நிறுத்தி பிறகு விலகி ஓடினாள். அடுத்த ஐந்து நிமிடங்களில்
மரத்தினடியில் குரங்குகளின் ஆரவாரத்திற்கிடையே ஆழ்ந்து முத்தமிட்டுக் கொண்டனர். அவன்
கைகள் அவளை ஆண்டு கொண்டிருந்தன. ‘போதும்..’ எனத் தடுத்து விலகினாள். சரியென அவனுக்கும்
தோன்றியது.
வேட்டையாடிய பறவைகளையும் முயல்களையும் இரண்டு கூடைகளில் எடுத்துக் கொண்டு ஜீப் கிளம்பியது. இப்போது பாபுவின்
வண்டியில் ஊமையன் வர வேண்டியதாகி விட்டது. கேசவன் தன் அருகிலிருந்த ராணியிடன் அவள்
பார்த்து ரசித்தவற்றை உற்சாகத்துடன் விசாரித்தபடி ஓட்டிச் சென்றான். கூடவே தன் சாகசங்களைத்
திரும்ப திரும்பச் சொல்லிப் பூரித்தபடியே ஸ்டீரிங்கை வளைத்தான். ராணியின் கன்னம் வெட்கத்தில்
ஊறிச் சிவந்திருந்தது. பங்களாவிற்குத் திரும்பியதும் அவளை அறையில் வைத்து நன்றாக கவனிக்க
வேண்டும் என்று தோன்றியது. சிரிப்பு முட்டியது. அதை அறிந்தவள் போல அவள் கேசவனின் கன்னத்தைப்
பிடித்துக் கிள்ளினாள். அவளைப் பொறுத்தவரை அது பாபுவின் கன்னம்.
பாபுவின் ஜீப் அவனை முந்திக்கொண்டு
உள்ளே சென்று நின்றது. காலையில் பங்களாவைச் சுற்றி நல்ல மழை பெய்திருக்க வேண்டும்.
கீழே இறங்கினால் உடை நனைந்து விடும். பாபு, ஊமையனைப் பார்த்து ‘அந்த முக்காலியை எடுத்து
வந்து போடுடா..’ என்றான். உடம்பெல்லாம் கால்களாக ஊமையன் ஓடினான். வருவதற்குள் மகிழ்ச்சியின்
அலையால் தூக்கப்பட்டு சரிந்து விழுந்தான்.
’ராணி இறங்கி வா..’ கேசவன் அழைத்தான்.
அவன் கணுக்கால் அளவு நீரில்
இறங்கி நின்று அவள் முக்காலியில் கால் வைத்து இறங்க கையைப் பிடித்தான். அவள் மெதுவாக
இறங்கியதும் மூவரும் ஆளுக்கொரு திசை பார்த்து நின்றிருந்தனர்.
கேசவனை அலட்சியமாகப் பார்த்து
புன்னகை செய்து ஊமையனை தூசியெனக் கருதி இறங்கினாள். தூறலுக்குள் தனக்காக நின்றிருக்கும்
பாபுவை அர்த்தபுஷ்டியுடன் ஒரு பார்வை பார்த்த பின் தன் முகம் சிவக்க ராணி அந்தப் பங்களாவுக்குள்
கம்பீரமாக ஒரு ராணியைப் போலவே நுழைந்தாள்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு மிக நல்ல கதை ஒன்றை வாசித்தேன் நன்றி செந்தில்
ReplyDeleteமிக்க நன்றி சரவணன்..
ReplyDelete