Sunday, June 29, 2014

”உயிர் எழுத்து” முதல் 12 இதழ்கள்



விமர்சனக் கட்டுரை

மேலும் ஒரு சாளரம்




                                                           சிற்றிதழ்களுக்கு இன்றுள்ளதுபோலப் பரவலான கவனம் இல்லாத நேரங்களில், இதழ் தபாலில் வரும் நாளுக்காக, அவற்றின் தோற்றம் மற்றும் உள்ளடகத்தின் வகை மாதிரிகளை மனத்தில் கற்பனைசெய்தபடி காத்திருந்தது ஒரு காலம். பிறகு, காலம் உருமாறி வழவழப்பான முன்னட்டைகளோடு கடைகளில் தொங்கும் அளவிற்கு இவ்விதழ்கள் மெல்ல, ஆனால், பலமான வாசக கவனம் பெறத் துவங்கின. இந்த வளர்ச்சியினூடாகவே இன்று பத்துக்கும் குறைவில்லாத சிற்றிதழ்கள் (மாதந்தோறும்) வெளிவருகின்றன. இலக்கியத்தை ஆத்மார்த்தமான ஒன்றாக கருதும்  ஆசிரியர் குழுக்களால் இவை இதழுருப் பெறுகின்றன. முன்னர் எழுத்தாளனுக்கிருந்த பிரசுரம் சார்ந்த தயக்கங்கள், தடைகள் அனைத்தும் இன்று ஒன்றுமேயில்லால் ஆகிவிட்டன. இச்சூழலில் விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும் முன்னரே காலண்டரில் தேதிகள் பறக்கும் வேகத்தில் அடுத்த மாதத்தின் முதற்கிழமை தலைநீட்டிவிடுகிறது. பேச்சினிடையே நாஞ்சில் நாடன் ஒருமுறை, "வாங்குற புஸ்தகத்தையெல்லாம் படிக்கணும்னு ஆசைப்படறது ஒரு வகையில சாகாவாரம் கேட்கற மாதிரி" என்றது நினைவுக்குவருகிறது. இத்தருணத்தில் உயிர் எழுத்து பன்னிரெண்டு இதழ்கள் வெளியாகி ஓராண்டுக் காலத்தை நிறைவுசெய்திருக்கிறது.








                                                            ஏற்கனவே வழங்கிவந்து நிலைபெற்றிருக்கும் உள்ளடக்கத்தோடே இதழ்கள் அமையப்பெற்றிருப்பினும் அவற்றின் வடிவமைப்பு நேர்த்தியைக் குறிப்பிட்டுக் கூறத்தோன்றுகிறது. குறைந்தபட்சம் நான்கு சிறுகதைகளின்றி இதழ் வெளியாவதில்லை. மிகக் குறைந்த இடைவெளியில் நாற்பதுக்கும் மேற்பட்ட கதைகளைப் பிரசுரித்திருப்பதை ஒரு சாதனை எனத் தயக்கமின்றிக் கூறலாம். இவற்றில் பலவும் பல்வேறு பின்னணிகளையுடைய புதிய எழுத்தாளர்களுடையவை. சிறுகதைகளும் கவிதைகளும் தேக்கமுற்று அவற்றில் ஒருவித மந்தத்தன்மை நிலவுவதாகவே விமர்சகர்கள் பலரும் கருதுகிறார்கள். இக்கூற்றில் ஓரளவுக்கேணும் உண்மையுள்ளது. படைப்பிலக்கியத்தில் தன்னுடைய எண்ணிக்கையில் ஒன்றைக் கூட்டிவிட்ட செயலாகவே இவையுள்ளன. நவீனத் தமிழ்ச் சிறுகதையில் உச்சபட்ச சாதனைகள் நிகழ்த்தப்பட்டுவிட்டன. எதன் பொருட்டும் அழியாச் சுவடுகளை அவை விட்டுச் சென்றிருக்கின்றன. அதனை எதிர்கொண்டு எழுதுவது இன்றைய எழுத்தாளனின் திறன் சார்ந்தது. இன்றைய எழுத்தாளன் கதையின் எல்லைகளைத் தன் பேனாவின் நிழலுக்குள்ளாகவே வைத்துக்கொள்கிறான். அவனது சுயபிரக்ஞையின் கடிவாளம் பூட்டப்பட்டு அவனது விரலசைப்புகளின் திசையில் கதையைச் செலுத்துகிறான். கதைகளின் முடிவற்ற பெருவெளியில் பாத்திரங்களைத் தன்னியல்பாக அவற்றிற்கேயுரிய சுதந்திரத்துடன் புழங்கவிட்டு, ஒரு நுட்பமான கணத்தில் தன் ஆளுமையால் அதைக் கலைப்படைப்பாக மாற்றும் வல்லமை கொண்ட படைப்பாளியின் ஆக்கங்கள் மூலமே வாசகன் புத்தொளி பெற்று விகாசம் அடைய இயலும். நன்கறியப்பட்ட எழுத்தாளர்களின் கதைகளுடன் இளந்தலைமுறையினரின் கதைகளும் வெளியாகியிருப்பினுங்கூட இவ்விரு தலைமுறையினரின் கதைகளிலும் நுட்பமானதும் நுட்பத்தைத் தவறவிட்டுப் பலவீனங்கொண்டவையுமான கதைகளைக் காண முடிகிறது. குறிப்பிட்டுக் கூறும்படியான கதைகளைக் கூற இயன்றாலும் ஆகச்சிறந்த கதைகள் எனச் சுட்ட இவற்றில் ஏதுமில்லை. ஆனால், சோடைபோகக்கூடிய சிறுகதை எதையுமே உயிர் எழுத்து வெளியிடவில்லை. காலத்தால் முன்னகரக்கூடிய எதுவும் - படைப்பும் படைப்பாளியும் ஆரம்ப காலத் திணறல்களைச் சந்தித்தே ஆக வேண்டும். பின் அது அவற்றிலிருந்து சிறுகச்சிறுகக் கற்றுத் தன்னை மேம்படுத்திக்கொண்டு வந்திருப்பதை முந்தைய தலைமுறை எழுத்தாளர்களின் தொடக்ககால எழுத்துக்களைக் காணும்போது இந்த உண்மை புலப்படும்.




                                                             எழுதத் தொடங்கும் பலரும் கைவைக்கும் முதல் இடம் கவிதை. அதனாலேயே அவற்றின் நெரிசல் தமிழில் மிக அதிகம். மேலோட்டமானவை, புழக்கத்திலிருப்பதை நகல் செய்தவை, ஒருவித இயந்திரத்தனமாக சொற்சேர்க்கைகள் கொண்டவையே பெரும்பாலும் வெளிவருகின்றன. விதிவிலக்குகள் அபூர்வமாகவே நிகழ்கின்றன. சொற்களை அதன் பழைய அர்த்த கூண்டுகளிலிருந்து வெளியேற்றி அதற்கு சிறகுகளை தருபவன் கவிஞன். எனவே தான் வாசித்த ஏதேனும் ஒரு கவிதையின் வரி பல நாட்களுக்குப் பின்னும் தந்திக் கருவியின் நரம்பொன்றைச் சுண்டியது போன்ற ரீங்காரத்தை மனத்தில் எழுப்புகிறது. கவிதைக்கு அழகு அல்லது கவிதையைக் காலத்தால் அழியாது நிற்கச் செய்யும் வலிமை அதன் படிமங்கள், உருவங்கள், உவமைகளுக்கு உண்டு என்ற நம்பிக்கையை இன்றைய கவிகளும் தொடர் கிறார்கள் என்பதுபோல இவ்விதழ்களில் வெளியான கவிதைகள் உள்ளன. இவ்விதழ்களில் உள்ள பல கவிதைகளின் சராசரித்தனம் சலிப்பை உருவாக்குகிறது. ஆனால், சில கவிதைகள் கொண்டுள்ள அழகுணர்ச்சி திடுமெனப் பரவசப்படுத்தவும் தவறுவதில்லை. "அழகுணர்ச்சியில்லாத ஒருத்தன் எழுத்தாளன் ஆகறதுக்கு வாய்ப்பேயில்லை" எனப் புன்னகைத்தபடியே சு. ரா. ஒருமுறை கூறியது நினைவில் அலைகிறது. பல புதிய கவிஞர்கள் உயிர் எழுத்து மூலமே நவீன இலக்கியத்திற்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். முதல் முயற்சி எனும் நோக்கில் சில குறைகள், சொற்களைக் கையாளுவதில் நேரும் குழப்பங்கள் தவிர்க்க முடியாதவை. தொடர்ந்து எழுதி எழுதியே ஒருவர் தனக்கான பாதையைக் கண்டடைய முடியும்.



                                                                        முன்பிருந்தே எழுதி வந்திருப்பவர்களது கட்டுரைகளே இவற்றிலும் உள்ளன. புதிய கட்டுரையாளரைத் தேடிக் காண்பது அரிது. சூழலில் கவிஞர்களின் மொத்த எண்ணிக்கையில் ஐந்து சதவீதம்கூட இருக்கமாட்டார்கள் எனத் தோன்றுகிறது. விரிவான, அடிப்படைத் தரவுகளைக் கொண்ட எஸ். வி. ராஜதுரையின் கட்டுரைகள் மேலான பங்களிப்பை இவ்விதழ்களுக்கு வழங்குகின்றன. எனினும், ஒரு படைப்பை அவர் எடுத்துப் பேசும்போதுகூட அதன் கலை மதிப்பு குறித்த அவதானிப்புளைக் காட்டிலும் அவற்றின் அரசியல் சமூகம் சார் பக்கங்களைப் பற்றியே தீவிரமாக உரையாடுகிறார். (ஜோஸ் ஸரமாகோ, கூகி வா தியாங்கோ குறித்த கட்டுரைகள்). பழந்தமிழ் இலக்கியங்கள் மற்றும் அதன் பதிப்பு சார்ந்த ஆராய்ச்சிகளில் தன் கடும் உழைப்பைச் செலுத்திவருபவர் பெருமாள்முருகன். இத்துறை சார்ந்து இனிப் பயின்று வரும் புதிய தலைமுறைக்கு அவர் இவ்விதழ்களில் எழுதியுள்ள கட்டுரைகள் ஒரு ஆவணமாக மாறக்கூடும். மிகையான புகழாரங்களால் தூக்கப்பட்ட சுஜாதாவின் பிம்பத்தை முருகேசபாண்டியனின் கட்டுரை கேள்விக்குட்படுத்துகிறது. அவர் தன் கட்டுரைகளைச் சாதாரண மொழி நடையில் கூறிச்செல்வது ஒரு குறையாகவே சுட்டத் தோன்றுகிறது. கி.ரா. குறித்த சு.வேணுகோபாலுடைய கட்டுரையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். உயிர் எழுத்து இதழ்களில் வெளியான ஆக்கங்களில் ஆகப் பெரிய பலம் கொண்டவை கட்டுரைகள்தாம் என்று படுகிறது.




