ரகசியம்
மணற்கடலுக்குள் கொண்டு வந்து தெருவை அமைத்தது போலிருந்தது. ஒவ்வொரு அடிக்கும் புதைந்த கால்களைப் பலங்கொண்டு வெளியே இழுக்கும் ஒவ்வொரு தடவையும் செருப்பு விசிறியடித்த மணற்துகள்கள் முதுகிலும் பின்னங்கழுத்திலும் பட்டுச் சிதறி உதிர்ந்தன. அவை சட்டைக்காலர் வழியாக முதுகிற்குள் இறங்கி உடம்பை அரித்தன. முன்னால் செல்பவருக்கு நான்கைந்தடிகள் தள்ளி நடந்ததால் அவரது விசிறியடிப்பு என் வாய்க்குள் மணலை இரைப்பதிலிருந்து தப்ப முடிந்தது. மணலுக்குள் யாரோ புதைந்து கொண்டு கால்களைப் பிடித்து இழுக்கிறார்களோ என்கிற பிரம்மை ஏற்பட்டது. அதிலிருந்து உருவி எடுப்பதற்குள் கீழே விழ வேண்டியதாகிவிட்டது. தோல்களை உரித்தெடுத்து விடும் எனும்படியாக, ஈவிரக்கமற்ற உலை வெய்யிலுக்கு அஞ்சி எங்கும் நடமாட்டமேயில்லை. இந்த அழிச்சாட்டியத்துக்கு முடிவுகட்ட செருப்பைக் கழற்றி கையில் எடுத்து இரண்டடிகள் தான் நடந்திருப்பேன். புரட்டிப்போடப்பட்ட கரப்பான் போல துடித்தேன். பாதங்கள் பொத்து பொப்புளங்கள் தோன்றி இருக்கும் என்று பட்டது. வலியில் கண்ணீர் முட்டி தளும்பியது.
இந்த ஆறு விரல்காரனை(அதை ராசி என்கிறான்) ஒழிக்க வேண்டும். அதற்கு தான் இவ்வளவு பாடுகளும். என் அக்காவை இவனுக்குப் பெண்டாள விட
கோழையா நான்? அம்மா போட்டிருந்தக் கணக்கை தன் செல்வாக்கால் தவிடு பொடியாக்கினான். அவளை அவன் மணந்து கொண்டால் நானும் உருப்பட்டு விடுவேன், வீடும் சுபிட்சமடையும் என நினைத்தாள் அம்மா. எனவே சுதந்திரமாகப் புழங்க அனுமதித்தாள். ஆனால் அவன் சுவைத்த பெண்களின் பட்டியலில் ஒரு பெயராக தான் என் அக்காவையும் எண்ணி இருந்தான் எனப் பிற்பாடு தெரிந்தது. அதற்குள் கட்சிக்குள் வலுவானவனாக மாறி விட்டிருந்தான். கேட்டதற்கும் மேலேயே வசூலித்து தலைமைக்கு ஒப்படைப்பதிலும் பெண்களை அனுப்புவதிலும் தேர்ந்த கை எனப் பெயரெடுத்திருந்ததால் வளர்ச்சி அமோகமாக இருந்தது. அவனே முன் நின்று அக்காவின் திருமணத்தை
நடத்தி வைத்த போது அம்மா செத்துப்போன முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். மிக பவ்யமாக குழைந்து அவனுடன் ஒட்டிக் கொண்டேன்.
