Tuesday, February 28, 2023

வாழ்க்கைப் பாதை(பாவம் மனிதன்) - செறுகாடு

 

வாழ்க்கைப் பாதை 

-செறுகாடு

3.  பாவம் மனிதன்




அரிசியை வேகவைத்துத் தின்று வாழும் வாழ்க்கை எனக்கு அலுத்து விட்டது. அம்மாவும் சகோதரிகளும் மருமகன்களும் பெரியவரின் தாட்சண்யமற்ற நடவடிக்கையால் துன்புற்றார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும். ஓரளவு நிம்மதியாக வாழ்வதற்கான குடும்பச் சொத்து இருப்பதாக எல்லோரும் கூறுகிறார்கள்.  எங்களுக்குத் தராமல் பெரியவர் அதைக் கைக்குள் வைத்திருக்கிறார். அத்தனை தைரியத்தையும் ஒன்று திரட்டி நானதைச் சொல்லும்போது பெரியவர் அதை வேண்டா வெறுப்புடன் அனுமதிப்பார். நான் வளர்ந்து ஒரு ஆண்மகனாகத் தலையுயர்த்தி நின்று பேசினால் பெரியவர்  செவிசாய்ப்பார். எங்கள் கஷ்டங்கள் தீருமென்றும் நாங்கள் உறுதியாக நம்பினோம். அதற்கு முதலில் தேவைப்படுவது நான் பெரியவனாக வேண்டும். பாவுட்டி எழுத்தச்சனின் சமஸ்கிருத பள்ளியில் படித்துப் பெரிய ஆளாவேன் என்கிற நம்பிக்கை எனக்கில்லை. பெரியவரிடமிருந்து இரண்டு ரூபாய் வாங்கி அதை வைத்து தேவநாகரி எழுத்துருவிலிருக்கும்  குமார சம்பவம் புத்தகத்தை வாங்கினேன். பள்ளிக்கூடத்திற்குச் செல்வதில்லை என்பது தெரிந்தால் அந்த இரண்டு ரூபாயைத் தொலைத்ததற்காகப் பெரியவர் கோபப்படுவார்.  அதற்குப் பயந்து தினமும் பள்ளிக்கூடம் போனேன்.


பெரிய ஆளாக வளர வேண்டும். பெரியவரை அடிப்பணிய வைக்க வேண்டும். குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். எனது மூளையில் உன்னதமான ஒரு  பேராவல், புயற்காற்றைப் போல பலமாக வீசத் தொடங்கியது. பெரிய ஆளாக வருவது எப்படி?


கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய ஐதீக மாலையின் பல பகுதிகளை அக்காலகட்டத்தில் படித்தேன். செறுகாட்டு வடக்குப் பிஷாரத்தில் நிரந்தரமாகத் தங்கியிருந்த நாணிக்குட்டி அக்கா வசிக்க வேண்டிய புத்தகங்களைத் தந்தாள். அவளது அப்பா கிருஷ்ண பிஷாரோடி அன்று வட்டம் குளம் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தார். ராகவனை அங்கு அழைத்துச் சென்று ஒரு பள்ளிக்கூடத்தில் சேர்ந்தார். ராகவன் அருகில் இல்லாத காரணத்தால் இரண்டு குடும்பங்களின் சகோதரிகளுக்கும் ஒரோயொரு சகோதரனாக நான் மட்டுமே இருந்தேன். நாணிக்குட்டி அக்கா என்மீது அளவற்ற பாசத்தைப் பொழித்தாள். அவள் எனக்கு தேநீரும் பலகாரமும் புத்தகங்களும் வெற்றிலையும் தருவாள்.


காளியின் ஆசீர்வாதத்தால் ஆடு மேய்க்கும் இடையன் காளிதாஸனான கதையைப் கேட்டு உற்சாகமடைந்தேன். ஏதேனுமொரு பகவானையோ பகவதியையோ சரணடைந்து ஒரு வரம் பெற வேண்டுமென்று உறுதிபூண்டேன். ஐதீக மாலையின் கதைகளும், காளிதாஸக் கதைகளும் அந்தச் சிந்தனைப் போக்குக்கு வலுவூட்டின. அக்காலத்தில் இந்தச் சிந்தனைகளில் மூழ்கி பல இரவுகள்  தூங்காமல் கழித்தேன். அவ்வப்போது கண்ணயரும் போது  பெரிய ஆளாகிக் குடும்பத்தைக் காப்பாற்றும் கதைகளின் இனிய கனவுகளைக் கண்டேன்.


ஒருநாள் நள்ளிரவு. ஒரு கனவு கண்டு கண்விழித்தேன்.  சங்கராச்சாரியர் குடஜாத்ரி மலையிலிருந்து  கேரளத்திற்கு எடுத்து வரும்போது  வழியிலிருந்த மூகாம்பிகை கோயிலில் ஒரு ஆழமான கிணற்றுக்குள்  முட்டஸ் நம்பூதிரி அமர்ந்திருக்கிறார். நள்ளிரவில் பூஜிக்க வந்த தேவதைகள்  பகவதிக்குப் படைத்த  நைவேத்தியப் பாயசத்தை பூஜாரி  பக்தர்களுக்கு வழங்கவில்லை. காவலர்கள் புடைசூழ ஆழமான கிணற்றில் எறிவதற்காக எடுத்து வருகிறான்.  முட்டஸ் நம்பூதிரி, பந்தைப் பிடிப்பதைப் போல பாயசக் குப்பிகளைப்  பிடித்து வாயில் போட்டுக் கொள்கிறார். போலீஸ்காரர்கள் முட்டஸ் நம்பூதிரியைக் கிணற்றிலிருந்து வெளியே இழுத்து அடித்தபோது நம்பூதிரி சொன்னார்: “பாயசம் உள்ளே, அடி வெளியே...”


