நிலை
அந்த
அறை மீண்டும் திறந்து கிடந்ததை அம்மா வந்து சொன்னபோது கணுக்கால் அளவிற்கு வீட்டினுள்
புகுந்துவிட்டிருந்த மழை நீரை வெளியே இறைத்துக்கொண்டிருந்தேன். உண்மையில் அது ஒரு அறையேயல்ல.
இருட்பொந்து. துருப்பிடித்த சைக்கிளின் உதிரிபாகங்களைத் தூசிமூடியிருக்க, மரச்சாமான்களும்
பழந்துணிகளுமாக உதவாதவைகளும் கழித்துப் போட்டவைகளும் ஒழுங்கற்றுக் கிடக்கும் அறை அது.
அப்பா தொடக்கத்தில் அந்தச் சைக்கிளின் மீதேறிச் சென்றுதான் ஊர்கள்தோறும் ஜவுளி விற்று
மேலே வந்தார். அதை அவர் காணும்படி வைத்தால் என்றேனும் அந்த ஞாபகத்தின் மீதேறி மீள்வார்
என்ற நம்பிக்கையைப் பொய்யாக்கும்படி அதன் இருப்பையே மறந்தவர் போல அதை ஒதுக்கித் தள்ளிவிட்டிருந்தார்.
டார்ச் விளக்கின் ஒளிவட்டம் சுவர்களின்மீது ஊர்ந்துசெல்லும்போதே அந்த அறையின் மூத்திரவாடையால்
சட்டையை மேலே தூக்கி மூக்கைப் பொத்தினேன். காலடியால் அந்த இடம் எப்போதும் கொள்ளும்
பரபரப்பின்றி அமைதியாக இருப்பதைக் கண்டதுமே அப்பா அங்கு இல்லையென்பதை உணர்ந்தேன். அவரைக்
கட்டிப்போட்டிருந்த கயிறு அவிழ்த்துப் போடப்பட்ட ஆடைபோல அலங்கோலமாகக் கிடந்தது. அவருக்கு
அந்தச் செய்தி தெரிந்திருக்குமோ? எனத் தோன்றிற்று. அதற்கு எந்த வாய்ப்புமேயில்லையே
எனத் தர்க்கப்புத்தியால் அந்த எண்ணத்தை விரட்டினேன். எழுந்த கோபத்தில் நெற்றி நரம்புகள்
புடைக்க இருக்கையில்லாத அந்தச் சைக்கிளை ஆத்திரத்தோடு எட்டி உதைத்தேன். அது குடிகாரனைப்
போல மெல்ல ஆடிப் பின் விழுந்தது. அந்தச் சத்தத்தில் பூனையின் மெல்லிய சத்தம் அட்டாணியின்
மீதிருந்து கேட்டது. அப்பாவுக்கென வட்டிலில் வைத்து அறையினுள் தள்ளுவதையெல்லாம் காலி
செய்யும் பூனையது. சட்டென ஒளிவட்டத்தைத் திருப்பியதும் மீண்டும் அதிருப்தி தொனிக்க
கோபத்துடன் கத்திவிட்டுப் பந்து போலக் கீழே விழுந்து ஜன்னல் கம்பியினூடாக நுழைந்து
வெளியேறிற்று. ஒருமுறை வட்டிலிலிருக்கும் உணவை அவரும் பூனையும் எதிரெதிராக அமர்ந்து
அவர் பூனை போலவே நக்கியபடி தின்றுகொண்டிருப்பதைக் கண்டு வந்து, அம்மா தலையில் இடி விழுந்தவள்
போலக் கதறியபடி சொன்னாள். உள்ளே புகுந்து அந்த வட்டிலை பூனை மேல் எறிய அது நொடியில்
தாவி மறைந்தது. அப்பா சுவரைப் பார்க்கத் திரும்பி வெறிப்பதைக் கண்டு பொறுக்கவே முடியாத
கோபத்துடன் அடிக்க ஓங்கிய கையை அவரது உடல் குறுகலால் தணித்து அவர் முகத்தை அப்படியே
சுவரோடு வைத்து அழுத்தினேன். அவர் கண்களுக்குள் உருளும் கண்மணிகளைக் கண்டு பலவீனனாகி
வெளியேறினேன்.
ஒளிவட்டம்
விழுந்த இடத்தில் குழிபோலத் தோன்றியதைக் கண்டு நெருங்கிச் சென்று பார்த்த போது சுவர்
காரைகளை இழந்து பொத்துக் கிடந்தது. உணவை ஒதுக்கிவிட்டுச் சுவரைத் தான் அப்பா இதுநாள்வரைத்
தின்றுவந்திருக்கிறார் என உணர்ந்ததும் கற்தூண் போல உறைந்து நின்றேன். சட்டெனக் கால்களின்
மேல் அந்த அறைக்குள்ளும் புகுந்துவிட்டிருந்த மழை நீரோடு மிதந்த ஏதோவொன்று மோத நினைவு
விலகி உற்று நோக்கினேன். குச்சிகளில்லாத வெற்றுத் தீப்பெட்டிகள் படகுபோல நீரில் தளும்பி
ஆடிக்கொண்டிருந்தன. அவருக்கு எங்கிருந்து இவை கிடைக்கின்றன என்பதை அறியவே முடியவில்லை.
சின்ன அக்காளும் நானும் நித்யாவும் மழை வெள்ளத்தில் மிதக்கவிட்டு அதன் பின்னே ஓடிக்
குதூகலித்த காதிதக் கப்பல்களின் நினைவு வந்தது. அதன் மேல் எங்கள் பெயர்களை எழுதிய பின்பே
ஆரவாரமாகச் சத்தமெழுப்பியபடி நீரில் விடுவோம். என்னுடையதைத் தாண்டிச் செல்லும் நித்யாவின்
கப்பலின் மீது கல்லைத் தூக்கிப்போட்டு அது கவிழ்ந்ததும் தங்கையும் நானும் அவளைக் கேலி
செய்து சிரிப்போம். பெரிய அக்கா வந்து பஞ்சாயத்து பேசி சரிகட்டிய பின் மீண்டும் எங்களை
விளையாட அனுப்புவாள். நித்யா பத்து வயதுவரைக்கும் இங்குதான் இருந்தாள். மாமா சுற்றத்தால்
ஏமாற்றப்பட்டு, சொத்தை இழந்தபின் எதற்கும் உதவாதவரானார். அத்தை தன் பெண்பிள்ளைகளுடன்
வழியேதுமின்றி நிற்பதைக் கண்டு அப்பா அவர்களைத் தன்னுடனே வைத்துக் கொண்டார். ஜன்னலுக்குச்
சற்றுத் தள்ளி நிற்கும் வேப்ப மரத்தின் குளிர்ந்த காற்றின் ஈரம் மயிர்க்கால்களை ஊடுருவிச்
சென்றது. அந்த ஜன்னல் கம்பிகளில் அட்டைப்பூச்சிகளும் கம்பளிகளும் ஊர்வதைக் கண்டேன்.
அந்த ஜன்னல்திட்டில் பாசிகள் தடித்த பச்சை நரம்புகள் போலப் பரவியிருந்தன. குச்சி மெல்ல
அசைவதைக் கண்டதும் அதில் அட்டைகள் வரிசையாகப் பாசிமணி போலக் கோர்க்கப்பட்டிருந்ததை
அறிந்து அதிர்ச்சியும் அருவருப்புமாக இடது கைவிரலால் சுண்டித் தள்ளியபோது அவை கால்களை
இறுக்கியபடி மேலும் சுருண்டுகொண்டது. அப்பாவை நினைத்து எதனாலோ உலுக்கப்பட்டவன் போல
அவரைத் தேடி தெருவில் இறங்கியதும் என் பெயரை ஏலம் விடுபவள் போலக் கூவியபடியே உள்ளறையிலிருந்து
இருள்கூடின முகத்துடன் வந்த அம்மாவை நோக்கி “யென்ன?” என வீட்டின் ஓடுகள் அதிரும்படியாகக்
கத்தினேன். அவள் மேலும் ஒடுங்கிக் குடையை மெல்ல நீட்டி, “பாத்துப் போ சாமி” என்றாள்.
