Monday, February 16, 2015

முனை மழுங்காத முள் - க.மோகனரங்கன்


தி.ஜானகிராமனின் “மோகமுள் நாவல் பற்றி க.மோகனரங்கனின் கட்டுரை




முனை மழுங்காத முள்


-க.மோகனரங்கன்
                    

                
                        சமீபத்தில் என் நண்பரான புகைப்படக் கலைஞரை சந்தித்துப் பேசிக் கொண்டிருந்த போது,அவர் எடுத்த புகைப்படங்கள் என்று ஒரு தொகுப்பைத் தனது கணனியின் நினைவகத்திலிருந்து எடுத்துக் காண்பித்தார்.அத்தனையும் மலைகள்.உற்றுக் கவனித்த போதுதான் தெரிந்தது அவற்றுள் இருப்பது ஒரே மலை தான்.அது நண்பரின் ஊருக்கு சற்று தள்ளி இருப்பது.பெரிதாக பக்தர் கூட்டமும் வழிபாடும் இல்லாத சிறு கோயில் ஒன்றும் அதன் உச்சியில் உண்டு.அப்படங்களைத் திரும்பத் திரும்ப சில தடவைகள் பார்த்தேன்.விடியற்காலை,பின்மாலை,உச்சிப்பகல்,முன்னிரவு எனப் பொழுதுகளில் வெவ்வேறு பருவங்களில் தொலைவிலிருந்து அருகிலிருந்து பக்கவாட்டிலிருந்து எனப் பலவித கோணங்களில் அவை எடுக்கப்பட்டிருந்தன.அத்தொகுப்பு ஏறக்குறைய அம்மலை பற்றிய ஒரு தியான வரிசையாக எனக்குத் தோன்றியது.

                   

                 
                  எதேச்சயாக தூக்கம் கலைந்து விழுத்து விடியற்காலை ஒன்றில் தன் வீட்டு மாடியிலிருந்து மலையைப் பார்த்த நண்பர் ஏதோ தோன்றியவராக முதல் புகைப்படத்தை சில வருடங்களுக்கு முன் எடுத்தார்.பிறகு தொடர்ந்து தன் அன்றாட வேலைகளுக்கு நடுவே அவ்வப்போது அம்மலையை புகைப்படம் எடுக்க அவர் தவறுவதில்லை.கிட்டத்தட்ட அது தனக்கு வழிபாடு போல ஆகிவிட்டது என்றார்.நண்பர் நாத்திகர் என்பதால் கோவிலுக்குச் செல்லும் வழக்கமெதுவும் அவருக்கு கிடையாது.
ஒரு மொழியில் காலதேச வர்த்தமானங்களை கடந்து நிலைபேறுடையனவாக நிற்கும் இலக்கிய ஆக்கங்களும் மலைகளைப் போன்றவையே.மனிதர்களுடன் ஒப்பிடும் போது மலைகள் நித்தியமானவையே.ஒருவன் தன் வாழ்நாள் முழுவதும் அவதானத்தபடியே வந்தாலும் அவற்றின் பெருமிதத்தையோ அவதானத்தபடியே வந்தாலும் அவற்றின் பெருமிதத்தையோ சலனமின்மையையோ உறுதியையோ மெளனத்தையோ முழுக்கப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை.நம்மிடையே தொன்றுதொட்டு வழங்கி வரும் பேரிலக்கியங்களும் செவ்வியல் ஆக்கங்களும் அத்தன்மைகளைப் கொண்டவையே.புகைப்படத்திலுள்ள மலைகள் வளருவதில்லை.நம் புத்தக அலமாரியிலுள்ள நூல்களும் அவ்வாறே.அவற்றின் பக்க  எண்ணிக்கையோ அச்சிடப்பட்ட விஷயங்களோ வடிவமோ மாறுவதில்லை.எனினும் காலத்தையொட்டி பழங்கதையாகி  நிற்க வலுவின்றி எடைக்கும்ப் பெயரும் பலவற்றிற்கு மத்தியில் சில நூல்கள் மாத்திரம் தம் பொருளையும் பொலிவையும் இழக்காமல் நிலைத்திருத்திருப்பதுண்டு.அத்தைய ஆக்கங்களையே செவ்விலக்கியங்கள் (Classics) என்கிறோம்.நம் அக வளர்ச்சிக்கேற்ப அப்புத்தகங்கள் தரும் பொருளனுபவமும் மாறுவதை உணரமுடியும்.அப்போதைய நம் அனுபவத்திற்கும் பக்குவத்திற்குமேற்ப புதிய அழகுகளையும் உள்மடிப்புகளையும் அர்த்த நுட்பங்களையும் கொண்ட்தாக அவை மிளிர்வதை நாம் வியப்புடன் அறிகிறோம்.

                      

                   
               ஒரு தேர்ந்த ஆசிரியரின் வழியே வெளிப்படுவது முழுக்க முழுக்க அவனுடைய பார்வையும் எண்ணங்களும் கருத்துகளும் கற்பனையும் மட்டுமன்று.அவற்றினூடாக அம்மொழியின் கூட்டுமனமும் பண்பாட்டு நினைவுகளும் கூடவே கலந்துதான் வெளிப்படுகிறது எனும்போது காலந்தோறும் அதில் புது அழகுகளும் வெளிச்சங்களும் தோன்றுவது இயல்பானது.எனவே,செவ்வியல் தன்மையுடைய ஒரு இலக்கியப் படைப்பை வாசிப்பது என்பது ஏதோ ஒருவிதத்தில் நம்மையே நாம் மறுவாசிப்பு செய்து கொள்வதைப் போன்றது தான்.அவ்வாறு செய்கையில் தான் வாசிப்பனுவத்தை ஒட்டி நம்முள் நடைபெற்று வந்திருக்கும் வளர்சிதை மாற்றங்களை நாம் அறிந்து கொள்ளவியலும்.வளர்ந்து ஆளான பிறகு,பிழைப்பு நிமித்தம் பெருநகரத்திற்குப் பெயர்ந்துவிட்ட ஒருவன் சில சமயங்களில் வசதிகள் குறைவான போதும் பிறந்து திரிந்த சொந்த கிராமத்திற்கே திரும்ப ஏங்குவதைப் போலவே புதுப்புது வாசிப்பனுபவங்களுக்குப் பிறகும் நம் மனம் நமக்கு அந்தரங்கமான ஒரு பழைய புத்தகத்தை திரும்ப வாசிக்க ஏங்குவதுண்டு.அவ்வாறு வெவ்வேறு வயதில் வெவ்வேறு மனநிலைகளில் நான் மீளப் படித்த புத்தகம் மோகமுள்.

