Monday, March 27, 2023

இளமையும் விவேகமும் (ஜாக் லண்டனின் ‘சிறிதளவு இறைச்சி’)

 

இளமையும் விவேகமும்... 

(ஜாக் லண்டனின்சிறிதளவு இறைச்சி’)


காட்டின் அரசன்என்ற போதும் சிங்கம் இரை தேடுவது தன் நிரைகளுடன் தான். பிறகு ஒன்றிற்கும் மேற்பட்ட தன் இனத்தவருடன் கிடைத்த இறைச்சியைப் பகிர்ந்து கொள்ளும். அதன் இளமை பிற விலங்குகளுக்கு சிம்ம சொப்பனம். பொதுவாக பிற உயிர்கள் சிங்கத்தின் இளமைக்காலத்தில் அதை நெருங்க அஞ்சும். அதற்கு முதுமை ஓர் சாபம் போல. பிறர் தின்று வைத்த எச்சங்களை வயோதிகத்தின் இயலாமையுடன் அசை போட்டு ஒரே இடத்தில் படுத்து உறங்கி சோம்பிக் கிடக்கும். இயல்பிலேயே அந்த இனத்திற்கு சோம்பல் உண்டெனினும் அந்திம காலத்தில் எழ முடியாத அளவிற்கு அச்சோம்பல் அவற்றை ஆட்கொண்டு விடும்.  கைவிடப்பட்ட அந்த கிழட்டுச் சிங்கம் தன் இளமையின் நாட்களை எண்ணியபடி வந்தமரும் பூச்சிகளைக் கூட விரட்ட வலுவின்றி கண்மூடி லயித்துக் கிடந்து அப்படியே இறந்தும் போய்விடும். பிற சிங்கங்கள் தம் வழியைப் பார்த்துக் கொண்டு சென்று விடும். 

வயது கூடுவதாலோ பலகீனமானவராக மாறுவதாலோ வேறு எந்த வனவுயிர்களை விடவும் மூர்க்கமான விலங்கான பசி மனிதர்களை விட்டு விலகி சென்று விடுகிறதா என்ன? வேட்டையாடும் உயிர்களுக்கே நிலைமை அதுவெனில் பிழைப்பையொட்டி உணவு தீர்மானிக்கப்படும் மனிதர்களின் அல்லாடல்களை என்னவொன்று உரைப்பது? ‘பசி வந்தா ஏன் இந்த உடம்பும் மனசும் நாயா மாறிடுது..?’ என யமுனா பாபுவிடம் கேட்பது (மோகமுள்) நினைவுக்கு வருகிறது. ‘உள்நின்று உடற்றும் பசிஎன்பதே திருவள்ளுவரின் வரி.  பசி பற்றி எழுதாத படைப்பாளிகள் இல்லை எனும் அளவிற்கு அவர்களின் வரிசை நினைவில் எழுகிறது. வெளிச்சம் நிரம்பிய காலத்தில் உடல்வலுவின் துணிவில் வெற்றிகளை ஈட்டி மிதப்பானதொரு வாழ்க்கையைக் கொண்டாடித் தீர்த்த ஒருவன் தன்  ஒளியற்ற காலத்தில் ஏதுமிற்றவனாக ஆகி சிறிய இறைச்சிக்காக ஆற்றாது அழுத கண்ணீரே ஜாக் லண்டனின்சிறிதளவு இறைச்சிஎன்கிற நெடுங்கதை.



