Thursday, October 29, 2015

க.மோகனரங்கனின் கடிதம்.


கடிதம்

தப்பித்தல் உபாயமாக இலக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்
 -க.மோகனரங்கன்

சேலத்தில் க.நா.சு-சி.சு.செல்லப்பா பற்றிய இரு நாள் கருத்தரங்கு நடைபெற இருப்பதாகவும் முடிந்தால் போய் கலந்து கொள்ளும்படியும் சுந்தர ராமசாமி கடிதம் எழுதியிருந்தார். சில நாட்களுக்குப்பின் காலச்சுவடு அறக்கட்டளையிலிருந்து 28.04.03, 29.04.03 ஆகிய இரு தினங்களைக் குறிப்பிட்டு அழைப்பிதழும் வந்து சேர்ந்தது. உற்சாகமாக சேலம் போய் சேர்ந்தேன். 



சேலம் தமிழ்ச் சங்கத்தின் மாடியின் உள்ளே நுழைந்து அவ்வளவு எழுத்தாளர்களை ஒருசேர பார்த்த போது பிரம்மிப்பு தான் ஏற்பட்டது. எவரேனும் இலக்கியத்திலிருந்து ஏதாவது கேள்வி கேட்டு விடுவார்களோ? என அவர்களோடு பேசுவதற்கும் பயமாக இருந்தது. அங்கிருந்தவர்களில் கண்ணனைத் தவிர பிறரொருவரையும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. கருத்தரங்கின் முதல் நாள் பின்மதியம் தனியாக முழித்துக் கொண்டு நின்று கொண்டிருந்த என்னிடம், என்னைப் போலவே உயர்ந்த மனிதர் ஒருவர் மெதுவாக வந்து விசாரித்தார். உடனே, ”நேற்று இரவு,இன்று வருபவர்களுக்கு அறை ஒதுக்க பேசிக்கொண்டிருந்த போது கண்ணன் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறார்எனக் கூறிவிட்டு, மிகுந்த தோழமையுடன் நான் மோகனரங்கன்என்று அறிமுகப் படுத்திக் கொண்டார். சிறிது நேரத்திலேயே,அதே தோழமையுணர்வோடு பிறருக்கும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். ஆரம்ப கட்ட வாசகனின் மன உலகை அறிந்து உரையாடும் குணத்தை மிகச் சிலரிடமே கண்டிருக்கிறேன். அவர்களில் மோகனும் ஒருவர். எதுவும் எழுதாத என்னை அவர் சமமாக பாவித்து இலக்கியம் பேசியது அன்று வியப்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. பின்னர் வெவ்வேறு இலக்கிய கூட்டங்களில் கண்டு பேசி நட்பு வளர்ந்தது. அந்த உரையாடல்கள் எனக்கு பெரும் உதவியாக இருந்திருக்கின்றன. நிதானமும் ,பக்கச்சார்பற்ற, திறந்த மனமும் கொண்ட நுட்பமான வாசிப்பு மோகனுடையது. அவ்வகையில் தேர்ந்த சொற்களால் எழுதப்பட்ட நூல் சொல் பொருள் மெளனம்விமர்சன உலகிற்கு முக்கிய வரவு(இந்நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை தீராநதியில் வந்துள்ளது) இந்நூலை படித்த பின்பே என் முதல் தொகுப்பு வரக்கூடுமென்றால் அதற்கு இவரிடம் முன்னுரை வாங்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.


எப்படி புரட்டினாலும் 48 பக்கம்(முன்னுரையும் சேர்த்து) மட்டும் வரக்கூடிய அவரது நெடுவழித் தனிமைகவிதை தொகுப்பை படிக்க வேண்டும் என்ற ஆர்வம் உண்டானது. எங்கெங்கோ தேடியும் கிடைக்காமல் அவரிடம் சொன்ன போது அதெல்லாம் எங்கேயும் கிடைக்காது.நானே அனுப்பி வைக்கறேன்எனச் சொன்ன சில நாட்களில் வந்து சேர்ந்தது.படித்து அசைபோட்ட பின் அவருக்கு கடிதம் எழுதினேன்.அதற்கு அவர் எழுதிய பதில் கடிதம் பெரிய திறப்பாக எனக்கு அமைந்தது.இன்றும் அவ்வப்போது அக்கடித வரிகளை நினைத்துக் கொள்கிறேன்.அன்று இக்கடிதத்தை பற்றி சூத்ரதாரியிடம்(எம்.கோபாலகிருஷ்ணன்) நிறையவே பேசியிருக்கிறேன்.எனவே இங்கு அக்கடிதத்தை பிரசுரிக்கிறேன்.


21 பிப்ரவரி 2004
ராசிபுரம்

அன்புள்ள செந்தில்,

உங்கள் கடிதம் கிடைத்தது.மகிழ்ச்சி.