                      

               
               இருபத்தைந்து வருடங்கள் கடந்துவிட்டன.வாசிப்பு இடையறாத ஒரு பெரும் போதையென என்னை மூழ்கடித்திருந்த பருவம் அது.எனக்கென்று தேர்வோ நோக்கமோ எதுவுமின்றி கண்ணில் பட்டது.கைக்குக் கிட்டயது அனைத்தையும் படித்துத் தள்ளிக் கொண்டிருந்தேன்.அச்சமயம் ஒரு இலக்கிய இதழில்-கணையாழி என்றுதான் நினைவு-பல எழுத்தாளர்களிடமும் கேட்டு சிறந்த பத்து தமிழ் நாவல்கள் என்று ஒரு பட்டியல் வெளியிட்டிருந்தார்கள்.அநேகமாக எல்லோருடைய பட்டியலிலும் இடம்பிடித்திருந்த ஒரு பெயர் மோகமுள்.எங்கள் கிராமத்து கிளைநூலகத்தில் அப்புத்தகம் இல்லை.எனக்குத் தெரிந்த சில புத்தக ஆர்வலர்களிடம் கேட்ட போது அப்புத்தகம் பல காலமாக விற்பனைக்கு கிடைப்பதில்லை,யாரேனும் மூத்த தலைமுறையினரிடம் இருந்தால் தான் உண்டு என்று கையை விரித்துவிட்டார்கள்.உறுமீன் வருமளவு வாடிய கொக்காய் தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டு வைத்தேன்.அப்போது எனது அறை நண்பன் ஒருவன் மூலம் அறிமுகமானவன் ரமேஷ்.ஜெயகாந்தனின் தீவிர ரசிகரான அவனிடம் மோகமுள் புத்தகமிருந்தது.வாங்கியவன் ஓரே மூச்சில் படித்து முடித்தேன்.காய்ச்சல் கண்டவனைப் போல அதைக் குறித்தே ரமேஷிடம் பிதற்றிக் கொண்டிருந்தேன்.


                         
                 அன்று தொடங்கி இக்கட்டுரையை எழுதி முடிக்கும் நாளது வரை இந்நாவலை ஒரே மூச்சாக தொடர்ந்தும் அவ்வப்போது விட்டுவிட்டும் நான்கைந்து தடவைகள் படித்திருக்கிறேன்.முதல் தடவை படித்த அனுபவம் மின்சாரம் பாயும் செப்புக்கம்பியை ஈரக்கையால் தொட்டுவிட்டது போலிருந்தது.நாவலின் வெளிச்சம் முழுவதையும் வாரிச் சுருட்டி எடுத்துக் கொண்டுவிட்டதைப் போல யமுனாவின் ஆகிருதியே மனம் முழுவதும் நிறைந்திருந்தது.பார்க்கும்படியான பெண்ணிலெல்லாம் யமுனாவின் சாயலைத் தேடி ஏமாந்த பருவமாக இருந்தது அது.இரண்டாம் முறை எனது இருபதுகளின் பிற்பகுதியில் படித்த போதும் யமுனா அதே ஒளியுடன் மங்காது திகழ,கூடவே தங்கம்மாவும் தன் அபலைத்தனத்தால் இடம் பிடித்துக் கொண்டாள்.பாபுவின் தவமும் தாபமும் வாசிப்பை ஒரு இன்பமான வேதனையாய் மாற்றி விட்டிருந்தது.முப்பதுக்கு மத்தியில் மறுபடியும் படித்தபோது தான் ரங்கண்ணாவையும் ராஜத்தையும் வைத்தியையும்  பாலூர் ராமுவையும் நெருங்கிக் காணமுடிந்தது.நாற்பதைக் கடந்து பிறகு நான்காவது ஐந்தாவது முறை படித்தது.தொடர்ச்சியாக அல்லது முன்னுக்குப்பின்னாக புத்தகத்தை எடுத்துப் புரட்டி கண்ணில் படும் பக்கத்திலிருந்து தொடங்கி நாற்பதோ ஐம்பதோ பக்கம் படித்துப் போவது.இம்முறையில் நான் கண்டடைந்தது அதிகம்.பகலில் பலமுறை பார்த்து நினைவில் படிந்துபோன கோயில் தான் என்றாலும் ,இருட்டில் ஒரு மூலையில் ஏற்றிவைத்த எண்ணெய்  விளக்கில் காணுகையில் புதிதாய் ஒரு சிற்பம் அதன் தனியழகுடன் பார்வைக்குத் துலங்குவதே போல சிறிதும் பெரிதுமாய் பல திரையசைவுகளையும் அதனூடாக நுட்பமாக இழைந்த பல கோலங்களையும்  என்னால் காணமுடிந்தது.

                       


                     
   