அம்மாவை முறைத்தபடியே குடையை வெடுக்கெனப் பிடுங்கித் தூறலுக்குள் ஏறக்குறைய ஓடினேன்.
அந்த
வீட்டிற்கு அவ்வளவு குளிர்ச்சி இருந்திருக்க வேண்டியதில்லை. நல்ல மழைக்குப்பின் காற்றிலேறி
வரும் ஈரமும் அது கொண்டுவரும் சாந்தமும் அந்த வீட்டிற்கு இருந்தது. அக்னி நட்சத்திர
வெய்யிலின் கடுமையும் குளிர் காலத்தின் பனிப்பொழிவும் அந்த வீட்டின் கூரைக்குக் கீழே
துளியும் இறங்காது. கிணற்றடி வேப்பமரத்தின் குளுமை அந்த வீட்டிற்குள் எப்போதும் வளைய
வந்துகொண்டிருக்கும். அந்த வீட்டிற்குள்ளேயே நடந்துபோய் அடுத்தத் தெருவிற்குள் இறங்கிவிடுமளவிற்கு
அதன் நீளம் இருந்தது. உபயோகப்படுத்தத் தெரியாமல் நான்கு அறைகளைப் பூட்டி வைத்திருந்தோம்.
சிறுவர்களாக நாங்கள் ஒளிந்து விளையாடியபோது வெவ்வேறு அறைகளின் மூலைகள் தந்த கதகதப்பும்
பாதுகாப்புணர்வும் தொலைந்த கழுத்துச் சங்கலி போல இன்றும் நினைவில் மின்னுகின்றன. அந்த
விளையாட்டுப் பருவத்தைக் கடந்து வரும்வரை தங்கையையும் என்னையும் ஒருவராலும் கண்டுபிடிக்க
முடிந்ததேயில்லை. அங்கு வைத்துத்தான் அத்தையின் இரண்டாவது மகளான நித்யாவைப் பலமுறை
முத்தியிருக்கிறேன். இருவரும் ஒளியும் இடங்களைப் பரஸ்பரம் அறிவோம். அது ஒரு முன்னேற்பாடு
போல. அவளது உடலின் வெம்மையைத் தொட்டு அறியும் துடிப்பை அவள் தட்டிவிட்டுச் சிணுங்கி
எதிப்புக் காட்டுவாள். பதின்பருவத்தில் அவளது வளர்ந்து வந்த மார்பைப் பற்றி முத்தமிடும்போது
அப்படியே அடங்கிப் போவாள். அந்தச் சிணுங்கலும் எதிப்பும் என்னைத் தூண்டிவிடுவதற்கான
ஆயத்தங்கள் எனப் பின்னர் அறிந்தேன். சட்டென என்னை விட்டு விலகி ஓடிப்போய் வெளியே பார்த்துவிட்டு
வந்து மேலும் நெருங்கி இறுக அணைத்துக் கொள்வாள். ஆட்கள் சூழ இருந்தால் கண்களில் வெட்கம்
தேங்கியிருக்க ஜாடையில் பேசுவாள். பின் மூச்சுக்காற்றால் அந்த மூலையைச் சூடாக்கிய பின்பே
மனமின்றி விலகுவோம். அந்த வீடு, புதையல் போலத் திடீரென அப்பாவுக்கு கைமாறி வந்ததாக
எண்ணெய் கலந்த பொரிகடலையை அவருக்குப் பிடித்தமான ஆசாரத்திற்கு அடுத்த அறையில் படுத்து
மென்றவாறே சொல்வார். அப்போது அவருக்குப் பக்கவாட்டில் வரக் காப்பியின் ஆவி டம்ளரிலிருந்து
மேலேழும். நறுக்கிய தேங்காய்த் துண்டுகள் அம்மாவின் கையிலிருந்து அக்காவின் வழியாக
அப்பாவின் வாய்க்குள் செல்லும். அப்பாவின் அந்தக் கதை, தொலைதூரப் பேருந்து போல, காப்பி
குடிக்க கொஞ்ச நேரம் நிற்கும். அம்மா அக்காவை நோக்கி, இது எத்தனையாவது முறை? என்பது
போலப் புருவத்தைத் தூக்குவாள். இரண்டாவது அக்கா சிரிப்பை அடக்கத் தெரியாமல் கொத்துப்
பொரியை வாய்க்குள் போட்டு மெல்லும் போது நான் அவள் கடைவாயின் மேல் குத்துவேன். நிறுத்தப்பட்ட
அரவை யந்திரம் போல அவள் வாய் ஓய்ந்து கீழே சிந்தியவைகளைப் பொறுக்குவாள். அப்பா தன்
உலகினுள் நிகழ்ந்துகொண்டிருக்கும் சந்தோஷங்களை இழக்க விரும்பாதவர் போலக் கண் மூடிப்
புன்னகைத்தபடி கிடப்பார். அக்கா கண் காட்டியதும் அவரை நானும் தங்கையும் ஆளுக்கொரு கை
பிடித்துத் தெப்பத்தேரை இழுப்பது போல மூச்சை அடக்கி இழுப்போம்.
விபரம்
தெரியத் தொடங்கிய நாள் முதல் அந்த வீட்டை விலை பேச ஆட்கள் எப்போதும் வந்துகொண்டிருப்பதைக்
கண்டேன். அவர்களை முன் அறையிலேயே அமரவைத்து, வீட்டைச் சுற்றிலும் அவர்கள் கண்கள் சுழல்வதை
அலட்சியப்படுத்தியவராக, பேசிப் தொங்கிய முகத்துடன் அப்பா திருப்பி அனுப்பினார். அம்மாவுக்கு
அதில் பெருமை இருந்தது. துலக்கப்பட்டு வெயில்பட்ட பாத்திரம் போல அவள் முகம் மின்னுவதைப்
பலமுறை கண்டிருக்கிறேன். பின்பக்க கிணற்றடியில் நீர் சேந்த வரும் பெண்களிடம் அவர்களின்
இடுப்பில் நீர்த்தளும்ப குடம் இருப்பதை, அவர்களுக்கு வலி எடுக்கும் என்பதை மறந்து பேசியபடியேயிருப்பாள்.
அந்த வீட்டின் சாவி நித்யாவின் கைக்குச் செல்ல வேண்டும் என ஆசைப் பட்டுத்தான் அத்தை
எங்களைப் பழக அனுமதித்தாள் எனப் பின்னர் அறிந்தேன். அதே கிணற்றடியில் வைத்துத்தான்
தனக்கு வேறு பக்கம் முடிவாகியிருப்பதை முன்னறையைத் தயங்கித் தயங்கி பார்த்தபடி சொல்லி
நித்யா அழுதாள். அப்போது அந்த வறண்டுபோன கிணற்றைச் சுற்றிலும் புதர் போல முளைத்துக்
கிடந்த செடிகளுக்குள் நுழைந்து வெளியேறி மதில் மேல் தாவியேறின பூனையின் வாயில் எலியிருப்பதையும்
அதன் வால் நெளிந்து காற்றில் சுழி போட்டு அடங்குவதையும் கண்டேன். உள்ளே அம்மாவும் அத்தையும்
சண்டையிடுவதும் அம்மாவின் அழும் ஒலியும் கேட்டது. ‘‘இவங்க கண்ணாலத்துக்கு இந்த தெரு
முச்சூடும் பந்தல் போடோணும்ங்க அண்ணி” எனச் சொன்ன அத்தையின் சொற்கள் கிணற்றினுள்ளிருந்து
குடத்துடன் மேலேறிவரும் நீர் போல நினைவில் எழுந்து வந்தது. நீண்டகாலமாக இழுத்தடித்த
வழக்கு மாமாவின் பேருக்குத் தீர்ப்பாகியதும் அத்தை தன் குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு
இரு வீதிகள் தள்ளி தனியே போனாள். அதற்குப் பின் அத்தையின் குரலும் தொனியும் அடைந்த
நுட்பமான மாற்றத்தை அம்மா சொல்லிய பிறகே கவனித்தேன். அத்தையின் வாய் காதுவரை நீளும்
என்பதே பிறகுதான் தெரிந்தது. நித்யா அங்கிருந்து சென்றதும் மனதில் வெறுமை படரக் கிணற்றை
நோக்கினேன். கற்களுக்கு நடுவே இரண்டு குடங்கள் நெளிந்து கிடந்தன.