இருவருக்கும் வழிகாட்டியபடியே டயர் உருட்டிக்கொண்டு முன்னால் செல்லும் சிறுவன் முரட்டு டயரில் செருப்பை (நாயால் அதன் ஓரங்கள் கடிக்கப்பட்டிருந்தன) போட்டிருந்தான். அவன் குச்சியில் மெதுவாகத் தட்டியவுடன் சைக்கிள் டயர் வளைந்து நெளிந்து முன்னால் போவது போல என் முதுகையும் யாரேனும் தட்டி முன்னே செலுத்தியிருந்தால் வாழ்நாளுக்கும் நன்றியுடையவனாக இருந்திருப்பேன். ஆனால் அவன் நடையிலும் சிறு ஓட்டத்திலுமிருந்த லயம் வாய்க்க இங்கு பிறந்தவனாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றியது. கற்பனை செய்ததற்கும் மேலாகவே இந்த திட்டத்தை அமுல்படுத்துவதில் சோதனைகள் ஏற்படத்தான் செய்தன. ஆனால் ஒருவருக்கும் ஐயம் எழாதவாறு காரியத்தை சாதிக்கக் கஷ்டங்களைப் பார்த்தால் முடியுமா என்ன?
இருமருங்கிலுமிருந்த வீடுகளின் முகப்பு சொல்லி வைத்தாற் போல சேலைகளால் மறைக்கப்பட்டிருந்தன. சேலை அல்ல படுதா என்றார் குலோத்துங்கன். வெயில் என் கண்ணை மயக்கிவிட்டது போலும். அதற்குள் இந்த ஏரியா எவ்வளவு இருக்கும்?
எத்தனை ஏக்கர்? அதன் விலை நிலவரத்தையெல்லாம் மனதிற்குள் ஓட்டிப் பார்த்திருப்பார். அவர் கட்சியின் மிக முக்கியப் பொறுப்பிலிருந்தார். எனவே அவர் சொல்லின் வாலைப் பிடித்து நன்றியுடன் நடப்பவர்களில் ஒருவனாக இருந்த என்னை உடன் அழைத்து வந்திருந்தார். அவர் என்னைக் கூப்பிடுவதற்கு தோதானப் புள்ளிகளை வெற்றிகரமாக அங்குமிங்கும் வைத்திருந்ததை அவர் அறியமாட்டார்.
அவர் மின்சாரமில்லாத கரட்டு ஊரில் முனுசாமியாக ஓடியாடித் திரிந்தவர். முதுகிலும் மூளை உள்ளவர் எனப் போற்றப்படுவதற்கு ஏற்ப கட்சியின் ஏணியில் விரைந்து முன்னேறியவர். பிறகு தன் ஆகிருதிக்கு தகுந்தாற் போல
பெயரை மாற்றிய பின் திரும்பி பார்க்கவேயில்லை. ஜாதகங்களில் அதிதீவிர நாட்டமுடையவர். தான் இரண்டாம் திருமணம் செய்து கொண்ட பின் கட்சிக்குள் தன் வீழ்ச்சி ஏற்பட்டதாக
நம்பினார். அவளுடைய கிரகங்களின் கோளாறு
தன்னை வீழ்த்தி விடக்கூடும் என்கிற பயம் அவர் கண்களில் தெரிந்தது. அவளிருக்க வேண்டிய
இடத்தில்..! கோபத்தைக் கட்டுப்படுத்தினேன். அக்காவின் இடத்திற்கு வந்தவளிடம் நான் பகையை வைத்துக் கொள்ளவில்லை. அவருடைய செல்லப்பிள்ளைகளில் ஒருவன் என்றே நடந்து வந்தேன். அவளுடைய நம்பிக்கைக்குரிய
ஒருவனாக இருந்ததில் அவருக்கும் மகிழ்ச்சி தான்.