                இந்நாவல் நேரடியாக அச்சுக்கு வரும் வகையில் ஒரே சீரான நோக்கில் எழுதப்பட்டது அல்ல.மாறாக ஒரு வார இதழில் தொடர்கதை வடிவில் சில வருடங்கள் தொடர்ந்து வெளியாகிப் பின்னர் நூலாக்கம் பெற்றது.எனவே இதன் கட்டுமானத்தில் அதற்கேயுரிய பலம் பலவீனம் இரண்டும் சேர்ந்தே காணப்படுகிறது.சுமார் அறுநூற்று சொச்சம் பக்கங்களைக் கொண்ட இந்நாவல் அப்போது வெளியானவற்றிலேயே ஆகப் பெரியது ஆகும்.அன்றைய போக்கான இறுக்கமும் செறிவும் கூடிய சிறிய வடிவத்திற்கு மாறாக இந்நாவல் விரிந்து பரவிச் செல்லும் வகையினதாக நிதானமான கூறுமுறையைக் கொண்டிருந்தது.கதையின் மையச்சரடுக்குப் புறனான பல சிறு விஷயங்களைக் கூட அவற்றின் முழு விவரணைகளோடு விளக்கிச் செல்வதில் ஆர்வமுடையவராகக் காணப்படுகிறார் தி.ஜானகிராமன்.தொடக்கத்தில் படித்த போது ,இத்தகைய விவரணைகள் நாவலின் ஓட்டத்திற்கு வேகத்தடைகளாக அமைந்து விட்டிருக்கின்றன என்பது போன்ற ஒரு மனப்பதிவே என்னிடம் இருந்தது.வேண்டாத சில பகுதிகளை நீக்கிவிட்டு இந்நாவலை செம்மையாக்கம் செய்து வெளியிட்டால் இன்னும் கச்சிதமான வடிவத்தை பெறும் என்று கூட சிலர் கூறியுள்ளனர்.ஆனால் இவையெல்லாம் இலக்கிய ஆக்கத்தை வெறும் ஒரு மோஸ்தர் , பாணி எனக் குறுகலாகப் புரிந்துகொள்வதால் எழும் அபிப்பிராயங்கள் மட்டுமே.

                     
                 எந்தவொரு இலக்கிய ஆக்கமும் மொழியில் வடிவம் கொள்ளும் போது முழுக்க முழுக்க எழுதுபவனின் புறமன தர்க்கத்திற்கு உட்பட்டதாக மட்டுமே அமைவதில்லை.சில சமயங்களில் எழுதியவனே அவ்வளவு தெளிவாக விளக்கவியலாத சில குழப்பமான பகுதிகளும் கதைப் போக்கிற்கு சம்மந்தமற்றதாகத் தோன்றும் சில விஷயங்களும் கூடுதல் விவரங்களும் ஒரு படைப்பில் வெளிப்படுவது என்பது இயல்பான ஒன்றே.அவ்வாறான பகுதிகள் நமது மேலெழுந்த வாரியான வாசிப்பிற்கு நாவலுக்கு புறம்பான விஷயங்களாகத் தென்படலாம்,என்றாலும் அவை அவ்வெழுத்தாளனின் அகத்தில் உருப்பெற்று படைப்பாக்கத்தின்போது தன்னெழுச்சியாக வெளிப்பட்டவை என்பதால் அவற்றிற்கு நாமறியாத ஆழ்மனத் தொடர்பு ஏதேனும் இருக்கக்கூடும்.அவை தொடர்ந்த வாசிப்பில் பிறிதொரு தருணத்தில் நமக்கு பொருள் தருவதாக அமையலாம்.உதாரணமாக இந்நாவலில் யமுனா அறிமுகமாகும் காட்சியைச் சுட்டலாம்.கோவிலுக்குப் போகும் நோக்கத்தோடு வரும் பாபு அம்மன் சந்நிதி திறக்க தாமதமாகும் எனக் கேள்விப்பட்டு அதுவரை எங்கு காத்திருப்பது என்று தெரியாமல் திரும்பும் போது தான்,துக்காம்பாளையம் தெருவிற்குள் நுழைந்து யமுனா வீட்டிற்குப் போகிறான்.முதலிரண்டு முறை வரையிலும் படிக்கும் போது ஒரு சாதாரணமான தகவலாகக் கருதிதான் அதைக் கடந்து போயிருந்தேன்.மூன்றாவது முறை படிக்கும் போது தான் கோவிலுக்குப் பதிலாக வீடு என ஏதோ நினைவில் இடறத் தயங்கி நின்றேன்.அம்மன் சந்நிதி நடை திறக்காததும் அதற்குப் பதிலாக பாபு யமுனாவை சந்திக்கப் போனதும் எதேச்சை போல காட்டப்பட்டிருந்தாலும் எதேச்சையல்ல.பாபுவின் மனதில் பதிந்திருக்கும் பாதம் யமுனாவுடையதுதான்.பாபுவிற்கு அவள் தான் அம்மன்.இந்த நுட்பமான ஒப்புமையை தி.ஜா எந்த தனிப்பட்ட பிரயத்தனமுமின்றியே மிகச் சாதாரணமாக போகிற போக்கில் எழுதிக் காட்டிவிட்டுப் போகிறார்.

                      தவிரவும் ஒரு நாவல் என்பதன் மொத்த அனுபவத்தோடு ஒப்பிடுகையில் அதன் கதை என்பது ஒரு சாக்குதான்.அதையொட்டியும் வெட்டியும் கதாசிரியன் உருவாக்க முயலும் உணர்வு நிலைகள்,அழகியல் கூறுகள் , மொழிநயம் மற்றும் தருக்க சிந்தனைகள் ஆகியவற்றின் தொகுப்பே நமது வாசிப்பனுபவமாக விரிகிறது.அத்தகையதொரு அற்புதமான அனுபவத்தைத் தருவதாலேதான் வெளிவந்து ஐம்பதுக்குமதிகமான ஆண்டுகள் கடந்த பின்னும் இந்நாவல் தனக்கான புதிய வாசகர்களைத் தொடர்ந்து கண்டடைந்து வருகிறது.

                      

