Sunday, August 3, 2014

காலச்சுவடு 150- தொடரும் பயணம்
கட்டுரை

விரிவும் ஆழமும் தேடி..*ஒன்றரை மணி நேரம் என்பது அவ்வளவு சலிப்பூட்டக்கூடிய கால அளவு அல்ல. எனினும், அது தினமும் தொடரும் ஒரு பயண நேரமெனில் அது அசதியையும் மந்தத் தன்மையையும் ஏற்படுத்திச் சலிப்பூட்டுமொன்றாக மெல்ல மாற்றிவிடும். அவிநாசிக்கு அண்மையிலிருக்கும் திருப்பூரி லிருந்தும் கோவையிலிருந்தும் சேர்க்கைக் கடிதங்கள் வந்திருந்தபோதும் கல்லூரிக்கென கோபிச்செட்டிபாளையம் சென்றதை தர்க்கரீதியாக விளக்கக் காரணிகள் ஏதும் என்னிடமில்லை. முன்னிருக்கைகாரிகள் தங்கள் புன்முறுவலை மறைக்கத் தெரியாமல் மறைத்து திரும்பிப் பார்க்கும்போது முடி காற்றில் பறக்க படிக்கட்டுகளில் ஒற்றைக் காலில் தொங்கி சில சாகசங்கள் செய்தவாறு செல்லும் காலைநேரப் பயணங்களைவிட உற்சாகம் வடிந்துபோன மாலை நேரப் பயணங்கள்தான் எரிச்சலைத் தரும். பேருந்தில் கல்லூரித் தோழனுடன் இளையராஜாவின் மகத்துவம் பற்றி அவர் ரஹ்மானைவிட எவ்வளவு மடங்கு உயர்ந்தவர் என்பதைக் குறித்து (அவன் ரஹ்மானின் ரசிகன்) அவர் ஏன் மேதை என்பதைப் பற்றி வாயில் நுரை தள்ளப் பேசிய பின்பும் நேரம் மிச்சமிருந்தது. அந்த நேரத்தைக் கடந்து செல்லவே ஆனந்த விகடனும் குமுதமும் வாங்கத் தொடங்கினேன். அதற்கு முன் அப்படியொரு பழக்கமே எனக்கிருந்ததில்லை. அது, விட முடியாத பழக்கமாகத் தொடரும் என அப்போது நினைக்கவேயில்லை.


இரண்டாயிராம் (2000) ஆண்டில் குமுதம் தீபாவளிக்கென வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்களில் இலக்கியத்திற்கென ஒன்றும் இருந்தது. முன்னோடிகளின் ஆசி அருளப்பட்ட சுபதினத்தின் பொன்வேளையில் அதைத் திறந்தேன். ஆனால் ஒன்றும் புரியவில்லை. அந்த இதழில்தான் சுராவின் ப்ரெண்ட்ஸ்என்னும் பகுதி (நினைவோடை வரிசையின் தொடக்கப்புள்ளி) நடுப்பக்கத்தில் அவருடைய புகைப்படத்துடன் வெளியாகியிருந்தது. மேலும் ராஜமார்த்தாண்டன், சி. மோகன், வெங்கட் சாமிநாதன், சா. கந்தசாமி போன்றோரின் சிறந்த பத்து தமிழ் நாவல்களின் பட்டியலும் வெளியாகியிருந்தது. இவர்கள் அனைவரின் பட்டியலிலும் பொதுவான ஒரு பெயரும் ஒரு நாவலும் இருந்தது. அந்தப் பெயர் சுந்தர ராமசாமி. அந்த நாவல் ஜே.