அந்த இக்கட்டிலிருந்து மீளும் வழிக்காக எந்த எல்லைக்கும் போகத் துணிந்திருந்தார். இன்னொரு திருமணமும் அதையொட்டிய புத்திர யோகமும் அவரை பலபடிகள் மேலே தூக்கிச் சென்று விடும் என ஜோதிடர் தர்க்க ரீதியாக விளக்கிச் சொன்னதை மனதார நம்பினார். தரகர்களை முடுக்கி விட்டு அலசி ஆராயப்பட்டதில் அவருக்கு யோகங்களை அள்ளித் தரும் யுவதியின் கட்டங்கள் கண் முன் மேஜையில் வெள்ளை தாளில் படபடத்தன. அதில் வசியப் பொருத்தம் மட்டும் இருக்கவில்லை. அதற்கொரு பூஜை செய்ய வேண்டும் எனக் குறித்துக் கொடுத்தார். எனவே ஒரு வனாந்திரத்தைக் கடந்து மணற்குன்றை தாண்டி இங்கே வந்திருந்தோம். அவர் தனியாகக் கிளம்ப நான் காட்டிற்குள் காத்திருந்தேன். இங்கு வந்த விவரம் ஒருவருக்கும் தெரியாது. அத்துவான காடு இது.
அந்த படுதாவில் வினோதமான உருவங்கள் நெய்யப்பட்டிருந்தன. அவர்களது காக்கும் கடவுள்களும் பலிபீடங்களும் வளர்ப்புப் பிராணிகளும் ஆயுதங்களும் பலிகொடுக்க
வளர்க்கப்படும் எருமைகளுமே அவற்றில் நிறைந்திருக்கும் என்றான் அந்தச் சிறுவன். மரமோ சிறு புல்லோ கூட இல்லாத இந்த பாலையில் எப்படி எருமைகள்? என்று கேட்டேன். பருவங்களுக்கேற்ப இந்த பகுதி மாறிவிடும் எனவும் இந்த கோடை முடிந்ததும் பட்டு போனவை அனைத்தும் துளர்க்க ஆரம்பித்து விடும் என்றும் வியப்பேற்படுத்தினான். அவர்களது குலத்தலைவரும் தலைமை பூசாரியும் குறித்து கொடுக்கும் கிழமையில் மொத்த ஆட்களும் நிலவறைக்கு சென்று விடுவார்களாம். கம்பங்களில் ஊசலாடிக்கொண்டிருக்கும் பட்டங்களை எண்ணி வருந்தும் குழந்தைகளுக்கு ஆறுதல் சொல்லச் சொல்ல எங்கிருந்தோ கிளம்பி வரும் மணற்புயல் துப்புரவாக அள்ளிக் கொண்டு, மர்மக் கரமொன்று துடைத்தழித்து போல இவ்வளவையும் வாரியெடுத்து போய்விடும் என்று சொன்ன பிறகு, இப்போது நடந்து சென்று கொண்டிருக்கும் இடங்களில் கனிகள் விழுந்து கிடக்கும் பசுங்காலம் வந்துவிடும் என மயிற்கூச்செரிய வைத்தான். வயதுக்கு மீறி பழுத்திருக்கிறான் எனத் தோன்றியது. இந்த வினோதங்கள் அவரை வசீகரித்தன. திருப்தி அவர் முகத்தில் மிளிர்ந்தது.
நிம்மதியாக மூச்சு விட்டேன்.
இருவருமே சட்டையைக் கழற்றிக் கக்கத்தில் சொறுகிக் கொண்டு விட்டோம். அப்படியும் வெயிலின் உக்கிரத்திலிருந்து தப்ப முடியவில்லை. உடம்பெங்கும் மணற்திட்டுகள். மணற்குளியல் செய்தது போல, மணலால் செய்யப்பட்ட உருவங்களாக மாறி விட்டிருந்தோம்.