மூகாம்பிகைக் கோயிலுக்குப் போக வேண்டும். குஞ்ஞு அம்மாமன் அங்கே போயிருக்கிறார்.  பகவதியிடமிருந்து எதையாவது கைப்பற்ற வேண்டும். நான் தீர்மானித்தேன். பெரிய ஆளாக வருவதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.


இடுப்பிலிருந்த வெள்ளி அரைஞாணும் கையிலிருந்த இரண்டு உருளை மோதிரங்களையும் கழற்றி என்னுடைய பெட்டியில் வைத்துப் பூட்டினேன். சாவியை மேற்கு அறையின் கூரைக்கடியில் பத்திரப்படுத்தினேன். கிளம்ப  முடிவெடுத்தேன்.


மானியத்தைப் பிடிக்க  வலை விரித்து நிற்கும் சமஸ்கிருதப் பள்ளிக்கூடத்தின் அருகில் வந்தேன்.  எனது பள்ளித் தோழர்கள் அமரகோசமும் சித்தரூபமும் ரகுவம்சமும் குமார சம்பவமும் மனப்பாடம் செய்து கொண்டிருந்தார்கள். சற்றுநேரம் சாலையில் நின்று அந்த நிறுவனத்தைப் பார்த்துக் கொண்டிந்தேன்.


‘அங்கே போய் படி...’ மரியாதை என்னிடம் சொன்னது. எனக்குள்ளிருக்கும் போக்கிரி ஊக்குவித்தது: ‘போய் பகவதியை அரவணைத்துக் கொள், எதையாவது வாங்கி வா.


இருபுறங்களைக் காணமுடியாத, கண்கட்டி விடப்பட்ட குதிரையைப் போல என் இதயம் படபடத்துக் கொண்டிருந்தது. தூண்டுதலின் ஒரு புலப்படாத பகுதி என்னை முன்னோக்கி இழுத்துச் சென்றது.


ஒரு மணிக்குப் பட்டாம்பியை அடைந்தேன். புகைவண்டியின் வருகைக்காகக் காத்திருந்தேன். இதற்கு முன்பு ஒருமுறை மட்டுமே புகைவண்டியில் பயணித்திருக்கிறேன். அன்று அப்பா உடனிருந்தார். இன்று யாருமில்லை. மனம் அலைபாய்ந்தது.


திரும்பி விடலாமா? எனக்குள்ளிருந்த கோழை யோசித்தது. மறுபடியும் வீட்டுக்குத் திரும்பினால் யாருக்கும் எதுவும் தெரியாது. வழக்கம் போல நாளை வகுப்புக்குப் போகலாம்.


யோசிக்க அவகாசமில்லை. வண்டி வந்தது. நடைமேடைக்கு வந்தேன். திறந்திருந்த ஒரு பெட்டியில்  நுழைந்தேன்.


இறங்கி விடலாமா?


வண்டி கூக்குரலிட்டுக் கிளம்பியது. நான் நிம்மதியடைந்தேன். இனி  நினைத்தாலும் இறங்க முடியாது. வண்டி என்னை அழைத்துச் செல்லும்.


சுற்றிலும் தென்பட்ட இயற்கைக்காட்சிகளைப் பார்த்து முன்னோக்கிப் போய்க் கொண்டிருந்தேன். பள்ளிப்புறம் தாண்டினேன். அட்டப்பாடியிலிருந்து புறப்பட்டு, நான் குளிக்கக் கூடிய கொள்ளி ஓடையினூடே மிதந்து, பாரதப்புழயின் சேரும் குந்திப்புழயின் வெண்மணல் பரப்பும் மெலிந்த நீரோட்டமும் என்னை அமைதியிழக்க வைத்தன. அந்நதி வழியாக திருவேகப்புரயைக் கடந்த என் மனம் கொள்ளி ஓடையை அடைந்து பறந்து போய் அம்மாவைக் கட்டியணைத்துப் படுத்தது. எமன் உடலிலிருந்து உயிரைப் பறித்தெடுப்பதைப் போல புகைவண்டி ஊரிலிருந்து என்னை இழுத்துச் சென்றது.


“அம்மா!” நான் அழுதேன்.


வானத்தின் மேற்குச்சரிவை நோக்கி சூரியன் இறங்கிக் கொண்டிருந்தது.   ஃபரோக் என்னுமிடத்தைத்  தாண்டுவதற்குள் சூரியனின் முகம் சிவந்து விட்டது. செறுகாட்டின் பச்சை பந்தல்களிலிருந்து பயறுக்கொடியை இழுத்துத் தின்னும் வெள்ளைப்பசுவும், சிவப்பியும், மைலையும் எல்லாம் தலைநிமிர்ந்து என்னைப் பார்ப்பதைப் போல தோன்றியது.


வண்டி கோழிக்கேட்டை அடைந்து நின்றது.


யாராவது பிடித்து வெளியே தள்ளி விடுவார்களா? டிக்கெட் இல்லாமல் அமர்ந்திருந்த நான் பயந்தேன். ரயில்வே ஊழியர்களைப் போல தோற்றமளிப்பவர்களைக் கண்டு அஞ்சினேன். வெகுநேரம் நின்றபிறகு வண்டி நகர்ந்தது. அப்பாடா! பிழைத்துக் கொண்டேன்! நான் நிம்மதியடைந்தேன்.


வண்டி ஓடிக் கொண்டிருந்தது. எனது மனதைப் போலவே நிலமும் இருளத் தொடங்கியது. பசிப்பதாகத் தோன்றியது. அந்த நினைப்பு சிரமம் தரவில்லை. நான் உறங்கிப் போனேன்.


“வண்டியிலேர்ந்து எறங்கு.” ஒருவன் என்னைத் தட்டியெழுப்பினான். “கண்ணூர் வந்தாச்சு. இனி வண்டி போகாது.”