வண்ணநிலவனின்பயில்வான்கதையின் தொடக்கம்ஆமீனா ரொம்பவும் நாள்பட்ட கருவாட்டை வதக்கிக் கொண்டிருந்தாள்என்பது. இஸ்மாயில் ஈட்டிய பழைய வெற்றிகள் ஏதும் தற்போதைய அன்றாடங்களின் புகைச்சலை விரட்டுவதில்லை. பசியின் வீட்டில்  தரித்திரத்திற்கு எப்போதும் நாற்காலி கெளரவம் தான் வழங்கப்படும் போலும். பீடி சுற்றி கிட்டும் காசில் உலை வைக்கும் குடும்பத்தில்பயில்வான்ஏதேனும் போட்டிகள் நடக்குமா என்கிற தேடுதலில் அலைந்து வீடு திரும்புவதே வழக்கம். ஆனால் லண்டனின் கதை இதை விடவும் தீவிரமும் ஆற்றலும் மிக்கது



இளமையும் புத்தெழுச்சியும்*முதுமையும் விவேகமும் என்கிற இருமைகளுக்கிடையிலான சமர். ’வலியது வாழும்என்கிற கோட்பாடே உலகின் நியதி என்பதை காட்டுபவர் லண்டன்.


டாம் கிங் புகழ்பெற்ற ஆனால் அந்த புகழ் பழங்கதையாகிவிட்ட குத்துச்சண்டை வீரர். எனவே போட்டி தொடங்குவதற்கு முன் தோற்பவருக்கு தரப்படுகிற மூன்று பவுண்டுகள் அவருக்கு வழங்கப்படுகின்றன. ரொட்டியும் குழம்பும் தயாரிக்க அவை சரியாகப் போய்விடுகின்றன. அந்த இரவில் நடக்கும் யுத்தத்தில் வென்றால் முப்பது பவுண்டுகள் கிடைக்கும். அதைக் கொண்டு பக்கத்து அறையில் பசியை மறக்கடித்து உறங்க வைத்த இரு பிள்ளைகளுக்கும், பசியை மறந்து நின்றிருக்கும் மனைவிக்கும் ஏதாவது செய்ய முடியும். பிறகு வாடகை பாக்கி. அப்பறம் கடன்காரர்களின் நெருக்குதல்களிலிருந்தெல்லாம் தப்ப ஒரே விடிவெள்ளி வெற்றி மட்டுமே.


ஆனால் அவருக்கு இன்னும் கொஞ்சம் இறைச்சி வேண்டும். மனைவி கடன் கேட்டு சென்ற இடத்தில் தோல்வியின் நினைவூட்டலே பரிசாக வழங்கப்படுகிறது. இத்தனைக்கும் அவர் பலத்தை அரங்கில் தான் காட்டியவரேயன்றி வேறெங்கும் அல்ல. எந்த வம்பிற்கும் செல்லாதவர். நிதானமும் தன்மையுமே அவர் இயல்பு. ஆனாலும் மறுக்கப்படுகிறது. டாம் வெற்றிவேந்தனாக திகழ்ந்த காலத்தில் அவர் வளர்த்த நாய்க்கு கணக்கற்ற இறைச்சித்  துண்டுகளைத் தினமும் போட்டு கொழுக்கச் செய்தவர் தான். ஆனால் அது எங்கோ சென்ற விட்ட கதை. அதை நினைக்கும்  சமயத்தில் கூட பசி அவரைப் பாடாய் படுத்துகிறது. போட்டி நடக்கும் கெயிட்டியை சென்றடைய முழு இரு மைல்கள் நடந்தே செல்ல வேண்டிய அவலம். சொற்பக் காசு கூட இல்லை. ஒரு குத்துச் சண்டை வீரனுக்கு சக்தியின் சேகரம் எவ்வளவு மதிப்புமிக்கது எனத் தெரிந்த போதும் நடந்தே செல்கிறார். காலையில் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அவர் வீழ்த்தி வாகை சூடிய வீரர்களின் முகங்களையும் அப்பொது நடைபெற்ற கொண்டாட்டக் காட்சிகளையும் மனத்திரையில் ஓட விட்டபடியே செல்கிறார்.


