நேற்றின் நிழல்கள்
சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம்
“பெண்களின் மன உலகினுள் ஜானகிராமன் போல நுழைந்து நுட்பமான இடங்களுக்குச்
சென்றவர்கள் அரிது” எனக் கூறினேன். அவர் சற்றும் தாமதிக்காமல் “அதைக் கூற
வேண்டியது நீங்கள் அல்ல,பெண்கள் தான்” என்றார்.இங்கு பெண்களின் புற உலகின் அசைவுகளை
தீர்மானிக்கும் சூத்திரதாரிகளின் கண்காணிப்பு அவர்களை தனியர்களாக உணர வைக்கிறது.பெண்களில்
பெரும்பான்மையோருக்கு முன்னும் பின்னும் சுவர்களே இருப்பதால் அவர்கள் அதன்
நித்தியசகாவாகி போனவர்கள்.அவர்களுடைய உலகம் குறுகியது என்பதாலேயே
ஆழமானது.ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே திமிறத்துடிப்பவர்கள்.எனவே தான்
தொண்ணூறுகளுக்குப் பின்னர் பெரும் அலையென எழுந்து கவிதையின் வழி அவர்கள் பேச
முற்பட்ட போது, வெகு ஜனஉலகில், அதற்கு
ஆதரவாக எழுந்த குரல்களைக் காட்டிலும் அதற்கெதிராக உயர்ந்த கைகளின் எண்ணிக்கை மிக
அதிகமாக இருந்தது.அதே சமயம் அவர்களே கதைகளின் உலகத்திற்குள் வந்த போது
அவர்களுக்குள் இருந்து பெரும் வீச்சாக, படைப்பு ஆகிருதியாக எவரும்
உருவாகவில்லை.எனினும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளைத் தந்து கவனம் பெற்றவராக உமா
மகேஸ்வரி மட்டுமே இருக்கிறார்.
இப்பின்புலத்தில் வைத்தும் அயலக தமிழ்
வாழ்க்கைச்சூழல் சார்ந்த பின்னணியினூடேயும் லதாவின் “நான் கொலை செய்யும் பெண்கள்” என்னும் சிறுகதை தொகுப்பை மதிப்பிட
வேண்டியிருக்கிறது.
லதாவின் கதைக்களம் பெரும்பாலும் சிங்கப்பூரை மையம் கொண்டே எழுத்தப்பட்டிருந்தாலும்
அவை பெண்களின் பாடுகளை,ஏக்கங்களை,உளைச்சல்களை பற்றி ஒரு வித கையறு நிலையில் நின்று
பேசுகின்றன.இத்தொகுதியிலுள்ள பெண்கள் எவருமே நிம்மதியோடில்லை.லதா கூறப்பட்டு போதிய
உழைப்பில்லாததால் பல கதைகள் அதற்கேயுரிய இடங்களை நோக்கி நகராமல் தேங்கி
விடுகின்றன.நுட்பமான சில வெளிச்சங்களை இத்தொகுப்பு கொண்டிருந்தாலும் கூட முன்பே பல
படைப்பாளிகள் கடந்து சென்று விட்ட இடத்திற்கு மீண்டும் ஆசிரியர் கூட்டிச் செல்வது
போல பல கதைகள் அமைந்திருக்கின்றன.
லதா,கதைமாந்தர்களினூடாக உருவாக்கும் உரையாடல்களும் சம்பவங்களும் பெண்களின்
படைப்புலகம் சார்ந்த அடுத்தகட்ட வளர்ச்சிக்கு துணை போகக்கூடியவை அல்ல.”அடையாளம்”
போன்ற கதைகளில் அவர்
பெண்களின் சுய அடையாளம் குடும்பத்தின் மூலமும் சமூகத்தின் மூலமும்
ஒடுக்கப்படுவதை காட்சியாக்க முயன்றாலும்
வெறும் புலம்பல்களைத் தாண்டி அக்கண்ணீரை,அந்த வலியை கலையாக அவரால் மாற்றமுடியவில்லை.பல
வருடங்களாக பழகி வந்த பாதையிலேயே ‘அறை’
,’வீடு’ போன்ற கதைகள்
அமைந்திருக்கின்றன.தீவிரமின்மையால் வெற்று முயற்சியாக மட்டும் நின்று விரயமான கதை ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’. தீவிரம் என்றால் எளிமைக்கு எதிராக நிற்பதன்று.மாறாக
கருப்பொருளுக்கு ஏற்ப,அதற்கேயுரிய உழைப்பைச் செலுத்துவது.மேலும் அதன் ஆழத்திற்குச்
செல்ல முயல்வது.பெரும்பான்மையான் கதைகளில் இவை இல்லாததால் பலவீனப்பட்டு
நிற்கின்றன.”மழை அப்பா”
,”முகாந்திரம்” அகிய கதைகளின் வழியாக நிகழும் உறவுகளின் ஊடாட்டம் நன்றாகச்
சொல்லப்பட்டிருக்கிறது.இக்கதைகளின் மூலமே சிறுகதையின் நுட்பங்கள் லதாவிற்கு
வசப்பட்டிருக்கின்றன.தொகுப்பின் சிறந்த கதை “படுகளம்” பெண்ணின் மன
உணர்வுகளை ஒரு படுகள காட்சியை முன்வைத்து நகர்த்திச் செல்லும் விதம் அக்கதைக்கு
வேறொரு பரிணாமத்தை வழங்குகிறது.இது போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுதுவதன் மூலமே லதா
தன்னை சிறுகதையாளராக நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.அது சாத்தியமாகக் கூடிய
ஒன்றும் கூட.
(இந்த மதிப்புரை 2008 (அல்லது 2009-ல்)எழுதப்பட்டது.எங்கும்
பிரசுரமாகாதது)
No comments:
Post a Comment