நான் இறங்கினேன். ஒரு நாய்க்குட்டியைப் போல. நடைமேடையை விட்டு வெளியே வந்தேன். ஒரு தேநீர்க் கடையில் சிறிது தண்ணீரை வாங்கிக் குடித்தேன். புகைவண்டி நிலையத்தின் வராந்தாவில் படுத்துச் சுகமாக உறங்கினேன்.


மறுநாள் காலையில் வடக்குத்திசை நோக்கிப் போகும் வண்டியில் ஏறி அமர்ந்தேன். வண்டி நகர்ந்தது. ஒவ்வொரு ஸ்டேஷனாகக் கடந்து போனது.  பல் தேய்க்கவில்லை, குளிக்கவில்லை. பசிக்கிறது. என்ன செய்வது? யாரிடமும் எதுவும் பேசாமல் அமர்ந்திருந்தேன்.


“டிக்கெட்” ஒரு டிக்கெட் பரிசோதகர் கேட்டார்.


“டிக்கெட் இல்ல.எழுந்து நின்று சொன்னேன்.


“கையில காசு இருக்குதா?”

“இல்ல.”


அந்த ஊழியர் எனது உச்சிக்குடுமி முதல் கால்வரை பார்த்தார். காசு இல்லையென்று உறுதியானதும் சொன்னார்: “அடுத்த ஸ்டேஷன்ல எறங்கிடு.”


அவர் நகர்ந்தார்.


வண்டி நின்றது.


இறங்கலாமா வேண்டாமா? வெகுநேரம் யோசிக்கும் நிலைமை ஏற்படவில்லை. டிக்கெட் பரிசோதகர் உள்ளே வந்தார்.  எனது கையைப் பிடித்து நடைமேடையில் இறங்கி விட்டார். வண்டி கூவியபடி பாய்ந்தது.


“திருக்கண்ணாட” நான் பெயர்ப் பலகையை வாசித்தேன். ஓலையால்  வேயப்பட்ட அந்த சிறிய ரயில்நிலையத்தில் பயணிகள் குடிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த மண்பானையிலிருந்து ஒரு கிளாஸ் தண்ணீரை எடுத்துக் குடித்தேன். நாற்புறமும் பார்த்தேன். வடக்குப்பக்கமாக நடந்து நடைமேடையை விட்டு வெளியே வந்தேன். இடதுபக்கம் பார்த்தேன். அலைவீசி ஆர்ப்பரிக்கும் அரபிக்கடல். பரந்த மணல்வெளி. உயர்ந்து நிற்கும் ஒரு கோயில். மெதுவாக வயல்வெளியில் நடந்தேன். மஞ்சள், வெள்ளரி, பூசணிக்காய், கீரை, சோளம், பாகற்காய், புடலங்காய் போன்ற காய்கறிகள் விளைந்து நிற்கும் வயல்வரப்பு வழியாக கோயிலருகில் தென்பட்ட வீட்டை நோக்கிப் போனேன்.


“என்ன விஷயம்?” ஒரு பிராமணர் வினவினார்.


“பசிக்குது. சாப்பிட ஏதாவது வேணும்.” பணிவுடன் கேட்டேன்.


அந்தப் பிராமணர் உள்ளே போனார். ஒரு துண்டு இலையில் சிறிது சோற்றையும் குழம்பையும் இரு கைகளால் பிடித்தபடி எடுத்து வந்து வைத்தார். பசியால் துவண்ட நான் உணவின் அருகில் போய் அமர்ந்தேன். ஒரு பருக்கையைக் கூட மிச்சம் வைக்காமல் எல்லாவற்றையும் அள்ளித் தின்றேன். தண்ணீரை வாங்கிக் குடித்தேன். இலையை அப்புறப்படுத்தினேன். தண்ணீரைத் தெளித்துச்  சுத்தப்படுத்தினேன்.  பாத்திரத்தைக் கவிழ்த்துக் கொடுத்தேன். ஒரு மரநிழலில் அமர்ந்தேன்.


பிராமணர் அருகில் வந்து விவரங்களைக் கேட்டார். நான் எல்லாவற்றையும் வெளிப்படையாகச் சொன்னேன். அன்று அந்த வீட்டு வாசலில் படுத்துத் தூங்குவதற்கான அனுமதியைக் கேட்டுப் பெற்றேன்.


“அப்படின்னா நீங்க பிஷாரடியா?”  பிராமணர் கேட்டார்.

“ஆமாம்.”


“மாலை தொடுக்கத் தெரியுமா?”


தெரியும்.”


“அப்படின்னா இங்க இருக்கற பூக்களைப் பறிச்செடுத்து தேவருக்கு நல்ல ஒரு மாலையைக் கட்டித் தரணும்.” பிராமணர் கேட்டார்.


“ஒண்ணு ரெண்டு மாலை கட்டித் தரேன்.” நான் மகிழ்ந்தேன்.


பிராமணரிடமிருந்து ஒரு கூடையை வாங்கி அந்த வளாகத்திலிருந்த பூக்களைப் பறித்தெடுத்தேன். தண்ணீர் தெளித்து  வாழையின் உலர்ந்த தண்டை அறுத்துப் பிரித்து நீளமான நார்களைத் தயாரித்தேன். மாலை தொடுக்கத் தயாரானேன்.


“இப்போது  வேண்டாம்.” என்றார் பிராமணர். “நாளைக்குக் காலைல குளிச்சுச் சுத்தமான பெறகு மாலை தொடுத்தா போதும். கோயில்ல உற்சவம். உற்சவத்தைப் பார்த்திட்டு மதியச் சாப்பாட்டுக்குப் பெறகு நாலரைக்கான வண்டியில போனா போதும்.”


