அகவுலகின் முதல் பயணி
பிரக்ஞை சுடர் மாதிரி எரிஞ்சிண்டே இருக்கணும், உள் மனசிலே.
- மௌனி
எப்போதும் ஒரு மனிதன் அஞ்சுவது அஃறிணைகளைக் கண்டல்ல. சில நேரங்களில் இயற்கை நிகழ்த்தும் ஊழிக் கூத்துகளைப் பார்த்துகூட அல்ல. அவன் பயங்கொள்வது மற்றொரு மனிதனைக் கண்டுதான். பெரும் வியப்பல்லவா இது? தான் கூடிவாழத் தொடங்கிய ஆதி நாள் முதல் அனுதினமும் உறவாடிக் களிக்கும் ஒருவனைப் பற்றி அவன் அறிந்திருப்பது, வெளியே நின்று நதியைக் காண்பதுபோலத்தான். இருப்பினுங்கூட அவன் அதில் இறங்கி நீராடலாம், குதூகலிக்கலாம், அந்தரங்கமாகக் கண்ணீரும் உகுக்கலாம். ஆனால் அதன் ஆழத்தை மட்டும் அவன் ஒரு நாளும் காணப்போவதில்லை. துணிந்து மூழ்கிச் சென்று திரும்பிவரும் சிலரும் காண்பது அதன் பிரம்மாண்டத்தின் ஒரு பகுதியையே. அதுபோலக் கணக்கற்ற ஆழங்களைத் தன்னுள்ளாகக் கொண்டு அது ஓடிக்கொண்டிருக்கும். இங்குதான் படைப்பாளியின் பிரசன்னம் நிகழ்கிறது. மனதின் அடியறிய முடியாத ஆழம் நோக்கி இரு கரைகளுக்குமிடையே அலைக்கழிக்கப்பட்ட மனத்துடன் நிம்மதியின்மையோடு அலைந்துகொண்டிருக்கும் படைப்பாளியைக் கண்டு ஒரு ஞானி மெல்லிய புன்னகையை உதிர்த்துவிட்டு அந்நதியின் மீதே நடந்து சென்றுவிடுவார். பின், ஒரு நாள் உற்சாகம் நடையில் கூடியிருக்க, முகத்தில் கண்டடைந்த பரவசத்தோடு அந்த ஞானியை அப்படைப்பாளி தாண்டிச் செல்வான். அப்போது அவர் எழுந்து திடுக்கிட்டுத் தன் முன் ஓடிக்கொண்டிருந்த நதி எங்கே எனக் குழம்பி நிற்பார். அந்த நதியையே சுருட்டித் தன் எழுத்தென்னும் கமண்டலத்துள் அடைத்து அவன் எடுத்துச் சென்றுகொண்டிருப்பான். அவருக்கு உண்மை உறைக்கும்போது அவன் தொடுவானத்திற்கடியில் முதுகு அசையப் புள்ளியாக மாறிக் கரைந்துபோவதைக் காண்பார்.
நவீனத் தமிழ் இலக்கியத்தில் அதுபோல மனம் நோக்கி இறங்கிச் சென்ற எழுத்தின் முதல் புள்ளியின் பெயர் மௌனி. அவர்தான் வாசிப்பதையும் பயிற்சியாக ஆக்கியவர். கூறியவற்றின் பொருளைக்(Meaning) காட்டிலும் கூறப்படாததில் அடங்கியுள்ள அர்த்தங்களை நோக்கிச் செல்வதற்கான வெளிகளை வாசகனுக்கு உருவாக்கியவர் அவர். பூட்டப்பட்ட மனக் கதவுகளுக்கு அப்பாலுள்ள நிகழ்வுகளுக்குத் தன் எழுத்தில் பிரதானமான பங்கைத் - முக்கால் சதவீதத்திற்கும் அதிகமாக - தந்தவர் மௌனி. அதற்குரிய திறவுகோல்களை அவர் முன்வந்து வழங்குவதுமில்லை. சிரத்தையும் ஆர்வமும் கொண்ட வாசகன் தன் நுட்பமான ரசனையால் ‘வசீகரம் மிகக்கொண்டு தாக்கும்’ அவ்வுலகுக்குள் நுழைந்துவிடுவான். மெளனியின் படைப்புகளில்,தூல உலகத்திலிருப்பவை அவரது கதைகளிலுள்ள பாத்திரங்களின் மனச்சலனங்களுக்கு ஏற்ப சூட்சும உலகில் வேறொன்றை நுட்பமாக உணர்த்தும் குறியீடுகளாகத் தளமாற்றம் அடைந்துவிடுவதை அவ்வாசகன் உய்த்துணர்வான்.
