Saturday, August 22, 2015

துயரத்தின் நீங்காத நிழல்


துயரத்தின் நீங்காத நிழல்


எஸ்.செந்தில்குமாரின் ‘அலெக்ஸாண்டர் என்ற கிளி


 “வாழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்வது தத்துவம்.வாழ்க்கையையே சொல்வது,அதன் ரசனையைச் சொல்வது இலக்கியம்.
-புதுமைப்பித்தன்


“அலெக்ஸாண்டர் என்ற கிளி”  என்னும் எஸ்.செந்தில்குமாரின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு மொத்தம் பதினேழு கதைகளை உள்ளடக்கியிருக்கிறது.இக்கதைகளில் வரும்  மனிதர்கள் தங்களது அடிப்படை இச்சைகளுடன் உழல்பவர்களாகவும் ஆசையை அடக்கிக் கொள்ளத் தெரியாது தவிப்பவர்களாகவும் தோல்விகளால் சூழப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள்.இந்தக் கதைக்களன்கள் வாழ்விலிருந்தும் அனுபவத்திலிருந்தும் உருவானவை.சில அனுபவங்களின் குளிர்ச்சி தரும் ஆசுவாசத்தை விடவும் வாழ்க்கையின் வெம்மை அளிக்கும் கொப்புளங்களை எழுதுவது தான் செந்தில்குமாரின் பிரதானமான செயல்பாடாக இருக்கிறது.அந்தக் கொப்புளங்களை என்ன செய்வது?என்பது பற்றிய குறிப்பு மருந்துக்குக்கூட இல்லை.அவ்வாறு இல்லாதது தான் வாசகனை அந்த மனிதர்களின் மீது  நாட்டம் கொள்ளச்செய்கிறது.அந்தக் கதைகளின் அருகில் செல்ல பாதை சமைத்துத் தருகிறது.எளிய ஆசைகள் கூட நிறைவேறாத ஆட்கள் புழங்கும் இக்கதையுலகில் அதன் பொருட்டு உடையும் கண்ணீரையும் ஏக்கத்தையும் பெருகும் வன்மத்தையும்  பாவனைகளேதுமின்றி பெருமளவிற்கு வாசகனிடம் கடத்திவிடுகிறது.
             


தொகுப்பின் முதல் கதையும் முக்கியத்துவமுடைய கதைகளுள் ஒன்றுமான ‘கட்டைவரிகுறிப்புணர்த்திச் செல்வதின் சூட்சமத்தால் மனதைத் தொந்தரவுக்குட்படுத்துகிறது.எளிய மொழியில் புற உலகை சித்தரித்தபடி நகரும் இக்கதை செந்தில்குமார் தன் பல கதைகளில் வெவ்வேறு தொனிகளில் வெளிப்படுத்திய பொற்கொல்லர்களான ஆசாரிகளுள் ஒருவரின் மரணத்தையொட்டி அவ்வீட்டின் நடக்கும் நிகழ்வுகளை அடுக்குவதன் வழி வாழ்வின் அபத்த்தைத் தீவிரமாகப் பேசுகிறது.பிணம்(தொப்பையா ஆசாரி) விழுந்த வீட்டின் நுட்பமான கூறுகளை உள்ளடக்கியிருக்கும் கதை இது.சகமனிதர்களின் முகத்தை-எப்போதேனும் பார்க்கக் கிட்டும் முகம் இது-போகிறபோக்கில் உணர்த்திவிடுகிறார்.பிரேதத்தை குளிப்பாட்ட படும் பாடுகளையும் அதை அமரவைக்க பெஞ்ச் கிடைக்காமல் சுற்றும் அவலத்தையும் காணும் போது கசப்பு படர்கிறது.இதன் உச்சமாக பிணத்திற்கு மாற்று வேட்டி கட்டி விட அன்ட்ராயரின் முடிச்சை அவிழ்க்க முடியாமல் திணறுகிறார்கள்(மனுஷன் இதைப் போய் ஏன் இத்தனி இறுக்கமா கட்டியிருக்கிறார்”.)பிளேடைத் தேடி அலைகிறார்கள்.மின்சாரம் இல்லாத வீட்டின் அரிக்கேன் வெளிச்சத்தில் அதுவும் கிடைக்கமாட்டேன் என்கிறது.பிறகு அதிலொருவன் அம்முடிச்சை மடக்குக் கத்தியால் அறுத்து விடுகிறான்.இக்காட்சி தந்த துயரும் வலியும் கடுமையானது.பெருமூச்சுகளை உண்டு பண்ணும் துயர் அது.அந்த பிரேதத்தை எடுப்பதற்கான கட்டைவரி அன்று விழுந்த வேறொரு மரணத்தால் வசூலாவதுமில்லை.புறச்சூழலின் நுட்பமான தேர்ந்தெடுப்பும் கதையை கொண்டு செல்லும் முறையும் இக்கதையை மனதில் ஊன்றச் செய்து விடுகிறது.இறுதியில் தொப்பையா ஆசாரியின் மனைவி மயங்கி வீழ்ந்து கிடப்பதாக முடித்திருப்பது ஏதோ ஒரு வகையில் இதன் கலை அமைதியை சற்றே மங்கச் செய்துவிடுகிறது.