ஜே. சில குறிப்புகள். (சா. கந்தசாமி மட்டும் ஒரு புளியமரத்தின் கதையைப் பரிந்துரைத்திருந்தார்). அதே இதழில் வெளியாகியிருந்த ஜெயமோகனின் பேட்டியில் அவர் சுரா. பற்றிக் கூறியிருந்தவை மேலும் ஆர்வத்தைத் தூண்டின. மேலே குறிப்பிட்ட எழுத்தாளர்களைப் பற்றித் துளியும் அறிந்திராத அந்நாளில், ஒரு வித எதிர்பார்ப்பும் உள்ளுணர்வும் உந்த எங்களூர் நூலகம் சென்று உறுப்பினராக இணைந்து அட்டை பெற்று தேடத்தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஜே.ஜே.கிடைத்தது. அதே வேகத்தில் எடுத்து வந்து படித்ததும் இலக்கிய மோட்சமேதும் கிட்டவில்லை. கிட்டவில்லை யென்றால் கூடப் பரவாயில்லை. யாரோ ஒருவர் வேகமாகத் தட்டாமாலை சுற்றி விட்டுவிட்டு நம்மை நோக்கிப் புன்னகையுடன் நிற்பது போல இருந்தது. புரியாமை குழப்பத்தில் தள்ளியபோதும் அதற்கு முன் எந்த இலக்கியப் படைப்போடும் கிஞ்சித்தும் பரிச்சயம் இல்லாதது மண்டையில் உறைக்கவே சமாதானம் அடைந்தேன். அப்போதும் சில வெளிச்சங்களை (மாட்டுக்குச் சொறிந்து கொடு, மனிதனுக்குச் சொறிந்து கொடுக்காதேஎன்ற கூரிய விமர்சனத்தையும் பார்க்கப் பார்க்க பெண் போலவே தோன்றக்கூடியவள் அவள்என்னும் இடக்கையும்) மனம் கண்டுகொள்ளத் தவறவில்லை. மூன்றாவது வாசிப்பின் பின்பே அந்நாவலில் உள்ளார்ந்து கிடக்கும் அர்த்தங்களை நோக்கிச் சென்றேன். அதற்கும் சிலபல மாதங்கள் கழிந்த பின்பு ஒரு மதியவேளையில் ஒருநாளிதழில் (தினமலர்) காலச்சுவடு இதழ் பற்றிய விளம்பரத்தைக் கண்டேன். இதைச் சற்றும் எதிர்பார்த் திருக்கவில்லை. சொடுக்கப்பட்டவனாக அந்த இதழைத் தேடத் துவங்கினேன். இருதின அலைச்சல்களுக்கும் விசாரிப்புகளுக்கும் பிறகு ஒரு கடைக்காரர் அந்தக் காலச்சுவடு இதழை உள்ளேயிருந்து எடுத்து வந்து தந்தார். இராஜேந்திர சோழனின் நேர்காணல் வெளியாகியிருந்த அந்த இதழ்தான் நான் கண்ட முதல் காலச்சுவடு இதழ். ஊர் நூலகத்தில் அகஸ்மாத்தமாக ஜே.ஜே.வைப் படித்த சில மாதங்களுக்குள்ளாகவே சுராவின் விரிவும் ஆழமும் தேடிஎன்னும் நூல் கிடைத்தது. அதன் வழியாகவே நவீனத் தமிழ்படைப்பாளிகளின் பட்டியலைத் தயார் செய்து வாசிக்கத் தொடங்கினேன். பின்பு இடைவெளியற்ற தேடலில் பழைய இதழ்கள், முன்னோடிகளின் ஆக்கங்கள், தமிழ்ப் படைப்புலகை ஒளிர வைத்த படைப்பாளிகள் எனத் தேடிச்சென்று வாசித்தேன்.


