Wednesday, July 13, 2016

விழித்திருப்பவனின் கனவு நூல் - மதிப்புரை



புனைவின் ரகசியக் கதவுகளைத் திறக்கும் பணி


-த.ராஜன், அர்ஜுன்





பிறகு மீண்டும் தொடரும்… ஒரு
தமிழின் நவீன விமர்சனத்தில் ஏற்கனவே உருவாகிவிட்ட தராசுத்தட்டுகளில் படைப்பை நிறுத்தி, அவற்றைப் பழைய எடைக்கற்களால் அளவிடுவதல்ல விமர்சகனின் பணி. அதற்கு படைப்பு, பண்டமோ சரக்கோ அல்ல. புதிய வெளிச்சங்களைப் படைப்பிற்கும் படைப்பாளனுக்கும் வாசகனுக்கும் வழங்குவதோடல்லாமல் பின்தங்கிய படைப்புகளை நிர்த்தாட்சண்யமாக ஒதுக்கிவிடுவதுமே அவன் செய்யக்கூடிய முதன்மையான, தலையாய காரியமாக இருக்கும். 
                                    – கே.என்.செந்தில்.

இக்கூற்றிலிருந்து கடுகளவும் விலகாமல்,தன்னைப்பாதித்த முன்னோடிகளின் படைப்புகள் மற்றும் தன்மனதிற்கு நெருக்கமான நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், விமர்சனநூல் குறித்த தனது விமர்சனங்களும் மதிப்புரைகளும் அடங்கிய விரிவான கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இதுபோன்ற விமர்சனக்கட்டுரைகள் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் வெவ்வேறுவகையில் தனது பங்களிப்பை ஆற்றுகின்றன. ஒருபடைப்பாளி தன்படைப்பின் பல்வேறு வாசக பரிமாணங்களை அறிவதற்கும் அதன்மூலம் தன்னெழுத்தை மெருகேற்றிக்கொள்ளவும் இம்மாதிரியான கட்டுரைகள் உதவுகின்றன.
                                                                      த.ராஜன்

                                                                         அர்ஜுன்

மேலும் இம்மாதிரியான சார்பற்ற சுயபிரக்ஞையோடு எழுதப்பட்ட விமர்சனங்கள், படைப்பாளிகள் தங்களின் அடுத்தடுத்த படைப்புகளில் தங்களை சுயமதிப்பீடு செய்வதற்கும் வாசகர்களின் எண்ண ஓட்டங்களை அறிந்து தம் படைப்புகளை சீர்படுத்தவும் கூட நிர்பந்திக்கலாம். வாசகபருவத்தினருக்கு இம்மாதிரியான கட்டுரைகள் பல புதிய நூல்களையும் ஆசிரியர்களையும் அடையாளம் காட்டுகின்றன. அவர்களுக்கான சாளரங்களின் திறவுகோலாக இவை இருக்கின்றன. புரிதலைத்தாண்டி ஒவ்வொரு படைப்பையும் உள்வாங்கிக்கொள்ளவும், வாசிப்புத்தன்மையை மெருகேற்றிக்கொள்ளவும் இம்மாதிரியான மதிப்பீடுகள் அவசியமாகின்றன.
தமிழிலக்கியத்தில் முன்னோடிகளான மௌனி, சுந்தரராமசாமி, சி.மணி, வைக்கம் முகம்மதுபஷீர் மற்றும் அம்பை ஆகியோரின் படைப்புகள் குறித்தும் அவர்களின் ஆளுமைகள் குறித்தும் இந்நூல் பேசுகிறது. இக்கட்டுரைகளுள் பஷீரைப்பற்றியும் அவரின் படைப்புலகைப்பற்றியும் எழுதியிருப்பது குறிப்பிடத்தகுந்த கட்டுரை. மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தும் கட்டுரையாக ‘அனர்க்கநிமிஷங்கள்’ நிச்சயம் இருக்கும். பஷீரை மீள்வாசிப்பு செய்ய விரும்பும் வாசகன் அதற்குப் பதிலாக இக்கட்டுரையை வாசித்தாலே போதுமானது எனும் அளவிற்கு அவரது படைப்புகளிலிருக்கும் உச்சங்கள் அனைத்தையும் இக்கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார். பஷீர் கையாளும் அவருக்கே உரிய பிரத்யேகமான வார்த்தைகளைப் பொருத்தமான இடங்களில் தனது கட்டுரையிலும் பயன்படுத்தியிருப்பது கூடுதல் நெருக்கத்தைத் தருகின்றது. ஒருபெருங்காதலனின் பழுத்த அனுபவங்களை எள்ளலுடன் கூடிய ஒருமொழியில் சாத்தியப்படுத்தியவர் பஷீர். இந்தக்கட்டுரை பஷீரின் எழுத்துகளில் இருக்கும் பலப்பல அடுக்குகளை நமக்கு விவரிக்கின்றன. நாராயணியையும் சுகறாவையும் நினைவுகளால் மீட்டெடுக்கச் செய்வதாயும் காதலினால் பஷீர் கடந்துவந்தபாதையை நமக்குக்காட்டுவதாயும் இருக்கின்றன. உண்மையில் இந்த நீண்ட கட்டுரை பஷீரின் எழுத்துகளுக்கான மதிப்புரை என்பதைவிட அவருக்கான தட்சணை என்றுசொல்வதே பொருத்தமாக இருக்கும்.