                    


புராண காலக்கதையை அக்கதை நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் அதே மதுரையை களமாகக் கொண்டு சமகால மனிதர்களின் உறவுகளின் மீது எழுதப்பட்டிருக்கும் ‘இந்திரயோனிமற்றுமொரு முக்கியமான கதையாகும்.பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சுந்தரேஸ்வரரை நினைவு கூறும் நாளிலேயே அந்நகரத்தில் பலருக்கும் ஒரே சமயத்தில் முதுகில் அடிவிழுகிறது எனத் தொடங்கிச் செல்லும் கதை ,பின்னர் காதலிக்காக அடி விழும் தேவப்பனைப் பின்தொடர்ந்து செல்கிறது.திருவிழாவிற்கு முதல் நாள் மாலையிலேயே அவனுடைய காதலி சுந்தரியுடன் அவனுக்குப் பிணக்குகள்(”207 தடவை அவளுடைய செல்ஃபோனுக்கு ரீசார்ஜ் கூப்பன் வாங்கிக் கொடுத்திருக்கிறான்.சுந்தரி 47 தடவை மட்டும் அவனுடைய மிஸ்டு காலுக்கு பதில் பேசியிருக்கிறாள்.”) தொடங்கி சண்டை முற்றுகிறது.பிறகு அவனது அலைதலினூடாக வேறொரு புராணகால நாயகனான இந்திரனைப் பற்றிய கதைகளுள் ஒன்றுடன் தேவப்பனின் மனநிலையை வெகுநுட்பமாக இணைத்துவிட்டிருப்பது இச்சிறுகதையின் தளத்தை மடைமாற்றம் செய்துவிடுகிறது. இது போன்ற புதிர்களை உறுத்தாமலும் செயற்கையாக ஆக்காமலும் கதையின் உட்பொருளாகவோ அடியோட்டமாகவோ ஆக்கிவிடும் திறன் செந்தில்குமாருக்கு இயல்பிலேயே இருக்கிறது.அவரது ”பகலில் மறையும் வீடு” சிறுகதை சட்டென நினைவுக்கு வருகிறது.இது தான் ஒரு படைப்பாளியாக அவரைத் துலங்கச் செய்கிறது என நினைக்கிறேன்.
            
நூதனமான ஆனால் கதையுடன் ஒன்றச்செய்யக்கூடிய வாசித்து முடித்து பின் அசைபோடத்தக்க அனுபவத்தை அளிக்கும் ‘நேற்று பார்த்த பெண்’ தொகுப்பிற்கு பலம் சேர்க்கும் கதைகளுள் ஒன்று.சாந்தா தன் வெவ்வேறு பருவங்களில் (சிறுமி,பருவம் எய்தியவள்,மணம் முடித்தவள்) கோவிலில் காண நேரும் பெண்ணுடனான சந்திப்புகளின் வழி அவளது வாழ்க்கையின் குறுக்குவெட்டுத் தோற்றத்தைச் சித்தரிக்கும் கதை இது.அவளது ஒவ்வொரு வயதிற்கும் ஏற்ப அதே வயதுடன் வந்து சினேகமாக ஆகும் பெண் அக்கோவிலில் சதாகாலமும் வீற்றிருக்கும் பெண்தெய்வம் என்பதை அறியும் போது கூட செந்தில்குமாரின் எளிய மொழியினாலான கூறுமுறையும் நுட்பமும் மனதில் அப்போது தோன்றும் ஒரு வித வினோத எண்ணத்திலிருந்து வாசகனை விடுவித்து விடுகிறது.அதன் மூலமே வாழ்வின் படிநிலைகளில் உருவாகும் பெண்ணின் மனசஞ்சலங்களை குறிப்பால் உணர்த்துகிறார்.புனைவை திகட்டும் மிகு கற்பனைகயாகவோ மோஸ்தர் வித்தை போலவோ ஆக்காமல் அது யதார்த்ததின் மற்றொரு மாதிரியாக உருவாக்கியிருப்பதே  வாசகனை அக்கதையுடன் நெருங்கச் செய்கிறது.