சிறுவனின் கோமணத்தில் குலோத்துங்கனை கற்பனை செய்து பார்த்தேன். வேதனைகளை ஒத்திப் போட கற்பனைகள் போல துணையாவது வேறேதும் உண்டா என்ன? அவரிடம் சொல்லவும் செய்தேன். இருவரும் தனித்திருக்கையில் இப்படி சில உரிமைகளை எடுத்துக் கொள்ள அனுமதிப்பார். பசியோடு அலையும் சில நாய்களை மட்டும் பார்த்திருக்கவில்லை என்றால் அந்த கோமணமும் இல்லாமல் நடக்கத் தயார் என்று சொன்னார். பச்சையாக பேசுவதில் வித்தகர் அவர். அதில் ஒரு வித போதை அவருக்கு. பெண்களைப் பற்றி என்றால் பட்டினிக்காரன் விருந்தைக் கண்டது போல ஆகிவிடுவார். சற்றே தூண்டி விட்டால் போதும், நாமாக அணைக்கும் வரை எரிந்து கொண்டே இருப்பார். அவராக ஆசைப்பட்டு அடைந்தவை, தானாக மடியில் விழுந்தவை எனப் பேச்சு மும்மரம் அடைந்து விடும்.
உதவி கேட்டு வரும் பெண்களிடம் பதமாக நடந்து கொள்வார். அதில் பல தாயங்களை பார்த்தவர் அவர். அவற்றில் சீறும் பாம்புகளையும் அவரால் உடனே கணித்து விட முடியும். அவர்களை நோக்கி கட்டைகளை உருட்டவும் மாட்டார். காய்களை நகர்த்தவும் மாட்டார். அப்படியும் சில விசாரணைகள் அவர் மீது நடந்திருக்கின்றன. ஒழுங்கு நடவடிக்கைகளை எப்படி நிறுத்த வேண்டும் என்பது அவருக்குத் தலைகீழ் பாடம்.
அப்படி லயித்து பேசும் போது என் கண்களைப் பார்ப்பார். அதிலுள்ள கண்மணிகளின் ஆட்டத்தை பார்த்ததும், தனக்குத் தெரியாமல் அக்காவின் பேச்சு உள்ளே நுழைந்து விடுமோ என நினைத்து ஒரு வளைவை இயல்பாகத் திரும்புவது போல பேச்சை மாற்றுவார்.
சிறுவன் ஏதோ ஒரு பழத்தைப் பிழிந்து வாயில் விட்டுக் கொண்டான். ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டோம். கண்கள் தவிர பாக்கி எங்கும் மணல் மனிதர்களாக நின்று கொண்டிருப்பதைக் கண்டோம். ஒருவழியாக வீடுகள் முற்றுப்பெற்று விட்டன.
பல மாத அலைச்சல்களுக்குப் பிறகு வசியத்தை உண்டாக்கித் தரும் அந்த பொக்கிஷம் இங்கிருப்பதாக சந்தையில் படுதாக்களும் போர்வைகளும் விற்கும், ஒரு காது இல்லாத குள்ளமான வியாபாரியின் வழியாக தகவல் கிடைத்தது. எனவே பூஜைக்கான நாள் குறிக்கப்பட்டது. அதை நடத்துவதற்கு மிகவும் தோதான மலை இது தான். அந்த தெய்வமும் இங்கு
தான் வீற்றிருக்கிறது. பயணத்தில் ஆறு இடங்களில் சம்பந்தமேயில்லாத ஆட்களால் வழிநடத்தப்பட்டு இச்சிறுவன் கையில் ஒப்படைக்கப்பட்டிருந்தோம். குலோத்துங்கன் கட்சியில் தன் பதவிக்காக ஏழு பாதாளங்களையும் குடைந்து செல்ல சித்தமாக இருப்பவர்.
எங்கிருந்தோ தூக்கி எறியப்பட்டது போல கிணற்றடிக்கு வந்து சேர்ந்திருந்தோம். கற்கண்டின் சுவையுடன் நீர் தித்திப்பாக இருந்தது. மூழ்கி எழுந்து உடைகளை அணிந்ததும் அந்த சிறுவனுக்கு பதில், வாயை தவிர எல்லா இடங்களிலும் முடி முளைத்திருந்த ஒருவன் நின்று கொண்டிருந்தான். வரவேற்கும் முகமாக அவன் தன் பற்களைக் காட்டியதும் அடர்ந்த காட்டிற்குள் கண்ட நிலவு போல ஜொலித்தது அது.