               
              விலங்கு நிலையினின்றும் விலகி பரிணாமத்தின் பாதையில் வெகுதூரம் பயணித்து வந்துவிட்ட போதிலும், மனிதனை அலைக்கழிக்கும் அடிப்படையான இச்சைகள் இரண்டுண்டு பசியும் காமமுமே அவை.ஒரு நாகரீக மனிதனின் நடத்தையை தீர்மானிப்பது இவ்விச்சைகளின் இயல்பான நிறைவேற்றம் அல்லது அவற்றின் மீதான அம்மனிதனின் ஆளுமைத்திறன் என்று நவீன உளவியல் நமக்குக் கற்பிக்கிறது.ஒரு நாவலாக எழுதப்பட்டிருக்கும் மோகமுள் புனைவின் வழியாக ஆராய முயல்வதும் அவ்வாதார இச்சைகளில் ஒன்றான காமத்தைக் குறித்து தான்.என்றாலும் அதை அவ்வளவு எளிதாகப் பொதுமைப்படுத்திவிட முடியாது.பாபு தன்னை விட எட்டுவயது மூத்தவளான யமுனாவின் மீது கொள்ளும் காதலும் காமமுமே இந்நாவலின் மையம்.இதுவொன்றும் புதிதோ அல்லது மனித இயற்கைக்கு விரோதமானதோ அல்ல.விதியாக அங்கீகரிக்கப்படவில்லை எனினும் விதிவிலக்காக கைக்கிளை,பெருத்திணை என்ற வகையில் நம் மரபில் அனுமதிக்கப்பட்ட விஷயமாகவே காணப்படுகிறது.தன்னுடைய சிறுகதைகளில் மனித மனதின் வெவ்வேறு முகங்களை அது அணிந்து அழகு பார்த்துக் கொள்ளும் விதவிதமான முகமூடிகளைப் பற்றியெல்லாம் ஆராய்ந்திருந்தாலும் தி.ஜா தன் நாவல்களில் அனைத்திலுமே முயன்று பார்த்திருப்பது ஒரே ஒரு விஷயத்தை குறித்து தான்.ஆண்-பெண் உறவு என்ற அந்த ஆதிப்புதிரை விடுவிக்கவியலாவிட்டாலும் விளங்கிக் கொள்ளவாவது முடியுமா என்பதே அவரது கரிசனமாக இருந்தது.அதனாலேயே அவருடைய பெரும்பாலான நாவல்களின் கரு சுருதிக்கு மீறீய ஒன்றாகவே இருந்தாலும் அது அபஸ்வரமாகவோ ஆபாசமாகவோ நமக்கு தொனிப்பதில்லை.

                     
         

           இந்நாவலின் உருவத்தை நிர்ணயிக்கும் முகமாக இதற்குள் ஊடுபாவிச் செல்லும் நாலாவிதமான கூறுகளிலும் ஆதாரமானதென மூன்று இழைகளைப் பிரித்துக் காட்டலாம்.முதலாவது யமுனாவின் மீதான பாபுவின் பக்தியும் மோகமும்.இசை மீதான அவனது ஆழமான பற்றுதல் இரண்டாவது தன் தந்தை வைத்தி,சிநேகிதன் ராஜம்,குரு ரங்கண்ணா முதலியோரிடம் அவனுக்கிருந்த நெகிழ்ச்சியான நேசம் மூன்றாவது.இவ்விழைகள் மூன்றும் சிக்கலோ முடிச்சுகளோ ஏதுமின்றி ஒன்றுக்கொன்று அனுசரணையாக நாவல் நெடுகிலும் இழைந்தோடுகிறது.

                     

              

                 முழுக்க முழுக்க பாபுவின் கண்ணோட்டமாகவோ விரியும் நாவலில் பிற பாத்திரங்களின் பார்வை எதுவும் அவ்வளவாகக் குறுக்கிடுவதில்லை.குறிப்பாக யமுனா,பாபுவின் இறைஞ்சுதலுக்கு,பக்திமயமான சமர்ப்பணத்துக்கு அவளுடைய எதிர்வினை என்ன என்பது அவளுடைய நோக்கில் நாவலில் முன்வைக்கபடுவதே இல்லை.பாபு தன் விருப்பத்தைத் தெரிவிக்கும்போது முதலில் “வேண்டாம் பாபு தன்..வேண்டாம்என்கிறாள்.பிறகு ஓரிடத்தில் ‘வயசு வயசு என்று உலகம் சிரிக்கும்.என் பந்துக்கள் சிரிப்பார்கள்.அந்த சிரிப்புக்கெல்லாம் நீ ஆளாகமல் இருக்கணும்என்கிறாள்.கடைசியாக பாபுவின் விருப்பத்திற்கு இணங்கும் போது “உன்னைத் திருப்தி செய்யறது தான் என் கடமை.எனக்கு அது தான் ஆசை.ஆனால் எனக்கு ஒன்றிலும் ஆசையில்லை.உன் திருப்திக்கு தான்என்றே சொல்கிறாள்.இவையெல்லாமே பாபுவின் வேண்டுதலைத் தட்ட முடியாமல் அவள் உதடுகள் உச்சரித்தவை.ஆனால் அவள் உள்ளம் சொல்ல நினைத்தது அல்லது சொல்லாமல் அழித்தது எதுவும் நாவலில் இல்லை.யமுனாவைச் சுற்றிலும் தி.ஜா படரவிட்டிருக்கும் இந்த அர்த்தபூர்வமான மெளனம் அல்லது திரை அவளுக்கு ஒரு மர்மமான அழகைக் கூட்டிவிடுகிறது.



                தன்னுடைய மதிப்பிற்கும் தொழுகைக்குரிய,தன்னுவிடவும் மூத்த பெண்ணை பாபு நேசிப்பது என்பதுதான் நாவலின் மையமான முரண்.இது ஏற்கனவே குறிப்பிடப்பட்டது  போல நமது நடைமுறை வாழ்வில் அவ்வளவாகக் காணப்படுகிற (அ) ஒப்புக்கொள்ளப்படுகிற விஷயம் அல்ல.பாபு தன் நெஞ்சை நண்பன் ராஜத்திடம் திறந்து காட்டும்போது அவனால் கூட அந்த நிஜத்தை ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை.இது பின்னோக்கி போய்விட்டாற் போலிருக்கிறது.என்றே கூறுகிறான்.அத்தியந்த நண்பனாலேயே ஒப்புக்கொள்ளவியலாத அத்தகைய விஷயத்தை இந்த உலகம் எப்படிக் கோணலாகப் பார்க்கும் என்பதைப் பற்றி நாவலாசிரியர் சிற்சில தருணங்களில் கோடிகாட்டினாலும் அதைப் பற்றி பெரிதாக அக்கறைப்படவில்லை.மாறாக தன் அந்தரங்கத்தில் பாபு அந்த உண்மையை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை குறித்தே அவரது கரிசனம் மிகுந்திருக்கிறது.