மிகக் கறாரான சுயவிமர்சனப் பிரக்ஞை கொண்ட மௌனியின்
- அச்சுக்குக் கதைகள் செல்லும்வரை அதை மீண்டும் மீண்டும் திருத்தி மெருகேற்றும் - இலக்கியப் பிரவேசம் ஒரு விபத்துபோலத்தான் நிகழ்ந்தது. தொலைந்துபோன ஒரு குறு நாவலைத் தவிர்த்துவிட்டால் ஒருவித மன எழுச்சிக்கு ஆட்பட்டு எழுதி மணிக்கொடிக்கு அவர் அனுப்பிய ஆறு கதைகளோடு அவரது படைப்பிலக்கியச் செயல்பாடு சம்பவித்தது.
ஒரு புதிய குரலைக் கண்டெடுத்த பெருமையோடு தலைப்பின்றி வந்து சேர்ந்த அக்கதைகளுக்குத் தலைப்பையும் எழுதியவருக்கான புனைபெயரையும் தந்து வெளியிட்டவர் பி.எஸ். ராமையா. மௌனியைத் திருமூலரோடு ஒப்பிட்டு அவரை முதன்முதலில் பல்லக்கில் ஏற்றியவர் புதுமைப்பித்தன். அவரது சொற்களை இன்றுவரை புனிதக் கடமைபோலச் சுமந்துவரும் வாசகர்கள் அநேகம் பேர் இருக்கக்கூடும். ஆயினும் தனக்கு வாய்ப்பு கிடைத்த போது எழுதியும் கிடைக்காத போது பிறருடன் பிரஸ்தாபித்தும் மௌனியின் கதைகளின் மேல் கூடுதல் ஒளியை ஏற்றியவர் க.நா.சு.
மௌனியின் படைப்பாக்கங்களில் தொடர்ந்து தத்தளிப்பும் மனச்சஞ்சாரமும் கொண்ட இளைஞனது (சேகரன்?) அகவுலகத்தின் மறைக்கப்பட்ட பக்கங்கள் நம்முன் விரிகின்றன. அவன் எப்போதும் காதலால் கைவிடப்பட்ட கைப்பு நிலையோடு கூடிய அமைதியுடன் துயரம் நிரம்பியவனாக இருக்கிறான். நிறைவேறாமல்போவதாலேயே அக்காதல் சாஸ்வதம் அடைகிறது போலும். அந்த மகத்தான உணர்ச்சி, ஒரே மனத்தில் பரவசத்தையும் துக்கத்தையும் மாற்றி மாற்றிப் பீறிடச் செய்யும் விநோத ஊற்று என அவரது படைப்புலகம் நமக்குக் காட்டுகிறது. அது போலவே பிரிவும் மரணமும் விலக்க முடியாத நிரந்தர நிழல்போல அவர் கதைகளில் கவிழ்ந்திருக்கின்றன. அவருடைய ஆண்கள், பெண்களின் நினைவுகளுக்குள் - காதலில் –மூழ்கிச் சென்று அல்லல்பட்டு அதிலிருந்து மீளும் வழிகளைக் கண்டுணராமல் அதற்குள்ளேயே லயித்துக்கிடப்பதை (அழியாச் சுடர், பிரபஞ்ச கானம்) ஒருவித இன்பம் என நினைக்கின்றனர். இதிலிருந்து மேலும் முன்னோக்கி நகர்ந்து ‘சுசீலா’வால் மனப்பித்துக்கொண்டவனாகக் கனவிலும் நனவிலும் உழலும் நகுலனின் உலகம் இன்னும் ஆழமான ஒன்றே.