என்னுடைய வாசிப்பின் உபவிளைவாக ஏற்படும் தற்செயலான அகத்தூண்டுதல்களிலிருந்தே என் கவிதை வரிகள் உருவாகிவருகின்றன. காரணகாரிய பின்புலமற்று திடீரென மிதந்து வரும் ஒரு வரி அல்லது காட்சியை மனம் தொடர்ந்து துழாவியபடியே இருக்கும். பல சமயம் அவ்வரிகள் எதனுடனும் சேராமல் வெறும் வரிகளாகவே எஞ்சி விடுவதும் உண்டு. அபூர்வமாகவே கவிதையின் வடிவம் கொள்கிறது. கவிதையை மெளனமாக வாசிக்கும் போது கூட, அது மனசுக்குள் எதிரொலிக்கவே செய்கிறது. அவ்வாறு மனதின் கட்செவியில் விழும் கவிதைக்கு,சொற்களின் ஒலிப்புஎன்பது ஒரு அத்தியாவசியமான பண்பு என்றே எனக்குப்படுகிறது. ஒரு கவிதையின் தொனி என்பதை நிர்ணயிப்பதில் சொற்களின் ஒலிக்கு மிக அதிகமான பங்கு உண்டு. எனவே தான் சொற்களின் தேர்வில் அதிக பிரக்ஞையுடையவனாக இருக்கிறேன் போலும். தொடர்ந்து அதிகம் எழுதாமைக்கு முக்கிய காரணம், எதையும் ஒத்திப் போட்டுவிடும் என் இயல்பான சோம்பேறித்தனம். தவிரவும்,திட்டமிட்டு எழுதுவதைக் காட்டிலும் தன்னியல்பாக வரும் வரிகளில் அழகும் ஆழமும் அதிகமிருக்கும் என்பது என் எண்ணம். நிறையப் படிப்பதுடன் தேடிப் போய் எழுத்தாளர்களையும் நேரில் சந்தித்து வருகிறீர்கள். உங்களுடைய தீவிரமும் வேகமும் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. இவை இரண்டையும் நீங்கள் இழந்துவிடாமல் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்பதை என் அவா. எவ்வளவு பெரிய எழுத்தாளனும் எழுதாத நிலைகளில் நம்மைப் போலவே பலவீனங்கள் கொண்ட சராசரி மனிதன் தான். எனவே எந்த எழுத்தாளரைப் பற்றியும் பிம்பங்களை வளர்த்துக் கொள்ளாதீர்கள். விருப்பு வெறுப்புகள் கொண்ட அவர்களுடைய தனிமனித ஆளுமையோடு, அவர்களுடைய படைப்பினை சேர்த்து குழப்பிக் கொள்ளாதீர்கள். எந்தவொரு இலக்கியப் படைப்பு குறித்தும் பிறர் கூறும் அபிப்பிராயங்களை திசைகாட்டிகளாக மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். அதைப் பற்றி உங்கள் வாசிப்பின் மூலமாக சுயமான அபிப்பிராயங்களை உருவாக்கிக் கொள்ளுங்கள்.இலக்கிய அனுபவம் என்ற சித்திபெற பிறர் காட்டிய வழியில் சுகமாக பயணிப்பதை விடவும், தனி வழி காண முட்டி மோதி விழுந்தெழுந்து நடப்பது தான் நல்லது. எல்லாவற்றையும் விட முக்கியமானது, நெருக்கடிகள் மிகுந்த லெளகீக உலகின் கசப்புகளை மறக்கடிக்கவும், அவ்வுலகை அலட்சியப்படுத்தி புறந்தள்ளிட ஏதுவான மனத்தெம்பை அளிக்கவுமான ஒரு லாகிரி வஸ்துவாக, தப்பித்தல் உபாயமாக இலக்கியத்தை பயன்படுத்திக் கொள்ளாதீர்கள். எப்போதும் வாழ்க்கையின் நிதர்சனத்திற்கு ஈடு கொடுத்து நிற்கும் விதமாக லெளகீகப் புழுதியில் ஒரு காலை அழுத்தமாக ஊன்றி நிற்க மறந்து விடாதீர்கள். வேறென்ன? மறுபடியும் ஏதேனும் ஒரு இலக்கிய கூட்டத்தில் சந்திக்கும் போது விரிவாகப் பேசுவோம்.

அன்புடன்
க.மோகனரங்கன்


க.மோகனரங்கனின் நூல்கள் :

1.இடம் பெயர்ந்த கடல் -கவிதை தொகுப்பு -தமிழினி பதிப்பகம்
2.சொல் பொருள் மெளனம் நவீன இலக்கிய விமர்சன நூல்-தமிழினி பதிப்பகம்
3.அன்பின் ஐந்தினை அனுபவக் கதைகள் -தமிழினி பதிப்பகம்
4.மைபொதி விளக்கு விமர்சன நூல் -தமிழினி பதிப்பகம்
5.வீட்டிற்கு அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு ரோமண்ட் கார்வார் (நான்கு மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவர்) -காலச்சுவடு பதிப்பகம்
6.மீகாமம் - கவிதை தொகுப்பு - தமிழினி பதிப்பகம்.

No comments:

Post a Comment