சுந்தர ராமசாமி “வாழும் கணங்கள்’
பெருங்கனவைத் தூண்டிய கலைஞன்
போதிய அளவிற்கு நவீன
இலக்கியத்துடனான பரிச்சயம் உள்ளவர்கள் இன்று நுழைந்து வெளியேறும் இடங்கள் பலவும்
முன்பு அவ்வளவு எளிதானதாக இல்லை.கடந்த அரை நுற்றாண்டு காலத்தில் உருவான படைப்புகள்
வழி நாம் இப்போதிருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.தேவையற்று வளர்ந்து
நின்ற முட்புதர்களை அழித்து அவற்றை தன்
மொழியின் மூலம் நற்பாதைகளாக ஆக்க முயன்ற முன்னோடிகளின் வெற்றி அல்லது
தோல்விகளிலிருந்து கற்றுக் கொண்ட பிறகே,நமது காலடிகளை புதிய திசை நோக்கி வைக்கத்
தொடங்குகிறோம்.இந்த பயணத்தின் தொலைவு அவரவர் ஆளுமை சார்ந்தது.அவ்வகையில் சுந்தர ராமசாமியின் ஆளுமை கண்டடைந்த
பிரதேசங்களால் நவீன இலக்கியம் அடைந்திருக்கும் செழுமை முன்னுதாரணமற்றது.உச்சி
வெய்யிலில் மரத்தைப் பிளக்கும் கோடாரியின் உக்கிரத்தை மொழிக்குத் தந்தவர் அவர்.
கடந்த மூன்றாண்டுகளில்-மரணத்திற்கு
முன்வரை-அவர் எழுதிய பல வடிவங்களில் அமைந்த படைப்புகள் “வாழும் கணங்கள்” எனும் இந்நூலில்
தொகுக்கப்பட்டுள்ளன.அதனால் இதனை கதம்பம் என்று ஒருவரும் தவறாக
எண்ணிவிடக்கூடாது.புனைகதைகளும் புனைவல்லாதவையுமாக அமைந்திருக்கும் இத்தொகுப்பை
சு.ரா.தன் இறுதி காலங்களில் எழுதினார் என நம்புவது கடினம்.அந்திமகாலத்தின் நிழல்
இந்நூலின் எந்தப் பக்கங்களின் மீதும் கவியவில்லை.அந்தளவிற்கு எந்த சோர்வுமில்லாமல்
ஊக்கமாக அவர் செயல்பட்டிருக்கிறார்.
”கடந்த முக்கால் நூற்றாண்டில் தமிழில் வெளிவந்துள்ள சிறப்பான
படைப்புகளுக்குப் பின்னால் நிற்கும் சூழலை உருவாக்கியிருப்பவன் பாரதி தான்.உலக
இலக்கியம்.சிந்தனைகள்,கலாச்சாரம் ஆகியவை பற்றிய அவனுடைய அறிவும் அந்த
அறிவுசார்ந்த கற்பனைகளும் தமிழை இருபதாம் நூற்றாண்டை நோக்கித் தள்ள வேண்டும்
என்ற பெரும் ஆவேசத்தை அவனிடம் உருவாக்கியிருந்தன.எண்ணெய் வற்றிக் கொண்டிருந்த
போதும் திரிபிடித்து 39 வருட காலம்
எரிந்த சுடர் அது.அதற்குமேல் நின்று எரிய அந்த விளக்கில் எண்ணெய் இல்லாமல்
போய்விட்டது.”