நான் மகிழ்ந்தேன். நான் பிராமணரின் ஒரு சிறப்பு விருந்தினராகி விட்டதாக உணர்ந்தேன். பிராமணரிடம் அனுமதி பெற்றுக் கடலைப் பார்க்கப் போனேன். அதுவரை கடற்கரை அருகில் சென்று கடலைப் பார்த்ததில்லை. முந்தைய நாள் வண்டியில் அமர்ந்திருந்தபோது கவனித்த  கடற்கரையை அடைந்தபோது ஐந்துமணியாகி விட்டது. தொலைத்தூரத்தில் கண்ணெட்டும் தூரம்வரை பரந்து கிடக்கும் அதிசய நிகழ்வின் நடுவில் தூயத் தங்கக்கிண்ணம் போன்ற சூரியஒளி, நீர்த்திரையை நோக்கி இறங்கி வருகிறது. தொட்டு விட்டது. தொடவில்லை. தொட்டு விட்டது. நான் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.  எப்போது நிகழ்ந்ததெனத் தெரியவில்லை. கிண்ணத்தின் கீழ்பகுதி நீரில் அமிழ்ந்தது. காண்கின்ற புவனம்  முழுவதற்கும் வெப்பத்தையும் வெளிச்சத்தையும் தரும் சூரியக்கோளம் மூழ்குவதை முதன்முதலாகப் பார்க்கிறேன். கடலில் அமிழ்ந்து போன அந்தக் தங்கக்கிண்ணம் என் மனதின் அடித்தட்டில்  ஒளிரும் அனுபவத்தைப் பெற்றேன்.


இருட்டத் தொடங்கியது. கடற்கரையில் காற்றை வாங்கி  சற்றுநேரம் அமர்ந்தேன். கோயிலிலிருந்து எழுந்த வாத்திய மேளம் என்னை எழுப்பியது.  எழுந்து வயலில் இருந்த குளத்தில் இறங்கிக் குளித்தேன். கோயிலுக்குப் போய் வணங்கினேன். எனக்கு உணவளித்த பிராமணரின் திண்ணையில் போய் அமர்ந்தேன். ஒன்பது மணிக்கு பிராமணர் தந்த உணவை அருந்தி  திண்ணையில் போய் அமர்ந்தேன்.


அதிகாலையில் எழுந்து குளித்து முடித்து, பூவும் நாரும் எடுத்து மாலை தொடுத்தேன். பூஜை நிறைவடையும் போது நான் தொடுத்த மாலை என் உயரத்தை விட இருமடங்கு இருந்தது. நானதை மடக்கி பிராமணரிடம் ஒப்படைத்தேன். கோயிலுக்குப் போனேன். அவ்விடங்களைச் சுற்றிப் பார்த்து மீண்டும் கடற்கரைக்குச் சென்று அலை தொடும் இடம் வரை போய் வந்தேன். சுட்டுவிரலால் கடல்நீரை தொட்டு நாக்கில் வைத்துப் பார்த்தேன்.  கடல் நீரில் உப்பு இருப்பதை உணர்ந்தேன்.


காலையில் நடைபெற்ற விழா நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, மதிய உணவருந்தி  ரயில் பாலத்தின்  வழியாக தண்டவாளத்தில் மீதேறி வடக்கு நோக்கி நடந்தேன். சுரங்கத்திலூடே நூறு அடி நடந்து சென்றபோது வெளிச்சம் சிறிதும் இல்லை.


திரும்பி விடலாமா? நான் யோசித்தேன். திருக்கண்ணாட ரயில் நிலையத்தை அடைந்தால் அங்கிருக்கும் ஸ்டேஷன் மாஸ்டர் என்னை அடையாளம் தெரிந்து கொள்வார். அங்கிருந்து  வண்டியேற என்னை அனுமதிக்க மாட்டார். முன்னோக்கி செல்ல முடிவெடுத்தேன்.


நான் தைரியத்தைத் திரட்டி முன்னோக்கி சென்றேன். தடுமாற்றத்துடன் ஜல்லிக்கற்களின் நடுவிலுள்ள அடிக்கட்டைகளின் மீது காலை வைத்து நடக்கும்போது இருட்டின் சுருள்களில் அகப்பட்டுக் கொண்டேன்.


வெளியுலகுடன் எந்தத் தொடர்பும் இல்லாத அந்தச் சுரங்கத்தில் நிற்கும்போது  நரக நதியான வைதரணியைப் பற்றிச் சிந்தித்தேன். எமத்தூதர்கள் மனித உயிரை நரகத்திற்கு எடுத்துப் போகும் வழியில் வெளிச்சமில்லாத ஆபத்தான வழிகள் இருப்பதாகக் கேள்விப்பட்டுள்ளேன். நான் நரகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறேனோ? என்னுடன் எமத்தூதர்கள் வருகிறார்களா? நான் கையை நீட்டித்  தொட்டுப் பார்த்தேன். இல்லை. யாருமில்லை.


“என் செறுகாட்டுத் தேவரே! என் மூகாம்பிகை தேவியே!  என்னைக் காப்பாற்றுங்கள்!” நான் கண்ணீரைக் கட்டுப்படுத்தி அழைத்தேன். நான் பிரார்த்தனை செய்தேன்.


 சீறும் ஒலி கேட்கிறதே? ஏதோ ஊர்ந்து செல்கிறதே? நடுங்கினேன். வியர்வையில் நனைந்தேன். இந்த இருட்டினூடாகப் பத்து இருபது அடிகள் தாவித்  தாவி முன்னோக்கிச் சென்றேன்.  பாம்பாக இருந்தால் அதனருகில் நிற்க முடியாதே.