ஒருவர் தொடர்ந்து நெடுங்காலம் சண்டையிடும் போது தசைகள் தளர்கின்றன. நம்பமுடியாத அளவிற்கு மூட்டுகளும் நரம்புகளும் பாதிக்கப்பட்டு விடுகின்றன. அவர் வயதில் வேறு எந்த வீரரை விடவும் அதிக அரங்குகளில் களமாடியவர் டாம் கிங். அவர் தன் இளமையில் எப்படி தன்னை விடவும் வயதானவர்களை வீழ்த்தினாரோ அதே போல தன்னை வீழ்த்த இளமையின் துடிப்புடன் காத்திருக்கிறான் சான்டல். முன்பு இளமையாக தான் இருந்த போது தன்னிடம் தோற்று திரும்பிய ஸ்டவ்ஷர் பில், உடை மாற்றும் அறையில் அழுது கொண்டிருந்த காட்சியை அப்போது டாம் நினைவு கூர்கிறார்.


எதிரே இளமையின் கோலாகலத்துடன் திமிறும் தசைநார்களும் வடிவான அங்கங்களும் கொண்ட சான்டல். அவரிடம் ஒரே ஒரு பவுண்ட் இருந்திருந்தால் சிறிதளவு இறைச்சிக்கு செலவிட்டு சக்தியை பெற்றிருப்பார்.


ஆரம்பச் சுற்றுகளில் தன் சக்தியை விரயம் செய்யாமல் எதிராளியோடு விவேகமான முறையில் போட்டியிடுகிறார் டாம். சான்டல் துள்ளலுடன் அவரை தாக்க முனைகிறார். தப்பிக்க அவருக்கு சுலபமாகத் தெரியும். எதிரியைக் கட்டிப்பிடித்து மேலும் எகிறாமல் பார்த்துக் கொள்வதிலேயே டாம் மணித்துளிகளை செலவிடுகிறார். மூன்றாவது சுற்றில் சான்டல் அதீத தன்னம்பிக்கையுடன் செய்யும் சிறு தவறுக்குள் நுழைந்து டாம் அவரை தாக்குகிறார். நிலைகுலைந்து வீழ்கிறார் சான்டல். ஒன்பது வினாடிகளுக்குப் பிறகே எழ முடிகிறது. டாமின் மீது சான்டலுக்கு முதன்முறையாக மதிப்பு ஏற்படுகிறது.



தான் நடந்து வந்த சக்தியை மீளப் பெறும் விதமாக சுற்று தன் மூலைக்கருகிலேயே முடிவது போல பார்த்துக் கொள்கிறார் டாம். முக்காலியில் அமர்ந்து ஓய்வெடுக்கிறார். எதிர்ப்புறமிருந்து நடந்து வந்து இங்கு அமர்வதற்கு கால்களுக்கு சக்தி தேவைப்படும். ஓய்வெடுக்கவும் கூடுதல் வினாடிகள் கிடைக்குமே. ஏழாவது சுற்றில் சான்டல் ஓய்ந்தது போலத் தெரிகிறது. தான் கண்ட போட்டிகளிலேயே கடுமையானது டாமுடன் தான் என்பது அவனுக்குப் புரிகிறது. உணர்ச்சிவயப்படாதவராக டாம் கிங் தகுந்த நேரத்தில் கொடுத்த குத்துகள்குண்டாந்தடியால்தாக்குவது போல இருக்கின்றன. அப்போதும் அவரை தன் பசியும் தன் வீட்டினரின் பசியும் ஆட்கொள்கின்றன. வென்றால் மட்டுமே விடுதலை.


’இளமைக்கு அனைத்துமே வழங்கப்படுகிறது’ என்கிறார் ஜாக் லண்டன். ஆம் தன் வீழ்ச்சியிலிருந்து விரைவாக முன்னேறி நிற்கிறான் சான்டல். அதற்கான ஆற்றலை அவன் இளமை அவனுக்கு வழங்குகிறது. ஆனால் அவனுக்கு போதிய விவேகமில்லை. இளமையும் விவேகமும் ஒரு போதும் ஒருங்கே ஒருவருக்கு அமைவதில்லை. ஒன்றிருக்கும் போது மற்றது வெகு தொலைவில் இருக்கும் என்கிறார் லண்டன். எத்தனை மகத்துவமான சொற்கள்...!