ஏறக்குறைய
ஆறு மாதம் ஓடிவிட்டிருந்தது. அப்பாவின் செயல்களிலிருந்த அந்தப் பிசகை எப்படி கவனிக்கத்
தவறினோம்? எனப் புரிந்திருக்கவில்லை. ஒருவேளை அம்மா தன் உள்ளுணர்வால் அறிந்திருக்கக்கூடும்.
ஊர்த்தெருக்களில் இப்படி நாய் போல அவர் அலையவிடுவது எத்தனையாவது முறை? எனச் சலிப்பு
படர நினைத்தபோது அவரை மனதில் கொண்டு வந்து பற்களைக் கடித்து எச்சில் தெறிக்க, கூசும்
வசவை உதிர்த்து அந்தச் சினத்தைக் கடக்க முயன்றேன். வீதிகளில் பரிதாபமிக்க பார்வைகளை,
உள்ளூர பொங்கும் ஆனந்தத்தை மறைத்தபடி வெளிப்படும் கழிவிரக்கத்தைத் தூண்டும் சொற்களை
எதிர்கொள்ள நேருமோவெனப் பயந்து குடையைத் தலையை மறைக்குமாறு தாழ்வாகப் பிடித்துக்கொண்டேன்.
சற்றும் எதிர்பார்க்காத இடங்களில் நின்று அப்பா சிரித்துக்கொண்டிருப்பார். ஒருமுறை
மத்திம வயதைக் கடந்த சராசரிக்கும் கூடுதல் அழகுடைய பெண்ணின் வீட்டு முன்னால் நின்று
மூடியிருந்த கதவையும் திறந்திருந்த ஜன்னலையும் பார்த்த படியிருந்தார். பிறிதொருமுறை
எங்கெங்கோ தேடி அலைந்தும் காணாமல் அழும் நிலையில் திரிந்தபோது ஊருக்கு வெளியே சீட்டாட்டம்
நடந்துகொண்டிருந்த இடத்தில் பிறரின் கேலிகளை, குத்தும் சொற்களைப் புரிந்துகொள்ளத் திராணியற்று
அமர்ந் திருந்ததைக் கண்டேன். அங்கிருப்பவர்கள் ஊருக்குள் தங்களின் தொடுப்புகள் பற்றியும்
கைகூடாத பெண்களின் மீதான தங்களின் இச்சையையும் ஆபாசமான சிரிப்புக்கு நடுவே பறைசாற்றுவது
கேட்டது. சிகரெட் புகையும் வறுத்த கறியும் பெரிய கேன்களிலிருந்து வடித்து, கண்ணாடி
டம்ளரில் ஊற்றப்பட்ட சாராயமுமாக அந்தக் கும்பலின் சலம்பலும் போதைச் சிரிப்பும் என்னைக்
கண்டதும் ஒரு கணம் நின்று பின் மீண்டும் ஆரவாரமாக எழுந்தது. என்னைக் கண்டதும் பிடிவாதமேதும்
பிடிக்காமல் என் பின்னே நடந்து வருவார். பள்ளி முடித்து அம்மாவுடன் நடந்து செல்லும்
சிறுவனைப் போலத் தானாகப் பேசியபடி திடீரெனச் சிரித்தபடி. துக்கம் உறைந்த முகத்துடன்
அம்மா அவரை இழுத்துப் போய் அமரவைத்து முணுமுணுவென யாரையோ சபித்துத் தானாகவே அழுதபடி
குளிப்பாட்டிய பின் அவளது கடைசியும் ஒரே நம்பிக்கையுமான கடவுளர்களின் படத்தின் முன்
அப்பாவை நிறுத்தித் திருநீறு பூசுவாள். பிறகு அந்த அறைக்குள் செல்ல முரண்டு பிடிக்கும்
அவரை உள்ளே தள்ளப் போராடுவோம். பல நாள்களை அவர் உண்ணாமல் கழித்திருந்த போதும் அந்தச்
சமயத்தில் உக்கிரமான சாமியாடியின் பலம் அவருக்கு வந்துவிடும். நின்று போன வாகனத்தைத்
தள்ளுவது போல அவரைத் தள்ளுவேன். சில முக்கல் முனகல்கள் விரயமாகுமேயன்றி அவர் நகராமல்
உடம்பை முறுக்கியபடி நிற்பார். அந்த வற்றிய உடம்பிலிருந்து அவ்வளவு சக்தி எங்கிருந்து
வருகிறது எனத் திகைத்துவிடுவேன். பின் குண்டுக்கட்டாகத் தூக்கிப் போய் உள்ளே போட்டுத்
தாழிடுவேன். கடைசியாக அவர் தெரு நாயோடு கொஞ்சி அதன் மேல் அமர்ந்து சவாரி செய்வது போலப்
பாவனை காட்டி, சுற்றியிருப்பவர்களை உற்சாகமூட்டிக்கொண்டிருந்ததைக் கண்டபின் அவரைக்
கட்டிவைத்துக் கண்டபடித் திட்டித் தீர்த்தும் கோபம் தணியாமல் கதவு உடையும்படியாக உதைத்துத்
தாழிட்டேன். உறக்கமின்றிப் புரண்டு நடுநிசியில் எழுந்து கதவோரம் ஒட்டி நின்று ஏதேனும்
சத்தம் வருகிறதா என உற்றுக் கேட்பேன். அவரை எழுப்பி அங்கேயே காலில் விழுந்து கதற வேண்டும்
என நினைப்பேன். மனம் அந்தச் செய்தியைக் கைகளுக்கு அனுப்பாதது போல வெறுமனே நின்றுகொண்டிருப்பேன்.
பின் படுக்கையில் வந்து விழுந்து மனமுடைந்து அப்பாவிடம் மன்றாடி மானசீகமாக மன்னிப்புக்
கேட்கையில் கடந்த காலம் என் முன்னே கண்ணீராக வழிந்தோடும்.
வேறு
வழியே எனக்கிருக்கவில்லை. சரஸ்வதி கடாட்ச மேனும் கிட்டியிருந்தால் இப்படிப் பின்னப்பட்டு
நிற்க வேண்டியிருந்திருக்காது என அம்மா சொல்வாள். படிப்பு எப்போதும் என்னை வகுப்பறைக்கு
வெளியிலேயே நிற்க வைத்தது. அது மீண்டும் என்னை ஏழாம் வகுப்பிலேயே அமரச்செய்தபோது அதனிடம்
நிரந்தரமாகக் கையசைத்து விடைபெற்றுக்கொண்டேன். சாதாரணருக்கு பிறந்த, சற்றே கூடுதல்
அறிவுகொண்ட பிறிதொரு சாதாரணரின் சாதாரண வாரிசு என என்னை எண்ணியிருந்தால் மழைக்கு ஓதமெடுக்கும்,
பாம்புகள் நுழையும் இந்த வீட்டிற்கு வந்திருக்கவேண்டிய அவசியமேயிருந்திருக்காது. நித்யா
என்னைக் காணுந்தோறும் சொந்தக்காலில் நிற்க முயலும்படி உசுப்பிக்கொண்டேயிருப்பாள். அப்பாவின்
நிழலிலிருந்து வந்துவிடும்படி அவ்வளவு மென்மையாகக் கூறி, கண்களால் கொஞ்சியபின் பனியனோடு
நின்று கொண்டிருந்தவனின் தோளைக் கிள்ளிவிட்டு ஓடினாள். சரியென்று பட்டது. லௌகீகத்தின்
பெரிய கனவுகளால் உந்தப்பட்டவனாக அதை மறுநாளே ஆக்கிக் காட்டிவிட வேண்டும் எனும் வேகத்தில்
மனம் ஏதோவொன்றை சதா நெசவு செய்துகொண்டேயிருந்தது. அதன் முதல் தடைக்கல் அப்பாதான் என
உறுதியாகத் தோன்றிற்று. பின் அப்பாவுக்கும் எனக்கும் ஓயாமல் சண்டைகள் நடந்தன. உடனிருந்து
கொம்பு சீவி விட்டவர்கள் என் நிலைமை சரிந்து கடன்சுமையால் முற்றுகையிடப்பட்டபோது புகை
போலக் காற்றில் மறைந்து விட்டிருந்தார்கள். தனியாகத் தொடங்கிய தொழில்கள் ஒன்றையடுத்து
மற்றொன்றாக என்னைப் பள்ளத்தில் தள்ளியபோது அதிலிருந்து மீண்டு மேடேறி நிலைபெற மீண்டும்
கடன் வாங்கத் துவங்கினேன். தொடக்கத்தில் கடன் பெறச் செல்வது அவதியளிக்கும் அனுபவமாகவே
இருந்திருக்கிறது. அது ஏறக்குறைய தெரியாத வீட்டிற்கு முதன்முறையாக ஓசிப் பேப்பர் படிக்கச்
செல்வதைப் போல. தயக்கம், அந்தச் சங்கடமான அமைதி, பார்வையைப் பரஸ்பரம் சந்தித்த பின்னும்
மௌனம் உடையாமல் நீளும் பரிதாபம், சகஜபாவத்திற்கு வந்து காரியம் கைகூடாத வரை உருவாகும்
நிம்மதியற்ற உடலசைவு போன்றவற்றை வெல்வதற்கு முடியாமல் பழக்கமின்மையால் சோர்ந்து போயிருக்கிறேன்.