ஜனநாயகம் மேஜையைச் சுற்றிலும் நாற்காலிகளைப் போடும்போது அதிகாரம் மேஜையின் மேல் நாற்காலியைப் போடுகிறது. ஒற்றை மையமும் ஒற்றைக் குரலுமே ஒட்டு மொத்தக் குரலாகப் பாவிக்கப்படும் இலக்கியக் கூட்டங்களுக்கு மாறாக பல விவாதங்களின் வழி செல்லும் நிகழ்வுகளை காலச்சுவடு ஒருங்கிணைத்திருக்கிறது. அவ்வாறான ஒரு கூட்டத்தில், எழுதி எதுவும் பெரிதாகப் பிரசுரமாகியிருக்காத, இலக்கியத்துடன் வாசக உறவு மட்டுமே கொண்ட ஒரு பையனுக்கு இருபதுக்கும் மேற்பட்ட படைப்பாளிகள் பங்கு பெற்ற நாவல் கருத்தரங்கில்’ (தொடக்க உரை-சுரா) கிடங்குத் தெருநாவல் பற்றி கட்டுரை படிக்கக் கேட்டுக் கடிதம் வந்தபோது மகிழ்ச்சியோடு பதட்டமும் கூடிக்கலந்தது துல்லியமாக நினைவிருக்கிறது. அன்று அது அளித்த நம்பிக்கையை இப்போது விளக்குவது கடினம்தான். வாசக இருக்கையிலிருந்து எழுந்து ஒலிப்பெருக்கி முன் நின்று வாசகர்களை நோக்கிப் பேசத் தொடங்கிய நொடியிலிருந்து எழுத்து எப்போதும் பொறுப்புணர்வுடன் சம்மந்தப்பட்டதென்பதை உணர்ந் தேன். அப்போதுதான் வாயைத் திறப்பதை விடவும் காதைத் திறந்து வைத்திருப்பது எவ்வளவு முக்கியம் என்னும் நுட்பமான பாடத்தையும் கற்றேன். அதற்கடுத்த குறுகிய காலத்திற்குள் மாலன் சிறுகதைகள்என்னும் நூலுக்கு என் மதிப்புரை காலச்சுவடு இதழில் வந்தபோது என்மீது சிறு கவனம் உருவானது என நினைக்கிறேன். இது என் கற்பனையாகவும் இருக்கக்கூடும் என்றாலும் எழுதுவது சார்ந்து இருந்த தயக்கங்கள் இதன் வழியாகவே மெல்ல மறைந்தன. இந்த எழுத்துச் செயல்பாடுகளுக்குக் களம் அமைத்துத் தந்தவர் கண்ணன். அந்தத் தூண்டுதல் தோற்றுவித்த உற்சாக மனநிலையை, ஊக்கத்தை இன்றும் நினைவுகூரமுடியும்.சுராவின் தேர்ந்தெடுத்த சிறுகதைகளை (வாசனை) தொகுத்து அது காலச்சுவடு கிளாஸிக் வரிசையில் வெளிவரக் காரணம் என் வாசிப்பு மற்றும் எழுத்தின் மீதான கண்ணனின் நம்பிக்கையே. மேலும் அது ஒரு பதிப்பகத்தின் அங்கீகாரமும்கூட. கோவையில் முன்பு அற்றைத் திங்கள்நடந்தபோது அதற்கான பதிவை எழுதச் சொல்லி கண்ணன் கேட்டார். அதையும் எழுத்து சார்ந்த பயிற்சியாகவே எடுத்துக்கொண்டேன். நான் முதல் கதையை காலச்சுவடுக்கு (கதவு எண் 13/78) அனுப்பி, அது பல மாதங்கள் கோப்பில் தூங்கிக்கொண்டிருந்தது. இரு நினைவூட்டல் கடிதங்களுக்குப் பின்பே அது தட்டி எழுப்பப்பட்டது என யூகிக்கிறேன். அக்கதை சென்றிருக்க வேண்டிய இடம் குறித்து வாசகநிலையில் எழுதப்பட்ட அரவிந்தனின் கடிதம் கிடைத்தபின் அதில் சில மாற்றங்களும் திருத்தங்களும் செய்து அனுப்பினேன். இந்த முறைபாடுகளுக்கு (process) ஒரு வருடம் ஆகிவிட்டிருந்தது. என் இருபத்து மூன்றாம் வயதில் இக்கதை காலச்சுவடில்(ஆகஸ்ட் 2005) பிரசுரமானது. பிரசுரிக்க தேர்ந்தெடுத்தவர் தேவிபாரதி. வெளியிட்டவர் அரவிந்தன். அதற்குத் தலையை உயர்த்தி நடக்கும்படியான ஊக்கமூட்டும் எதிர்வினைகள் கிடைத்தன. மேலும் நான்கு ஆண்டுகளுக்குப் பின் (2009) ஒன்பது கதைகளைக் கொண்ட முதல் சிறுகதை தொகுப்பை காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டது. தேர்ந்தெடுத்தவர் தேவிபாரதி. வெளியிட்டவர் கண்ணன். ஒரு மதிப்புரைகூட வெளியாகாத இத்தொகுப்பின் வழியே இலக்கிய கவனிப்பும் ஆழமான நட்புகளும் ப்ரிய தோழமைகளும் கிடைத்தன.