                                                                       நிகழ்த்துகலையாக இருப்பதனாலேயே இதழ்களில் போதியளவு இடந்தரப்படாத ஒரு கலைவடிவம் நாடகம். ஆனால், இரண்டு நாடகங்களை உயிர் எழுத்து பிரசுரித்திருக்கிறது. பிரதி உருவாக்கும் காட்சியை எவ்வளவுதான் தனது கற்பனையின் வழியாக வாசிப்பவன் அடைய முயன்றாலும் அதன் நுட்பமான ஒளி, ஒலி மாறுபாடுகள் மற்றும் நடிகனின் உடல்மொழியில் அது உருவாக்க முயலும் தீவிரத்தை வாசகன் ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்துசென்று தொட முடியாது. பார்வையாளனின் நுட்பத்தைக் கோருவதுபோல முருகபூபதியின் நாடகப்பிரதி இருக்கிறது.

                                                                     மேலும் ஒரு சாளரம் திறந்ததுபோல ஓராண்டு உயிர் எழுத்துச் செயல்பாடுகள் உள்ளன. புதியவர்களுக்கான தளத்தை ஏற்படுத்திக் கொடுத்ததையும் அவர்கள் இலக்கியத்திற்குள் நுழையத் தடையற்ற வெளியை உருவாக்கியதையும் உயிர் எழுத்தின் முக்கியச் செயல்பாடாகக் கூறலாம். இருந்தபோதிலும்கூட அவை பிரசுரத்திற்குத் தேர்ந்தெடுக்கும் படைப்புகளில் கூடுதல் அக்கறையும் கவனமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில், பயணங்களின் முக்கியத்துவத்திற்குச் சற்றும் குறைந்ததல்ல அவை பாதைகளில் உருவாக்கவிருக்கும் மாற்றங்களும் பாதிப்புகளும்.


(நன்றி - காலச்சுவடு ஆகஸ்ட் 2008)




Tuesday, June 24, 2014

ஜெ.பிரான்சிஸ் கிருபாவின் “கன்னி” நாவல்

               
மதிப்புரை





 "கண்ணீர்த் துளிகளும் அவனை விட்டு விலகி ஓடுவதில் அவசரம் காட்டியதும் அழுவதைச் சட்டென்று நிறுத்திவிட்டான். கண்ணில் நிறுத்தப்பட்ட நீர் நெஞ்சில் நெருப்பாக எரியத் தொடங்கியது." (பக். 91)

                       நாவல் என்னும் பெருங்கனவைச் சுமந்து திரியும் காலம் படைப்பாளியின் வாழ்நாளில் மறக்க முடியாதது. புதுலாகிரி வஸ்துவை உட்கொண்டது போல போதை நிரம்பியவை. பிரக்ஞையின் ஊசிமுனையில் நிற்கும் போதை அது. தடுமாற்றங்களுக்கும் அலைக் கழிப்புகளுக்கும் இடையில் அவனது உள்ளுணர்வின் பரவசமும் அகங்காரமும் பூட்டிய இரட்டைச் சேணங்களாக அவனை வழிநடத்தி, வினாக்களின் பெரும்வெளியில் - முச்சந்தியில் அல்ல - நிற்கவைத்துவிட்டு மறைந்துபோகும். ஒருபோதும் அவ்வினாக்களைக் கண்டு அவன் திகைப்பதில்லை. திகைப்பை நோக்கி அவன் மனித நாடிமுள் நகர்ந்த மறுவினாடியில் அவன் சாதாரண மனிதநிலைக்குத் திரும்பிவிடுவான். ஓயாத சமர் ஒன்றை அந்த வினாக்களுடன் அவன் மனம் நிகழ்த்தியபடியே இருக்கும். இந்த யுத்தத்தில் அவன் நினைத்துப் பார்த்திராத கதவுகள் திறந்து வழிவிடும். அவன் வேண்டுவதும் அதுதானே? பெரும் படைப்புகள் உருவாகும் பின்னணி இதுதான்.



                      நாவல் உலகில் கடந்த பத்தாண்டுகளுக்கு முன் இருந்த நிலைமைக்கும் தற்போது மாற்றம் கண்டுவிட்ட சூழலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இடைப்பட்ட காலத்தில் கலையாற்றலோடு கூடிய பெரிய நாவல்கள் தோன்றித் தங்கள் இருப்பை ஸ்திரப்படுத்திக் கொண்டுவிட்டன. இந்த வரிசையில் வரக்கூடிய நாவலாக பிரான்சிஸ் கிருபா 'கன்னி'யை உருவாக்கியிருக்கிறார். இங்கு மிகப் பல விமர்சகர்களும் செய்யும் பெரும்பிழை நாவலின் கதைச் சுருக்கத்தைக் கூறுவது. எந்த மன எழுச்சிக்கு ஆட்பட்டு ஒருவன் ஓங்கி எரியும் தன் கனவின் சுடரைப் படைப்பின் பக்கங்களில் எரியவைத்தானோ அந்த எழுச்சியை அது கேவலப்படுத்துவதன்றி வேறல்ல. வாசகனின் புத்தியை மந்தப்படுத்தி அவனைச் சோம்பேறியாக்குவதும் அப்படியான விமர்சகர்களின் கைங்கரியம்தான்.







                        மனப் பிறழ்வுகளைப் பற்றிப் பேசும் நாவல்கள் தமிழில் அரிதாகவே வெளி வந்திருக்கின்றன. நகுலனின் நாவல்களும் கோபிகிருஷ்ணனின் 'டேபிள் டென்னிஸ்', எம்.வி. வெங்கட்ராமின் 'காதுகள்' (ஓரளவிற்கு), ஜெயமோகனின் 'பின்தொடரும் நிழலின் குரல்' (அருணாசலம்) போன்றவை உடனடியாக நினைவுக்கு வருகின்றன. இந் நாவல் மற்றவற்றிலிருந்து மாறுபடுவது காதல் எனும் மகத்தான உணர்வு மூலம் அந்நிலையை அடைவதனாலேயே. 'மோகமுள்'ளை ஒரு காதல் கதையாகக் கருதினாலும் முதிர்ச்சி பெற்ற வாசிப்பிற்குப் பின் அதில் மேலும் பல உட்கூறுகள் இருப்பதை அனுமானிக்க முடியும்.




                          வாழ்வின் நிமித்தம் துடுப்பசைத்துப் பருவத்தின் கரைக்குப் பலரும் வந்து சேர்வது போலத்தான் சந்தனப் பாண்டியும் காதலி சாராமீது அவன் கொண்டிருக்கும் விருப்பமும் பிரியமும் சொல்லி விளக்க முடியாதவை. அவளைக் கண்டபின் அவன் மனம் ஒரு நாளும் அமைதியாக உறங்கியதில்லை. எண்ணற்ற ஆட்கள் காதலைச் சாலை போலக் கடந்து சென்றுவிடும்போது பாண்டி மட்டும் ஏன் நிம்மதியிழக்கிறான்? நுட்பமாகப் பின்தொடர வேண்டிய கேள்வி இது. காரணம் 'மிக சூசகமாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவன் கூச்ச சுபாவி. பத்துப் பேர் இருக்கும் இடத்தில் பதினொன்றாகப் போய்ச் சேர ஆசைப்படுவானே தவிர, முதல் ஸ்தானத்திற்கு முண்டுபவனல்ல. அவன் மனவயல்களில் விளைந்திருக்கும் தானியத்தைப் பிளக்கும்போது அதில் நாம் கண்ணீரின் துளியையே காண்கிறோம்.





                       இருவேறு பின்னணி கொண்ட பெண்களோடு அவன் மனம் நெருக்கம் கொள்கிறது. பாண்டி பால்ய வயதிலிருந்தே பெரியம்மா மகளான அமலாவின் நிழல்போல வளர்கிறான். அவளைப் பழிச்சொல் பேசியவனைப் பள்ளியில் ஓடவிட்டு விரட்டிப் புரட்டுகிறான். அவன் புனைபெயரை 'அமலா தாஸ்' என மாற்றிக்கொள்ளுமளவு அது தீவிரம் பெறுகிறது. வீட்டின் செல்லக் குட்டி என்றாலும் அமலாமீது கர்த்தரின் குழந்தை என்னும் புனிதம் சுற்றியிருப்பவர்களால் கவிழ்க்கப்படுகிறது. அது பற்றிய எந்த உயர்ந்த அபிப்ராயமும் அவளுக்கில்லை. லௌகீக உலகின் மீது சிறு சலனம் அவளுக்கு உண்டென்றாலும் அதை இறையியல் மூலம் கடந்து சென்றுவிடுகிறாள் ("பியூரிடிக்கு ஒருபவர் இருக்கு, எல்லா விதத்திலயும் வணங்கித்தான் ஆகணும். வேற வழியேயில்ல - குறிப்பா ஆண்களுக்கு" - அமலா). பாண்டிக்கு அவன் தொழும் நிலையிலேயே இருக்கிறாள். அவன் வாழ்விலிருந்து அமலா நழுவிச் செல்கையில் முதல் அடி அவன்மீது இறங்குகிறது.



                         இடையீடாகக் குறுக்கிடும் வேறு இரு பெண்களை (விஜிலா, மரிய புஷ்பம்) நிராகரித்ததற்கான மனக்குறை பாண்டியின் மனத்தில் விழுந்திருப்பது அவனைப் போலவே நமக்கும் தாமதமாகத்தான் தெரியவருகிறது.

                      சாராவின் முக்கியத்துவத்தை அமலாவோடு ஒப்பிட்டுப் புரிந்துகொள்ள முடியும். சாராவின் பின்னணி எதுவும் நாவலில் இல்லை. புத்தியில் பிறழ்வுக்கான சமிக்ஞைகள் ஏற்படத் தொடங்குகிறபோது, தன் பெயரைச் 'சாரோன்' என்கிறான். அதுபோலவே பாண்டிக்கு சாரா அறிமுகமான கணத்திலிருந்து இருவருக்குமிடையில் ஒருவருமில்லை. அவ்வப்போது வந்து செல்பவர்கள் கார்ட்டூன் பாத்திரங்களைப் போலத்தான் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். ஏலம் சம்பந்தப்பட்ட இடம் தவிர, கொடியேற்ற உற்சவத்தின்போது இருவரது சந்திப்பும் நிகழ்கிறது. அத் தருணம் நாவலில் சிறப்பாகச் சித்தரிக்கப்பட்டிருக்கிறது. முடிவற்ற யாத்திரையின் வாயிலாக யாத்ரீகன் கண்ட அற்புதமான விடிகாலையைப் போன்றது அது. அது அவன் வாழ்வில் பொற் கணம் அல்லவா? பாண்டி, சாராவின் கண்கள் பரஸ்பரம் இமைக்காமல் சந்திக்கும்போது, கம்பத்தின் உச்சிக்குக் கொடி சென்றுவிட்டிருக்கிறது. இருவருக்குமான ஊடாட்டங்களும் நுட்பமான புறக்கணிப்புகளும் மனத்தில் காட்சியாக விரியும்போது, நம் சுய நினைவிலிருந்து ரகசியமான பக்கமொன்றைக் கிழித்தெடுத்து நம்முன் காட்டுவதுபோல இருக்கிறது. உள்ளூர நடுக்கத்தை மறைத்தபடியே புன்னகையோடு அதை அசைபோட்டுக் கொள்கிறோம்.