இருவரது பிறந்த தேதி, நட்சத்திரம் போன்ற விவரங்களைக் கேட்டான். திருப்தியுடன் தலையுயர்த்தி மேலே பார்த்துக் கூவினான். பதில் சமிக்ஞை கிடைத்ததும் உத்தரவுக்கு
நன்றி கூறியபடி மேல் நோக்கி அழைத்துச் சென்றான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் தன் எதிர்காலத்தின் வெற்றிக்கதவுகள் திறந்து கொண்டே செல்வதான கற்பனையில் குலோத்துங்கன் முகம் மலர்ந்து கிடந்தார். அவனது வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவேயில்லை. ஐந்து கிலோ தங்கமும் மிகக் கணிசமான ரொக்கமும் பூஜையில் வைத்தால் தான் எடுபடும் எனச் சொன்னதை நம்ப மறுத்தார். அவற்றைத் திருப்பி எடுத்துக் கொள்ளலாம் என்ற போதும் தலையாட்டி மறுத்தார். நானும் வற்புறுத்தவில்லை. ஆறப்போடுவது தான் பலனளிக்கும் என தெரியாதா என்ன? அவரை நெருக்கினால் முற்றாக விலகி விடுவார். சரியாக ஒரே மாதத்தில் தலைமையின் கடுங்கோபத்திற்கு ஆளாக வேண்டி வந்தது. தொழிலிலும் பலத்த அடி ஏற்பட்டது. நேரம் பார்த்து சன்னமாக நினைவூட்டினேன். ரகசியம் கசிய விடக் கூடாதெனத்
ஜோதிடர் சொல்கிறார் எனவும் கூறி வைத்தேன்.
மூன்றாம் நாள் குடோன் சாவியைக் கொடுத்து இரு மூட்டைகளை எடுத்து வரச் சொன்னார். அங்கு என்னை அனுமதித்தேயில்லை. திறந்ததும் புழுக்கமாகவும் அது ஒரு நாற்றமாகவும் எழுந்தது. சீராக கட்டி அடுக்கப்பட்ட பணக்கட்டுகளின் மூட்டைகள். எனவே மறுநாளே உரியதை ஏற்பாடு செய்து கிளம்பத் தயாரானோம். பாக்கி இருக்கும் மூட்டைகள்..!! பூமிக்கும் ஆகாயத்திற்குமாக
எழுந்து பிறகு பெருமூச்சுடன் மெல்ல அமர்ந்தேன்.
அவரது மூச்சிறைப்பு நிற்க நேரம் பிடித்தது. உச்சியில் சிறு மண்டபம் போல தெரிந்தது. நடையில் வேகத்தை கொண்டு வர முயன்றார். ஊளையிடும் சத்தங்கள் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தன. மிருகங்களின்
நடமாட்டங்கள் பற்றி எச்சரிக்கை அவரை தாமதப்படுத்தியது. என் நிழல் அவர் மீது விழும்
அண்மைக்கு சென்றதும் தான் அடுத்த அடி எடுத்து வைப்பார். அந்தியின் பொன்னொளி மலையை பிரகாசமாக்கியிருந்தது.
நல்ல உயரத்திற்கு வந்திருந்தோம். இன்னும் ஐந்தே நிமிடங்களில் தொட்டு விடுவோம். திடீரென பிளிறலும் உறுமல்களும் மிக அருகில் கேட்டன. அச்சசத்துடன் நின்று விட்டார். அவருக்கருகே ஓடினேன். கொடூர உறுமல் மிக அருகில் வந்து விட்டது. 'சிறுத்தை தலைவரே..' எனக் கத்தினேன். பயத்தில் பின் ஒதுங்க கால் இடறினார். பிறகு அவர் பாறைகளிலும் மரங்களிலும் கற்களிலும் அடிபட்டு கீழே போய்க் கொண்டிருப்பதை தான் பார்க்க முடிந்தது.