எழுத்தில் சமகாலத் தன்மை இல்லாதது வாசகனுக்கு அயர்ச்சியைத் தரக்கூடியது. மெளனி போன்ற தமிழின் இலக்கிய கர்த்தாக்களை இளம் வாசகன் ஒருவன் தவிர்த்து விட இதுவே போதுமான காரணமாக இருக்கலாம். இம்மாதிரியான சமகாலச் சூழலில் மெளனியின் படைப்புகளைக் குறித்த இவரது கட்டுரை இந்த வாசக மனநிலையை மாற்றியமைக்கலாம். மௌனி அணுகுவதற்கும் உணர்ந்துகொள்வதற்கும் எளிதானவர். மௌனியை அகவுலகின் முதல் பயணியாக நமக்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும் மௌனியை ஒரு ஞாநியாகக் காண்கிறார். எந்த ஒரு எழுத்தும் வாசகனுக்கு பரந்துபட்ட வெளியைத் திறந்து வைத்து அவ்வெழுத்துகளில் தனக்கான புரிதலைத் தேடவைக்கும். ஆனால் மெளனியின் படைப்புகள் பூட்டப்பட்ட மனக்கதவுகளுக்கு அப்பால் உள்ள நிகழ்வுகளை நமக்கு உணர்த்தக் கூடியதாக இருக்கின்றன.இந்தக்கட்டுரையை வாசிக்கும்போது சுசீலாவின் பழைய பழுப்பேறிய கருப்பு வெள்ளைப் புகைப்படமொன்று விழித்திரைகளுக்குள் நிழலாடுகிறது. மௌனியின் அதே பிரக்ஞையோடே அவரின் படைப்புகளின் விமர்சனத்தை முன் வைக்கிறார் கே.என்.செந்தில்.
சுந்தரராமசாமி எனும் பெயரைக் கேட்டவுடன் சட்டென அனைவருக்கும் நினைவிற்கு வருவது ‘ஜேஜே சில குறிப்புகள்’ நாவலாகத்தான் இருக்கும். பலரும் அதை வாசிக்க முயன்று தோற்றிருக்கும் கதையைக்கேட்டிருக்கிறேன். ஜேஜேவைப் பற்றிய விமர்சனங்கள் அவரைப் புரிந்துகொள்ள கடினமானவர் என்ற ஒரு மாயையை பல வாசகர்களுக்கும் தோற்றுவித்திருக்கக்கூடும். கே.என்.செந்திலின் சுந்தரராமசாமி பற்றிய கட்டுரையும் அழகியலும் தீவிரத்தன்மையும் கொண்ட ஒருவராகத்தான் சுராவைச் சுட்டுகிறது. இருந்தாலும் சுராவின் கதைகளைப் பற்றி இவர் கொடுத்திருக்கும் அறிமுகங்கள் சுராவின் மீது படிந்திருக்கும் புரிந்துகொள்ளக் கடினமானவர் என்கிற மென்திரையை விலக்கியிருக்கிறது. இந்தக் கட்டுரை சுராவை அணுகுவதற்கான ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பிட்ட படைப்புகளையும் படைப்பாளிகளையும் மட்டுமே தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் சூழலில் அதிகம் கவனம் பெறாத அற்புதமான படைப்பான ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் ‘கன்னி’ நாவலுக்காக இவர் எழுதிய மதிப்புரை பாராட்டுதலுக்குரியது. எண்ணற்ற ஆட்கள் காதலை, சாலைபோலக் கடந்து செல்லும்போது பாண்டி மட்டும் ஏன் மனப்பிறழ்வுக்கு ஆளாகிறான் எனும் கேள்வியைப் பின்தொடர்ந்து செல்கின்றன கே.என்.செந்திலின் வரிகள். நாவலில் சூசகமாகச் சொல்லப்பட்ட, சொல்லாமல் விடப்பட்ட இடைவெளிகளை வாசகனின் மனதில் நிரப்ப முயற்சி செய்கின்றன. ஆனால் மிகச்சிறிய அளவிலேயே இக்கட்டுரையில் அது நிகழ்ந்திருக்கின்றது. இந்நாவல் குறித்து இன்னும் விரிவான பார்வையை கே.என்.செந்திலால் முன்வைக்க முடியும்.