                       பாண்டிக்குச் சிறுவயதில் அப்பமொன்றைத் திருடிவந்து அமலா ஊட்டுகிறாள் (பாதிரிகளே அப்பத்தைத் தர முடியும்). பின்பு சாராவைக் கண்ட மற்றொரு நாளில், பிரார்த்தனைகள் முடிந்து அப்பத்தைப் பெற வரிசையில் அவளுக்கு முன் அவன் நின்று, பாதிரியிடம் பெற்றுக்கொள்ளும் தறுவாயில் அப்பத்தை நழுவவிடுகிறான்.

                         அமலா கன்னியாஸ்திரி ஆகும் முன் அவளுக்கு அவன் மஞ்சள் சுடிதாரைப் பரிசளிக்கிறான். தேர் பவனி நடக்கும் இரவொன்றில் நேசம் கொண்ட இருமனங்கள் தங்கள் உடலின் ஊடாகப் பிரியத்தைப் பதற்றமாக அறிகின்றன. அவ்விரவிற்கு மறுநாள் சாராவும் மஞ்சள் வெயிலில் பாண்டியை நிற்கவைத்துவிட்டுப் பிரிந்துபோகிறாள்.   முந்தைய இரவில் மஞ்சள் பூவைப் பற்றி இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவனைப் பிரியும்போது அவள் மஞ்சள் சுடிதாரை அணிந்திருக்கிறாள். மஞ்சள் நிறத்திற்கும் மனப்பிறழ்வுக்குமான நெருக்கத்தை இங்கு நினைத்துப் பார்த்துக் கொள்ளலாம்.

                    மனம் பிறழ்ந்து விலங்கிட்டுக்கிடக்கையில் அவனுக்குள் உண்டாகும் வினோதமான கற்பனைகள் வெறும் காட்சிகள் அல்ல. அவற்றிற்கும் அவனது கடந்த காலத்திற்கும் மிக நுண்ணிய இழைகளினாலான தொடர்பிருக்கிறது. அவ்வாறு உணரும் பட்சத்தில் அதனைத் தரிசனமாக நம்மால் மாற்றிக்கொள்ள முடியும். கரையில் வரிசையாக விளக்கேந்தி வரும் பெண்களில் சுடர் அணைந்துபோகும் விளக்குடையவள் சாராவாக அன்றி வேறுயாராக இருக்க முடியும். கண்ணீரால் நிரம்பிய செப்புத் தலை மனிதன் அவனின்றி வேறு யார்?




                          கரைமணலைக் களங்கப்படுத்திவிட்டு வரும் பொழுதுபோக்கியல்ல அவன். அவன் மனதிலும் கவிதைகளிலும் சதா அலைச் சத்தம் கேட்டபடியேயிருக்கிறது ("கடலைக் கப்பலின் சாலையென்று கற்பித்தவனைக் கொன்றுவிட்டுவருகிறேன்"). நாவலை, கிருபா படிமங்கள் மூலமே நகர்த்திச் செல்கிறார். மிக அருகருகே அமைந்த படிமங்கள். கவிமொழியை எட்டித் தொட்டுவிடும் அண்மையில் உரை நடையை அனாயாசமாக உருவாக்கியிருக்கிறார்.

                          கிருபா தனது கவிதைகளைப் பாண்டியன் மூலமாக நாவல் முழுக்கப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருக்கிறார். கூடவே தேவ தேவனுடைய கவிதைகளையும் அடர்த்தியான படிமங்களைக் கொண்ட கவிதைகள், சாராவைக் கண்டதும் ரொமான்டிக் தன்மையைக் கொண்டுவிடுகின்றன.

                        நாவலின் முக்கியமான குறையாகப்படுவது யதார்த்தத் தளம் போதுமானதாக இல்லாததுதான். கற்பனைகளில் சஞ்சரிப்பது, காட்சிப் படிமங்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியமோ அதுபோலவே யதார்த்தத் தளத்தை உருவாக்குவதும். இதில் பாண்டியின் பால்ய காலம் நன்றாக வந்திருக்கிறது. அவன் இளைஞனாகி அலையும் நாட்கள் நாவலில் தொய்வை ஏற்படுத்துகின்றன.




                       நேர்கோட்டுப் பாணியைத் தவிர்த்துவிட்டுக் குறுக்குவெட்டாக, உள்மடிப்புகளைக் கொண்டதாக நாவல் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அவற்றினூடாக உள்ள இடைவெளிகளை வாசிப்பின் மூலம் அர்த்தப்படுத்திக்கொள்ளும்போதுதான் ஒரு நாவலின் மகத்துவம் நமக்குப் புரியும்.


                           தனது மூன்று கவிதைத் தொகுப்புகள் மூலம் கவனமும் வலியோடு முறியும் மின்னல் மூலம் அங்கீகாரமும் பெற்ற ப்ரான்சிஸ் கிருபா என்ற கவிஞர் தன் முதல் நாவலை, அதற்குரிய எந்தச் சலுகையையும் கோராமல், சிறப்பாகப் படைத்திருக்கிறார்.

                             நாவலை மிகச் சிறப்பாக, அழகுணர்ச்சி ததும்ப வெளியிட்டிருக்கும் தமிழினி பாராட்டிற்குரியது.

கன்னி -நாவல் -ஜெ.பிரான்சிஸ் கிருபா -தமிழினி பதிப்பகம்

(நன்றி : காலச்சுவடு ஜூன் 2007)

கோட்டோவியம் : அனந்த பத்மநாபன்

Sunday, June 22, 2014

லதாவின் “நான் கொலை செய்யும் பெண்கள்”



மதிப்புரை


நேற்றின் நிழல்கள்


          
                                

                சில மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் “பெண்களின் மன உலகினுள் ஜானகிராமன் போல நுழைந்து நுட்பமான இடங்களுக்குச் சென்றவர்கள் அரிதுஎனக் கூறினேன். அவர் சற்றும் தாமதிக்காமல் “அதைக் கூற வேண்டியது நீங்கள் அல்ல,பெண்கள் தான்என்றார்.இங்கு பெண்களின் புற உலகின் அசைவுகளை தீர்மானிக்கும் சூத்திரதாரிகளின் கண்காணிப்பு அவர்களை தனியர்களாக உணர வைக்கிறது.பெண்களில் பெரும்பான்மையோருக்கு முன்னும் பின்னும் சுவர்களே இருப்பதால் அவர்கள் அதன் நித்தியசகாவாகி போனவர்கள்.அவர்களுடைய உலகம் குறுகியது என்பதாலேயே ஆழமானது.ஒடுக்கப்பட்டவர்கள் என்பதாலேயே திமிறத்துடிப்பவர்கள்.எனவே தான் தொண்ணூறுகளுக்குப் பின்னர் பெரும் அலையென எழுந்து கவிதையின் வழி அவர்கள் பேச முற்பட்ட போது,      வெகு ஜனஉலகில், அதற்கு ஆதரவாக எழுந்த குரல்களைக் காட்டிலும் அதற்கெதிராக உயர்ந்த கைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.அதே சமயம் அவர்களே கதைகளின் உலகத்திற்குள் வந்த போது அவர்களுக்குள் இருந்து பெரும் வீச்சாக, படைப்பு ஆகிருதியாக எவரும் உருவாகவில்லை.எனினும் குறிப்பிடத்தகுந்த படைப்புகளைத் தந்து கவனம் பெற்றவராக உமா மகேஸ்வரி மட்டுமே இருக்கிறார்.






இப்பின்புலத்தில் வைத்தும் அயலக தமிழ் வாழ்க்கைச்சூழல் சார்ந்த பின்னணியினூடேயும் லதாவின் “நான் கொலை செய்யும் பெண்கள்” என்னும் சிறுகதை தொகுப்பை மதிப்பிட வேண்டியிருக்கிறது.
            



                  லதாவின் கதைக்களம் பெரும்பாலும் சிங்கப்பூரை மையம் கொண்டே எழுத்தப்பட்டிருந்தாலும் அவை பெண்களின் பாடுகளை,ஏக்கங்களை,உளைச்சல்களை பற்றி ஒரு வித கையறு நிலையில் நின்று பேசுகின்றன.இத்தொகுதியிலுள்ள பெண்கள் எவருமே நிம்மதியோடில்லை.லதா கூறப்பட்டு போதிய உழைப்பில்லாததால் பல கதைகள் அதற்கேயுரிய இடங்களை நோக்கி நகராமல் தேங்கி விடுகின்றன.நுட்பமான சில வெளிச்சங்களை இத்தொகுப்பு கொண்டிருந்தாலும் கூட முன்பே பல படைப்பாளிகள் கடந்து சென்று விட்ட இடத்திற்கு மீண்டும் ஆசிரியர் கூட்டிச் செல்வது போல பல கதைகள் அமைந்திருக்கின்றன.
               



                
               லதா,கதைமாந்தர்களினூடாக உருவாக்கும் உரையாடல்களும் சம்பவங்களும் பெண்களின் படைப்புலகம் சார்ந்த அடுத்தகட்ட வளர்ச்சிக்கு துணை போகக்கூடியவை அல்ல.அடையாளம்”  போன்ற கதைகளில் அவர் பெண்களின் சுய அடையாளம் குடும்பத்தின் மூலமும் சமூகத்தின் மூலமும் ஒடுக்கப்படுவதை  காட்சியாக்க முயன்றாலும் வெறும் புலம்பல்களைத் தாண்டி அக்கண்ணீரை,அந்த வலியை கலையாக அவரால் மாற்றமுடியவில்லை.பல வருடங்களாக பழகி வந்த பாதையிலேயே ‘அறை’ ,’வீடுபோன்ற கதைகள் அமைந்திருக்கின்றன.தீவிரமின்மையால் வெற்று முயற்சியாக மட்டும் நின்று விரயமான கதைதமிழுக்கும் அமுதென்று பேர்’. தீவிரம் என்றால் எளிமைக்கு எதிராக நிற்பதன்று.மாறாக கருப்பொருளுக்கு ஏற்ப,அதற்கேயுரிய உழைப்பைச் செலுத்துவது.மேலும் அதன் ஆழத்திற்குச் செல்ல முயல்வது.பெரும்பான்மையான் கதைகளில் இவை இல்லாததால் பலவீனப்பட்டு நிற்கின்றன.மழை அப்பா” ,”முகாந்திரம்அகிய கதைகளின் வழியாக நிகழும் உறவுகளின் ஊடாட்டம் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கிறது.இக்கதைகளின் மூலமே சிறுகதையின் நுட்பங்கள் லதாவிற்கு வசப்பட்டிருக்கின்றன.தொகுப்பின் சிறந்த கதை “படுகளம் பெண்ணின் மன உணர்வுகளை ஒரு படுகள காட்சியை முன்வைத்து நகர்த்திச் செல்லும் விதம் அக்கதைக்கு வேறொரு பரிணாமத்தை வழங்குகிறது.இது போன்ற கதைகளைத் தொடர்ந்து எழுதுவதன் மூலமே லதா தன்னை சிறுகதையாளராக நிலைநிறுத்திக் கொள்ள முடியும்.அது சாத்தியமாகக் கூடிய ஒன்றும் கூட.
   