          
ஆண்-பெண் உறவுகளையும் அதற்கான விழைவுகளையும் பெரும் கலைஞர்கள் முதல் சிறிது காலம் இயங்கி ஒதுங்கிச் சென்றவர்கள் வரை அக்கருப்பொருளை நுட்பாகவும் ஆழமாகவும் கையாண்டிருக்கிறார்கள்.காமத்தை அதில் ஊடாடும் அவசங்களை ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களின் ஆக்கங்கள் பேசியிருக்கின்றன (அ) பேச முயன்றிருக்கின்றன.இத்தொகுப்பில் ‘ஒரு வட்டத்திற்குள் சுழலும் பல கதைகள் ,ஞாபகங்களை உண்ணும் மீன்கள்,துயர பருவம் ஆகிய மூன்றும் அத்தகையதே.பெண்ணின் மீதான வேட்கையைக் கதையின் முடிச்சாகக் கொண்டிருக்கும் ’ஒரு வட்டத்திற்குள் சுழலும் பல கதைகள்’ தன்னை விட வயது மீறிய பெண் உடல் மீது இளைஞர்கள் வைத்திருக்கும் தாபத்தின் வழி புனையப்பட்டிருக்கிறது.அவளது பாசாங்குகள்,வஞ்சங்கள்,பாவனைகள் அவர்களை சோழி போல உருட்டி விளையாடுகிறது.ஆனால் அந்த வேட்கை வெறும் ஏக்கமாக மட்டுமே மிஞ்சுகிறது.இதன் மற்றொரு வடிவமாக எழுதப்பட்டிருக்கும் ’துயர பருவம்’ பதின்ம பருவத்தில்  எதிர்பாலினத்தின் மீது பெருகும் பாலியல் சார்ந்த கனவுகளின் உஷ்ணத்தை பொத்திவைத்திருக்கிறது.சரியாக வராமல் போன கதையும் கூட.தன்னிலையில் எழுதப்பட்டிருக்கும் இவ்விருகதைகளிலும் வரும் பெண்களின் வெளித் தெரியாத வன்மத்தில் அந்த ஆண்களின் அபிலாஷைகள் நெருப்பில் சிக்கிய புற்கள் போல பொசுங்குகின்றன.
              