|
சுழலில் சர்ச்சையை உருவாக்கி
அந்தளவிலேயே நின்றும் போய்விட்ட ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ சிறுகதை மொழியின் நுட்பங்களாலும்
உள்ளடகத்திலும் எழுப்பி நின்ற கேள்விகளை பெரும்பாலனவர்கள் போகிறபோக்கிலேயே கண்டு
சென்றனர்.அந்தப் பெண்ணின் துயரை சூழல் எதிர்கொண்ட முறை கொடுமையானது.எதிர்வினைகள்
அக்கதையை சிறுமைப்படுத்தின. படைப்பாளியின் மனதை பலரும் போதுமான புரிதலின்றியே
அணுகினர்.தாயம்மாவின் மெளனத்திற்கு –அது ஒரு வித பிடிவாதம்-அவரவர் விருப்பதிற்கேற்ப
அர்த்தப்படுத்திக் கொண்டதன் விளைவு இது.தாமோதரன் ஆசானின் சாயலும் இசக்கியின் சாயலும்(ஒரு
புளியமரத்தின் கதை) தங்கக்கண் மீது விழுந்திருப்பது அவன் தாயம்மாவின் கதையைச்
சொல்லும் லாவகத்திலிருந்து புரிந்து கொள்ள இயலும்.அவரது யதார்த்தக் கதை பாணியில்
முக்கியத்துவம் பெற்ற சிறுகதைகளில் இக்கதைக்கும் பிரத்யேகமான இடமுண்டு.இதிலுள்ள
மற்ற இரண்டு சிறுகதைகளும் சு.ராவின் ஆளுமைக்கு பலம் சேர்க்கக்
கூடியவையல்ல.புழக்கத்திலிருக்கும் சிறுகதை வடிவத்திலிருந்து விலகி-கதைக்கும்
கட்டுரைக்கும் மத்தியிலிருக்கும் வடிவத்தில்-’கொசு மூட்டை பேன்’ கதையில் ஒரு மீறலை நிகழ்த்தியிருக்கிறார்.மீறல்
என்ற அளவிலேயே இது கவனிக்கத்தக்கது.அங்கதத்தோடு எழுதப்பட்டிருக்கும் இச்சிறுகதை
அதற்கேயிரிய நுட்பமான இடங்களை நோக்க்கி நகரவில்லை.அவர் மறைந்தபிறகு அச்சில் வந்த
‘ஜகதி’ பரவலான
வாசகப்பட்டும் போதிய சலனத்தை உருவாக்கவில்லை.
” நம் மரபையும்
பண்பாட்டையும் எந்தளவிற்கு நாம் காப்பாற்றுகிறோமோ அந்த அளவுக்கு நம்மைப் பிறர்
மதிப்பார்கள் என்று மத்திய வர்க்கத்தினர் சொல்வார்கள்.கடைத் தெருக்களில்
விற்பனையாகும் பொருட்களில் சில
வாழ்க்கையின் வெற்றியை முழக்குபவையாக இருக்கின்றன.அவற்றைத் தம்தம் வீடுகளுக்குள்
எப்படி நுழைய வைப்பது என்ற அரிப்புத் தான் மத்தியதர வர்க்கத்தினரின் முதல்
பிரச்சனையாக இருக்கிறது.பலசமயம் இந்தக் கொள்முதலைத் தான் மரபு,பண்பாடு
என்றெல்லாம் சொல்கிறார்களோ என்ற சந்தேகமும் ஏற்படுகிறது ”
|
மொழியில் முன்பிருந்த
இறுக்கத்தை கட்டுரைகளில் தளர்த்திக் கொண்டிருக்கிறார்.அவரது புனைவல்லாத ஆக்கங்களில்
எப்போதுமிருக்கும் வெகுசனக் கலாச்சாரம் பற்றிய இரக்கமற்ற விமர்சனம் இவற்றிலும் கறாராக
ஒலித்திருக்கிறது.தாய்மொழிக்கல்வி போன்ற மைய நீரோட்டப் பிரச்சனைகளிலிருந்து
அந்தரங்கமான நெருக்கடிகள் வரை இதில் எழுதியிருக்கிறார்.பேரலைகளின் கைகளால்
சிதலமாக்கப்பட்ட சேதுராமன் மற்றும் அவரது குடும்பத்துடனான நட்பு பற்றி தேம்பல்கள்
எதுவுமின்றி சு.ரா எழுதியிருப்பதை வாசித்தால் அது கட்டுரையே அல்ல என்று
தோன்றும்.அதிலிருக்கும் பெயர்களை மறந்து விடுவோமென்றால் அது சிறுகதையின்
நுட்பத்தோடும் முடிச்சோடும் அமைந்திருப்பது விளங்கும்.ஆனால் துயரத்தின் உடையாத
குழிழ் ஒன்று இந்த பக்கங்களில் அலைவதையும் கண்டுகொள்ள முடியும்.தற்செயலாக எடுத்த
ஒரு முடிவு அவர்கள் அனைவரது உயிர்களையும் அபிலாஷைகளையும் அடித்துக் கொண்டு
போய்விட்டது.