(இந்த மதிப்புரை 2008 (அல்லது 2009-ல்)எழுதப்பட்டது.எங்கும் பிரசுரமாகாதது)



Wednesday, June 18, 2014

”அரூப நெருப்பு தொகுப்பு” க்கு சுகுமாரன் எழுதிய முன்னுரை




நரகத்தின் உள்ளும் புறமும்




                                              எட்டுச் சிறுகதைகள் கொண்ட இந்த நூல் கே.என். செந்திலின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு. இந்தத் தகவலுடன் நூலின் கையெழுத்துப் படியை வாசிக்க ஆரம்பித்தபோது தவிர்க்க இயலாமல் சில எதிர்பார்ப்புகள் மனதுக்குள் உருவாயின. முதல் புத்தகம் வாயிலாக நம்பிக்கை ஏற்படுத்திய எந்தப் படைப்பாளியைப் பற்றியும் உருவாகும் எதிர்பார்ப்புகள் அவை. முன்னர் அளித்த நம்பிக்கையைக் காப்பாற்றுகிறாரா?அறிமுகப் படைப்பிலிருந்து முன் நகர்ந்திருக்கிறாரா?எழுத்து முறை செழுமையடைந்திருக்கிறதா?   அவரது பார்வை மாற்றம் பெற்றிருக்கிறதாபுதிய நம்பிக்கைகளைப் பேண இடமளிக்கிறாராபோன்ற கேள்விகள் வாசிப்பவனிடம் எழுவது இயல்பு. வண்டிச் சக்கரத்தில் ஒ ட்டிய பல்லியும் சக்கரத்துடன் முன்னேறிச் செல்கிறது. வலசை போகும் பறவையும் ஆகாயத்தின் திசைகளைக் கடந்து செல்கிறது. இரண்டையும் பயணம் என்று சொல்லலாம். ஆனால் இரண்டும் ஒன்றல்ல.






                                           
                                 நவீனத் தமிழ்ப் புனைவெழுத்தில் ஆகச் சிறந்த சாதனைகள் நிகழ்ந்தது சிறுகதையில் என்று எண்ணுகிறேன். கதையாடலிலும் நடையிலும் உத்தியிலும் வகைவகையான மாற்றங்களைக் கொண்ட சிறுகதைகள் சாதனைகளாகவே நிலைபெற்றிருக்கின்றன. அசோகமித்திரன் கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்புக்கு எழுதிய  மதிப்புரையில் மலையாள எழுத்தாளர் சக்கரியா ' மலையாளத்தில் நவீனத்துவம் என்ற பெயரில் நாங்கள் சிரசாசனம் செய்து உருவாக்கிய படைப்புகளை பின்னுக்குத் தள்ளி விடக்  கூடிய சிறந்த கதைகளை, புதுமைப்பித்தன் முதல் அசோகமித்திரன் உள்ளிட்ட பல  தமிழ் எழுத்தாளர்கள் பலர் எங்களுக்கு முன்பே அநாயாசமாக எழுதியிருக்கிறார்கள் என்பதைப்  பார்க்கையில் வெட்கமாக இருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார். தமிழ்ச் சிறுகதை வளத்தைப் பார்க்கும் கூரிய வாசகன் இந்தக் கூற்றை ஆமோதிக்கவே வாய்ப்பு அதிகம்.அந்த  வளத்துக்குக் காரணகர்த்தர்களான கதையாளர்களின் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது. எனினும் புதிய நூற்றாண்டின் ஆரம்பப் பதிற்றாண்டில் எழுதப்பட்ட சிறுகதை  களை  இந்த அளவுக்கு வியந்து சொல்ல முடியுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. அல்லது இருக்கிறது. சென்ற பதிற்றாண்டிலும் சிறுகதைகள் எழுதப் பட்டிருக்கின்றன. முன்னர் எழுதப் பட்டவற்றிலிருந்து மாறுபட்ட கதைகளை எழுதும்  பலர் அறிமுகமாகி உள்ளனர். ஆனால் கவிதையிலும் நாவலிலும் சமகாலத்தில் ஏற்பட்ட வீச்சு சிறுகதையில் நிகழவில்லை என்றே தோன்றுகிறது.








                                                    நண்பர் நஞ்சுண்டன் ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் தரங்கம்பாடியில் நடத்திய  சிறுகதை செம்மையாக்கப் பட்டறையில் கலந்து கொண்டேன். அதையொட்டி, தொண்ணூறுகளுக்குப் பிறகு அதுவரை தமிழில் வெளி வந்திருந்த கிட்டத்தட்ட எல்லாச் சிறுகதைத் தொகுதிகளையும் கவனமாக வாசித்தேன். சந்தேகம் வலுவானதே தவிர தீரவில்லை. அதை ஆதங்கமாக எழுதியபோது வந்த ஒரே எதிர்வினை கே.என் செந்திலுடையது. என் ஐயம், முந்தைய தலைமுறை வாசகன் புதிய தலைமுறையை அணுகுவதிலுள்ள தயக்கம்  என்ற தொனியில் அவரது மறுப்பு அமைந்திருந்தது. அவரையும் என்னையுமே ஒப்புக் கொள்ள வைக்கும் தரவுகளுக்காகக் காத்திருந்தேன். புதிய எழுத்தாளர்களின் கதைகள்குறிப்பிடத் தகுந்தவையாக இருப்பினும் வாசகனுடன் தொடர்ந்து  பயணம் செய்யும் படைப்புகளாக இல்லை. ஒரு தொகுப்பில் குறிப்பிடத் தகுந்த கதைகளை முன்வைப்பதுடன் திருப்தியுடன் விலகிக் கொள்கிறார்கள்; புதிய கதையாடல் என்பது விவரிப்புரீதியிலான புதுமை என்று மட்டுமே புரிந்து கொள்கிறார்கள்; ( நன்றி: க.மோகனரங்கன், இரவுக் காட்சி தொகுப்பின் முன்னுரை). அதி புனைவையே சிறுகதையின் இயல்பு என்று நம்புகிறார்கள் என்ற கருத்துகள் தொடந்து உருவாகிக் கொண்டிருந்தன. அதை உறுதிப்படுத்தும்  விதமாகப் பலரின் இரண்டாவது தொகுப்புகள் பழைய சக்கரத்தின் பல்லி வாழ்க்கை யையே சித்திரித்தன. சிலர் முதலாவது தொகுப்பிலிருந்து  மீண்டு வரவே இல்லை.

                                             
                       எண்பதுகளின் இறுதியில் வெளியான அமெரிக்கச் சிறுகதைத் தொகுப்பான 'சடன் பிக்ஷ' ( Sudden fiction ) னை வாசித்துக் கொண்டிருந்தபோது இந்தக் கருத்துகள் அலைக்கழித்தன.  தமிழ்ச் சிறுகதையுடன் ஒப்பிட்டு யோசிக்கச்  செய்தன. நீண்ட கதைகள் வாசகர்களிடம் செல்லுபடியாவதில்லை. அவசரமும் வேகமுமான சூழலில் கதைகள் சுருக்கமாக இருப்பதே  இலக்கியத் தேவை என்ற கண்ணோட்டத்தில் தொகுக்கப்பட்ட, அரைப் பக்கம் முதல் மூன்று பக்கம் மட்டுமே நீளும் கதைகளின் தொகுப்பு அது. அதன் முன்னுரையில் தொகுப்பாளர்களின் ஒருவரான ராபர்ட் ஷாப்பர்ட் ஒரு கருத்தை முன்வைக்கிறார். 'மிகவும் செறிவூட்டப்பட்ட, மிகவும் புதுமையான, மிகவும்  உத்திரீதியான, மிகவும் புனைவுத்தன்மை கொண்ட கதைகளா னாலும் அமெரிக்க எழுத்தாளர்களான நாம் அடிப்படையான ஓர் அம்சத்தைக் கதைகளில் முன்னிருத்துகிறோம். அது வாழ்க்கை'. இந்த வாக்குமூலத்தை எட்டியதும் என் சந்தேகம் நிவர்த்தியானது. புதிய எழுத்தாளர்களின் கதைகளில் தென்படத் தவறிய கூறாக நான் கண்டது வாழ்வின் ஸ்பரிச மின்மையை; அல்லது வாழ்வின் கணங்களைப் புனைவு பின்னுக்குத் தள்ளி விடும் நிலையை. அவற்றிலிருந்து விலகிய மனப்பாங்குடன் எழுதப் பட்டநான் யோசித்து உணர்ந்த உண்மையின் சான்றுகளாகக்  கருதத் தகுந்த சிறுகதைகள் கே.என். செந்திலின் இரண்டாவது தொகுப்பிலும் உள்ளன. புதிய திசையில் பயணம் செய்திருக்கிறார் என்பதன் நிரூபணம் இந்த எட்டுக் கதைகளும்.
                                           


                                              வாழ்வின் தீவிர நிலைகளுக்கு இணையான நிலைகளையே செந்தில் கதைகளில் உருவாக்க எத்தனிக்கிறார். மோஸ்தர்களின் ஊர்வலத்தில் அல்ல; வாழ்வைப் பற்றிய தனித்த சஞ்சாரத்தின் மூலமே எழுத்தை உருவாக்க விரும்புகிறார். இந்த எட்டுக் கதைகளை எழுதத் தூண்டியவை என்ன என்று அவரிடம் விசாரித்தால் தான் கண்ட கேட்ட நிஜ வாழ்க்கைச்சம்பவங்களையே ஒருவேளை அவர் முன்வைக்கக் கூடும். அந்த அடிப்படையில் அவர் எழுத்தை எதார்த்தமானது என்று வகைப்படுத்தலாம். எதார்த்தவாத எழுத்தைச் சார்ந்து நின்றே  அதி நவீனராகவும் அடையாளம் காணப்படும் சாத்தியமும் இந்தக் கதைகளில் தென்படுகிறது. உருவம் சார்ந்தும் கதைப் பொருள் சார்ந்தும்.