அமர்ந்தால் இரண்டாவது நிமிடத்தில் வட்டிலில் சோறு வரவேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவன்
தான் மணிக்கணக்கில் பணத்திற்காக அமர்ந்திருந்தேன். அது பழகியதும் உடனிருப்பவர்கள் அழைத்துச்
செல்லும் இடங்களுக்கெல்லாம் போய் சுமையைக் குறைக்க கடன்பெற்று வருவேன். ஒன்றிலிருந்து
விடுபட மற்றொன்று. அதிலிருந்து வெளியேற வேறொன்று என முடிவில்லாமல் அது போய்க்கொண்டேயிருந்தது.
பழகியபின் அறிந்தேன். அது ஒரு தேர்ந்த வேசியின் வீடு போல என. எப்போதும் அது தன்னை நோக்கி
இழுத்த படியும் அரவணைத்தபடியும் இருக்கும். சிலசமயம் மூச்சுத் திணறலிலிருந்து ஆசுவாசத்தைக்
கூடக் கொடுக்கும். ஆனால் அதன் முன்னிருக்கும் ஒரே குறிக்கோள் பணம் மட்டும்தான். தோல்வியடைந்தவனாக
நித்யாவைக் காணக்கூடாது என அவளைக் காண்பதையே தவிர்த்தும் தள்ளிப்போட்டும் வந்தேன்.
அவளை அகஸ்மாத்தமாகக் காண நேர்ந்தபோதுகூட அவளாகவே குறுக்குச் சந்தினுள் நுழைந்து சென்றுவிட்டதுகூட
நல்லது என்றே பட்டது. சகலமும் ஒருநாள் சரியாகி அனைத்திலிருந்தும் மீள்வேன் எனக் கூரையை
நோக்கி மல்லார்ந்து படுத்து நினைத்த நொடியிலேயே எங்கிருந்தோ பல்லி சயனம் கூறுவது கேட்டது.
அப்பாவாக இருந்திருந்தால் பஞ்சாங்கத்தை எடுத்துப் பலன் பார்த்திருப்பார். நான் அதை
உதறி எழுந்து வெளியே வந்தபோது கடன்காரன் தொலைவில் வருவது தெரிந்ததும் பின் வாசல் பக்கமாக
இறங்கிச் சென்றேன். இன்னும் எவ்வளவு காலம் என்று தோன்றிற்று. நான் இல்லாதபோது வீடேறிவரும்
கடன்காரர்களை அப்பா சரிகட்டாமல் கைவிரித்தபோது அவரின் முகத்தையே வெறுத்தேன். ஏச்சுக்களையும்
அவமானங்களையும் தாங்க முடியாமல் குடித்துவிட்டு வந்து அந்த நாய்களையும் அப்பாவையும்
வரம்பின்றித் திட்டித் தீர்த்தேன். மறுநாள், இளநீர் கொடுத்து மஞ்சள் பையில் சுற்றிக்
கடன் தந்தவன் மூன்று தவணைகள் வட்டி கட்டத் தவறியபோது நடுத்தெருவில் வைத்து வேட்டியை
விலக்கிக் காட்டி இடுப்பைத் தூக்கி உயிர் பிடுங்கும் வார்த்தையைச் சொல்லிக் காறித்
துப்பினான். அந்த வசவுச்சொல் என்னைத் துரத்திவருவது போலவும் அதனிடமிருந்து உடனே தப்பித்துவிட
வேண்டும் என்பது போலவும் வேகமாக ஓடி வந்து கதவைத் தாழிட்டுக்கொண்டேன். கயிற்றிலிருந்து
என்னைக் கீழிறக்கி நீர் அடித்துத் தெளிவித்தபோது சுற்றிலும் நின்ற மங்கலான உருவங்களையும்
சூழ்ந்த இரைச்சல்களையும் வெகுதொலைவுக்கு அப்பாலிருந்து பார்த்துக்கொண்டிருப்பது போலத்
தோன்றியது. அப்பா வாயில் நீர் ஒழுக அழுதது கண்டு கூட்டம் திகைத்து விட்டிருந்தது. அன்று
தொடங்கிய அம்மாவின் கண்ணீரும் விசும்பலும் இன்றுவரை ஓயவில்லை. அதுநாள்வரை எது நிகழாது
என நம்பியிருந்தேனோ, எது நிகழ்ந்துவிடக் கூடாதென அஞ்சிக்கொண்டிருந்தேனோ அதுவே பின்
பூதாகரமாக எழுந்து வந்து நின்றது. ஆனால் மனதின் மூலையில் அதன் பொருட்டு தான், அது அளித்த,
தைரியத்தின் துணையுடன்தான் என் கையெழுத்துப் பணமாக மடிக்கு வந்ததெனப் பின்னொரு நாள்
நினைத்துக்கொண்டேன். அதுவன்றி மீளும் வழி ஏதுமில்லை என்றும் மாற்றுப் பாதைகள் என நம்பியவை
போய் முடியும் இடம் பள்ளத்தாக்குத்தான் என்றும் அறிந்தேன். அந்த வீடு கடனில் மூழ்கி,
கண் முன்னேயே அதன் சாவி பிறிதொருவனுக்குக் கையளிக்கப்பட்டபோது பெற்றுக்கொண்ட பணத்தைக்
கண்டு உள்ளே வழியும் கண்ணீரைப் போராடி மறைத்தபடி சுற்றிச்சூழ்ந்து மூச்சை இறுக்கும்
இக்கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டது போல உணர்ந்தேன். கொல்லையில் அக்காக்களுடன் சேர்ந்து
அம்மாவின் அழுகை ஒப்பாரியாக மாறியது கேட்டு அதைக் கேளாதவன் போல வெளியே சென்றேன்.
மழை
பெய்யும் நாட்களில்தான் அப்பாவுக்கு ஏதோ ஆகிறது என்று தோன்றிற்று. அவர் வீட்டைவிட்டு
வெளியேறிச் சென்ற நாட்களிலெல்லாம் ஆறு போல வெள்ளம் தெருக்களில் ஓடியது ஞாபகத்திற்கு
வந்தது. அப்போது அவர் தன் அறையினுள்ளே யாருடனோ பேசும் சத்தமும் அச்சிறு அறையினுள் அவர்
நடந்துகொண்டிருக்கும் பாத ஒலியும் கேட்டபடியிருக்கும். அப்போது கதவைத் திறந்தால் இரண்டாம்
ஜாமத்தில் நாயின் ஊளை போல வினோதமாகச் சத்தமெழுப்பியபடி பொருளை எறிவார். அது ஊளையல்ல,
அவர் அழும் ஒலிதான் அப்படி ஆகிவிட்டிருப்பதாக அம்மா சொன்னாள். சற்றே அசந்து போகும்
நிமிடத்தில் அவர் வெளியேறி விடுகிறார் என முன் அனுபவம் சொல்லியிருந்தபோதும்கூட முதுகு
ஒடிய மழை நீரை இறைத்துக்கொண்டிருந்தபோது நேற்றிரவு அம்மா சொன்ன தாங்கிக்கொள்ள முடியாத
இரண்டு செய்திகளை நினைத்து மனம் கலங்கி அதையே யோசித்தபடி அப்பாவை மறந்துவிட்டிருந்தேன்.