ஒன்பதாவது சுற்றில் டாம் எதிரியை மூன்று முறை வீழ்த்துகிறார். பத்தாவது சுற்றில் பொன்னான வாய்ப்பு தன் முஷ்டியில் காத்திருக்கிறது. சான்டல் கிட்டத்தட்ட வீழ்ந்தது போல. டாமின் அடிகளைத் தாங்க முடியாது திணறி முழங்காலில் நிற்கும் நிலை. ஒரே ஒரு வலுவான பலம்மிக்க குத்து. முப்பது பவுண்டுகளும் பசியறியா நாட்களும் சொந்தமாகிவிடும். ஆனால் டாமின் கைகள் எடைமிக்கவையாக இருக்கின்றன. தூக்கக் கூட சக்தியற்ற பலகீனராக அதை மறைத்தபடியே தாக்கும் போது அது இலக்கு தவறி வேறிடத்தில் அதுவும் பலமற்று விழுகிறது. டாமைக் கண்டுகொள்ளும் சான்டல் பிறகு பின்வாங்குவதேயில்லை. அவருக்கு சற்று முன் வந்த கிறுகிறுப்பில் மீண்டு தெளிந்த டாம் இம்முறை எழ முடியாமலேயே போகிறது. அவர் எழும் போது ஆரவாரம் சான்டல் பக்கம் சென்று விடுவதை அறிகிறார்.


சிறிது இறைச்சி கிடைத்திருந்தால் அந்த குத்து சரியாக விழுந்திருக்கும். தோல்வி அவரை குனியச் செய்கிறது. அதே போல இரு மைல்கள் திரும்பிச் செல்ல வேண்டும். அதை விடவும் வீட்டில் காத்திருப்பவர்களின் முகங்கள் அவர் நெஞ்சை அறுக்கிறது. ஓரிடத்தில் அமர்ந்து முகத்தைப் பொத்திக் கொண்டு அழுகிறார். முன்பு பில் ஏன் அழுதார் என்பது அப்போது அவருக்கு விளங்குகிறது.


பசியும் வீழ்ந்தவனின் கதையும் வாசகரைத் தாக்கும் வலுவான களன்கள். அதில் எதிரே லண்டன் நிற்க வைத்தது எது என்பதும் அதை எடுத்துச் சென்ற முறையும் எளியவனுக்கு இவ்வுலகு காட்டுவது இல் என்பதை ஆற்றுலுடன் உணர்த்துகிறது. டாமின் மனதிற்குள் இறைச்சி உண்ணாதது பூதாகர விஷயமாக மாறிவிடுகிறது. எதிரியை விழத்தட்டும் போது எந்த ஆற்றல் பெருகி துணை நிற்கிறதோ அதே போல அவர் சரியுந்தோறும் கண் முன் அந்த இறைச்சியின் நினைவே துரத்துகிறது. தோல்விக்கு ஒரு காரணியாக மனம் போட்டுக்கொண்ட நாடகம் எனவும் ஆறுதலுக்காக சொல்லிக் கொள்ளும் காரணம் எனவும் கருத இடமுண்டு. ஏனெனில், ’இளமைக்கே அனைத்தும் வழங்கப்படும்.’ கதையின் இடையே டாமிடன் கூற்றாகக் குறுக்கிடும் வரியுடன் முடிக்க விரும்புகிறேன்,

சான்டல் ஒருபோதும் உலகளவில் முதன்மை நிலையை அடைய முடியாது. அவருக்குப் போதிய விவேகமில்லை. அதை அடைய அவருக்கு ஒரே வழி அவரது இளமையின் ஆற்றல் தான். பின்னாளில் விவேகம் கிட்டுகிற நிலையில் இளமை கழிந்திருக்கும்.’

மேற்கூறியவை சான்டலுக்காக மட்டும் சொல்லப்பட்டதா என்ன..?



மெக்ஸிகன்ஜாக் லண்டன்தமிழில்ராஜேந்திரன் , தமிழினி வெளியீடு. விலை. ரூ.110.00.

No comments:

Post a Comment