                                          
                       மேற்சொன்ன 'திடீர்ப் புனைவு' க்கு எதிராக எழுதப்பட்ட கதைகளே புதிய நவீனத்துவக் கதைகள். சிறுகதையின் ஆரம்ப காலத்தில் எழுதப்பட்டவை பத்துப் பக்கங்களுக்கு மிகாத  சிறுகதைகள் எனில் இந்தக் கால அளவில் எழுதப்படுபவை இருபது பக்கங்களுக்குக் குறையாத கதைகள். இந்தப் போக்கு உலகம் முழுவதும் நடைமுறையாகி இருப்பது. அமெரிக்க எழுத்தாளர்களான ரேமண்ட் கார்வர், டோபியாஸ் உல்ப், ஜப்பானிய எழுத்தாளரான ஹாருகி முரகாமி உட்படப் பலரும் எழுதுவது நீண்ட சிறுகதைகளையே. தமிழிலும் அறிந்தும் அறியாமலும் இந்தப் போக்கு வலுப் பெற்றிருக்கிறது. புதிய தலைமுறை எழுத்தாளர்களில் நம்பிக்கையளிப்பவர்கள் என்று நான் கருதும் ஜே.பி. சாணக்கியா, எஸ்.  செந்தில்குமார், மு.குலசேகரன், முதிர்ந்த இளைஞரான தேவிபாரதி ஆகியவர்களின் கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். இந்த வரையறையை வைத்து இவர்களை நவீனமானவர்கள் என்று சொல்லலாம். இந்த வரிசையில் முன்பதிவு செய்யத் தேவையின்றி கே.என் செந்திலும் இடம் பிடிக்கிறார் என்பதை இந்த எட்டுக் கதைகளும் உறுதிப் படுத்துகின்றன.

                                        இன்று எழுதப்படும் கதைகள் முந்தைய கதைகளுக்கு நேர் மாறானவை. ஆரம்பம், வளர்ச்சி, உச்சம் என்று கிரமப்படிச் சொல்லப்படுபவை அல்ல. சிதறுண்டவை. சில சித்திரங்களை, சில உணர்வுநிலைகளைச் சிதறலாக முன்வைத்து அதைக் கோர்த்துப் புரிந்து கொள்ளும் பொறுப்பை வாசகனிடம் அளித்து விடுகின்றன. கே.என். செந்திலின் கதைகள் இந்த வகையில் அமைந்தவை. 'நான் - லீனியர்' என்று வலிந்து எழுதப்பட்டவையாக இல்லாமல் சிதைவே இயல்பாக உருவானவை. 'தங்கச் சிலுவை' கதை வெவ்வேறு பாத்திரங்களை மையமாகக் கொண்ட சிதறிய சித்திரங்களின் தொகுப்பு. விரிவான பொருளில் சமகால வாழ்வுடன் பொருந்தும் படைப்பாக்க முறை இது என்று தோன்றுகிறது. முந்தைய தலைமுறை வாழ்ந்த நேர் கோட்டு வாழ்க்கையையா இன்று வாழ்கிறோம்? வளைவும் வெட்டலும் கிறுக்கலுமான வாழ்க்கையைத்தானே என்று இந்தக் கதைகள் காட்டுகின்றன  என்று எடுத்துக் கொள்ள முடியும்.



                                              இந்தக் கோணல் வாழ்க்கை இன்னொன்றையும் வெளிப்படுத்துகிறது. நேரான நகர்வுகள் கொண்ட வாழ்க்கையில்தான் விழுமியம் சார்ந்த தருணங்கள் அழுத்தமாக வலிறுத்த ப்படுகின்றன.  சிதறுண்ட வாழ்க்கையில் மதிப்பீடுகள் தன்னிச்சையாக உருவாகின்றன. அவை சில சமயம் எள்ளி நகையாடப் படுகின்றன. சில சமயம் பொருட்படுத்தப்படாமல் போகின்றன. அபூர்வமான தருணங்களில் மட்டுமே அவை மதிப்புக்குரியவையாகின்றன. 'வெஞ்சினம்' கதையில் இருண்ட பகடியாகிறது. சிறுவன் ஓட்டலிருந்து தப்பியோடும்   'திரும்புதல்' கதையில் அவன் திரும்பிச் செல்வது தனது பழைய வாழ்க்கைக்கே என்று உணரும் போது அந்தத் தலைப்பே குரூர நகைச் சுவையாகிறது. தங்கச்  சிலுவை' கதையில் தேவாலயத்திலிருந்து சிலுவை யைக் களவாடிய ஆபிரகாம் அதைத் திரும்பப் பாதிரியாரிடம் கொடுப்பது மதிப்புக்குரியதாக உயர்கிறது.
                                                      

                                         இந்தக் கதைகளின் மனிதர்கள் எவரும் அறச் சீற்றத்துடன் பொங்குபவர்களோ அதைப் பரப்புரை செய்து திரிபவர்களோ அல்லர். பெரும்பான்மையான பாத்திரங்கள் நகரம் சார்ந்த அடித்தள வாழ்க்கை வாழ்பவர்கள். புறக் காரணங் களாலும் அகக் காரணங்களாலும் தாமே உருவாக்கிக் கொண்ட நரகத்தில் உழல்பவர்கள். மீட்பைப் பற்றி யோசிப்பதை விட இருப்பைப் பற்றிக் கவலைப் படுபவர்கள். பசியாலும் காமத்தாலும் பழி உணர்வாலும் தந்திரத்தாலும் உன்மத்தத்தாலும் மரணத்தாலும் வதைப்பவர்கள். வதைபடுபவர்களும் கூட. இந்த இருண்ட உலகை எந்த மனச் சாய்வுமின்றி 'அராஜகமாக' சித்திரிக்கிறார் கே.என். செந்தில். அதில் அவர் பெற்றிருக்கும் வெற்றிக்கு இந்தக் கதைகளும் எனது வாசக வியப்பும் சான்று.

                                  
                     ஓர் உரையாடலின் போது ' அது ஏன் எல்லா மகத்தான படைப்புகளும் அவலச் சுவை கொண்டதாகவும் துன்பியல் தன்மை கொண்டதாகவும் இருக்கின்றன? என்று கேட்டார் கே.என். செந்தில். எனக்கே அவ்வளவாக நிறைவு தராத பதிலைச் சொன்னேன் என்று ஞாபகம். இந்த எட்டுக் கதைகளையும் வாசித்துக் கொண்டிருக்கும்போது அந்தக் கேள்வி எனக்குள்ளே மீண்டும் எழுந்தது. கே.என். செந்திலைக் கேட்டால் என்ன சொல்லுவார்ஒருவேளை 'தங்கச் சிலுவை' கதையில் வரும் விவிலிய வாசகத்தை மேற்கோள் காட்டுவா ராக இருக்கலாம்.ஒருவேளை  'நீதியின் நிமித்தம் துன்பப்படுபவர்கள் பாக்கியவான்கள்' என்று சொல்லலாம். ஏனெனில் அவர் எழுதியிருப்பது இருப்பியல் நீதியின் நிமித்தம் துன்பப்படுவர்களின் கதையை. துன்புறுத்துபவர்களின் கதையையும்.


சுகுமாரன்

 திருவனந்தபுரம்                                                                                                                      டிசம்பர் 2013












Tuesday, June 10, 2014

கொற்கை நாவல் பற்றிய கட்டுரை


கட்டுரை



வீழ்ச்சியின் வரலாறு


 பரந்து விரிஞ்ச கடல்ல பயணம் பண்ணும்போது ஆண்டவா. . . ஒன்னட கடல் எவ்வளவு பெருசு, நாங்க எவ்வளவு சிறுசுன்னு நெனைக்க வைக்குது” (பக்.767)

                                             தமிழில் கவிதைக்கு மிக நீண்ட மரபும் அது அளித்த பெருங்கொடைபோல இதிகாசங்களும் காப்பியங்களும் சங்கப்பாக்களுமாக நம் மொழி நிகரற்ற செல்வத்தைக் கொண்டுள்ளது. அது இன்றைய கவிஞனுக்குக் கடும் சவாலையும் அதே சமயம் அதிலுள்ள சொற்களின் வளமை தன் கவிதையியலைச் சாதகமான திசையை நோக்கி நகர்த்தும் ஆற்றலையும் அவனுக்கு வழங்குகிறது. ஆனால் எப்போதும் கவிஞனின் மனம் நவீனமானது. அதனால்தான் உலகக் கவிதைகளோடு ஒரு உரையாடலை எத்தருணத்திலும் அவனது கவிதைகளால் நிகழ்த்த முடிகிறது. ஆனால் மிகச் சமீபத்தில் மேற்கிலிருந்து இங்கு வந்துசேர்ந்துள்ள கலைவடிவங்கள் நாவலும் சிறுகதையும். ஆச்சரியமாக நவீனக் கவிதைச் சாதனைகளுக்குச் சற்றும் குறையாத அல்லது நிகரான சாதனைகள் தமிழ்ச் சிறுகதைகளில் உள்ளன. ஆனால் நாவலில் அது குறைவாகவே நிகழ்ந்துள்ளது. எனினும் கடந்த பத்தாண்டுக் கால நாவல்கள் இந்த எண்ணத்தைத் தகர்த்துக்கொண்டிருக்கின்றன. இக்காலகட்டத்தை நாவல்களின் காலம் எனக் கூறுமளவிற்கு அவ்வடிவத்தை நுட்பமாகக் கையாளும் படைப்பாளிகள் தோன்றியிருக்கிறார்கள்.

                                                   ஏற்கனவே ஊன்றப்பட்டுவிட்ட மதிப்பீடுகளுக்கு ஒத்து ஊதுபவனோ ஒழுக்க நியதிகளுக்குச் சாமரம் வீசுபவனோ அல்ல படைப்பாளி. தூசிபடிந்த அதன் இருப்பைத் தன் ஓயாத கேள்விகளால் காலிசெய்யப் பெரும் மன எழுச்சியும் ஆவேசமுமாக அவன் புரவியின் மீதேறி வருகிறான். கண்பட்டைகள் கட்டப்படாத குதிரையோட்டியால் கட்டுப்படுத்த முடியாத எழுத்து என்னும் புரவி அது. லௌகீக ஞானம் கூடாத ஒருவனையே அது ஆசையுடன் எப்போதும் தன் முதுகிலேற்றிக்கொள்கிறது. அதற்காக அவன் இழப்பவை பற்றிக் கூறப்படும் தீராத பராதிகள், இகழ்ச்சிகள், எளிய லோகாதய வெற்றியைச் சுட்டிக்காட்டி அவனை மடக்கும் தந்திரங்கள், சூழயிருப்பவர்களின் குத்தல்கள் போன்றவற்றால் அவன் சுருங்கிப்போவது உண்மைதான் என்றாலும் அதற்குப் பணிய மறுப்பவன் அவன். அவர்கள் இறந்த பின்னும் தான் வாழப்போகும் காலம் பற்றி அவன் கொண்டிருக்கும் கனவு, அவன் கண்களில் மின்ன, அவன் செய்யக் கூடுவதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். உள்ளே கொதிக்கும் குருதியின் சூடு ஆறுவதற்குள், தன்னை ஓய்வுகொள்ள விடாது துரத்தும் அந்தக் கனவிற்குத் தன்னை இரையாகத் தர முன்வருவதுதான் அது. இதற்கு அஞ்சிப் பின்வாங்கித் தயங்கி நிற்பவர்கள் தேங்கிப்போக, வெல்ல வேண்டிய சமர் என எண்ணுபவனே மகத்தான கலைஞனாகக் காலத்தின் முன் நிற்கிறான்.