                  நினைவு தெரிந்த நாளிலிருந்து யமுனா மீது தான் கொண்டிருந்த வியப்பும் பிரமிப்பும் தான் வளர்ந்து அவளின் மீதான பக்தியாக கனிந்து நிற் கிறது என பாபு நம்பிக் கொண்டிருந்தான்.ஒரு எண்ணம்,தெய்வத்தை போல-தெய்வம் என்று தான்.நான் ஸ்வாமி என்று நினைத்துக் கொள்ளுகிற போதெல்லாம் உன் முகம் தான் என் முன் வந்து நிற்கும்.உன் பாதம் தான் வந்து நிற்கும்.உன்னை சாதாரண மனித ஸ்தீரியாகவே நான் நினைக்கிறதில்லைஎன்று யமுனாவிடம் கூறுகிறான்.ஆனால் அது அரை உண்மைதான்.தங்கம்மாவுடன் விபத்து போல நிகழும் உறவினால் கலங்கிப் போன அவனது மனதின் அடியாழத்திலிருந்து அவனே தெளிவாக அறியாதிருந்த மீதி உண்மையும் மிதந்து மேலெழுந்து வருகிறது.எதற்காக இந்த இரட்டை உருவம்?ஜபம் செய்யும் போது தெய்வம் அப்புறம்..அழகான பெண்ணாக .யெளவனத்தில் அமர்த்த கோலாஹலமாக,வனப்பை மூடும் மறைவைக் கழற்றி.நினைவைக் கவ்வி,நினைவிழிந்து...ஆனால் இரண்டுமாக இருக்க முடிகிறதே இவளால்என்று மறுகுகிறான்.என்ன சொல்லியும் யமுனா அந்தக் காதலை ஏற்கப் பிடிவாதமாக மறுத்துவிடுகிறாள்.குரு ரங்கண்ணாவும் காலமாகிவிட மனம் கசந்த பாபு மதராசுக்கு வந்துவிடுகிறான்.பிரிவால் அந்த நினைவு கலைந்து போகவில்லை.மாறாக,இறுதித் திடம் பெற்று விடுகிறது.ஏறத்தாழ எட்டு வருடங்கள் நீண்ட காத்திருப்புக்குப் பிறகு ஒரு நாள் யமுனா அவனைத் தேடி வருகிறாள்.பாபுவின் ஏக்கமும் தவிப்பும் நிறைவேறுகிறது.பாபுவின் இலட்சியமான இசையில் பயிற்சி பெற யமுனாவைப் பிரிந்து பாபு பயணப்பதோடு நாவல் முடிகிறது.


                 முன்னரே சொல்லப்பட்டது போல இந்நாவல் முழுவதும் பாபுவின் கண்ணோட்டத்திலேயே விவரிக்கப்படுகிறது.தனது வாழ்க்கையில் அடைவதற்கு பாபுவிற்கு இரண்டு லட்சியங்கள் உள்ளன.ஒன்று அவனுக்கு இயற்கையாகவே அமைந்துவிட்ட இசையறிவை விருத்தி செய்து கொண்டு அவனது தந்தையின் ஆசைப்படி ஒரு இசைக்கலைஞனாவது.மற்றொன்று அவனது மனப்பூர்வமான காதலை யமுனாவிடம் அர்பணித்துவிடுவது.உருவம் அல்லது அருவம் பற்றி இந்து மரபில் இருக்கும் ஒரு கருத்து அல்லது நம்பிக்கையை இவ்விடத்தில் நினைவுகூர்வது பொருத்தமாக இருக்கும்.இறைசக்தி என்பது எங்கும் நிறைந்திருப்பது.அளவிடமுடியாதது.அருவமானது.ஓரளவு விழிப்பு நிலையை அடைந்த மனங்களால் மட்டுமே அதன் இருப்பை உணரமுடியும்.ஆதலால் அருவ வழிபாடு என்பது சாமன்யர்களுக்கு சாத்தியமற்றது.அவர்களும் இறைநிலையை உணர வேண்டும் என்பதற்காகவே உருவவழிபாடு என்ற ஏற்பாடு நடைமுறையில் உள்ளது.அருவமான இறைவனின் உருவை மக்கள் தம் சொந்தப் பண்பாட்டு அடையாளங்களுக்குத் தக உருவாக்கி அதனை வழிபடுகிறார்கள்.ஆகவே  அருவ நிலையை உணர ஒரு பிரதட்சய சாதனமானக உருவ வடிவிலான விக்ரகங்கள் உதவுகின்றன.பாபுவின் மனதில் இசையில் அடைய வேண்டிய உச்சம் பற்றிய சங்கல்பம் ஒரு நிழல் போல மங்கலாகத்தான் அடியில் கிடக்கிறது.அருவமான அந்த இலட்சியத்தை அடையத் தேவையான ஊக்கத்தையும் உறுதியையும் யமுனா என்ற விக்ரகத்தை வழிபடுவதன் வாயிலாகவே அவன் அடைகிறான்.



              பாபுவின் வழிபாட்டு உணர்வை,மோகத்தை உன்னதம் மற்றும் முழுமைக்கான மனிதப்பிரக்ஞையின் தவிப்பு எனக் கொண்டால்,அப்பிரக்ஞையில்லாத இப்பெருவெளியினின்றும் அள்ளி எடுத்துக் கொள்ள முடிந்த அழகு மற்றும் ஆனந்தத்தின் குறியீடாக நாம் யமுனாவைப் பார்க்கலாம்.அளவிடமுடியாததான மயக்கத்தைத் தருவதாகவும் அதே சமயத்தில் பிரயாசைப்பட்டு அள்ளி எடுத்தால் கைக்குள் அடங்கக்கூடியதுமான இருமை நிலை என்பதை யமுனாவின் பாத்திர வார்ப்பில் காணலாம்.அவள் பாபுவிற்கு ஒரு சமயம் பக்தி செலுத்திவதற்குரிய தெய்வீகத்தின் உருவாகவும் மறுசமயம் மோகத்திர்குரிய வனப்பான பெண்ணாகவும் தோன்றுகிறாள்.பாலூர் ராமு ,பெரியப்பா மகன் சங்கு போன்ற உதிரிக் கதாபாத்திரங்கள் கூடத் தெளிவாக உருக்கொண்டிருக்கும் இந்நாவலில் அவனது அம்மாவின் உருவம் ஏன் தெளிவின்றி மிக மங்கலாக ஒரு நிழலைப் போலத் தோன்றுகிறது என்பதையும் நாம் யூகிக்க வேண்டியுள்ளது.