நான் ரயில்களின் நடுவில் சிக்கிக் கொண்டேன். எனது செவிகளில் ஒரு இரைச்சல். தலை சுற்றியது. தண்டவாளங்களின் நடுவில் கிடந்தேன். எத்தனை நேரம் அப்படி கிடந்தேன் என்று தெரியாது. ஒரு கூவல் ஒலி கேட்டது. ரயில்கள் அதிர்கின்றன.  கண்விழித்துப் பார்த்தேன். தொலைவிலிருந்து ஒரு வெளிச்சம் வருகிறது. சொர்க்கத்தை அடைந்ததைப் போல தோன்றியது. நான் எழுந்தேன். தண்டவாளத்தை விட்டு வெளியே வந்தேன். வலது பக்கத்திலிருந்த கால்வாயில் இறங்கினேன். சுரங்கத்தின் வளைவைப் பிடித்து நின்றேன்.


பூமியை உலுக்கியபடி ஒரு சரக்கு ரயில் என்னைக் கடந்து போனது. வண்டி வரும்போது வழி தெரிந்தபோதிலும் அது கடந்ததும் மீண்டும் கும்மிருட்டு. நான் வடக்குப்பக்கமாகப் போக வேண்டும்.  சற்று முன்பு நிகழ்ந்த மயக்கத்தின்  காரணமாக  நிற்பது வடக்குப்பக்கமா தெற்குப் பக்கமாவெனத் தெரியவில்லை. வந்த இடத்தை அடைந்து விட்டதை உறுதி செய்து விட்டு நடந்தேன். கண்மூடி கால்களை எட்டி வைத்து நடந்தேன். எதையும் யோசிக்காமல் பத்து நிமிடம் நடந்தேன். கண்விழித்துப் பார்த்தேன். சுரங்கத்தின் முகப்பில் வெளிச்சம் வருகிறது! ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கும்போதும் வெளிச்சத்தை நெருங்கிக் கொண்டிருந்தேன். ஆவேசமாக வெளிச்சத்தை நோக்கிப் பாய்ந்தேன்.


சுரங்கத்தைத் தாண்டி மீண்டும் நடந்தேன். ஒரு ஸ்டேஷனை நெருங்கும் போது பின்னால் ஒரு வண்டி விரைந்து வந்து கொண்டிருந்தது. வண்டி நடைமேடையை எட்டுவதற்குள் நானும் அங்குப் போய்ச் சேர்ந்தேன். வண்டியில் ஏறிக் கொண்டேன்.


இரவு எட்டு மணிக்கு வண்டி மங்கலாபுரம் ரயில் நிலையத்தை அடைந்தது.  நடைமேடையை விட்டு வெளியே வந்தேன்.  எனக்குப் பசி இல்லை. வெறும் தரையில் சுகமாகப் படுத்துத் தூங்கினேன்.


காலையில் எழுந்து சாலைக்கு வந்து நடக்கத் தொடங்கினேன்.  சாலை இரண்டாகப் பிரியும் ஒரு சந்திப்பில் நின்றேன். பக்கத்தில் இருந்தவர்களிடம் மூகாம்பிகை கோயிலுக்கான வழியைக் கேட்டேன். அந்த அந்நியர்கள் சுட்டிக் காட்டிய வழியில் முன்னேறிச் சென்றேன்.


சாலை ஒரு நதிக்கரையில் போய் நின்றது. ஆற்றைக் கடக்க வேண்டும். காசில்லை. நான் தோணிக்காரனின் அருகில் சென்று மறுகரையில் சேர்க்கும்படி மன்றாடினேன். அந்தத் தோணிக்காரன் மறுகரையில் கொண்டு போய்ச் சேர்த்தான்.


 பங்குனி மாதத்தின் சூரியன் ஆகாயத்தின் நடுவில் உயர்ந்து  கொண்டிருந்தான். கடும் வெயிலில் துவண்டுப் போனேன். பசியும் தாகமும் என்னை வாட்டின. ஒரு தேநீர்க் கடையிலிருந்து தண்ணீரை வாங்கிக் குடித்து  இலந்தை மரநிழலில் இளைப்பாறினேன். வாயில் நாக்கை வைத்து துழாவிக் கொண்டிருந்தபோது ஒரு பல் ஆடுவதை உணர்ந்தேன். நான் அந்தப் பல்லை ஆட்டத் தொடங்கினேன். இதுவரை அம்மாவும் சகோதரிகளுமே ஆடும் பல்லைப் பிடுங்கி எடுப்பார்கள். அந்தப் பல்லை நானாகவே பிடுங்கியெடுக்கத்  தீர்மானித்தேன். பலமாகப் பிடுங்கினேன். பிடுங்கப்பட்ட பல் கையில் இருந்தது. சற்று நேரம் அந்தப் பல்லைப் பார்த்தவாறு  அமர்ந்திருந்தேன். பிறகு ஒரு குச்சியை எடுத்து குழி பறித்து  அதில் போட்டு மூடினேன். புழுதியை வாரியெடுத்து கையிலிருந்த ரத்தத்தைப் போக்கினேன்.


பார்வைக்கு முதலாளியைப் போன்ற தோற்றத்தைக் கொண்ட ஒருவர் நான் போகும் வழியில் வந்து கொண்டிருந்தார். எனக்குப் பசிக்கிறது. அவரிடம் காலணா கேட்க வேண்டும்.  அவரருகில் சென்றேன்.


ச்சே! வெட்கக்கேடு. நான் காசு கேட்க மாட்டேன். “மூகாம்பிகைக் கோயிலுக்கு இன்னும் எத்தனை நாழிகை நடக்கணும்.”  அவரிடம் கேட்டேன்.