‘ஏன்’ என்ற தன் முதல்கதையிலேயே - பிரசுரம் சார்ந்து - மௌனி, இதற்குப் பிறகு தான் உருவாக்கவிருந்த மன உலகம் குறித்து, அவர்களது அல்லாடல்கள் பற்றிக் குறிப்புணர்த்திவிடுகிறார். செய்நேர்த்தியும் நுட்பமான படிமங்களும் கொண்ட அவரது மிகச் சிறந்த கதைகளான ‘அழியாச் சுடர்’, ‘பிரபஞ்ச கானம்’ போன்றவற்றுக்கான முதல் சுவடாக இக்கதையையே கருத வேண்டும். பெண்களின் மீதான ஆண்களது உறவு ஒரு பார்வையாலோ சிறு உரையாட லாலோ முடிந்துபோகக்கூடியது. அதற்குப் பின் ஆண்களின் மனம் புற உலகிலிருந்து தன்னை விடுவித்து மனத்தின் கூடாரங்களுக்குள் சென்று சேர்கிறது. பின்னர் அக்குரல் அங்கு மட்டுப்படுத்தப்பட்டு - இருவருக்குமே - அமுங்கிய தொனியில் கவித்துவச் செறிவுடன் அந்தக் குரல் ஒலிப்பதாலேயே அவரது கதைகள் நித்தியத்துவத்தைப் பெறுகின்றன.
அவரது கதைகளிலேயே, புற உலகில் நிகழும் சம்பவங்கள் அனைத்தையும் தன் மொழியின் மூலம் குறியீடுகளாக மாற்றிக் காட்டும், மிக முக்கியமான சிறுகதை ‘மாறுதல்’. கலையின் சூட்சுமம் கூடிய கதையிது. மனைவியின் மரணம் உண்டாக்கும் வெற்றிடமும் அதன் வழியாகப் பேதலிப்பும் தோன்றும்போது, மன ஊசலாட்டங்களுக்கு ஏற்பவே கண்முன் ஓடிக்கொண்டி ருக்கும் உலகம் புரிந்துகொள்ளப்படுகிறது என்னும் சிக்கலான உளவியல்கூறு இக்கதையில் அற்புதமாகத் தீட்டிக்காட்டப்பட்டுள்ளது. காகம், இரட்டை மாட்டுவண்டி, மூங்கில் கழியின் இரு முனைகளிலும் தொங்கும் பதநீர்க் குடங்கள் எனச் சகலமும் குறியீடுகளாக மாற்றமடைந்துவிடுகின்றன. மௌனிக்குச் சமூகப் பிரக்ஞை இல்லை என்னும் குறைபட்ட பல்லவியை இங்கே மீண்டும் வாசிக்க முடியாது. ஏனெனில் மௌனியின் உலகம் அக்கேள்வி நிற்கும் திசையைக் கூடப் பாராமல் திரும்பி நிற்கக்கூடியது.