இந்நூலை வாசிக்கும் ஒருவருக்கு
சு.ராவின் எழுத்துக்களில் முன்பரிச்சயம் இருக்ககூடுமெனில் அவரது சிந்தனை வேறொரு
தளம் நோக்கிச் சென்றிருப்பதை உணர்ந்திருக்கக் கூடும்.ஒவ்வொரு மனிதனிடமும் சென்று
“நீ எப்படி இருக்க வேண்டுமென விரும்புகிறாயோ அப்படியே இரு”(ஜே.ஜே.சில குறிப்புகள்) என்று எண்பதுகளின்
தொடக்கத்தில் எழுதிய சுந்தர ராமசாமி இறப்பதற்கு சில மாதங்கள் முன்பு எழுதிய
கட்டுரையில் “நான் உனக்கு என்ன செய்தால் உன் வாழ்க்கை நிறைவாக இருக்கும்” (பக்.115,பெண்கள் எழுதாத புத்தகங்கள்) என்ற இடத்திற்கு வந்து
சேர்கிறார்.முன்பு சக மனிதனை நோக்கி பரிவுடன் சுட்டி நின்ற அவரது விரல் இங்கு
தன்னையே நோக்கி திரும்பிக் கொள்வதைக் காணலாம்.மிகைப்படுத்தல்களை விரும்பாத
ஒருவரால் தான் தன் மகளின் இழப்பைக் கூட விலகி நின்று வாசிப்பவர்களுக்கு
மனநெருக்கடியை உருவாக்கும் விதத்தில் எழுத முடியும்.இடதுசாரிகளின் வீழ்ச்சி பற்றி
இந்நூலில் சு.ரா வைக்கும் விமர்சனம் மிகக் கடுமையானது.சம காலத்தில் வெளியாகி
முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டிய ஆனால் போதுமான கவனிப்பிற்குள்ளாகாத நூல்கள்
பற்றி புதிய பாணியில் அறிமுகப்படுத்தும் கட்டுரைகள் இவற்றில் உள்ளன.அந்த நூலின்
சாரத்தை அதிலிருந்தே தொகுத்து தருவதன் மூலம் அதன் பெறுமானம் சார்ந்து நமக்கிருக்கும்
சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும் அதே சமயத்தில் அதிலுள்ள குறைகளைச் சுட்டவும் அவர்
தவறவில்லை.
”
” மனிதனின் போராட்ட குணம் அவன் நம்பும் தத்துவத்தைச் சார்ந்தது.இந்த
பலம் தான் ஒரு இளைஞனைத் துப்பாக்கி முன் சட்டையைக் கழற்றி நெஞ்சைக் காட்டச் சொல்கிறது.இடதுசாரிகளால்
தொழிலாளி வர்க்கத்திற்குத் தத்துவப் பலத்தை ஊட்ட முடியவில்லை.அதற்கு அவர்கள்
முக்கியத்துவம் அளிக்கவுமில்லை.தொழிற்சங்கவாதிகளில் பெரும்பாலோர் மார்க்சீயத்தைக் கற்றுக் கொள்வதில் நம்பிக்கை கொண்டவர்களாகவும்
இருக்கவில்லை.வேலைநிறுத்தம் என்பதே வருமானம் சார்ந்த நோக்கம் மட்டுமே கொண்டது
அல்ல.அது புரட்சியை மலரச் செய்வதற்கான பாதையில் ஒரு மைல்கல்.ஆனால் தத்துவப்
பின்னணியற்ற இந்தியத் தொழிலாளிகள் வருமானத்தையே இறுதிக் குறிக்கோளாக வைத்துக்
கொண்டனர்.உலகத் தொழிலாளி வர்க்கத்துடனான உறவை உரிய நேரத்தில் அவர்கள் கத்திரித்து
விட்டுவிட்டனர்.”