“உடுப்பிக்கு இருபத்தஞ்சு.” அவரொரு மலையாளி. விளக்கமாகச் சொன்னார். “அங்கேர்ந்து குந்தாபுரத்துக்கு இருபத்தி ரெண்டு. குந்தாபுரத்துலேர்ந்து ஒணசிக்கு அஞ்சோ ஆறோ நாழிகை நடக்கணும். காட்டுவழி. ஒணசியிலேர்ந்து கொல்லூருக்கு பதினாலு. நடுவுலே ஏழோ எட்டோ நதியைக் கடக்க வேண்டியிருக்கும்.”


“கொல்லூர்லேர்ந்து மூகாம்பிகைக் கோயிலுக்கு எத்தனை நாழிகை நடக்கணும்.?”  கேட்டேன்.


“கொல்லூர்ல தான் மூகாம்பிகைக் கோயில்.” என்றார் அவர்.


“ஆற்றைத் தாண்டறதுக்கு என்கிட்ட காசு இல்ல. ஓரணா தருவீங்களா?”


அந்த மலையாளி பாக்கெட்டிலிருந்து ஓரணாவை எடுத்துத் தந்தார்.


“இந்த கர்னாடகக்காரங்ககிட்ட எப்படி வழி கேட்கறது?” கேட்டேன்.


“உடுப்பிகெ ஹெல்லி ஹோகுவது? ன்னு கேட்டா போதும். பிறகு குந்தாபுரத்துக்கு. அங்கிருந்து ஒணசிக்கு. பெறகு நேர்வழி. கொல்லூர் மூகாம்பிகைக் கோயில் நடையை எட்டிடலாம்.”


அந்தப் புரவலர் கிளம்பிச் சென்றார். நானொரு முதலாளியாகி விட்டதாகத் தோன்றியது. சற்றுநேரம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். உடுப்பியை நோக்கி நடக்கத் தொடங்கினேன். இன்னொரு நதியோரத்தை அடைந்தேன். கைகளைக் கழுவினேன். சாலையோரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த அவித்த சர்க்கரை வள்ளிக்கிழங்கைப் பார்த்தேன். அருகில் சென்று காலணாவுக்கு வாங்கித் தின்றேன். கொஞ்சம் நீரைப் பருகினேன்.


தோணி வந்தது. அதிலேறி மறுகரையை அடைந்தேன். தோணிக்காரன் காசு கேட்கவில்லை. அதே தினம் மீண்டும் இரண்டு தோணிக்காரர்களுக்குக் காசு கொடுத்தேன். பொழுது இருட்டத் தொடங்கிய போது ஒரு பிராமணரின் வீட்டைக் கண்டுபிடித்தேன். அவர்களிடம் விஷயங்களைச் சொன்னேன். உறங்குவதற்கு அனுமதி பெற்றேன்.


ஒரே பகலில் இருபத்தொன்பது அரை  நாழிகை தூரத்தை நடத்து விட்டேன். உடுப்பிக்கு ஐந்தரை. குந்தாபுரத்துக்கு இருபத்தி இரண்டு. குந்தாபுரத்திலிருந்து கொல்லூருக்கு ஏறக்குறைய இருபது. ஐம்பது நாழிகை நடந்தால் தேவியின் நடையை எட்டி விடலாம். அந்தப் பிராமணர் வீட்டுத் திண்ணையில் ஒரு நாய்க்குட்டியைப் போல சுருண்டுப் படுத்தேன்.


“இந்தா, ஒரு பிடிச்சோறு” அந்தப் பிராமணனின் என்னைத் தட்டியெழுப்பி சோறு தந்தார். நானதை உண்டேன். மீண்டும் படுத்துத் தூங்கினேன்.


வெளிச்சத்திற்கு முன்பாகவே எழுந்து நடந்தேன். உடுப்பியை அடைந்தேன். நான்கைந்து பேர்களிடம் யாசித்து இரண்டணா  பெற்றேன். சர்க்கரை வள்ளிக்கிழங்கிலும் தண்ணீரிலும் வயிற்றை நிறைத்து, நதித்துறையில் காசைக் கொடுத்து குந்தாபுரத்தை அடைந்தேன்.


குந்தாபுரத்திலிருந்து ஒணசி செல்ல ஒரு எளியவழி உள்ளது. மூன்று நதியைக் கடக்க வேண்டும். காட்டுவழியாகச் செல்ல வேண்டும்.


“ஒணசிகெ ஹெல்லி ஹோகுவது?“ வழியில் தென்பட்டவர்களிடம்  கேட்டேன். ஒரு நதியைக் கடந்து காட்டு வழியாகச் சென்றேன். சாலை இல்லை. ஒற்றையடிப் பாதை. பாதசாரிகளும் அதிகமில்லை. காத்திருந்து தென்பட்டவர்களிடம்  வழியைக் கேட்டு முன்னேறினேன்.


வழியோரத்தில் முந்திரிக்காடுகள் படர்ந்து பந்தலிட்டிருந்தன. ஒவ்வொரு மரத்திலும் பழுத்த பழங்கள். வெள்ளையும் சிவப்புமாக. நான் ஓரிரண்டு மரங்களின் மீதேறி கிளையை உலுக்கினேன். பழங்கள் விழுந்தன. எல்லாவற்றையும் சேர்த்து வைத்து சுவைக்கத் தொடங்கினேன். ஒரு காவல்காரன் வந்து கன்னடத்தில் திட்டத் தொடங்கினான்.


“ஒணசிகெ ஹெல்லி ஹோகுவது? கொல்லூருக்கு எத்தனை நாழிகை தூரம்?” நான் கேட்கத் தொடங்கினேன். பழங்களிலிருந்து உருவியெடுத்த முந்திரிக்கொட்டைகளை அவனது கூடையில் போட்டேன்.