ஒருவரில் மற்றொருவரின் சாயலைக் காண்பது அவரது பாத்திரங்களின் இயல்புபோலும். இந்த ஆள்மாறாட்டத்தை சுவாரஸ்யமாக ஆக்கிக்காட்டும் ‘மாறாட்டம்’ கதை முடிந்தபின் எவ்விதச் சலனத்தையும் வாசகனுக்கு உண்டாக்குவதில்லை. ஆனால் இக்கதையின் முதிர்ந்த வடிவம்போல எழுதப்பட்டிருக்கும் ‘அத்துவான வெளி’ மீண்டும் மீண்டும் வாசித்த பிறகே எதன் குறியீடாக அம்மரம் அங்குத் திடுமெனத் தோற்றம் தந்து அதன் அப்போதைய முகத்தை அவனுக்குக் காட்டுகிறது என்பதை நிதானத்துடன் அசைபோடும்போதுதான் நமக்கு விளங்குகிறது. வாசித்த பின்னும் அக்கதையில் எட்டித் தொட்டுவிட முடியாத கிளைகள் அந்தர வெளியில் அசை வதையும் வாசகன் உணரக்கூடும். தன் மனைவி ‘சுசீலா’வின் சாயலைப் பட்டணத்துச் ‘சுசீலா’விடம் கண்டு ஊர் திரும்புதலை மறந்து கூற முடியாத காதலில் - இருவருக்குமே - உழன்று, இன்புற்றுப் பின் திரும்ப முடியாத உலகிற்குச் சென்றுவிடும் சேகரனைக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் ‘பிரக்ஞை வெளியில்’ கதையையும் இங்கு நினைவூட்டிக்கொள்ளலாம். ஆனால் இக்கதையை மாறாட்டம் சார்ந்த ஒன்றாகச் சுருக்கிவிட முடியாது.
கடற்கரையும் கோவிலும் சங்கீதமும் தெருக்களும் மௌனி யின் கதைகளில் முக்கியமான இடத்தைப் பெற்றுவிடுகின்றன. பெரும்பான்மையான கதைகளில் இவற்றைத் தன் பிரத்தியேகமான குறியீடாக மாற்றிவிடுகிறார். இவரது கதைகளுக்குள் வரும் தாசிகள் பாந்தமானவர்கள். நாசூக்கும் மிருதுவும் கொண்டிருப்பதாலேயே அந்த ஆண்களின் மன அலைவரிசைகளின் தடுமாற்றங்களுக்குக் காரணப்புள்ளிகளாக அவர்கள் ஆகிவிடுகிறார்கள். பெரும்பான்மையான கதாபாத்திரங்களுக்குப் பெயர்களேதுமின்றி இயங்கும் இக்கதையுலகம், நம் ஸ்திதியில் குறுக்கீட்டை நிகழ்த்திச் சில கணங்கள் அந்த நிமிடத்திலேயே நம்மை உறையச்செய்யுமளவிற்கு வல்லமை கொண்டவை.
நேரடியான கதைக்களன்களைக் கொண்ட ‘சாவில் பிறந்த சிருஷ்டி’, ‘இந்நேரம் இந்நேரம்’, ‘மிஸ்டேக்’ ஆகியவற்றில்- அவரது இலக்கிய ஆக்கங்களிலேயே பலவீனமான ‘மிஸ்டேக்’கைத் தவிர்த்துவிட்டால் மீதி இரண்டு கதைகளிலும்- நுட்பமாக சுப்பய்யரின் மனக்கசடுகளைத் துழாவிச் செல்லும் ‘சாவில் பிறந்த சிருஷ்டி’யை வாசகனால் எளிதில் மறந்துவிட முடியாது. இக்கதையை வாசிக்கும்போது ஜானகிராமனின் ‘பாயசம்’ கதையின் நினைவு வந்தது. (பாயசத்தில் வரும்) சாமநாதுவின் வன்மம் சுப்பய்யருடையதைவிடவும் மூர்க்கமானது. உக்கிரம் நிரம்பியது. இரு கதைகளுமே அதனதன் தளத்தில் சிறப்பாக எழுதப்பட்டிருப்பினும்கூட ஜானகிராமனின் கலை மௌனியை விடவும் மேலானது.