|
அவரது எழுத்துக்களின் தொடர்ச்சி தான் உரைகளும்.மொழியின் அழகை விட்டுக்
கொடுக்காமலும் தீவிரம் குன்றாமலும் சரளமாக பேசக் கூடியவர் அவர்.குறிப்புகளின் வழி
அவர் உரைகளை நிகழ்த்தியிருக்கிறார்.பறவைக்கு கண்கள் எப்படியோ அப்படித்தான் சு.ராவுக்கு குறிப்புகளும்.அந்த குறிப்புகள் காட்டும் திக்குகள் நோக்கி
எழுந்து சிறகசைத்துப் பறந்து திரும்பி வரும் போது அவர் சென்று வந்ததன் தொலைவு
நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். கவிதை,சிறுகதை,நாவல் என்ற மூன்றைப் பற்றியுமே
அவர் பேசியிருப்பது அகஸ்மாத்தமாக நேர்ந்த ஒன்று தான்.ஆனால் இம்மூன்றிலும்
வெளிப்படுவது அவரது நவீன மனம்.இப்பகுதியில் அவர் படைப்பின் சுதந்தரம் பற்றி ஓயாமல்
வற்புறுத்துகிறார்.நவீன இலக்கியத்திற்குள் நுழைய அதன் வாசலில் காத்து நிற்கும்
இளம் வாசகனுக்கு இந்த உரைகள் அவனுக்குரிய கதவுகளை அகலத் திறந்து வைக்கின்றன.
கவிதையின் இடத்தைப் பற்றிக் கொள்ள எப்போதுமே உரைநடை முயன்று
வந்திருக்கிறது.அதற்கு வெகுவாக பிரயாசைப்பட்ட முதல் படைப்பாளி மெளனி தான்.மனக்கோலங்களை
காட்சிப்படுத்த அவர் மொழியை பயன்படுத்திய விதம்,பலராலும் விமர்சனத்திற்குட்படுத்தப்பட்டாலும்
அவை வெளியான காலத்தை நினைவில் கொண்டால் அந்த இடைவெளிகளை தவிர்க்க முடியாதவை என்றே
தோன்றுகிறது.காலப்போக்கில் மொழி பற்றிய பிரக்ஞை உருவாகி வேரூன்றி பரவத் தொடங்கி இப்போது பெரிய மரமாக
ஆகிவிட்டது.நிமிடங்கள் தோறும் உருமாரும் இயற்கையின் விசித்திர அழகுகளை சிக்கனமாக
சொற்களால் கவிமொழியின் அழகுடன் நாட்குறிப்பில் விவரித்திருக்கிறார்.மொழியின் அற்புதமான
கணங்களை சு.ரா அந்த நாட்குறிப்பில்-சில மணங்கள்-தொட்டிருக்கிறார்.நம்பிக்கைக்கும்
நம்பிக்கையின்மைக்கும் இடையில் ஊடாடிய ஒரு மனதின் துடிப்புகளை அடுத்தடுத்த நாட்களில்
அவர் எழுதிய நாட்குறிப்புகளில் கேட்க முடிகிறது.மீண்டு வரக்கூடிய கட்டத்திற்கு
வந்து கொண்டிருக்கும் போது காலம் மரணத்தின் பக்கமாக அவரைத் தள்ளிற்று.அவர்
விரும்பியவாறு பெரும் புதையல் போல ஒரு வாழ்க்கை அவருக்குத் திரும்பாமல் போனது
துரதிஷ்டவசமானது மட்டுமல்ல.நவீன இலக்கியத்திற்கு நேர்ந்த பெருந்துயரமும் கூட.
(பிப்ரவரி 2006-ல் இம்மதிப்புரை
எழுதப்பட்டது.எங்கும் பிரசுரமாகாதது.)
[பெட்டிகளில் இடம்பெற்றிருப்பவை வாழும் கணங்கள் நூலிலிருந்து தேர்ந்தெடுத்தவை]
[பெட்டிகளில் இடம்பெற்றிருப்பவை வாழும் கணங்கள் நூலிலிருந்து தேர்ந்தெடுத்தவை]
நன்றி : புதுவை இளவேனில்(சு.ரா.புகைப்படங்கள்)
வாழும் கணங்கள் சு.ரா படைப்புகள்:
2003-2005 –சுந்தர ராமசாமி –காலச்சுவடு பதிப்பகம்(டிசம்பர் 2005)
No comments:
Post a Comment