“வா” அவன் திட்டுவதை நிறுத்திக் கொண்டான். என்னை அழைத்தபடி நடந்தான். வேறொரு ஆற்றங்கரையைக் காட்டித் தந்தான்.  அந்த ஆற்றையும் காசு கொடுத்துக் கடந்தேன். மறுகரையிலுள்ள காட்டை அடைந்தேன். வழிப்போக்கர்களிடம் வழியைக் கேட்டுக் கேட்டு  ஆற்றங்கரையை அடைந்தேன். அங்கு தோணி இல்லை. மறுகரையில் ஒரு சிறிய தோணி உள்ளது. என் கையில் காலணா மட்டுமே உள்ளது. அதை தோணிக்கூலியாகக் கொடுத்து விட்டால்  சர்க்கரை வள்ளிக்கிழங்கை வாங்கித் தின்னக் கூட காசு இருக்காது. நான் பெரிய வேட்டியை அவிழ்த்து தலையில் கட்டினேன். அதன் மீது துவர்த்து. நீரில் இறங்கி மறுகரையிலிருந்த சாலையை நோக்கி நடந்தேன். மறுகரையிலிருந்த தோணிக்காரன் கூப்பிட்டு ஏதோ சொல்லிக்  கொண்டிருந்தான். நான் எதையும் கவனிக்காமல் நிலைதடுமாறிய போது நீந்தத் தொடங்கினேன். இருபது அடி நீந்தியபோது மீண்டும் தரை தட்டியது.  நடந்து கரையை அடைந்தேன்.


“மலையாளியா?“ தோணிக்காரன் கேட்டான்.


“ஆமாம்” என்றேன். “கொல்லூர்கெ ஹெல்லி  ஹோகுவது?”


“ஹிட்லெ.”


“எத்தனை நாழிகை தூரம்?”


“பதினான்கு பதினைந்து.”


“காசில்லை” நான் சொன்னேன். வேட்டியை உடுத்து சாலையை நோக்கிப் போனேன்.


“போ. போ” தோணிக்காரன் வழியனுப்பினான். நேரம் ஐந்து மணியை நெருங்கி விட்டது. நான் வேகமாக நடந்தேன். அவ்வப்போது ஓடினேன். இருமருங்கிலும் காடுகள். நடுவில் இருள்படிந்த சுரங்கம் போன்ற  அந்தச் சாலையில்  ஓடிஓடி முன்னேறிச் சென்றேன். நிலவு இருந்தபோதிலும் ஓரடி முன்னோக்கி வைக்க நிழல் விரிந்த சாலையில் வெளிச்சமில்லை. சுற்றிலும் பார்த்தேன். ஜன நடமாட்டத்தின் எந்த அறிகுறியும் இல்லை. இயன்றவரை தைரியத்தை வரவழைத்து நடந்தேன்.


சாலையிலிருந்து ஒரு ஃபர்லாங் தொலைவில் ஒரு வெளிச்சம் தெரிந்தது. பாதை தெரியாவிட்டாலும் அதை நோக்கி நடந்தேன். பாதங்களில் கல்லும் முள்ளும் துளைத்துக் கொண்டிருந்தன. முட்செடிகள் வேட்டியை இழுத்துக் கிழிந்தன. உடலின் பலவிடங்களில் உரசி ரத்தம் அரும்பியது.


“அம்மா...” வீட்டை நெருங்கியபோது  உரக்க அழைத்தேன்.


“யார்?” ஒரு முதியவர் கேட்டார்.


நான் முட்புதர்கள் மூடிய ஒரு தண்ணீர் கால்வாயைத் தாண்டி அந்தக் கானக வீட்டில்  அடைக்கலம் கேட்டேன்.


அந்த விவசாயி எனக்கு உணவு தந்தார்.  பாயும் வைக்கோலால் ஆன தலையணையையும் தந்தார்.


“கொல்லூருக்கு எத்தனை நாழிகை தூரம் போகணும்?” நான் படுத்தபடியே கேட்டேன்.


“நாலு” முதியவர் சொன்னார்.


“தேவி, நான் பக்கத்துல வந்துட்டேன்.” நான் நிம்மதியாகத் தூங்கினேன். “வெளிச்சத்திற்கு முன்பு எழுந்தேன். முதியவர் சுட்டிக் காட்டிய வழியில் விரைந்து நடந்தேன்.


 தாழம்பூவின் நறுமணம் என்னைக் கவர்ந்து கொண்டிருந்தது. அடிக்கடி ஓடியும் நடந்தும்  இலக்கை நோக்கிப் பாய்ந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு கன்னடப்பெண் ஒரு கூடையைத் தலையில் வைத்து நடந்து கொண்டிருந்தாள். ஓடி சென்று நெருங்கினேன்.


“அம்மா,  கொல்லூருக்கு எத்தனை நாழிகை தூரம் இருக்குது?” நான் கேட்டேன். அந்தப் பெண் ஒரு திருப்பத்தைக் காட்டினாள். அவளது கையில் ஒரு தாழம்பூ இருந்தது.  அவள் சுட்டிக் காட்டிய திருப்பத்தை அடைந்தேன். பெரியதொரு மதிலும் செந்நிற ஓவியங்கள்  தீட்டப்பட்ட ஒரு கோபுரமும் கண்ணில் பட்டது. நான் நெருங்கினேன். மதிலின் மேற்புறத்திலிருந்து  உள்ளே பார்த்தேன். இளம் வெயில்பட்டு ஒளிரும் தங்கக் கோபுரக் கலசத்தைக் கண்டேன்.


“தாயே!” நான் வணங்கினேன்.


மேற்கு நடைக்கல்லிலிருந்து சாலையில் நடந்தேன். கிழக்கு நடைக்கல்லை அடைந்து மீண்டும் வணங்கினேன்.


அக்காலத்தில் கோயில் நிர்வாகிகள், மலையாளிகளிடமிருந்து கோயில் தரிசனத்திற்காகப் பலவிதமான கட்டணங்களை வசூலித்தார்கள். மிகக் குறைந்த கட்டணம் முக்கால் ரூபாய் எனது கையில் ஒரு முக்கால் மட்டுமே இருந்தது.