ரேமண்ட்கார்வரின் மொழி எளிமையானது. மேலோட்டமான வாசிப்பில் அவரது கதைகளை வாசகனால் எளிதாகக் கடந்துவிடமுடியும். கதைகளின் ரகசியக்கதவுகளைத் திறந்துவைக்கும் பணியைச் செய்கின்றன இவரது கட்டுரை .’கதீட்ரல்’ கதையின் முடிவினை இவ்வாறு குறிப்பிடுகிறார்: ‘அவ்விருவருக்குமான சிறுசிறு உரையாடல்மூலம் மேலும் அவர்கள் நெருக்கமாகி எழுப்பும் ‘கதீட்ர’லை காணும் வாசகன் சில கணநேர மௌனத்திற்குப் பின்னர் தன் மனதிற்குள்ளாக எழுப்பும் கதீட்ரல் அதற்கு நிகராக மேலெழுவதை அவனே வியப்புடன் உணரக்கூடும்’. கதீட்ரல் கதையினை வாசித்து முடிக்கையில் சில உணர்வுகளுக்கு நம் மனம் ஆட்படும். இக்கதையில் மட்டுமென்றில்லை, பொதுவாகவே இதுபோன்ற உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டு வருவதென்பது பெரும் சாகசம்தான். அந்த வித்தை கே.என்.செந்திலுக்கு லாவகமாக வெகுஇயல்பாக கைகூடி வந்திருக்கின்றது.
விமர்சனம் என்னும் பெயரில் படைப்புகளின் உன்னதத்தைச் சிதைக்காமல், அதில் ஒளிந்திருக்கும் நுட்பமான தருணங்களைச் சுட்டிக்காட்டிய அதேவேளையில், அதிலிருக்கும் குறைகளையும் தயவு தாட்சண்யமின்றி விமர்சித்திருக்கிறார். ஒரு படைப்பைப் பற்றிய தனது கருத்துகளை ரசனைசார்ந்து முன்வைப்பதைத் தாண்டி அது விமர்சனமாவதற்கு பரந்த நுட்பமான வாசிப்பு அவசியமாகின்றது. ரசனைக்கும் இங்கே முக்கிய பங்குண்டு. இக்கட்டுரைகளில் ஆங்காங்கே கதைகள் குறித்தும் கவிதைகள் குறித்தும் வாசிப்பு குறித்தும் முன்வைக்கும் கோட்பாடுகள் கே.என்.செந்திலினது வாசிப்புலகின் பரந்துபட்ட பரப்புகளைக் காட்டுகின்றன. ஒரு வாசகனாக விமர்சனமாக படைப்புகளின்மீது அவருக்கிருக்கும் பார்வை நமது தமிழ் இலக்கியச்சூழலுக்கு மிகவும் அத்யாவசியமானது. இந்நூலில் படைப்புகளை முன்வைத்து அவர்களின் எழுத்துலக ஜீவிதத்தை நமக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். அறிமுகம் என்பதில் இவை யாவும் இவர்களை வாசித்தே இராத சிலருக்கான கட்டுரைகள் மட்டுமல்ல. நாம் வாசித்துக் கிறங்கிப்போன பல படைப்புகளின் நுட்பமான அந்தரங்கங்களைத் தொட்டும் ஒரு நினைவுகூறலையும், வாசிப்பில் நாம் தவறவிட்ட சில அற்புதத் தருணங்களையும் நினைவுபடுத்திச் செல்கின்றன.
நன்றி : புத்தகம் பேசுது  ( ஜுலை 2016 இதழ்)

No comments:

Post a Comment