                கடைசியாக பிரிந்து மங்கள்வாடிக்குப் போவதற்கு முன்பாக யமுனா பாபுவை காஞ்சிபுரத்திற்கு அழைத்துச்செல்கிறாள்.அங்கே கால் ஓயும் மட்டும் தெருதெருவாக கோயில் கோயிலாக அலைகிறார்கள்.கடைசியாக காமாட்சியம்மன் சந்நிதியிலிருந்து திரும்புகிறார்கள்.பெயருக்குத் தகுந்தாற் போல அவளைக் கல்லில் வடித்திருந்தான் சிற்பி.அதை பார்க்கப் பார்க்க என்னவோ செய்தது பாபுவுக்கு.மேலே போவதற்கு கூட இந்த வழியாகத் தான் போக வேண்டும் போலிருக்கிறதுஎன்கிறான் யமுனாவிடம்.ஒரு விதத்தில் இவ்வாக்கியத்தை தி.ஜா நாவல்களினுள் ஒருவர் நுழைவதற்கான வாயில் என்று கூட சொல்லலாம்.அவருடைய நாவல்களில் பிரதான கதாபாத்திரங்களில் பெரும்பாலானோர் இந்த வழியைக் கடக்க விரும்பி,முயன்றும் முடியாமல் அடைத்த கதவின் முன் நின்றபடி,தத்தமது குற்ற உணர்வுகளோடு கிடந்து தவிப்பவர்களாகவே இருந்திருக்கிறார்கள்.இன்னும் சற்றே விரித்து விளக்கப்போனால் தி.ஜாவின் இந்த காமம் வெறும் உடல்வனப்போடு மட்டும் முடிந்துவிடுவதாகத் தெரியவில்லை.மண்ணை,அதில் உழலும் மனிதர்களை,அவர்தம் குணபேதங்களை,இயற்கையை,இசையை என்று வாழ்வின் அம்ச்ங்கள் எதுவொன்றையும் விலக்கின்றி அள்ளி அணைத்துக்கொள்ள விழையும் ஒரு வேட்கையாக,அழியாத ரசனையாக அக்காமம் உருமாறி அவரது எழுத்துக்களில் மிளிர்கிறது.

              


            ஜானகிராமனின் மீது வைக்கப்படும் விமர்சனங்களில் முதன்மையானது அவரது பெண் பாத்திரங்களின் வார்ப்பு குறித்தது.அப்பெண்கள் படித்த மேல் மத்தியதரத்து மேல் ஆண்களின் பகல்கனவுகளில்,கற்பனையில் உருவாகும் ஓவியம் போன்றவர்கள்.எதார்த்தத்தில் உயிருடன் நடமாடுபவர்கள் அல்லர் என்பதோடு பெண் உடலை போகத்திற்கான கருவியாக மட்டும் நோக்கும் மரபான ஆண் மைய நோக்கு அவற்றில் வெளிப்படுகிறது என்ற புகாரும் அதனுள் அடங்கும்.இதில் ஓரளவு உண்மையிருந்தாலும் அவர் அப்பாத்திரங்களைப் படைத்திருக்கும் கண்ணோட்டத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துதான் இவ்விமர்சனத்தை பரிசீலிக்க வேண்டும்.குறிப்பாக இந்நாவலையே எடுத்துக் கொள்ளலாம்.இதில் யமுனா மட்டுமல்ல பாபுவின் தந்தை வைத்தி,நண்பன் ராஜம்,குரு ரங்கண்ணா,யமுனாவின் தாய் என எல்லோருமே அப்பழுக்கற்ற குணவார்ப்புடையவர்களே.லெளகீகத் தேவைகளுக்காக உடலுழைப்பு மேற்கொள்ளத் தேவையில்லாத மத்திய தர வாழ்க்கைதான் இக்கதையின் பின்னணி.யமுனாவைப் பெண்பார்க்க வரும் கோயமுத்தூர் போஸ்ட் மாஸ்டர்,தங்கம்மாவின் கணவரான தலைமைக் குமாஸ்தா,ய்முனாவின் தாயைப் பற்றி அவதூறாகப் பேசும் கிழவர் போன்ற சில விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டால் மொத்த நாவலிலுமே தொனிப்பது ஒரு நேர்மறையான நோக்கு தான்.எதார்த்த வாழ்க்கையில் இது எவ்வளவு தூரம் சாத்தியம் என்ற கேள்வி இயல்பாகவே ஒருவருக்குத் தோன்றாலாம்.ஆனால் மொத்த நாவலுமே உருக்கொள்ளும் களம் பாபுவின் மனம் தான்.அவனுடைய எண்ணவோட்டத்தின் வழியாகவே கதை  விவரிக்கப் படுகிறது.கதையின் காலம் அவனது இருபதிலிருந்து இருபத்தெட்டு வயது வரைக்குமான எட்டு ஆண்டுகள்.

               கனவுகளும் இலட்சியங்களும் உத்வேகமும் தலைக்குள்ளே குமிழியிட்டு நுரைக்கும் பருவம்.அப்பருவத்தில் அவனது பார்வையில் நின்று பார்க்கையில் நாவல் முழுவதுமே நடைமுறை யதார்தத்தைச் சார்ந்ததாகவும் நம்பத்தன்மை உடையதாகவுமே தோன்றும்.நிறைவேறாத தாபத்தின் பின்னணியில் ஒரு ஆணுக்கு அவன் மனம் கவர்ந்த பெண் கொள்ளும் தோற்றம் என்பது புதிரும் வசீகரமும் கொண்ட ஒன்றாகவே இருக்கும்.எனவே பாபு போன்ற ரசனையும் நுட்பமும் கற்பனையும் கொண்ட இளைஞன் எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மைதான் யமுனா போன்ற பெண்ணும் எனலாம்.