அதுவரை இரண்டரை பக்கங்களுக்குள் ஆயத்த கேள்விகள் கொண்ட நேர்காணலைக் கண்டிருந்த எனக்கு உரையாடல் போலும் விவாதம் போலும் காலச்சுவடு வெளியிட்ட பெரிய நேர் காணல்கள் ஆவலை ஏற்படுத்தின. ஆழங்களை நோக்கி பரந்துபட்ட பார்வைகளை முன்வைத்துச் சென்ற அந்நேர்காணல்கள் வாசிப்பின் தொடக்க நிலையில் நுட்பங்களை நோக்கிச் செல்லும் வழிகளின் புகைமூட்டத்தைத் தெளிவுபடுத்திக் கொள்ளத் துணை செய்தன. மனம் சோர்வுரும் தருணங்களில் சில படிமங்களை மனதிற்குள் உருட்டினால் அச்சோர்வு மெல்ல விலகுவதை உணர்ந்திருக்கிறேன் (சுழலும் சாமியாடியைவிட ஒரு மந்திரவாதியின் உள்வாங்கி நிற்கும் மொழியே என் விருப்பம். தீ நாக்குகள் வெளியே தெரியாத சக்திவாய்ந்த ஒரு அடுப்பைப் போல - ஆற்றூர் ரவிவர்மா நேர்காணல் - இதழ்22). அது போலவே போகிற போக்கில் பல நுட்பமான கூறுகளைப் பேசியபடி (எது படைப்பூக்கம் என்றால், என்ன நடக்கும் என்பது தெரியாமல், என்ன வரப்போகிறது என்பது தெரியாமல் இருப்பதுதான் படைப்பூக்கம் - இதழ் 81) செல்லும் கவிஞர் ஆனந்தின் நேர்காணலில், தன் பலதுறை சார்ந்த அறிவின் சேகரத்தை, ஆனந்த் வெளிப்படுத்தும்போது அது பிறரது சிந்தனைகளை இரவல் பெற்றதாக இல்லாமல் தன் சுயசிந்தனையின் வழியே பரிசீலித்த பின் அதை அவர் வெளிப்படுத்துவதனாலேயே உயிரோட்டத்தைக் கொண் டிருக்கிறது. கேள்வியாளர்கள் (க. மோகனரங்கன்,குவளைக்கண்ணன்) ஒரு பேட்டியை எவ்வாறு செழுமையடையச் செய்யமுடியும் என்பதற்கு உதாரணம் இந்நேர்காணல். பலரது நினைவுகளிலும் நீங்காது நிலைபெற்றுவிட்ட மற்றொன்று ஆறுமுகம்பட்டி முத்தம்மாவின் நினைவோடை’. தன் கடந்த காலத் துயரங்களை, போராட்டங்களை, தோல்விகளைப் புலம்பல்களாக அன்றி, கழிவிரக்கத்தின் தொனி சிறிதும் அண்டாமல் ஒரு முதிர்ந்த மனநிலையில் கசப்பும் இனிப்பும் கலந்த சிரிப்போடு முத்தம்மா பதிவு செய்யும்போது அவர்மீது மதிப்பு கூடுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த பிற நேர்காணல்கள் மறைந்த கன்னட விமர்சகர் டி.ஆர். நாகராஜ், இந்திய நவீனத்துவப் படைப்பாளிகளில் ஒருவரான நிர்மல் வர்மா மற்றும் நவீன மனம் கொண்ட கர்நாடக சங்கீதக்காரரான சஞ்சய் சுப்பிரமணியம் ஆகியோருடையவை.