                                                      விதிவிலக்குகளைத் தவிர்த்துவிட்டு நோக்கினால் தமிழ் வாழ்க்கை என்பது உறவுகளின் வலைப் பின்னல்களால் ஆனது என்பதை உணரலாம். அதனால் இங்கு உருவான பெரும்பான்மையான படைப்புகள் அவற்றில் ஊடாடும் மனிதர்களின் மனப்புதிர்களை, நானாவிதக் கோணங்களை, எளிதில் விளங்கிக்கொள்ள முடியாத முடிச்சுகளைக் கூற முற்பட்டிருக்கின்றன. தொடர்ந்து இதையே வெவ்வேறு தலைமுறைகளில் பல்வேறுபட்ட வாழ்க்கைக்குள்ளிருந்து வெளிப்பட்ட படைப்பாளிகள் வெகு நுட்பமாக, தீவிரம் குன்றாமல் எழுதி வந்திருக்கின்றனர். இத்தகு போக்கின் காரணமாகவே பெரிய நாவல்கள் சார்ந்த கனவு போதிய ஊட்டம் பெறவில்லை எனத் தோன்றுகிறது. ஆனால் இப்போது அது சார்ந்த பிரக்ஞை உருவாகியிருப்பதுடன் அதைச் சாத்தியமாக்கும் நாவல்கள் தொடர்ந்து தமிழில் வெளிவந்தபடியிருக்கின்றன. ஆனால் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கும் பெரிய நாவல்களின் அணிவகுப்புக்கு இடையில் நூறு பக்கங்களுக்குள் தீவிரமான மன நிலைக்கு நம்மை அழைத்துச் சென்ற நாவல்களையும் நாம் மறந்துவிடக் கூடாது. சம்பத்தின் இடைவெளி, நகுலனின் நிழல்கள், அசோகமித்திரனின் தண்ணீர், வண்ண நிலவனின் ரெயினீஸ் ஐயர் தெரு போன்றவை படைப்பின் ஆதார குணமான நிம்மதியிழப்பையும் மேல் நோக்கிய பயணத்தையும் வாசகனுக்குத் தந்ததை நினைவுபடுத்திக்கொள்ளலாம். இச்சிறிய நாவல்களின் போதாமையை உணர்ந்த படைப்பாளிகள்தாம் பெரிய நாவல் சார்ந்த சவாலைத் தமிழில் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

                                                        தமிழில் பெரிய நாவல் சார்ந்த கனவைத் தூண்டிய முதல் நூல் என ஜானகிராமனின் மோகமுள்ளைக் கூறலாம். இந்நாவல் அளித்த வாசிப் பனுபவத்திற்குச் சற்றும் கூடுதல் குறைவின்றித் தந்த அவரது அம்மா வந்தாள் அளவில் சிறிய நாவலே. பெரிய நாவலுக்கான நீண்டகாலத் தேக்கத்தை உடைத்துத் தன்னை நிறுவிக்கொண்ட நாவல் ஜெயமோகனின் விஷ்ணுபுரம். இந்த ஒப்பீடு நிகழ்த்தப்படுவதன் நோக்கம் பெரிய நாவல் என்னும் லேபிளில் படைப்பை மேலோட்டமாகப் புரிந்துகொண்டு சாரு நிவேதிதாவின் ராஸ லீலா போன்ற இம்சைகள் தமிழில் வெளியாகி வருவதைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. நாவலின் தரம் அதன் தடிமனால் அல்ல, அதிலுள்ள கலைவெளிப்பாட்டிற்காகவே தீர்மானிக்கப்படுகிறது. இச்சூழலில் தன் முதல் நாவல் மூலம் பெரும் வாசகக் கவனம் பெற்ற ஜோ டி குருஸ் கொற்கை என்னும் பெருநாவலின் வழியாக நம்மைச் சந்தித்திருக்கிறார். இச்சந்திப்பு மனநிறைவளிப்பதாக இருக்கிறது என்றும் படைப்பாளியாக அவரது இடம் பற்றிய எண்ணங்கள் உறுதிப்பட்டன என்றும் கூறலாம். ஒரு கலையை விளக்குவதல்ல மாறாக அப்பிரதியிலுள்ள மௌன இடை வெளிகளை, குறிப்புணர்த்தலைத் தன் வாசிப்பு சார்ந்து மதிப்பிடுவதே விமர்சகனின் பணியாக இருக்க முடியும். படைப்பை விளக்க முயல்பவன் அந்தப் படைப்பாளியையும் வாசகனையும் ஒரு சேர அவமானப்படுத்துகிறான் என்னும் புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்படுகிறது.

                                                முப்பத்தியிரண்டு குடும்பங்களின் மூன்று தலைமுறைக் கதைகளை ஆயிரத்து நூற்றுப் பக்கம் விரித்துக் கொற்கையை மையமாகக் கொண்டு நுட்பமாகவும் சரளமாகவும் குருஸ் படைத்தளித்திருக்கிறார். நாவலில் இடம்பெறும் சகல குடும்பங்களின் வரைபடமும் நம் குழப்பம் நீங்கத் தனித்தனியாகப் பின்னிணைப்பாகத் தரப்பட்டுள்ளன. சுந்தர ராமசாமி தன் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலுக்குத் தலைமுறைகளின் வரை படத்தைத் தந்திருந்தமை நினைவில் தோன்றி மறைந்தது. இந்நாவலில் குருஸின் அனுபவ உலகத்திற்கு வெளியேயிருக்கும் ஒரு வஸ்துகூட இடம்பெறவில்லை என்பதை அவர் அளிக்கும் தகவல்களின் துல்லியத்தால் யூகித்துவிட முடிகிறது. வசதி கருதிக் கொற்கையை எதார்த்தவாத நாவலுக்குள் சேர்க்கலாம். மண்ணோடு மக்கிப்போயிற்று என எண்ணியிருந்த எதார்த்தவாதம் தொண்ணூறுகளுக்குப் பின் அலையென எழுந்த தலித் படைப்புகளின் வாயிலாக மறுமலர்ச்சி கண்டது. இசங்கள் சார்ந்து கோட்பாடுகளின் பின்னணியோடு வெளியான படைப்புகள் சூழலில் தம் கொடியைப் பறக்கவிட்டு அதைக் கொண்டாடும் முகமாக இனிப்புகளும் வழங்கப்பட்ட சில மணிநேரங்களுக்குள்ளாக அக் கொடியை அரைக் கம்பத்தில் இறக்கிக் கட்ட வேண்டிய அவல நிலைக்கு ஆளானதற்கு உதாரணங்கள் தமிழில் நிறைய உண்டு. கொற்கை எதார்த்த வகையைச் சார்ந்திருந்தும்கூட அதில் மரபான நாவல் வடிவம் மீறப்பட்டிருக்கிறது. பிரதான பாத்திரம் என்ற ஒன்றே இந்நாவலில் இல்லை. அனுபவத்திலிருந்து கிளைத்துப் பரவும் எழுத்துதான் எதார்த்தத்தின் ஆக முக்கியமான கூறு என்றாலும் அதைக் கலையாக மாற்றுவதில்தான் படைப்பாளியின் ஆளுமை அடங்கியுள்ளது. அன்றாட உலக நடப்புகளில் ஒரு கொலைகாரன் விபச்சாரியைச் சந்திப்பது கீழானதாக, கேலிக்குரியதாகப் பரிகசிக்கப்படும். ஆனால் உளவியலாளர்களின் ஆசானும் நாவல் கலையில் சிகரம் தொட்டவருமான தாஸ்தாயேவ்ஸ்கி, ரஸ்கோல்னிகவ் சோனியாவைச் சந்திக்கும்(குற்றமும் தண்டனையும்)போது அத்தருணத்தைக் கடந்து செல்ல முடியாத, அத்துக்கத்திலிருந்து மீள முடியாத நெருக்கடியை வாசகனுக்கு தாஸ்தாயேவ்ஸ்கி அளிக்கிறார். சோனியாவின் கண்ணீரின் வழியாக நாம் அடைவது மனச் சுத்திகரிப்பையே. பேரிலக்கியங்கள் ஏன் படைக்கப்பட வேண்டும், ஏன் படிக்கப்பட வேண்டும் என்ற வினாக்களை இங்கு எழுப்பிக்கொள்ளலாம்.


                                                  கொற்கையில் எண்ணற்ற பார்த்துச் சலிக்காத முகங்கள் நாவலின் பக்கங்கள் தோறும் வந்து சென்றபடியேயிருந்தாலும் அவர்கள் வெறும் நிமித்தங்களே. இவ்வளவு பாத்திரங்களையும் உறவுகளாக இணைத்த குருஸை எண்ணி வியப்பே ஓங்குகிறது. வரலாற்றின் முன்பின்னாகக் கொற்கையின் வளர்சிதை மாற்றங்களில் கொற்கையும் அம்மனிதர்களும் எவ்விதம் பரஸ்பரம் பாதிப்படைகிறார்கள் என்ற விசாரமும் அவ் விசாரத்தினூடாக மனித வாழ்க்கை ஒழுங்கமைவைக் கொண்டதல்ல, அது எதிர்பாராமைகளையும் நிலையற்ற கோலத்தையும் கொண்டதுதான் எனக் குருஸ் பல இடங்களில் வெளிப்படையாகவும் சில இடங்களில் சூசகமாகவும் உணர்த்துகிறார். கணக்கற்ற நபர்களின் உறவு நிலைகளையொட்டிச் செல்லும் சம்பவங்களைப் பின்தொடர்ந்து செல்ல, இந்நாவலின் முதல் வாசிப்பு சிறிது அயர்ச்சியைத் தருகிறது. கத்தோலிக்கப் பரதவச் சமூகத்தைப் பற்றி அதன் நீண்டகாலப் பின்னணியோடு பேசுவதாலும் அவர்களின் மொழியைத் தமிழ் நாவல்களில் இவ்வளவு விரிவாகக் கேட்கப் பெறுவதாலும்கூட அந்த அயர்ச்சி ஏற்பட்டிருக்கக்கூடும். ஆனால் இரண்டாம் கட்ட வாசிப்பு முன்பிருந்த புகைமூட்டத்தைத் துலங்கச் செய்து தவறவிட்ட பல சிறந்த தருணங்களை நமக்குக் காட்டித்தருகிறது.

                                                             கொற்கையும் கொழும்பும் தோணிகளின் வழியாகக் கொள்ளும் வியாபார உறவுகளையும் அவ்வுறவுகளுக்கு மூலாதாரமான மனிதர்களின் அகங்காரம், குறுக்குப்புத்தி, அன்பு, கோணல்கள், வீழ்ச்சி, கண்ணீர் ஆகியவற்றையும் குறித்து விரிவாகக் கூறும் நாவல் இது. நல்ல நாவலுக்குப் போதுமானதாக இருக்கும் இது போன்ற விவரணைகள் சிறந்த நாவலுக்குப் போதாது. கொற்கையில் வீழ்ந்தவர்கள் பற்றிய சித்திரம் நுட்பமாகக் குருஸால் விவரிக்கப்படும்போது கையறுநிலையின் பொருளுக்குள் நாம் போய்ச் சேர்கிறோம். வாழ்வின் அர்த்தமின்மையைக் குருஸ் பல இடங்களில் தொட்டுக்காட்டிச் செல்கிறார். இந் நாவலில் பெரியதுறை, பாம்பன் போன்ற பிற தோணி நடை செல்லும் ஆட்களின் வாழ்க்கையும் கொற்கையினூடாக இடைகலந்து சொல்லப்பட்டுள்ளது.