               தவிர மோகமுள் எழுதப்பட்ட பின்னணிபற்றி தி.ஜா நாவல் பிறந்த கதை என்றொரு கட்டுரை எழுதியுள்ளாற்.அதில் அவரைவிட எட்டுவயது மூத்த அமைதியும் புத்திக்கூர்மையும் அழுத்தமும் அழகும் கொண்ட ஒரு பெண்ணைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.அப்பெண்ணின் சாயலில் பிறந்தவள் தான் யமுனா.அக்கட்டுரையிலேயே நாவலுக்கான விஷயங்களைத் தந்தவள் என்றொரு கண்ணாடிப் பாட்டியைப் பற்றிக் கூறுகிறார்.காவிரி வணடலில் செழித்த பயிர் அவள்.பேச்சில் அசாதரணமான நயம்,நகைச்சுவை,சுருக்கென்று தைக்கிற கூர்மை,சில சமயம் என்ன அர்த்தத்தில் சொல்கிறாள் என்று லேசில் கண்டுபிடிக்க முடியாத பூடகம்,சொல்லாமல் சொல்கிற தொனி,எதைச் சொன்னாலும் தனக்கென்று ஒரு தனிப்பார்வை,பாட்டி ரொம்ப பெரியவள். இவை அத்தனையும் தி.ஜா எழுத்துக்கும் பொருந்தும்.



                  ஜானகிராமனின் எழுத்துக்களில் குறிப்பிடப்படவேண்டிய மற்றொரு விஷயம் அதன் மண் மணம்.காவேரி பாயும் கும்பகோணம் தஞ்சாவூர் பிரதேசத்தின் வளத்தையும் வாசனையையும் அவருக்கு சொல்லித் தீருவதில்லை.இந்நாவல் துவங்குவதே அத்தகைய ஸ்தல மகாத்மிய வசனத்தோடு தான்.அது இயற்கை வருணணை ஆகட்டும்,ஊர்,தெரு,வீடுகள்,கோவில் விவரணை ஆகட்டும்.பாத்திரங்களின் உருவ,குண சித்தரிப்பாகட்டும்,நாலுக்கு பத்து வாக்கியமாக எழுதாமல் தீராது அவருக்கு.அதற்கு நேர்மாறாக உரையாடல்களில் குறிப்பாக ஆண்-பெண் உறவு சம்பந்தப்பட்ட இடங்களில் மிகுந்த சிக்கனமும் நுட்பமும் தேர்ச்சியும் கொண்டவராகயிருப்பதையே காண்கிறோம்.அச்சந்தர்ப்பங்களில் அவர் பயன்படுத்தும் வார்த்தைகள் முகத்திரையை ஒத்தவை.ஒரு பாதியை வெளிக்காட்டும் அதே சமயத்தில் மறுபாதியை மறைத்து வைக்கும் தன்மை படைத்தவை அவை.இலக்கியத்தில் உரையாடலை அமைப்பது ஒரு கலை என்றால் தமிழில் அதன் உச்சத்தை அடைந்தவர் என ஜானகிராமனைச் சொல்லலாம்.எட்டு வருட பிரிவுக்கு பிறகு சந்தித்த போது பாபு திரும்பவும் யமுனாவிடம் கேட்கிறான்.

“நீ தான் வேணும்.


“உன்னை திருப்தி செய்யறது தான் என் கடமை.எனக்கு அதுதான் ஆசை...ஆனால் எனக்கு ஒன்றிலும் ஆசை இல்லை.


“இப்பதான் இல்லையா?


“இப்ப இல்லை.இருந்ததுண்டு.ஆனா ராவும் பகலுமாகத் தவிச்சு நசுக்கிட்டேன்.எல்லாத்தையும் அப்படி சுலபமா நசுக்கக்கூடிய சக்தி இல்லை.வேறு என்ன செய்யறது?தலையெடுத்து தலையெடுத்து மறுபடியும் ஆடுவதைப் பிடிச்சு நசுக்கி காலால் மிதிச்சு தேச்சு வந்தேன்.இப்ப உசிர் இல்லாமல் கிடக்கும்.


“உயிரில்லாத பொருளையா என்னிடம் கொடுக்கிறாய்?


நீ தான் உயிர் கொடேன்.


உணர்வுகளுக்கு உயிர் தரும் விதமாய் நாவல் நெடுகிலும் ஆங்காங்கே இது போன்ற வரிகள் இயல்பாய் ஒளிரக் காணலாம்.


                     தி.ஜா.எழுத்துகள் எவ்வித முயற்சியும் இன்றியே ஒரு கலையாக மாறுவதன் பின்னணியில் உள்ள காரணங்களில் ஒன்று அவருடைய பாத்திர உருவாக்கம்.ஒரு தேர்ந்த சித்திரக்காரனைப் போல சிற்சில கோடுகளிலேயே ஒரு பாத்திரத்தை அதன் தனித்துவமான குணாம்சத்தோடும் அடையாளத்தோடும் அவரால் உருவாக்கிவிட முடிகிறது.கும்பகோணத்தின் ஸ்தல மகிமையைச் சொல்லி நாவலை சம்பிரதாயமாகத் தொடங்கி வைப்பவர் மேலக்காவிரி சாஸ்திரிகள்.அவர் நெற்றி உச்சியில் பளபளத்த காயத்தின் வடுவைப்போல அவர் உதட்டில் தங்கியிருக்கும் சிரிப்பு என்று ஒரே வரியில் அவரது உருவத்தைத் தீட்டிக்காட்டி விடுகிறார் தி.ஜா.யமுனாவின் தந்தை சுப்ரமணிய அய்யர் மறைவிற்காக கிராமத்துக்குச் செனறிருக்கும் போது பார்வதியைப் பற்றி இருட்டில் அவதூறாகப் பேசும் கிழவர் வெறும் குரல்வழியாகவே உருவாகிப் பின் மறைந்து போகும் நுட்பத்தைக் காணலாம்.பாலூர் ராமுவின் சிஷ்யன் ஒருவனைப் பற்றிய விவரணை இது.உடம்பில் ஒரு அடிமைக்கூனல்.வாயில் பஞ்சை இளிப்பு.பாபு சொல்வதற்கெல்லாம் புருவத்தை உயிர்த்திச் சிரிக்கிற ஒரு ஆச்சரிய பாவம்.சங்கீத சூழ்நிலையிலேயே ஊறின மட்டை.இந்த உயிரோட்டமும் நுண்மையான செதுக்கல்களும் சேர்ந்து தான் அவருடைய அவ்வளவாக முக்கியத்துவமற்ற சின்னஞ்சிறு கதாபாத்திரங்களைக் கூட நினைவில் அழியாது நிறுத்திவிடுகிறது.