எந்த இதழைக் கண்டாலும் உடனே என் கவனம் குவிவது அவை வெளியிடும் சிறுகதைகளின் மீதுதான். தற்போது வெளிவருபவைகளில் ஏமாற்றமும் மகிழ்ச்சியும் மாறி மாறி கிட்டும்படியாகவே என் வாசிப்பனுபவம் இருக்கிறது. காலச்சுவடில் வெளிவந்து வாசிப்பில் இன்பத்தை (pleasure of text) அளித்த குமாரசெல்வாவின் குறுவெட்டி’, பழைய கதைகூறுமுறைகளை மாற்றி அமைத்த பா. வெங்கடேசனின் மழையின் குரல் தனிமை’, பிரேம் ரமேஷின் முன்பொரு காலத்தில் நூற்றியெட்டுக் கிளிகள் இருந்தன’, ஜெயமோகனின் பத்ம வியூகம்’ (நம்மை விட ஈழ வாசகர்கள் இக்கதையை அதிக நெருக்கமாக உணர்கிறார்கள்) சுராவின் பட்டுவாடாபோன்ற கதைகளும் இளைய தலைமுறை எழுத்தாளர்களில் ஜே.பி. சாணக்யாவின் பிளாக் டிக்கெட்’, எஸ். செந்தில்குமாரின் பகலில் மறையும் வீடு’, என். ஸ்ரீராமின் வெளி வாங்கும் காலம்போன்ற கதைகளும் தமிழ்ச் சிறுகதையுலகிற்கு வளம் சேர்ப்பவை.இதற்கு முன்னும் சரி, இனி வரும் காலங்களிலும் சரி, ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வாய்க்க வாய்ப்பு இல்லாத அனுபவங்களைப் பெற்றிருப்பவர் அ. முத்துலிங்கம். ஏறக்குறைய உலகின் பல இடங்களில் பணியாற்றி அதன் வழி தனக்கு வந்து சேர்ந்த, தான் தேடிச் சென்ற அனுபவங்களை மிகுந்த சுவாரஸ்யத்துடன் எழுதும் அ. முத்துலிங்கம் அழகுணர்வும் மெல்லிய சிரிப்பும் இழையோடும்படியான படைப்புகளை அளித்த கதை சொல்லி. நடைக்காக (Narration) மெனக்கெடக்கூடியவர் என்பது தெரிகிறது. அதனாலேயே அவர் கண்ட மனிதர்களின் சித்திரங்களைச் (புனைவுகளிலும் புனைவல்லாதவற்றிலும்) சிறப்பாகத் தீட்டிக்காட்டுகிறார். மற்றொரு கதைசொல்லியான யுவன் சந்திரசேகரின் கதைகள், ஒற்றைக் கதைகூறலை மறுத்து ஒரு கதையின் பல்வேறு சாத்தியங்களுக்கான வாசல்களைக் கொண்டவை.

சமீப காலத்தில் இதழில் வெளியாகும் மூத்த எழுத்தாளர்கள், பலவருட எழுத்தனுபவம் மிக்கவர்களின் கதைகள் சலிப்பையும் ஏமாற்றத்தையுமே அளிக்கின்றன. தம் பழைய சிறகுகளை உதிர்க்காததின் விளைவு இது. அவர்கள் தங்கள் பழைய புகழின் நிழலில் தேங்கிப்போன படைப்பின் பந்தலைப் போடுகிறார்கள்.
நம் கைவிரல்களின் மொத்த எண்ணிக்கையின் அளவைக் கூட நெருங்காதவை தேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களின் பட்டியல். அப்பட்டியலில் முன்வரிசையில் இருப்பவர்களான ஆர். சிவக்குமாரின் மொழி பெயர்ப்பில் வந்த மௌனப் பனி ரகசியப் பனி’ (கான்ராக்ட் எய்க்கின்), சுகுமாரனின் மொழியாக்கத்தில் லெனினை வாங்குதல்’ (மிரோஸ்லாவ் பென்கோவ்) மற்றும் மிகயீலின் இதயம் நின்று விட்டது’ (அய்பர் டுன்ஷ்) போன்ற உலகச் சிறுகதைகளும் எம்.எஸ். மொழிபெயர்த்த மண்டோவின் கடமை’, என்.எஸ். மாதவனின் ஹிக்விட்டாஆகிய இந்தியக் கதைகளும் அதன் சொல்முறை சார்ந்தும் அது உருவாக்கும் மனச் சலனங்களின் காரணமாகவும் நம் எழுத்துக் கனவுகளைத் தூண்டக்கூடியவை.