பரதவச் சமூகத் தலைவனின் மரணத்தோடு தொடங்கும் இந்நாவல் ஏறக்குறைய நூற்றாண்டுக் கால (86 ஆண்டுகள்) வெள்ளத்தில் கணக்கிலடங்காக் காட்சிகளை நம்முன் விரித்தபடி சென்று பிலிப் என்னும் பாத்திரத்தின் மரணத்தோடு முடிகிறது. நாவலில் வேறு எவருமே பிலிப் அளவிற்கு வளர்த்தெடுக்கப்படவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்துடன் இடது மூலையில் பொறிக்கப்பட்டிருக்கும் கிளிஞ்சல் நாவலில் இடம்பெறும் மனிதர்களின் ஸ்திதி பற்றிய குறியீடு போல உள்ளது. ஆம்! அவர்கள் அலைகளால் கரையொதுக்கப்பட்ட கிளிஞ்சல்கள்தாம். அதுபோலவே அந்தந்த அத்தியாயத்தைத் தொடங்கும் முன் அது நிகழும் ஆண்டு தரப்படும் உத்தியையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். தண்டல் (தோணியின் கேப்டன்) ஆவதுதான் கொற்கையில் தோணியோட்டிப் பிழைக்க நேர்ந்திருக்கும் பலருக்கும் கனவாக இருக்கிறது. தோணியை வைத்துத் தொழில் செய்வது பெரும் கௌரவமாகக் கருதப்படுகிறது.



                                                         தோணிதான் - அரவிந்தன் முன்னுரையில் கூறுவதுபோல - இந் நாவலின் நாயகன். அந்த அளவிற்கு மிக நெருக்கமாக நாமே அத்தோணிக்குள் இருப்பதுபோலக் காட்சிப்படுத்திக் காட்டுகிறார். தோணியின் எண்ணற்ற தகவல்களைக் குருஸ் விலாவாரியாகச் சொல்கிறார். தோணி கட்டுதல் பற்றி ஒரு அத்தியாயமே புகைப்படத்துடன் தரப்பட்டுள்ளது. எனினும் அது நாவலின் ஓட்டத்தைத் தடுக்கவில்லை. நாவலின் பக்கங்கள் முன்னோக்கிச் செல்லும்போது, அது நாவலில் நுழையத் திறந்துவைக்கப்பட்ட வாசல் என நமக்குப் புலனாகிறது. உதாரணமாக தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலில் முதல் நூற்றைம்பது பக்கங்கள் உயர்குடிகளின் விருந்து வைபவங்கள் மாறி மாறிக் காட்டப்படுகின்றன. அதில் ரஷ்யச் சக்கரவர்த்தியின் வீரமும் புகழும் போனபர்ட் (நெப்போலியன்) பற்றிய எரிச்சலும் (சிலருக்குப் பாராட்டுணர்வும் உண்டு) உரையாடல்களின் மூலம் நமக்குச் சொல்லப்படுகின்றன. அந்த விருந்துகளில் அவர்களின் மனங்களில் வெளிப்படும் கூறுதான் அந்த நாவலைக் கொண்டுசெல்லும் பல காரணிகளில் ஒன்றாக அமைவதை நம்மால் உணர முடியும்.



                                                               தோணியையும் கடலையும் பற்றிக் குருஸ் கூறத் தொடங்கினால் தகவல்களின் அடர்த்தி கூடிக்கொண்டேபோகிறது. கடலையும் காற்றையும் நேரடியாகவே அனுபவித்து அறிந்த ஒருவரால்தான் தோணியை ஆளுமை செய்ய முடியும். அதை எழுத்தில் கொண்டுவரவும் முடியும். புயலில் சிக்கித் தவித்து அலைவுறும் தோணியைக் காத்துக் கரையேற்றுவதை ஒரு சாகசமாகக் குருஸ் ஆக்கிக் காட்டுகிறார். இதை வாசிக்கையில் புயலிலே ஒரு தோணியில் அதன் நாயகன் பாண்டியன் புயலிலிருந்து கப்பலை மீட்கும் பகுதி நினைவில் பறந்து மறைந்தது. அது போலவே ஸ்டீம் என்ஜீன் கப்பலிலிருந்து தோணிக்குள் இறக்கப்பட்டு நூற்பாலைக்குள் ஆட்களால் கொண்டுசெல்லப்படும் பகுதி அக்கப்பலின் கேப்டன்போலவே நாமும் வியந்து மனத்தின் இமை மூடாமல் பார்த்து நிற்குமளவிற்கு வெகு சாமர்த்தியமாக எழுதப்பட்டுள்ளது. முத்துச்சிப்பியும் வலம்புரிச்சங்கும் எடுக்கும் பரதவர்கள் கடலுக்குள் மூச்சடக்கி மூழ்கிச் செல்லும் பயணங்கள் வாசகனைத் திகைக்கவைத்தாலும் அவை வயிற்றுப்பாட்டுக்காக எனத் தஸ்நேவிஸால் அறிய நேரும்போது அத்திகைப்பு மெல்லக் கரைந்து எஞ்சுவது பெருமூச்சு மட்டுமே. மிக நீண்ட பயணங்கள் மேற்கொள்ளும் தண்டல்கள் தொழில் கற்க வரும் சிறுவர்களைத் தம் இச்சைக்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் எனினும் அவர்களின் நினைவு முழுவதும் கரையிலுள்ள குடும்பங்களிலேயே கட்டப்பட்டுள்ளது. பரதவர்கள் சில விதிவிலக்குகள் நீங்கலாக மீண்டும் மீண்டும் கூலியாட்களாகவே தோணியில் நடைசெய்யச் செல்கிறார்கள். அதற்குச் சாதி சார்ந்த முரண்களும் மிதமிஞ்சிய குடியுமே இரு பெரும் காரணிகளாக இருப்பதைக் குருஸ் நாவலின் போக்கில் குறிப்புணர்த்திச் சொல்கிறார். (கிறிஸ்துவத்தைச் சாதியின் கரங்கள் நெரிப்பதை ஆ. சிவசுப்பிரமணியன் தன் கிறித்தவமும் சாதியும் நூலில் தக்க ஆவணங்களுடன் பதிவுசெய்திருக்கிறார்.)

                                                            குருஸ் காலத்தைப் பிரக்ஞைபூர்வமாகக் கையாண்டிருக்கிறார். அதனாலேயே வாசிப்பில் சலிப்பு ஏற்படுவதில்லை. நாவல் வளர்ந்து செல்லச் செல்லப் பாத்திரங்களும் சிறு வயதிலிருந்து படிப்படியாக வளர்ந்து சென்றபடியேயிருக்கின்றன. இதற்கு நேர்மாறாகப் பெருமாள்முருகனின் நாவல்களில் (முதல் மூன்று நாவல்கள்) வரும் சிறுவர்கள் அந்நாவல் முடியும்போதும் சிறுவர்களாகவேயிருக்கிறார்கள். பெருமாள்முருகனுக்கு காலம் என்பது இன்றிலிருந்து நாளையை நோக்கிச் செல்வது அல்லது அதற்கும் மறுநாளை நோக்கி. அவரது நாவல்களில் காலம் சில ஆண்டுகளுக்குள் உறைந்துபோய்விடுகிறது. மாறாக சா. கந்தசாமியின் பெரும்பாலான நாவல்களில் (தொலைந்துபோனவர்கள், அவன் ஆனது, சூர்யவம்சம்) சிறுவர்கள் வருகிறார்கள். அவர்கள் அதனதன் போக்கில் வளர்ந்து அந்தந்த வயதுகளுக்குரிய காலத்தின் நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள். காலம் நகராமல் நின்றும் நம்மை உலுக்கிய நாவலான யூமா. வாசுகியின் ரத்த உறவை இதற்கு விதிவிலக்காகச் சொல்லலாம். காலத்தைத் தன் வரலாற்றறிவு மூலம் நுட்பமாகக் கையாண்டு வாசகனைத் தத்தளிப்பும் நெருக்கடியும் சூழச் செய்த அற்புதமான படைப்பு குர் அதுல்ஜன் ஹைதரின் அக்னி நதி. குருஸின் பலமாக அவர் காலத்தை வெள்ளம்போல் பார்ப்பதையே கூற வேண்டும். அதில் அடித்துச் செல்லப்பட்டவை போக எஞ்சியது என்ன? என்ற அடிப்படையான வினாவிலிருந்து தன் படைப்பாக்கத்தின் பயணத்தைத் தொடங்குகிறார். அதனால்தான் குருஸால் எந்த உணர்ச்சிகளுக்கும் ஆட்படாமல் நிகழ்வுகளைத் தாண்டிச் செல்ல முடிகிறது. நாவலில் வரும் எவ்வளவோ மரணங்கள், இழப்புகள், வீழ்ச்சிகள் எதிலுமே அவர் மனம் ஊன்றாமல் அனாயசமாகத் தாண்டிச் சென்றுவிடுகிறார். சுதந்திரம் பெற்ற செய்திகூட ஒற்றை வரியில் முடிந்துபோகிறது. நல்ல தண்ணீர்த் தீவுப் பக்கம் பல பிணங்கள் மிதந்துவருவதை, அதை அவர் அலட்சியம் செய்வதை, ஒரு தகவல் போல் தருவதை, எண்ணிக்கொண்ட போது ஏமாற்றமாக இருந்தது.


                                                       வெவ்வேறு காலகட்டங்களின் ஊடாக நாவல் செல்லும்போது அக்காலத்தின் சுவடுகளைக் குருஸ் பதிவுசெய்திருக்கிறார். கொள்ளையனாக அரசால் முத்திரை குத்தப்பட்ட செம்புலிங்கம் சுடப்பட்டது, துணி ஆலைகள் கொற்கைக்கு வந்து அது நிலைபெற்ற வரலாறு, கொழும்பு நடை செல்லும் ஆட்களின் வழியாக இலங்கையில் சிறுகச் சிறுகத் தலை தூக்கும் இனவெறி பின் பூதாகரமாக வளர்ந்து தமிழர்களின் கடைகள் நொறுக்கப்படுதல் என அந்த நாட்களின் நிகழ்வுகளை ஆவணமாக அல்லாமல் நாவலுடன் இடைகலந்து சொல்கிறார். பல்வேறு மாற்றங்கள் உருவானதற்கான நம்பகத்தன்மைக்குக் குருஸ் நாவலுக்குள்ளேயே புகைப்படங்களை வழங்கியிருக்கிறார்.