அப்பாவைத்
தேடிச் சலித்தாயிற்று. எங்குமே அகப்படவில்லை. இவ்வளவு நேரம் ஆனதேயில்லையே எனத் தோன்றியதும்
நடுக்கம் உடல் முழுதும் பரவி மனதைக் குலைத்தது. அதைரியத்துடன் நடையை எட்டிப் போட்டேன்.
தூறல்களால் தெருவில் ஜனநடமாட்டம் இல்லாதிருந்தது ஆசுவாசத்தை அளித்தது. அன்றும் நேற்றைப்
போலவே மழை ஊற்றெடுத்துப் பெய்துகொண்டிருந்தது. அந்த இரவு முழுவதும் அம்மா தூங்காமல்
தன் வீட்டில் மழை விழுந்து இறங்கிச் செல்லும் அழகைக் கண்டுகொண்டிருந்தாள். பெரிய மழை
பெய்கையில் செய்வது போல அப்பா அங்குமிங்கும் நடந்து, எங்கேனும் ஒழுகுகிறதா? எனப் பார்த்துக்கொண்டிருந்தவர்
சட்டென நினைவின் சர்ப்பம் தீண்டியது போல அப்படியே அமர்ந்து தலையை மட்டும் அங்குமிங்கும்
திருப்பி எல்லாப் பக்கங்களையும் திரும்பிப் பார்த்துக்கொண்டேயிருந்தார். முன்தினம்
கிணற்றடியில் நித்யா என்னை விட்டுச் சென்றதை நினைத்து மனக்குமுறலை அடக்க முயன்று முடியாமல்
தத்தளித்தேன். அவரவர் உலகினுள் அவரவர்கள் இருந்தோம். அந்த மூலையை நோக்கி இழுக்கப்பட்டவன்
போலச் சென்று அங்குச் சூழ்ந்திருந்த வெறுமையையும் இருளையும் கண்டு திரும்பினேன். நித்யா
கண்ணீர் தாரையுடன் நின்றபோது, அது ஏற்கனவே எழுதப்பட்ட நாடகத்தின் ஒத்திகை பார்க்கப்பட்ட
காட்சி போல இருந்ததேயன்றிப் பிரியத்தின் பொருட்டாக அல்ல என்பது நன்கு தெரிந்தது. அவளுக்கு
வெளியே வரன்கள் பார்க்கத் தொடங்கிவிட்டச் செய்தியை நான் அறியவில்லை என எண்ணுகிறாள்
போலும். அவளது வாழ்நாள் முழுக்க ஆறாமல் இருக்கும்படி குரூரமாகத் தாக்க, சொல்லைத் தேடினேன்.
அதற்குள் கண்ணீரைத் துடைத்தபடி நான் பரிசளித்திருந்த கைக்கடிகாரத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடி
ஏதோ அஃறிணையைத் தொடுவது போல என்னை நோக்கி வந்த கையை, கடும் கசப்புடன் தட்டிவிட்டுச்
சத்தம் வந்த முன்னறையை நோக்கிச் சுட்டி “போயிரு” எனக் கத்தி அவளைக் கடந்து பின்வாசலில்
இறங்கிச் சென்றுவிட்டிருந்தேன். அந்த இரவில் குழந்தைகளுடன் வீட்டை நிறைத்திருந்த அக்காள்களும்
தங்கையும் என்னை ஏதோ கூற வாயெடுத்தபோது அப்பா அவர்களைத் தடுத்து உள்ளே கூட்டிச் சென்றார்.
தேங்காய்த் துண்டுகள் இல்லாத வரக்காப்பியை அக்கா கொண்டுவந்து தந்தபோது ஒலியேதுமின்றி
உடம்பு மட்டும் குலுங்குவதைக் கண்டு அவள் அப்படியே என்னை அணைத்துக் கொண்டு தேற்றினாள்.
சிறுவயதில் அவள் கழுத்தைக் கட்டியபடி உறங்கிய நாட்கள் நினைவுக்கு வரவே அவள் வாசனை அளித்த
பாதுகாப்புணர்வில் சமநிலைக்கு வர முயன்றேன்.
அப்பா
மீண்டும் சரிசெய்யமுடியாதவாறு ஆழமானதொரு இடத்தில் காயமுற்று அந்தக் காயத்தின் இருப்பை
ஒருபோதும் மறக்க இயலாதவராக மனவலியை அனுபவித்து வந்திருக்கிறார் என அறிய மேலும் ஒரு
மாதம் ஆயிற்று. எதுவுமே பேசாமல் மௌனியாக ஆகி, அவராகத் தலையை வெறுமனே அசைப்பவராக ஆனார்.
தன்னுள் மூழ்கி மீண்டும் மேலே வரமுடியாமல் அதிலேயே அமிழ்ந்து போகிறவன் மனப்பித்தின்
வாயிலில் கரைஒதுங்குவான் என அப்பாவைக் கண்டு அறிந்தேன். மூன்று மாதங்களுக்குப் பின்
பிற்பகலில் மழை பெய்து ஓய்ந்த பொழுதில் அறையை விட்டு வெளியேறினார். அன்று திடீரெனத்
திறக்கப்பட்ட மதகு போல அவர் வாயிலிருந்து சொற்கள் வெள்ளம் போலப் பீறிட்டு வெளியேறத்
துவங்கின. திறந்திருந்த வீடுகளுக்குள் அவர் தானாகப் புகுந்து அவ்வீட்டு நபர்களைக் கலக்கமுறச்
செய்த பின் தெருவில் பொறுக்கிச் சேர்ந்திருந்த தீப்பெட்டிகளில் ஒன்றையெடுத்து அங்கிருந்தவர்கள்
பதறி விலகும்படி மீண்டும் மீண்டும் அவர்களின் காலில் விழுந்து அதைத் தந்து பத்திரமாக
வைத்துப் பூஜைசெய்து வரும்படியும் விரைவில் வீடு கட்டிக் குடியேறும் யோகம் வாய்க்கும்
என்றும் கூறியிருக்கிறார். அப்பாவை அறிந்தவர்கள் தங்களின் கண்ணீரைத் துடைத்தபடி அமர
வைத்துக் கொடுத்த காப்பியைக் குடித்து முடித்து “வீட்ல என்னய விஷம் வைச்சுக் கொல்லப்
பாக்குறாங்க” எனச் சொல்லி அவர்களைத் திடுக்கிட வைத்து அடுத்த வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.