காந்தி பற்றிய சிறப்பிதழைப் பல வகைகளிலும் முக்கியமான இதழாகக் கூறத் தோன்றுகிறது. அதில் ஆகச்சிறந்த கட்டுரையென அஷிஸ் நந்தியின் இறுதிச் சந்திப்புஎன்னும் கட்டுரையையே சுட்டுவேன். காந்தியின் அறப்போராட்டம் உருவாகிவரும் சித்திரம் மற்றும் காந்தியின் நிறைகுறைகளின் வழியே அவரது ஆளுமை தோற்றம் பெறும் முறை, மரணத்தை அவர் எதிர்கொண்ட விதம் போன்றவற்றைத் தன் தேர்ந்த நுட்பமான மனதின் வழியே நந்தி விரிவாகக் கூறுகிறார். இதே தரத்தில் வைத்து மதிப்பிடப்பட வேண்டிய மற்றுமொரு ஆகச்சிறந்த கட்டுரை (உரை) உபேந்தர பக்ஷியின் விடுதலை என்னும் பெருநீதி’. இவ்வளவு விரிவும் நுட்பமும் கூடிய அம்பேத்கர் பற்றிய கட்டுரை தமிழில் இல்லை. பாவண்ணன் மொழிபெயர்ப்பில் வந்த சிவராம காரந்தின் பித்து மனதின் பத்து முகங்கள்’ (காரந்தின் மண்ணும் மனிதரும்படித்திருக்கிறீர்களா?) குறிப்பிட்டுக் கூற வேண்டிய கட்டுரைகளில் ஒன்று. வரலாற்றறிவும் ஆய்வாளருக்குரிய பரந்த வாசிப்பும் கொண்ட ஆ. இரா. வேங்கடாசலபதியின் கட்டுரைகள் மனச்சாய்வு இன்றி (ஆஷ் துரை சுட்டுக் கொல்லப்பட்டது பற்றிய கட்டுரை) சுவாரஸ்யத்தைத் தக்க வைத்தபடி வாசகனை நெருங்குகின்றன. மறக்கப்பட்ட உண்மைகளின் மீது கவனத்தைச் செலுத்தி அதை வெளிக்கொணர தன் எழுத்துக்களைக் கருவியாகக் கொண்டிருக்கும் ஸ்டாலின் ராஜாங்கம் அதனாலேயே இளம் ஆய்வாளர்களில் தனித்துத் தெரிகிறார். மேலும் பி.ஏ. கிருஷ்ணனின் மருது பாண்டியரைப் பற்றிய கட்டுரை மறக்க முடியாத கட்டுரைகளில் ஒன்று.