குறிப்பிட்ட ஒரு நாளில் குறித்த நேரத்தில் ஆற்றில் மூழ்கிக் குளித்து கரையேறினால் மனிதனைக் கொல்லும் ஞாபகங்களின் சிறையிலிருந்து மீளலாம் என்னும் சொல்லை நம்பிப் புறப்பட்டவனைப் பற்றிச் சொல்லும் ‘ஞாபகங்களை உண்ணும் மீன்கள்’ அக்கதை கூறப்பட்ட முறையால் கவனத்தில் நிற்கிறது.செண்பகா என்னும் காதலியை காப்பாற்ற முடியாமல் அவள் மரணக்கும் கனவிலிருந்து அந்த ஆறு ஓடும் செண்பகனூரில் விழித்தெழும் சோமு அவ்வூரிலிருக்கும் தேனீர்கடையின் செண்பகத்தைக் கூட ஆசை கொள்கிறான்.ஆனால் அந்த ஆற்றிற்கு போகும் வழியில் சந்திக்க நேரும் பூக்காரி செண்பகத்துடன் உறவு நேர்கிறது.அப்போது ஊர் ஜமீனால் ஆற்றில் குதித்து மரணித்த பெண்கள் எழுப்பும் ஓலம் கேட்பதாக கதை செல்கிறது.இது மகாபாரதத்தில் குருசேஷ்திரப் போர் முடிந்த பின் வரும் ஒரு காட்சியை நினைக்க வைத்தது.பாஞ்சாலியின் மன்றாடுதல்களுக்குச் செவி சாய்த்து வியாசர் போரில் இறந்தவர்களை ஒரு கணம் தோன்றச் செய்யும் வலி மிகுந்த இடம் அது.இதனை அடிப்படையாகக் கொண்டு ஜெயமோகன் ‘நதிக்கரையில்’ என்னும் சிறுகதையை எழுதியிருப்பது நினைவில் எழுவதையும் தவிர்க்க முடியவில்லை.செந்தில்குமாரின் இக்கதையில் வரும் மூவரின் பெயரும் ஒன்றாக இருப்பதும் அந்த ’செண்பகனூர் ஆறு ஓடும் கோவிலிலுள்ள சிலையின் பெயரும் செண்பகநாச்சியாக இருப்பதும் தற்செயலானதல்ல.மேலும் ஒருவரில் பிறிதொருவரின் சாயலைக் காண்பதும் செந்தில்குமாரின் கதையுலகில் தொடர்ந்து வரும் ஒரு கூறு.தமிழின் இதன் முன்னோடி மெளனி தான்.இத்தொகுப்பிலுள்ள ’அ.பூங்குழலி’ என்னும் சிறுகதையும் அவரது முந்தைய தொகுப்பிகளிலுள்ள கதைகளான ‘லீலா மற்றும் லீலாக்களின் கதைகள்’ மற்றும் ‘என் மரணத்திற்குப் பிறகு நீயும் இறந்துவிடுவாய்’  போன்றவையும் அத்தகையதே.   
                   
மணமாகி வேற்றூர் சென்ற பெண்ணொருத்தி அங்கு நாப்கின் இல்லாது உடல்,மன வலிகளுடன் படும் அவஸ்தையை நேரடியான மொழியால் சொல்லும் ‘நாப்கின்குறிப்பிடத்தக்க கதை.திருமணத்திற்காக ஊரை விட்டுச் செல்லும் பெண்ணைப் பற்றியதான‘அசலூருக்குச் செல்பவர்கள்’ கதையின் தொடர்ச்சியாக இக்கதையைக் கருத முடியும்.எந்த விதமான பூச்சுக்களுமின்றி மிகையான பாவனைகளுக்கும் இடம்தராமல் பெண்ணின் வலியை எழுதியிருக்கும் கதை இது.வலியை மட்டும் சொல்வதல்ல சிறுகதையின் பணி.இதிலிருந்து எழுந்து இன்னும் சிறிது தூரம் செல்ல முயற்சித்திருக்கலாம் என்ற எண்ணம் இயல்பாகவே இக்கதையை வாசிக்கையில் மனதினுள் வருகிறது.
                      


செந்தில் மீண்டும் மீண்டும் எழுதும் கதைக்களன்களென நகைவேலை செய்யும் ஆசாரிகளையும் ஊர் விட்டு புலம்பெயர்ந்து செல்லுதல் குறித்துமே.போலி நகையை அடமானம் வைக்கும் நபர்களைப் பற்றிய ‘ஊஞ்சல் விதி’ கதையை வாசித்ததும் இதன் விரிவான நல்ல வாசிப்பனுபவத்தைத் தந்த அவரதுநெடுஞ்சாலை ஆகாயத்தின் நிறம்என்னும் நெடுங்கதை ஞாபத்தில் வந்தமர்ந்தது.அது போலவே ‘நீ நான் மற்றும் மரணம்’ என்ற அவரது நாவலின் பின்னணிகளுள் பிரதானமானதும் இதுவே.நன்கு கைவரப்பெற்ற களத்தினுள் குதித்து வெற்றியோடு திரும்பவது பெரிதல்ல.அது போலவே குறிப்பிட்ட ஒரு அனுபவ வட்டத்தினுள் சுற்றிக் கொண்டிருக்கும் கதைகளை தொடர்ந்து எழுதுவது அந்தப் படைப்பாளியின் மேல் வாசகனுக்கு அயர்ச்சியை தோற்றுவித்துவிடும்.இது போன்ற கதைகளிலிருந்து விட்டு விலகுவது சம்பந்தமாக செந்தில்குமார் உடனடியாக முடிவெடுத்தாக வேண்டும்.ஆனால் அதே ஆசாரி வாழ்வை பின்புலமாகக் கொண்டிருக்கும் ‘சோறு தண்ணீர்கதை அதன் கருப்பொருளால் மேற்கூறிய விபத்திலிருந்து சிறிய காயங்களுடன் தப்பித்து விடுவதையும் சொல்லியாக வேண்டும்.
             