                 எதற்காக எழுதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு ஜானகிராமன் சொன்ன பதிலில் அதில் அடுத்தவன் மனைவியைக் காதலிக்கிற இன்பம் இருக்கிறது என்ற ஒரு வரி முக்கியமானது.உலக நடப்பு,சமூக ஒழுங்கு அவற்றின் சம்பிரதாயமான கட்டுத் திட்டங்கள் ஆகியவற்றை மீற முயலும் தனிமனித மனதை,அதன் நியாயத்தைப் பேச எத்தனிக்கையில் அவருடைய படைப்புகள் நவீனத்துவத்தின் சாயலைப் பெற்றாலும் அது சார்ந்து அவருக்குள் ஆழ்மனம் வேரோடியிருக்கும் கீழைத்தேய மதிப்பீடுகளை முன்னிட்டே உருவாகின்றன எனலாம்.தவிரவும் தி.ஜா கதை சொல்லக் கையாளும் நெகிழ்ச்சியான நடைப்பாங்கு நவீனத்துவ வரையறைக்கு புறம்பானது.



                 
           முழுக்க முழுக்க ஒரு கற்பனைவாதப் படைப்பாக மாறி விண்ணில் ஏறி மிதந்து போக்கூடிய விபத்திலிருந்து தி.ஜாவின் நாவலை தடுத்து இத்தரையோடு சேர்த்துப் பிணைக்கும் தன்மை ஒன்றும் அவர் எழுத்தில் கலந்திருக்கிறது.அவருடைய கதைமாந்தர்களின் எண்ணவோட்டமாக வெளிப்படும் உணர்வு மேலிட்ட நெகிழ்ச்சியை சமன்செய்யும் விதமாக மிகக் கறாரான நடப்பியல் நோக்கு ஒன்று அவருடைய படைப்புகளில் உள்ளோடி வரும்.யமுனாவைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் பாபு,இதுவரையில் இவ்வளவு அழகான பெண்ணைப் பார்த்தது இல்லை என்று பிரமித்துப் போகிறான் ராஜம்.அதை அவன் சொல்லி முடிக்கும் திருவையாற்றிலிருந்து வரும் பஸ் ஒன்று புழுதியை வாரி இறைத்துவிட்டுப் போகிறது.இருவரும் துண்டால் மூக்கையையும் வாயையும் பொத்திக் கொள்கிறார்கள்.அழகின் உச்சத்தை தொட்டுக்காட்டிய மறுகணம் நம் மனதை தரைப்புழுதிக்கு இழுக்கும் இந்த பட்டவர்த்தனமான பார்வை,எல்லாவற்றையும் சமநிலைக்கு நகர்த்தி நாவலுக்கு நம்பகத்தன்மையை,யதார்த்த தளத்தைத் தருகிறது.
ஒரு பெரிய நாவலுக்கு இயல்பாக இருக்க வேண்டிய விரிவான காலநீட்சியோ,பரத்து பட்ட முரண்,தர்க்க ஒழுங்கமைவோ ,பல குரல் தன்மையோ,சார்பற்ற பார்வையோ இந்நாவலில் இல்லை.மாறாக ஒற்றைப் படையான கதைப் போக்கும் உணர்ச்சிகரமான நடையும் உள்ளுணர்வு சார்ந்த மனவெழுச்சிகளையும் கொண்டதாக தளர்வானதொரு வடிவத்திலேயெ இந்நாவல் அமைந்திருக்கிறது.என்ற போதிலும்,இது மங்காதது.உலக நடப்பில் நாம் கேட்கவோ பார்க்கவோ நினைக்கவோ செய்த ஏதோ ஒன்றின் சாராம்சமாகவோ குறியீடாகவோ பதிலியாகவோ இந்நாவல் அமைந்திருக்கவில்லை.மாறாக தனது அனைத்து பலவீனங்களுடனும் கூட ஒரு அசலான இலக்கிய ஆக்கமாக,தன்னளவில் முழுமையான ஒரு இருப்பாக இது உள்ளது.அதனாலேயே இந்நாவல் தரும் அனுபவமென்பது அலாதியான ஒன்றாக அமைகிறது.நமது புத்தியை திகைக்கவும் வியக்கவும் வைக்கக்கூடிய எழுத்துகள் சில தமிழில் உண்டு.ஆனால் அவை அளிக்கவியலாததொரு ரசானுபவத்தை,தன்மறதியை இந்நாவல் நமக்குத் தருகிறது.நாவலின் தொடக்கத்தில் மேலக் காவேரி சாஸ்திரி சொல்கிறார்.இராமசாமி கோயிலேயே ஒரு தூணைப் பார்க்கிறவன் இந்த ஊரின் ஏமாத்தத்தையும் நாத்தத்தையுமா நினைச்சுக்கிட்டிருக்கப் போறான்?இதையே சற்று மாற்றி இந்த நாவலுக்காகவும் பொருத்தலாம்.இதன் ஏதோ ஒரு அத்தியாயத்தில் மனம் கரைந்து நிற்கிறவள் இதன் போதாமைகளையும் பலவீனங்களையும் எங்கே கவனிக்க போகிறான்?

***********************************

க.மோகனரங்கனின் ”மை பொதி விளக்கு என்னும் கட்டுரை நூலிலிருக்கும் முக்கியமான  கட்டுரை.கவிதைகள் பற்றியும் பிற ஆக்கங்கள் குறித்தும் மோகனின் நுட்பமான அவதானிப்பும் தேர்ந்த சொல்லாட்சியும் கொண்ட கட்டுரைகளை உள்ளடக்கிய குறிப்பிடத் தகுந்த நூல் இது.



No comments:

Post a Comment