சொற்களை வைத்துக்கொண்டு பம்மாத்து செய்பவன் கவிஞன் அல்ல. பழனியில் தென்படும் மொட்டைத் தலையர்களைப் போலச் சிற்சில வடிவ மாறுபாடுகளுடன் காணக் கிடைக்கும் தற்போதைய கவிதைகள் ஏகதேசமாக ஒன்று போலவே இருக்கின்றன. கவிதைக்கென்று தனியாக லட்சணங்கள் ஏதும் இல்லை. அப்படி இருக்கக்கூடும் என்றால் அதை உடைப்பவன்தான் கவிஞன். பத்திருபது வருடங்களுக்கு முன் கோலோச்சிய கவிதைக் கோட்பாடுகளின் மீது இன்று புல் முளைத்துக் கிடப்பது அதனால்தான். காலச்சுவடு இதழ்களில் வெளிவரும் கவிதைகள் தமிழ்க் கவிதையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதை அறியத் தருகின்றன. இதழ்களில் வெளிவந்த கவிதைகளோடும் ஒட்டு மொத்தமாகவும் தேர்ந்த கவிஞர்களாக மாலதி மைத்ரி, சுகிர்தராணி, இசை, சங்கர ராமசுப்பிரமணியன், ஸ்ரீநேசன் ஆகியோரது கவிதைகளைச் சுட்டுவேன். இவர்களோடு இன்றும் துடுப்பு வலித்துப் பயணம் செய்யும் மூத்த கவிஞர்கள் தேவதச்சனும் சுகுமாரனும். மேலும் ராணிதிலக், இளங்கோ கிருஷ்ணன், வா. மணிகண்டன், அனார் போன்றோர் நம்பிக்கை அளிக்கும் கவிஞர்கள். காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட அதற்கும் மேல் ஒன்றும் இல்லை’, ‘பெண் வழிகள்’ (மலையாளப் பெண் கவிகளின் கவிதைகள் - மொழிபெயர்ப்பு, சுகுமாரன்), ‘தொலைவிலிருக்கும் கவிதைகள்’ (மொழிபெயர்ப்பு, சுந்தர ராமசாமி) ஆகிய மூன்று நூல்களும் முக்கியத்துவ முடையவை.

காலச்சுவடு இருமாத இதழாக மாறி, பின், மாத இதழாக ஆனபோது சமகாலப் பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்கத் தொடங்கிற்று. இலக்கியத்தின் முக்கியத்துவத்திற்கு இணையாக மைய நீரோட்ட அரசியலின் மாற்றுக் கட்டுரைகள் வெளியாகத் தொடங்கின. குஜராத் மதக் கலவரத்தின் பின்னணியை ஆராயும் பல கட்டுரைகள் கொண்ட (குஜராத் மிருக வெளி - இதழ் 41) இதழ் அதன் உள்ளடக்கம் சார்ந்தும் அதன் துணிச்சல் சார்ந்தும் அபூர்வமானது. அதே போல ஈழம் சார்ந்த கட்டுரைகள் தொடர்ந்து இதழில் வெளிவந்து கொண்டிருப்பதைக் கண்டால் போரின் துக்கங்களுக்கு எந்த விதத்திலும் சளைத்ததல்ல போரின் எச்சங்கள் என்னும் உண்மை மீண்டும் முகத்தில் அறைகிறது. பெயர் தெரியாத ஒருவர் எழுதிய வன்னியில் நடந்தது என்ன?’ படித்தபோது கடும் அதிர்ச்சியும் மனச்சோர்வும் ஏற்பட்டது. அதன் செய்தி சார்ந்த நம்பகத்தன்மையின் மீது ஐயம் ஏற்பட்டது. உடனே தேவிபாரதியிடமும் கண்ணனிடமும் கோபத்தோடு வாதம் செய்தேன். அதற்கு எதிர்வினையாற்ற கண்ணன் சொன்னார். அடுத்த இதழில் என் கடிதம் எந்த வெட்டுக்காயங்களுமின்றி பிரசுரமானது. இதழியலில் இது அபூர்வமானது. ஒரு கட்டத்தில் ஈழம் சார்ந்த கட்டுரைகளின் பக்கமே ஒதுங்க வேண்டாம் என்னும் அளவிற்குச் சோர்வை அளிக்கும் செய்திகள் படையெடுக்கத் தொடங்கின. காலச்சுவடும் ஆனந்த விகடனும் (பா. திருமாவேலன்) ஈழப் பிரச்சனையை முன்னெடுத்துச் சென்ற முறை இதழாளர்கள் ஆற்ற வேண்டிய பணியின் தீவிரத்தை உணர்த்தின. மேலும் ஈழம் சார்ந்து காலச்சுவடில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நூலை முத்துக்குமாருக்கு சமர்ப்பணம் செய்திருந்ததைக் கண்டபோது மிகுந்த மனநிறைவும் துக்கமும் கலந்த உணர்வு ஏற்பட்டது.