இந்நூலின் முன்குறிப்பில் செந்தில்குமார் சொல்வது போல சொந்த நிலத்தை விட்டு நீங்கிச் செல்வது கதைகளில் வரும் பெரும்பாலான பாத்திரங்களின் இயல்பாக இருக்கிறது.துயரம் அவர்களது வாழ்க்கையில் நீங்காத நிழல் போல பின் தொடர்ந்து வருகிறது.வாழ்ந்து கெட்ட குடும்பங்கள் பிழைக்க நாதியின்றி ஊரைக் காலிசெய்யும் -அவரது நாவல்களில் முக்கியமானதாக நான் கருதும்- ‘முறிமருந்தும் அவ்வாறான  ஒன்றே. சாதாரண மனிதர்களின் வெளிக்காட்ட முடியாத கண்ணீரால் ஆனவைஅவர்கள் ரயிலைப் பார்க்கவில்லை,அலெக்ஸாண்டர் என்கிற கிளி’ வாழ்வின் நிச்சயமற்ற போக்குகள் அவர்களை வேற்றூருக்கு ஓட்டிச் செல்வதை உள்ளூர ஓடும் துயரத்தின் விம்மல்களை கேட்கக்கூடிய ஆனால் அடங்கிய தொனியில் சொல்லப்பட்டிருக்கும் கதைகள் இவை.
         
‘வருகை’ , ‘போஜனகலா’ போன்றவை வெற்று முயற்சிகள்.மாறுபட்ட கதைசொல்லலை லட்சியமாகக் கொண்டிருக்கும் இக்கதைகள் ஒரு கட்டத்தில் பொறுமையை வெகுவாகச் சோதித்து அயர்ச்சியை உண்டுபண்ணிவிடுகின்றன.கதை நகரும் திசை பற்றிய குழப்பத்தால் சோபிக்காத கதை ‘இரவின் வழியாகவும் பகலின் வழியாகவும்’.

                


எஸ்.செந்தில்குமார் என்னும் படைப்பாளிக்கு எந்த பங்கத்தையும் விளைவிக்காத இந்த தொகுப்பு அவரது கதைகளின் மீதான வாசகனின் ஆர்வத்தைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது.எளிய மொழியின் சாதாரண வாசகங்களில் சட்டென ஆழத்திற்குச் சென்றுவிட செந்தில்குமாரால் முடிந்திருக்கிறது.ஆனால் புதிய வழித்தடங்களை அவர் அடைந்தற்கான முகாந்தரங்கள் ஏதும் தட்டுப்படவில்லை.முந்தைய தொகுப்புகளின் தொடர்ச்சியான மனநிலையையே வாசகனுக்கு அளிப்பவையாக இக்கதைகள் இருக்கின்றன.தெரியாத உலகை முட்டித் திறந்து உள்ளே போய் எழுதிப் பார்ப்பது ஒரு சவால்.அந்த சவாலை எஸ்.செந்தில்குமார் அதற்கேயுரிய துணிவுடன் எதிர்கொள்ளும் போது அது அவரது புனைவுலக பிராந்தியங்களின் விஸ்தரிப்பாகவும் அவருக்கு புதிய வெளிச்சமாகவும் அமையக்கூடும்.அதை சிருஷ்டிப்பதற்கான திறன்களைக் கொண்டவர் எஸ்.செந்தில்குமார் என்பதற்கு சாட்சியாக  இத்தொகுப்பைக் கருதலாம்.


நன்றி : காலச்சுவடு ஜுலை 2015


No comments:

Post a Comment