உடனடியாக ஊருக்குத் திரும்பி விட்டேன். அவர் காணாமல் போன செய்தி பரவியதற்கு முந்தைய தினமே அவர் வீட்டிற்கு சென்று பலர் கண்களிலும் படும்படி உலவிய பின் திரும்பினேன். அவரது உடம்பு இனி ஒருபோதும் கிடைக்காது. அதற்கான வேலைகளைப் பார்த்தாகிவிட்டது.
இப்போது என் அக்காவை தலை நிமிர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றியது. அந்த ஜோதிடர், தரகர்கள், சந்தை வியாபாரி, அவரது காதிலும் கண்ணிலும் விழும்படிக்கு விஷயங்கள்
நடக்க காரணமாக அமர்த்தியிருந்த சிலர், அந்த காட்டிற்குள் கூட்டி சென்றவர்கள், பிளிறி, உறுமி அச்சுறுத்திய அந்த ரோம ஆசாமி அனைவருமே நான் ஏற்பாடு செய்தவர்கள். அந்த சிறுவன் சொல்லி தந்த கதையை அடிபிறழாமல் ஒப்புவித்திருந்தான். அவன் குடும்பத்தை நன்றாக கவனிக்க வேண்டும் எனக் குறித்துக் கொண்டேன்.
மூன்று மாத காலம் இத்திட்டத்தை இணுங்கு இணுங்காக தீட்டி இருந்தேன். ஆட்களை பலகட்ட சோதனைக்கு பிறகே தெரிவு செய்தேன். இந்த வேளை வாய்க்க ஐந்து வருடங்கள் காத்திருந்தேன். அவரது கோப்பு முடிக்காமல் நீண்டு சென்றது. அது பற்றிக் கவலையின்றி சம்பந்தப்பட்ட ஆட்களுக்கெல்லாம் கணிசமாக பணம் கொடுத்திருந்தேன். தாடிக்காரனுக்கு கூடுதலாகவே. குல தெய்வத்தின் மீது சத்தியமும் வாங்கினேன். தெய்வ பக்தி உடையவர்களை தான் இதற்கு பயன்படுத்தினேன்.
அவரது மேஜையின் மேல் படபடத்த அந்த கட்டத்திற்குரிய யுவதியை கரம் பிடித்தேன். இத்தனையும் புதைத்து வைத்த இரு முட்டைகளிலிருந்து ஒரு பகுதியை எடுத்துச் செய்தவை. இன்னும் மிச்சமிருக்கும் மூட்டைக்கு ஒரு அபாரமான எதிர்காலம் காத்திருப்பதாகத் தோன்றியது.
கட்சிக்குள் இந்த ஒன்றரை வருடங்களில் மெச்சத்தக்க விசுவாசி என்றும் இறந்த போன, கட்சி பெரும்புள்ளி குலோத்துங்கனின் வலதுகரம் என்றும் இருந்த பேச்சு மேலும் உறுதியாகவும் வலுவாகவும் மாறியது. மேல்மட்டத் தொடர்புகளைப் பேணுவதில் கண்ணூக்கருத்துமாக இருந்தேன்.
இதோ தேர்தலில் போட்டியிட விண்ணப்பித்திருக்கிறேன். எத்தனை செலவுகள் செய்யப் போகிறேன்
என என்னால் பணிவுடன் கூறி நேர்காணல் செய்பவர்களை
மலைக்க வைக்க முடியும். கட்சிக்கும் எதிர்பார்க்காத நிதியை தந்து விட முடியும். அது எப்படி என்பதை பொதுவில் சொல்ல முடியாது. அக்காவின் பெயரை என் பெயருக்கு பின்னால் இணைத்திருக்கும் காரணத்தை இதுவரை யாரும் கேட்டதில்லை. அது ஒரு பழிவாங்கப்பட்ட ரகசியம்.
இதுவும் அப்படித் தான்.