ஈழத்தில் போரின் போதும் அதற்குப் பிறகும் அவர்களுக்கு நேர்ந்த இன்னல்களை, படைப்பு மொழியை நெருங்கும் நடையுடன் விவரிக்கும் ஃபிரான்ஸிஸ் ஹாரிசனின் கட்டுரைகள், பொய்த்திரைகளைக் கிழிப்பதற்குப் பதிலாக அத்திரைகளுக்குப் பின்னே இருக்கும் சடலங்களை, உண்மைகளை நம் மனம் கூசும்படி வெளியே இழுத்து வந்து போடுகின்றன. நுட்பமும் உழைப்பும் கூடிய க. திருநாவுக்கரசின் கட்டுரைகளை இதழுக்குப் பலம் சேர்க்கும் ஒன்றாகவே கருதுகிறேன். அயலக இலக்கியம், அயலக அரசியல், ஈழம் என தன் பரந்துபட்ட வாசிப்பை முன்வைத்துச் செல்பவை சுகிர்தராஜாவின் கட்டுரைகள். பீம்சன் ஜோசி மற்றும் சரமாகோ பற்றிய அஞ்சலிக் கட்டுரையை மிகச் சிறப்பாக எழுதியிருக்கும் சுகுமாரன் ஒரு ஆளுமையைப் பற்றி எழுத்துலகிற்கு கூற அவர்களது மரணம் வரை காத்திருக்கத் தேவையில்லை. தேவிபாரதி, கண்ணன் (முன்னர் ரவிக்குமார்) ஆகியோரது கட்டுரைகள் மைய நீரோட்டப் பிரச்சினைகளைத் தீவிரமான தொனியில் வெளிப்படுத்துகின்றன.ஓர் ஆண்டில் வெளியாகும் புத்தகங்களின் எண்ணிக் கையில் பத்தில் ஒரு பங்குகூட கவனம் பெறுவதில்லை. கடந்த ஓர் ஆண்டில் காலச்சுவடு இதழில் வெளிவந்த நூல் வெளியீட்டு விழா பதிவில் கூறப்பட்ட நூல்களில் எவ்வளவு புத்தகங்களுக்கு மதிப்புரைகள் வந்திருக்கின்றன என்பதை யோசித்துப் பார்த்தால் இது புரியும். நூலுக்கு மதிப்புரை வந்தால்தான் ஆயிற்று என்பது இல்லை. ஆனால் வாசகனிடம் புத்தகத்தின் சாரத்தைக் கொண்டு சேர்க்க இதுபோலச் சிறந்தவழி வேறேதுமில்லை. ஆனால் தெரிந்தவர்களால் தெரிந்தவர்களுக்கு எழுதப்படுவதையே நாம் மதிப்புரை என்று இப்போது அழைக்கிறோம். நுஃமான் சுராவின் காற்றில் கலந்த பேரோசைக்கு எழுதிய மதிப்புரை போலவோ, சுரா, அகிலனின் சித்திர பாவைக்கு எழுதிய மதிப்புரை போலவோ ஒன்று இப்போது ஏன் இல்லை என்பதையும் யோசித்துப் பார்க்கலாம்.ஓர் இதழின் கனவுகளும் ஒரு பதிப்பகத்தின் இலக்குகளும் முடிவுறாதவை. அது ஓர் இடையறாத பயணம். ஆத்மார்த்தமாக உழைப்பைக் கொட்டும் அதன் ஆசிரியர் குழுக்களாலும் பணியாளர்களாலும் சாத்தியமாகக் கூடியவை. ஆற்ற வேண்டிய காரியங்களின் மீதான முனைப்பிலிருந்தும் உழைப்பிலிருந்துமே கனவுகள் கைகூடிவரும். அதன் ஒரு மிக முக்கியமான பகுதியாகவே இந்த காலச்சுவடு நூற்றைம்பது இதழ்களைக் கடந்து சென்று கொண்டிருக்கும் பயணத்தைக் காண்கிறேன்.

                               
                    **********************
* சுராவின் கட்டுரை மற்றும் கட்டுரை நூல் ஒன்றின் தலைப்பு.

நன்றி - காலச்சுவடு  அக்டோபர் 2003


No comments:

Post a Comment