அவரிடம் காலிப் பெட்டிகள் தீர்ந்தபோது அந்த வீட்டிலிருந்தே வாங்கி, அதன் குச்சிகளை
ஆட்டின் குடலை உருவுவது போல அவ்வளவு வேகத்துடன் உருவி வீசியபின் அவ்வீட்டின் குழந்தைகளின்
காலில்கூட விழச் சென்றபோது பெரியவர்கள் அவரை நிமிர்த்தி அமர வைத்திருக்கின்றனர். அதற்குள்
அச்செய்தி காற்றில் பரவிச் சில வீடுகளில் பெட்டிகள் தராமல் திட்டத் தொடங்குவதற்குள்
அவர்களையும் மீறிச் சகல அறைகளையும் திறந்து பார்த்து வீட்டின் அமைப்பு முறை பற்றி,
அதன் கோளாறுகள் பற்றி, அதனால் விளையவிருக்கும் கெடுதிகள் குறித்துச் சொல்லி அவர்களைப்
பதைபதைப்புக்குள்ளாக்கியிருக்கிறார். அன்று எல்லோரையும் அடையாளம் கண்டு பேசினார் என்றும்
அவர்களின் பெயர்களைக் கூறுமளவிற்கு நினைவு துல்லியமாக இருந்ததாகவும் அம்மா அழுதபடியே
சொன்னாள். அக்கா வீட்டிலிருந்து பேருந்தில் வந்து இறங்கியதும் புண்ணைச் சுற்றிக் கூடும்
ஈக்கள் போல என்னை ஜனங்கள் மொய்த்து விட்டிருந்தனர். நன்றாகப் பேசியபடியிருந்தவர் சட்டெனப்
பாதை மாறிக் குழப்பமாக முகத்தை வைத்து முந்தைய காலத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளைக் கதம்ப
மாலை போல அவர்கள் கண் முன் சரம்சரமாகக் கட்டித் தொங்கவிட்டார் என்று சொன்னார்கள். வினோதமான
ஒலியை எழுப்பியபடி தங்கள் குழந்தைகளை மேலே தூக்கி வீசிப் பிடித்தபோது வேறு வழியின்றி
வீட்டிலிருந்து வெளியேற்றியிருக்கிறார்கள். சிறுவயதில் அவர் என்னைச் சிரிக்க வைக்கக்
கையாளும் முறை அது எனத் தோன்றியதும் பேச்சற்று நின்றேன். பின் விமானம் கண்ட சிறுவன்
போல அவர் பலமடங்கு குஷியுடன் ஆரவாரமாகச் சத்தமெழுப்பியபடி தெருவில் முன்னும் பின்னும்
ஓடத் தொடங்கியது கண்டு அவரை அமுக்கி இழுத்து வந்து வீட்டினுள் விட்டுச் சென்றதாகக்
கூறியவனை நன்றியுடன் நோக்கினேன். அதிலொருவன் நித்யாவுக்கு நேற்று மணநாள் முடிவாகிவிட்டிருப்பதாகச்
சொன்னபோது சூழும் வெள்ளத்தில் கையறுநிலையில் நிற்பவன் அதனால் அடித்துச் செல்லப்படுவதே
மேல் என நினைப்பானே அதுபோல மனதின் அலறலை மறைத்தபடி அமைதியாக அவனை நோக்கிச் சிரித்துவிட்டு
நகர்ந்தேன். வேகமாக வீடு சேர்ந்து தூங்கி வழிந்த கண்களுடன் புலம்பிக் கொட்டும் அம்மாவைத்
தள்ளி நிறுத்தி அறையை மெல்லத் திறந்ததும் இனிப்புக்காக ஓடிவரும் குழந்தை போல அப்பா
என்னை நோக்கி வந்து காலிப்பெட்டியைத் தந்து அதைப் பெற்றுக்கொள்ளும்வரை காலில் விழுந்து
மந்திரம் போல எதையோ கூறியபடி எழுந்து கொண்டிருந்தார். கோபம் பீறிட்டுக் கிளம்ப “டேய்ய்ய்
. . . வாயை மூட்றயா இல்லையா . . .” என ஆத்திரத்துடன் கையை ஓங்கியபோது அவர் மேலும் ஒரு
பெட்டியைத் தந்து காலில் விழத் தயாரானார். அப்படியே காலில் உதைத்துத் தள்ளி “தாயோலி
. . . மூட்றா . . . ங்ஙோத்தா . . .” எனக் கத்தியவாறு சராமாரியாக அடித்தேன். ஹீனமான
குரலில் “ஐய்யோ . . . ம்மா . . . பூரணி . . .” என மீண்டும் மீண்டும் பெரிய அக்காவின்
பெயரைச் சொல்லி முகத்தை இறுக்கிக் கொண்டபோது அவரை அப்படியே விட்டு விட்டு வெளியே வந்தேன்.
கதவின் முன் நிலைகொள்ளாது நின்று உள்ளே வர முயன்ற அம்மாவைத் தடுத்து “இந்த முண்டையும்
இந்த நாயும் செத்தாத்தான் எனக்கு விடிவுகாலம் பொறக்கும் போலிருக்குது . . .” என எரிந்து
விழுந்து அருகிலிருந்த காலிக் குடத்தை எட்டி உதைத்து அது எங்கோ மோதி உருண்டு அடங்கும்
ஒலியைக் கேட்டபடியே வெளியேறினேன்.
அன்று
கீழானவனாக நடந்துகொண்டேன் எனப் பல்வேறு சமயங்களில் நினைத்துக் கண்ணீர் விட்டிருக்கிறேன்.
மூன்று பெண்களுக்கு நடுவில் பிறந்திருந்ததாலும் அத்தைக்கும் பையன்களே இல்லாமல் போனதாலும்
ஆண் மகவாக நான் அமைந்துவிட்டதில் அதீதமான பிரியமும் செல்லமுமாகவே வளர்ந்தேன். அவருடைய
குலசாமியான மாதேஸ்வரனை வேண்டியபின் கரு உண்டாகி வளர்ந்ததில் எனக்கு அப்பெயரையே வைத்திருந்தார்.
மொட்டையடிக்கப்பட்ட என் தலை பழுத்துவிடுமளவிற்கு முத்துவார் என்றும் அவரது பெயரை என்
மழலைவாயால் சொல்லக்கேட்டு பூரித்துப் போய் உண்ணக்கூட மறந்து தூங்கியிருக்கிறார் என்றும்
அம்மா சொல்லியிருக்கிறாள். அவரை அடிக்கக் கை ஓங்கியபடி சென்றபோது தன்னை மறைத்துக்கொள்ளக்கூடத்
தோன்றாமல் காலில் விழக் குனிந்தது கண்டுதான் நிதானம் தவறிற்று. அம்மாவின் அகௌரவமான
ஒரு சொல்லுக்கு ஆறு மாதங்கள் பேசாதிருந்து அவளைக் கண்ணீரோடு அலையவிட்ட முரட்டு ரோசக்கார
அப்பாதான் சகலரின் காலிலும் விழுந்து எழுந்தார் என்பதை ஜீரணிக்கவே முடியவில்லை. அந்த
நினைவை அழிக்க நான் குடித்தபோது, நித்யாவின் மேலிருந்த ஆங்காரம்தான் அப்பாவை நோக்கித்
திரும்பியிருக்கக்கூடும் என்று பட்டது. மேலும் அப்பா நேற்று அத்தையின் வீட்டை நெருங்கும்
முன்பே பின்வாசலில் கிடந்த நாயை அவிழ்த்து முன்னே கொண்டு வந்து அப்பாவை விரட்டினாள்
என்று அறிந்திருந்தேன். நித்யாவின் பெயரைக் கூறி அவள் வீட்டுக் கதவை உலுக்கினேன்.
“உங்ஙோம்மாளே! சோத்துக்கு ஊம்பிட்டு திரிஞ்சதெல்லாம் மறந்து போச்சான்னு கேட்கறன் .
. . அண்ணங்கால நக்கிப் பொழச்ச பொலப்பெல்லாம் நெனப்பிருக்கா கூதிமவளே . .!” என்று கத்தியபோது
சில வீடுகளின் ஜன்னல்களும் சில வீட்டுக் கதவின் ஒரு பக்கமும் திறப்பதைக் கண்டு மேலும்
குரலை உயர்த்தினேன். ஒற்றைச் செருப்பு காலடியில் வந்து விழுந்தது. அதை வீசியவள் அத்தை
எனத் தெரிந்ததும் ”ஏய்ய்ய் . . . உம் புள்ளைய எவனுக்குடீ கூட்டிக் குடுக்கப் போற .
.?” என அதை உள்ளே எறிந்தேன். அத்தை கதவைத் திறந்து வார்த்தைகளைப் பொழியத் தொடங்கினாள்.
வால் மிதிக்கப்பட்ட நாய் போல மனம் சீறி எழுகையில் குழல் விளக்கின் கீழ் ஜன்னலில் நித்யா
நின்றபடி குலுங்கிக் குலுங்கி அழுதபடியிருப்பதைக் கண்டபோது அது ஒரு பசப்பு எனத் தோன்றவேயில்லை.
என் அத்தனை துருப்புக்களும் செயலிழக்க மனம் துவண்டு சரிய நாவிலிருந்து பின்னர் ஒரு
சொல்கூட எழவில்லை. “பொழைக்கத் தெரியாத பரதேசி நாயி! அப்பஞ் சொத்த தின்னு தீத்து அவனை
பையித்தியமாக்கீட்டு எவ கிடப்பானு மாடு மாரி அலையிது. கடையிலதான் மருந்து விக்குதே
வாங்கித் தின்னுட்டுச் சாக வேண்டிதுதானே! மருவாத போனவனுக்கு உடம்புல எதுக்கு உசுருன்னு
கேட்குறேன் . . .” என முதுகுக்குப்பின் அத்தை ஓலமிடுவதைக் கேளாதவன் போல, நித்யாவையும்
என்னையும் இணைத்து நாங்களே நாணும்படி ஜாடை பேசிய பழைய அத்தையின் நினைவு தோன்ற அங்கிருந்து
கசப்புடன் விலகிச் சென்றேன்.