ஏனென்றால் மௌனியின் உலகம் விஸ்தாரமானது அல்ல. அது எல்லைக்குட்பட்டது. இந்தக் குறுகிய வெளிகளுக்குள்ளேயே அவரால் சிறப்பாகச் செயல்பட முடிந்திருக்கிறது. மௌனியின் சமகாலத்தவரான புதுமைப்பித்தன் ஒரு மேதை. அவரது ஆவேசமும் பரீட்சார்த்த முயற்சிகளும் கலை ஆற்றலும் மௌனிக்குக் கைகூடவில்லை. தன் கதை யொன்றுக்கு ‘மனக்குகை ஓவியங்கள்’ என அப்போதே அர்த்தச் செறிவுடன் தலைப்பிட்ட மேதமை புதுமைப்பித்த னுடையது. மௌனி மன உணர்வுகளைக் காகிதத்தில் கடத்த ஒருவிதத் திணறலைச் சந்திக்கும்போது, அதைப் புதுமைப்பித்தன் அனாயாசமாகக் கையாள்வதை அவரது ஆளுமையின் தனித்த கூறு எனலாம். மௌனியின் உரைநடை தெளிவின்மையைக்கொண்டு இயங்கக்கூடியது. அது சிலசமயம், பொருட்சிக்கலுக்கு இட்டுச் சென்றாலும்கூடக் கதை நிகழும் சூழல் உண்டாக்கும் மனத்திரிபுகளின் வரிவடிவம் என்றே அதைக் கருத வேண்டும். பல தருணங்களில் அதுதான் அந்த வரிகளுக்கு அபூர்வ ஒளியைத் தருகிறது. சில குறிப்பிட்ட ஆண்டுகள் மட்டுமே தீவிரமாகச் செயல்பட்டுப் பிறகு, அவ்வப்போது ஓரிரு கதைகளை எழுதியதோடு தன் படைப் பாக்கத் தொழிலை மௌனி நிறுத்திவிட்டது நவீனத் தமிழுக்கு இழப்புதான். அவர் மேலும் தீவிரமாகச் செயல்பட்டிருந்தால் அவருடைய இடம் வேறொன்றாகவும் மாறியிருக்க வாய்ப்புண்டு.
மௌனியை உன்னதக் கலைஞன் என்றும் பம்மாத்துக்காரர் என்றும் இருவேறு நிலைகள் கொண்ட விமர்சனங்கள் அவற்றிற்குரிய நியாயங்களோடு தமிழ்ச் சூழலில் பல காலமாக நிலவிவருகின்றன. இந்த மாறுபட்ட கருத்துருவங்களுக்கான இடங்களைத் தன் படைப்புகளிலேயே மௌனி விட்டுச்சென்றிருக்கிறார். வாசிப்பில் நம்பிக்கையும் சுயமதிப்பீடுகளைத் தம் ரசனை மூலம் உருவாக்கிக்கொள்வதில் நாட்டமும் கொண்ட வாசகர்களே இலக்கியத்தைச் செழுமைப்படுத்துகிறார்கள். பிறர் கூறியதைத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள் அல்ல அவர்கள். முன்செல்வதின் நிழலைத் தலைகுனிந்து தொடரும் செம்மறியாட்டுக் குணத்தைத் தேர்ச்சிமிக்க படைப்பாளியோ நுட்பமான வாசகனோ தன்னிடம் அண்டவிடுவதில்லை.
மௌனியின் கதையொன்றில் வரும் வரியை (வாழ்க்கை ஒரு உன்னத எழுச்சி - பிரபஞ்ச கானம்) சற்றே இப்படி மாற்றிச் சொல்லத் தோன்றுகிறது. பல சமயங்களில் இலக்கியமும் ஒரு உன்னத மன எழுச்சி அல்லவா?
(காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியிடான மெளனி படைப்புகள்-முழுத்தொகுப்பு -க்கு எழுதிய முன்னுரை -)
No comments:
Post a Comment