                                              ஒரு அனாதையைப் போல ரயிலேறி கொற்கைவந்திறங்கும் பிலிப், தான் தங்கியிருக்கும் சித்தியின் வீட்டிலிருந்து அவளது நடத்தையால் விலகி ஓடி ஆண்டாமணியால் அடைக்கலம் தரப்பட்டுப் பின் தோணிக்குள் நுழைந்து பல நெருக்கடிகளை எதிர்கொண்டு போராடி முதலாளியாக ஆகும் சித்திரம் நாவலில் நன்றாக வந்துள்ளது. தன்னைக் காத்த ஆண்டாமணியாரிடம், கணவனை இழந்து நிற்கும் அவரது மகளை மணக்கச் சம்மதம் பெறும் பிலிப் காலச் சுழற்சியில் தன் மகள் தனியாளாக ஆகும்போது தன் தோணியில் தண்டலாக நடைக்குச் செல்லும் நிக்கோலசுக்கு, மகள் பூங்கோதையைத் தர மறுக்கிறார். எளிதில் விடை தேட முடியாத இது போன்ற புதிர்கள்தாம் வாசகனைப் பிரதியிடம் ஈடுபாடுகொள்ளச் செய்யக் கூடியவை. வெறுமையும் கசப்புமாகப் பிலிப் தன் தள்ளாத வயதில் கொற்கையிலிருந்து நீங்கி, பின் கொற்கைக்குத் திரும்புகையில் உட்கார்ந்த நிலையிலேயே உயிர் நீங்கியவராக வந்து சேரும்போது நாவல் முடிகிறது. இதனூடாகக் கொற்கையைச் சார்ந்து வாழும் பல நூறு குடும்பங்களின் கதைகள் ஒன்றுக்கொன்று இணைந்தும் விலகியும் வந்துபோய்க்கொண்டிருக்கின்றன. பிலிப்புக்குப் பிறகு சில பக்கங்களுக்குள் வந்துபோகும் காசியை அவன் செய்கையால் மறக்க முடியாமல்போகிறது. பிரிட்டிஷ் காலம் தொடங்கி நாவல் முடியும் ஆண்டுவரை (2000) நாவலுக்குள் நிறைவேறாத காதல்கள் ஒரு சாபம்போல, துடைத்தழிக்க முடியாத கண்ணீர்போலப் பின்தொடர்ந்து வந்தபடியுள்ளன. விதிவிலக்கு சில்வெஸ்டர் மார்க்ரெட். இதில் மனதின் அடிவைப்புகளை நுட்பமாகவும் இரண்டே பக்கங்களுக்குள் சுருக்கமாகவும் குருஸ் கூறிவிடுகிறார்.

                    முறை தவறிய பாலியல் உறவுகள் குருஸின் முதல் நாவலைப் போலவே இதிலும் இடம்பெறுகின்றன. நாவலில் வசவுகளை உதிர்க்காத ஆண் பாத்திரங்களே இல்லை எனக் கூறிவிடலாம். அந்த வசவுகள் எப்போதும் பெண்களின் பிறப்புறுப்பைக் குறிப்பதாகவே வெளிப்படுகின்றன. அதன்மீது ஆண்களுக்குள்ளது வன்மமா? அல்லது அதைக் கூறுவதன் வழி ஒருவிதத் திருப்தியை அடைகிறார்களா? எவ்வாறு எல்லாச் சமூகங்களுக்குள்ளும் இவ்வசவுகள் ஊடுறுவின? என்பன போன்ற கேள்விகள் உளவியலாளர்களிடம் கையளிக்கப்பட வேண்டியவை அல்லது ஒரு நுட்பமான படைப்பாளியால் அணுகப்பட வேண்டியவை.

                                                   வலுவான பெண் பாத்திரங்களே நாவலில் இல்லை என்பதை முக்கியமான குறையாகச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. கடலைத் தன் ஜீவாதார மார்க்கமாகக் கொண்டுள்ள பரதவச் சமூகத்தில் வீட்டை ஆள்பவர்களாகப் பெண்களே இருக்கக்கூடும். அப்படியிருந்தும் அதிலிருந்து ஒருவரும் மேலெழுந்து வரவில்லை. ஆனால் தீமையின் உருவங்களாகக் குருஸால் எழுதப்பட்டிருக்கும் ரஞ்சிதம், அருள்மொழி, திரேஸா, சலேட்டம்மாள் போன்றவர்கள் மனதில் பதியுமளவிற்கு மென்மையானவர்களான சலோமி, மதலேன், விர்ஜீத், பூங்கோதை ஆகியோர் மனதில் ஊன்றவில்லை. மதலேன் தற்கொலைசெய்துகொள்ளும் காட்சி நாடகத்தனமாக உள்ளது. அதுபோல ரேவதி, ரோனால்ட்மேல் காதல் கொள்வதற்குக் கூறப்படும் காரணங்கள் அபத்தத் தமிழ் சினிமாவை விஞ்சக்கூடியவையாக இருக்கின்றன. ஒரு தேர்ந்த எடிட்டர் நாவலைச் செப்பனிட்டிருந்தால் இன்னும் சிறப்பாக நாவல் வந்திருக்கும்.

                                                  பரதவர்களின் தெய்வமாக அவர்களைக் கட்டுப்படுத்தும் சக்தியாகப் பெண் தெய்வங்களே உள்ளன. சந்தனமாரியும் குமரியன்னையும் பரதவக் குடியினரின் முதன்மைக் கடவுளர்களாக வணங்கப்படுகின்றனர். அவர்கள் கத்தோலிக்கத்தைத் தழுவிய பின் தொழும் மேரி மாதாவைக்கூடச் சந்தனமாரியின் மாற்றுவடிவமாகவே எண்ணிக்கொள்கிறார்கள்.

                                                       பரதவர்களைப் போலவே கொற்கையில் பல்வேறு சாதியினர் தங்களுக்குள் கொண்டும் கொடுத்தும் வஞ்சம் செய்தும் அவரவர்களின் படிநிலைகளை உயர்த்திக்கொள்கிறார்கள். சிங்கராயர்கள், பல்டோனாக்கள், தல்மெய்தாகள், ரிபேரோக்கள், நாடார்கள், பிள்ளைகள், தலித்துகள் என விரிவு கொள்ளும் இந்நாவல் அவர்களின் பரந்துபட்ட வாழ்க்கையை நெருங்கிச் சென்று கூறியுள்ளது. முற்பகுதி முழுக்கத் தோணித் தொழிலில், கொற்கையில் செல்வாக்குப் பெற்று விளங்கும் ரிபேரோ, தல்மெஸ்தா, சிங்கராயர் குடும்பம் அதன் முதல் தலைமுறையில் உச்சம் பெற்று, நிலைத்து நின்று, பின் அடுத்தடுத்த சரிவுகளில் கீழிறங்கி வீழ்ச்சியுறுவதைக் கலைப்பாங்கோடு கூறுவதே இந்நாவல் முக்கியத்துவமடைவதற்குக் காரணமாக அமைகிறது. நாவலில் ஆசிரியர் குறுக்கீடு நிகழாததாலேயே இது சாத்தியமாகியுள்ளது.


                                                    ஒரு காலத்தில் துறைமுகத்தில் கோலோச்சிய பிரான்சிஸ் தல்மெய்தாவின் குடும்பம் படோடோபங்களில் சிக்கிச் சீரழிந்துபோக அவருடைய பேரன் அதே கொற்கையில் கஞ்சா விற்ற வழக்கில் கைதாகிறான். பிரிட்டிஷ் அரசிக்கு பியோனோ கற்றுத்தந்த அவரது மகள் நிறைவேறாத காதலும் அண்ணனின் அவமதிப்புமாகக் காலத்தைக் கழித்து ஒரு சிறிய வீட்டினுள் கிழவியாகக் கண்டெடுக்கப்படுகிறார். தோணி முதலாளியாக முறுக்கித் திரிந்த சிங்கராயரின் தலைமுறையோ மூன்று மிதியடிகளை ஒன்றாகத் தைத்துப் போடும் நிலைக்குக் கீழிறங்குகிறது. ரிபேரோக்களின் செல்வாக்கு குறைந்துகொண்டே வந்து பின் பொம்மைகளைப் போல ஆகிறார்கள். பல்டோனாக்களும் காலத்தின் கதியில் தங்களைத் தக்கவைத்துக்கொள்ள முயன்றுகொண்டேயிருக்கிறார்கள்.

                                                    பரதவக்குடித் தலைவன் பாண்டியபதியின் அனுமதியின்றே தங்கத் தேர் பவனி தொடங்கிவிட, அவர் மதிப்பு குறைந்துவிட்டதை உணர்ந்து தன் மணிமுடியை இறக்கிவைத்துவிட்டுக் கண்ணீருடன் அரண்மனை சேர்கிறார். வெகுகாலத்துக்குப் பின் அந்த அரண்மனை ஸ்டுடியோவாக வாடகைக்கு விடப்படும் அவலத்தைச் சந்திக்கிறது. இத்தகு வீழ்ச்சிக்குப் பின்னுள்ள மனிதர்களின் அபிலாஷைகள், கனவுகள், ஏக்கங்களைக் காலம் தன் பின்னங்காலால் தட்டிவிட்டு முன்னேறுவதைக் குருஸ் கொற்கையில் சிறப்பாகப் படைத்திருக்கிறார். பிலிப்கூட மனதளவில் வீழ்ச்சியையே எதிர்கொள்கிறார். பெருந்தனக்காரராக வாழ்ந்த தாணுமாலயப் பிள்ளையின் மகன் ஓட்டலில் மேசை துடைக்க, மருமகளோ சித்தாள் வேலைக்குச் சென்று சோரம் போகிறாள். ஒரு காலத்தில் மேசைக்காரர்களோடு (பரதவ வியாபாரிகளில் உயர்குடியினர்) உறவு வைத்துக்கொள்ளக் கொற்கையே ஏங்குகிறது. அந்தக் குடும்பத்திலிருந்து வந்த மரியசீலி, தன் மகனாலேயே குரூரமாகக் கொலைசெய்யப்படுகிறாள். மாறாக, நாடார்கள் தனிவங்கி அளவிற்குப் பொருளாதார மேன்மையை அடைகிறார்கள். தற்கொலை எண்ணத்துடன் சுற்றும் ஆண்டி நாடார் பின் தோணி முதலாளியாகிறார். முத்துலிங்க நாடாரின் வாரிசுகள் வீழ்ச்சியுறாமல் பிசிறுதட்டாமலும் ஒரு நதிபோல இரு கரைகளையும் தழுவியபடி சென்றுகொண்டேயிருக்கிறார்கள். விதிவிலக்கு சுந்தர கிருஷ்ணன் மற்றும் ராஜாமணி.


                                                        
                                              ஜோ டி குருஸ் தன் இரண்டாம் நாவலான கொற்கையைக் கலை வெளிப்பாட்டுடன் படைத்தளித்திருக்கிறார். அவருடைய நாவல் கனவுகள் மேலும் நகர்ந்து முன்னேறும் என உறுதியாகக் கூறுமளவிற்குப் பெரும் நம்பிக்கையைத் தந்திருக்கிறார். பிழைகள் அற்ற பதிப்பாகக் கொற்கையைக் காலச்சுவடு சிறப்பாக வெளியிட்டிருக்கிறது.