அந்த
வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்பது போல மழை வானைப் பிளந்துகொண்டு கொட்டிக்கொண்டிருந்தது.
அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தோம். யாருமே முந்தைய இரவில் உறங்கியிருக்கவில்லை.
இருமல்களும் மூச்சுக்களும் புரளும் படுக்கைகளின் ஓசைகளுமாக விடியலைக் கண்டோம். அப்பா
சத்தமாகப் பேசிச் சிரித்தபடி அனைவரையும் துரிதப்படுத்திக்கொண்டிருந்தார். அது பிறழ்வின்
தொடக்க நிலை என அறியாமல் அவர் மனச்சமாதானம் அடைந்து விட்டிருந்தார் எனத் தவறாக யூகித்து
ஆசுவாசமடைந்தேன். வீட்டு வாசலின் நான்காவது படிக்கட்டை மூழ்கடித்து ஓடிக் கொண்டிருந்த
மழை வெள்ளம் முதல் படிக்கட்டிற்கு வடிந்த போது வெளியே ஏற்றிச்செல்ல கார் வந்து நிற்பதை
அப்பா வந்து அவசரகதியில் சொன்னார். பெண்களின் ஓலம் கூரையைத் தொட்டுச் சிதறிற்று. அது
அமரர் ஊர்தி போல அதில் ஏறவே நடுங்கினோம். கையெழுத்திடும் முன் அந்த அலுவலகத்தில் அப்பா
சிறுவன் போலத் துள்ளித் திரிந்துகொண்டிருந்தார். சம்பிரதாயங்கள் முடிந்து அப்பாவிடம்
பணம் சுற்றப்பட்ட பிளாஸ்டிக் கவர் நீட்டப்பட்டபோது அவர் அப்படியே திரும்பி ஒரு பிணம்
சிரிப்பது போலச் சிரித்து என்னிடம் கையளித்தார். கூரையும் தூண்களும் பால்யமும் நினைவுகளும்
சந்தோஷமும் துக்கமும் எப்படி ஒரு பிளாஸ்டிக் கவரினுள் பணக்கட்டாக மாறமுடியும் என்பதை
ஏற்றுக்கொள்ளவே முடியாதவன் போல வெறித்து நின்றிருந்தேன்.
அக்காள்களும்
தங்கையும் கிளம்பிச் சென்ற பிறகு தனித்து விடப்பட்ட முகப் பரிச்சியமற்றவர்களைப் போல
அவ் வீட்டிற்குள் திரிந்தோம். அப்பா பேசுவதும் உண்பதும் குறைந்து கொண்டே வந்தது. எதற்கெடுத்தாலும்
அம்மாவோடு உக்கிரமாகச் சண்டையிடத் தொடங்கினார். உப்பு பெறாத விஷயத் திற்காக அம்மாவின்
கையெலும்பு விலக அடித்து வெளுத்ததைக் கண்டு விலக்க போனபோது ஓடிப்போய் கதவைத் தாழிட்டுக்
கொண்டுவிட்டார். உறங்காது வீங்கிய ஏறக்குறைய தொங்குவது போலான விழிகளால் அவர் வீட்டிற்கு
வருபவர்களிடமெல்லாம் சலசலவென்று பேசிக் கோமாளித்தனமாக நடந்து கொள்ளத் துவங்கிய பின்பே
நிலைமையின் விபரீதம் புரிந்தது. அவர் வீட்டிற்குள் ஓயாமல் நடந்து, திடீரென ஓடி மீண்டும்
மூச்சு வாங்க நடந்து மயங்கிச் சரிந்தார். அவரை எழுப்பியபின் ஒரு வார்த்தைகூடப் பேசாமல்
ஏதோவொன்றை முனங்கியபடி அவர் மௌனியாக ஆனார். அம்மா நேராக அத்தையின் வீடு சென்றபோது அம்மாவை
முன்வாசலிலேயே நிற்கவைத்து உள்ளே சென்று தன் பழைய சேலைகளையும் சில ரூபாய் நோட்டுக்களையும்
சுருட்டி வந்து தந்து, பின்னாலேயே வந்து விடுவதாகச் சொன்னாளாம். அம்மா அவமானத்தால்
குறுகிப் போய் மனம் எரிய “கோடித்துணி போடக்கூட ஆளில்லாம புழுத்துப்போய்தான் சாவடீ
. . .” என உக்கிரமாக மண் அள்ளித் தூற்றிச்சாபமிட்டபோது “பொழைக்கவே வக்கில்லாத நாய்க்கு
ரோசமயித்துக்கு ஒண்ணும் கொறச்சலில்ல . . .” என்றபடி உள்ளே போய்விட்டிருந்தாள். அத்தை
உள்ளே சென்றபோது கழுத்தில் தேர்வடம் போலத் தொங்கிய இரண்டுத் தங்கச்சங்கிலிகள் இல்லாமல்
கழுத்து மூளியாகத் தான் வெளியே வந்தாள் என அம்மா அவ்வளவு கோபத்திலும் அதைத் துல்லியமாகக்
கண்டு வந்து சொன்னாள். நித்யா என்னைக் கண்டதும் குறுக்குச்சந்தினுள் ஓடியதற்கு வேறு
அர்த்தங்கள் மனதில் முளைத்தன. அப்பா ஏதும் பேசாமல் தனியே பேசிச் சிரித்துக்கொள்வதைக்
கண்டதும் வேறு வழியேதுமின்றி அறைக்குள் தள்ளிக் கதவைத் தாழிட்டேன்.
வானம்
வெளிவாங்கிவிட்டிருந்தது. குடையைச் சுருட்டி அதன் முனையைத் தெருவில் குத்தியபடி ஒரு
வயோதிகனைப் போல மெதுவாக நடந்தேன். வீட்டிற்குத் திரும்பிவிடலாம் எனத் தோன்றிவிடும்
அளவிற்கு மனமும் உடலும் சோர்ந்து விட்டிருந்தது. ஊரின் இரு தெருக்களில் மட்டும்தான்
என் காலடித் தடங்கள் படாமலிருக்கின்றன. அத்தையைச் சிறுவயது முதலே அறிந்திருந்ததால்
அவளுடைய தந்திரங்கள், கணக்குகள் போன்றவற்றைக்கூடப் புரிந்துகொள்ள முடிந்தது. குழல்
விளக்கின் கீழே அப்படி அழுத நித்யா அத்தை கொண்டுவரும் வரன்களை முறிப்பாள் என்றே நினைத்திருந்தேன்.
அம்மாவின் பராதிகளையும் கண்ணீர் வழியும் வேண்டுதல்களையும் மறுபேச்சின்றிக் கேட்டுக்கொள்ளும்
கோவிலில், நித்யா அம்மாவைக் கண்டதும் ஒரு கண நேரத் தயக்கத்திற்குப்பின் ஓடிவந்து கையைப்
பற்றியதும் அம்மாவின் தயக்கமும் மறைந்து விட்டிருக்கிறது. அவளுக்கென வீட்டில் எடுத்திருக்கும்
நகைகளையும் புடவைகளையும் பற்றி வாய் ஓயாமல் பேசியபடியே வந்து அம்மாவின் முகமாறுதல்களைப்
படித்துப் பேச்சை நிறுத்தி “அவங்க வீட்டில காரு வைச்சிருக்காங்க . . . என்னையும் காரோட்டிப்
பழகச் சொல்றாங்க அத்தே . . .” எனத் தனக்கு நிச்சயக்கப்பட்ட வரனைப் பற்றி பாவம் போல
முகத்தை வைத்துச் சொன்னபோது அம்மாவின் வெளுத்த முகத்தைக் கண்டு அவள் மேலும் பேச முயல்கையில்
அம்மா அவளிடமிருந்து தப்பி வந்திருக்கிறாள். அம்மா என்னிடம் “அவங்க அம்மாவையும் மிஞ்சீருவா
போலிருக்குடா தம்பி . . .’ என்றாள். அதன் பின் அவள் தயங்கி விழுங்கிச் சொன்ன செய்தியைக்
கேட்டு நிற்கக்கூடத் தெம்பற்று அப்படியே அமர்ந்தேன்.
அந்தத்
தெருவிற்குள் செல்ல அஞ்சிதான் ஊரையே சுற்றி வந்திருந்தேன். ‘கேடு கெட்ட நாய், செத்து
ஒழிந்து தொலையட்டும்’ என மனம் குமைய, கெட்ட வார்த்தைகளைக் கொட்டினேன். அம்மா நேற்று
என்னிடம் சொன்னது அவருக்குக் கேட்டிருக்குமோ என மீண்டும் அதே கேள்வி எங்கிருந்தோ முளைத்து
வந்து முன்னே நின்றது. அதை நான் நம்பவில்லை என்பது போல அம்மாவிடம் எரிந்து விழுந்தது
சுயசமாதானத்திற்காக மனம் போட்ட நாடகம்தான் என இப்போது உறைத்தது. காற்று உலுப்பிய மரக்கிளையிலிருந்து
அடித்த மழைச்சாரல் மீண்டும் அவ்வீட்டின் நினைவை நோக்கியே இழுத்துச் சென்றது. இரண்டு
நாட்களுக்கு முன்பே நடந்து முடிந்திருந்ததை, நான் மனம் உடையக்கூடும் என நேற்றுதான்
அம்மா சொன்னாள். அதைக் காணும் மனவலிமை தனக்கு இல்லையெனச் சொன்னபோதுகூட அவள் சாதாரணமாகத்தான்
இருந்தாள். இரவு உறக்கமின்றிப் புரண்டு விழிப்புத் தட்டியபோது அவளின் விசும்பலையும்
மூக்கு உறிஞ்சலையும் கேட்டபடி கிடந்தேன். எந்தத் தெருவின் பொடிமணலைக்கூட அறிவேனோ அதே
தெருவில் பாதை மாறி வந்த அந்நியனைப் போல நின்று தெருவின் அடுத்த முனை வரைக் கண்களை
ஓடவிட்டேன். எங்குமே அப்பாவைக் காணோம். நிம்மதியுடன் திரும்ப எத்தனித்தபோது தலைதூக்கி
இம்சித்த அதே கேள்வியால் வேறு வழியேதுமின்றித் தெருவினுள் நடக்கத் தொடங்கினேன். சினேகத்துடன்
சிரிக்கும் முகங்களுக்கும் வீட்டிற்கு அழைக்கும் குரல்களுக்கும் தலையை ஆட்டி, கை தூக்கி,
இல்லாத புன்னகையை உதட்டில் காட்டியபின் நகர்ந்தேன். பிறரைத் தவிர்க்கும் நோக்கில் மிக
வேகமாகச் சென்று சேர்ந்தேன். அங்கு வீடு பாளம் பாளமாக இடிக்கப் பட்டிருந்ததைக் கண்டேன்.
தலையை வெட்டிச் சாய்த்து உறுப்புகளைப் பிடுங்கி வீசியது போல வீடு கூரையின்றி இடிபாடுகளுடன்
கிடந்தது. அதை உள்வாங்கத் திராணியற்று புத்தி பேத்தலித்தவனைப் போல வெறுமனே கண்களைச்
சுழட்டியபடி நின்றுகொண்டிருந்தேன். பெரிய பங்களாவுக்கான திட்டங்களுடன் அது இடிக்கப்பட்டிருப்பதாக
அம்மா சொன்னபோது அதைப் பொருட்படுத்தாமல் கடிந்து பேசியதை நினைத்துக்கொண்டேன். தானாகவே
கால்கள் தன்னிச்சையாகப் படிகளின் மீதேறிற்று. மழைநீர் இடிந்த குழிகளுக்குள் தேங்கி
நின்றது. பழைய காட்சிகள் ஒரு கணம் தோன்றி மறைய அதை ஊடறுத்து, நடக்க மறந்தவன் போல அந்த
வீழ்ந்து கிடந்த சுவர்களுக்கு நடுவே செங்கல் குவியல் களுக்கிடையே நின்றுகொண்டிருந்தேன்.
அதே இடத்தில் வைத்துத்தான் நித்யா சுயமாக நிற்கும்படி மனதில் நெருப்பைத் தூண்டிவிட்டாள்.
அந்த வீடே என்னைத் தூக்கி தட்டாமாலை சுற்றுவது போல நினைவுகளின் சுழலில் சிக்கி மனம்
கிறுகிறுக்கத் தலை கவிழ்ந்தேன். சுதாகரிப்புக்குப்பின் உள்ளே நடந்து அடுத்த அறையை எட்டியபோது
மெல்லிய மஞ்சள் வெயில் எங்கும் வந்துவிட்டிருந்தது. மனம் நடுங்க அந்த மூலையை நோக்கினேன்.
நித்யா அங்கு நிற்பது போல ஒரு எண்ணம் தோன்றி அக்கணத்திலேயே மறைந்தது. ஓட்டிவிடப்பட்டது
போலப் பழைய நாட்கள் கண்முன்னே சராமாரியாக ஓடிற்று. அங்கு ஆட்டுப்புழுக்கைகள் இறைந்துகிடந்தன.
கசந்த புன்னகையுடன் அந்த இடத்தைவிட்டு விலகிச் சென்றேன். துக்கங்களனைத்தும் ஒரு கட்டத்தில்
கசப்பான புன்னகையாக மாறக்கூடும் போலும். அச்சமும் தயக்கமுமாக அடிவைத்து நகர்ந்தபோது
சகலமும் செயலிழக்க அப்படியே உறைந்து நின்றுவிட்டேன். அங்கு வெறுந்தரையில் அப்பா படுத்துக்
கிடந்தார். தூண்களும் சுவர்களும் வீழ்ந்து கிடந்த இடத்தில் குறுமணலும் பொடிக்கற்களும்
முதுகை அழுந்த வெற்று உடம்புடன் அவர் ஆகாயத்தைப் பார்த்தபடி கிடந்தார். தாழிடப்பட்ட
அறைக்குள் இருந்தவர் இடிக்கப்பட்டதை அறிந்ததை உடனே கிளம்பி வந்து விட்டிருந்ததைக் கண்டு
வியப்பு அகலாத கண்களுடன் அவரை நோக்கினேன். ஒழுங்காக அவர் வேஷ்டியைக் கட்டியிருப்பதையும்
பாதி இடிந்த சுவரிலுள்ள ஆணியில் சட்டை தொங்கவிடப்பட்டிருப்பதையும் கவனித்தேன். மனம்
நகர்ந்த தூரத்திற்கு ஒரு அடிகூட என் கால்கள் நகராமல் அப்படியே சமைந்து நின்றேன். அப்பா
கழுத்தைத் திருப்பி என்னைக் கண்டு ஒரு கணம் உற்று நோக்கிய பின் முகம் மலர்ந்து சிரித்தார்.
அவ்வளவு மலர்ச்சியை அவர் முகத்தில் கண்டு எவ்வளவு மாதங்கள் ஆயிற்று என நினைத்ததும்
உள்ளே பனிப்பாறைகள் உடைந்தன. அப்பா மாறாத முகத்துடன் தன்னருகே கிடந்த கற்களையும் மணலையும்
கையால் தட்டிவிட்டு “மாதேஸ்ஸ்சு . . . வா சாமி . . . யேன்ன்டா நிக்கற . . . வந்து உக்காரு
சாமி . . .” என அழைத்தார். நான் அப்படியே இருபது வருடங்கள் பின்னோக்கிக் கடந்து சிறுவனாக
அவர் அருகில் சென்றேன். மலர்ந்த சிரிப்பும் பிரியமுமாக “உக்காரு கண்ணு . . .” என்றார்.
அதுவரை அடக்கி வைக்கப்பட்டிருந்தவைகளனைத்தும் பீறிட்டுக் கிளம்ப அந்த வெற்றுவெளியில்
என் குரல் உடைந்து சிதற அவர் முன் முழந்தாழிட்டு அமர்ந்து அவர் கையைப் பற்றியபடி கதறி
அழத்தொடங்கினேன்.
நன்றி : புதுவிசை,
டிசம்பர் 2012.
(’அரூப நெருப்பு’ தொகுப்பில் இச்சிறுகதை இடம்பெற்றுள்ளது)
No comments:
Post a Comment