கிழக்கு நடையிலிருந்த ஒரு கோயில் ஊழியரிடம் விவரங்களைச் சொன்னேன். நீராடி விட்டு வணங்க அனுமதியைப் பெற்றேன். 


கிழக்கு நடையில்  ஓசையின்றித் தேங்கி நிற்கும் புண்ணிய நதியில் உருண்டு புரண்டு குளித்து விட்டு கோயில் மதிலகத்தில் நுழைந்தேன். பிரதட்சிணம் வைத்தேன். மூலை முடுக்கில் காணப்பட்ட எல்லாத்  தேவர்களையும் தேவிகளையும் தொழுது வணங்கினேன். வட மேற்கு மூலையில் கிழக்கு நோக்கித் திரும்பி நிற்கும் அனுமானையும் கிழக்கு வடக்கு மூலையில் மேற்கு நோக்கித் திரும்பி நிற்கும் வீரபத்ரனையும் பொறுமையாகப் பார்த்து வணங்கினேன். பிரகாரத்திற்குள் பிரவேசித்து சங்கராச்சாரியருடன் அமர்ந்திருக்கும் பகவதியை கண்டு வணங்கினேன். பிரதட்சிணம் வைத்து மீண்டும் நடையை அடைந்து வணங்கியபடி மெல்ல கேட்டேன்: “தேவி என்னுடன் வருகிறீர்களா? நான் புறப்படுகிறேன்.”


யாருக்கும் கேட்கவில்லை. யாரும் எதுவும் சொல்லவில்லை.


மக்கள் கூட்டம் மிகுந்த நடை அருகில் சென்றேன். நான் தேவியை நன்றாகத் தரிசித்து விட்டேன். நீண்டநேரம் அப்படியே நின்றேன். பிரசாதத்தை வாங்கி சற்று ஒதுங்கி நின்றேன். கருவறையின் மேற்கூரையைப் பார்த்தேன். பளபளவென்று ஒளிரும் தங்கத் தகடால் வேயப்பட்ட மேற்கூரையும் தங்கக்கலசமும்! நடையின் வலது பக்கத்திலுள்ள கிணற்றைப் பார்க்க இறங்கிச் சென்றேன். எம்பி நின்று எட்டிப் பார்த்தேன்.


“எதைப் பார்க்கிறாய்? அதுல குதிச்சிடாதே” ஒரு தாடிக்கார இளைஞன் என்னை விலக்கி நிறுத்திச் சொன்னான்: “தம்பி எப்ப வந்தே?”


“இதோ இப்பதான் வந்தேன். குளித்துக் கும்பிட்டேன்.”


“ஊர் எங்கே?”


“பட்டாம்பிக்குப் பக்கத்துல புலாமந்தோள்.”


 “நீங்க எங்கேர்ந்து வர்றீங்க?” நான் கேட்டேன்.


“ஒற்றப்பாலம்.”


 தாடிக்காரன் கேட்டான்: “கையில காசு இருக்குதா?”


“காலணா இருக்குது.”


“இங்க எங்க தங்குவே?”


“நான் தங்கறதில்ல. கிளம்பறேன்.”


“கிளம்பறதா இருந்தா இப்பவே கிளம்பணும். இன்னைக்கு இங்க உற்சவத்துக்கான கொடியை ஏத்துறாங்க. பங்குனி அத்தம் நட்சத்திரம். உற்சவக் கொடியை ஏற்றியப் பிறகு மலையாளிகள் இந்த எடத்தை விட்டுப் போகக் கூடாது.”


“அப்படின்னா நான் இப்பவே புறப்படறேன்.” நான் வெளியே வந்து கோபுரத்தைத் தாண்டினேன்.


“நில்.” அந்தத் தாடிக்காரன் என்னைப் பின்தொடர்ந்தான். “நானும் ஊருக்கு வர்றேன். தம்பி உன்னை வீட்டுல உன் அம்மாகிட்ட ஒப்படைச்சிட்டு ஒற்றப்பாலத்துக்குப் போறேன்.”


நான் முன்னால் நடந்தேன். அவன் என்னைப் பின்தொடர்ந்தான்.


நான் வீட்டை விட்டு கிளம்பிய ஒன்பதாவது நாள் அந்தத் தாடிக்காரன் என்னை வீட்டில் சேர்த்தான். அம்மாவிடம் ஒப்படைத்தான். அம்மா எனக்கும் அந்த ஆளுக்கும் சோற்றைப் பரிமாறினாள். என்னை வீட்டுக்குக் கூட்டி வந்து ஒப்படைத்ததற்கு ஒற்றை ரூபாயைப் பரிசளித்தாள். அந்தத் தாடிக்காரன் விடைபெற்றுச் சென்றான். அவனுக்கு இருபத்தி ஐந்து வயதுக்குக் குறைவாகவே இருக்கும். காவி நனைக்கப்பட்ட ஒரு மல்வேட்டி. ஒரு துவர்த்து. இத்தனைத்தான் உடைகள். சோழிப்பையும் வேறு சில சில்லறைச் சாமான்களும் ஒரு சிறு மூட்டையும் அவனது இடது தோளில் இருந்தன. பின்னர் நான் அவனைச் சந்திக்கவில்லை.


ஆபத்தில் சிக்கி மூழ்கத் தொடங்கும் மனிதன் ஆசையின் வைக்கோல் துரும்பைப் பிடித்து நிம்மதியடைகிறான்.

 

“இரவுநேர அலைக்கடலில் தங்கும்

 வெண்நுரையைக் கண்டு

 இந்திரனின் குதிரை உச்சை சிரவச் என நினைத்து

அதன் மீதேற நினைக்கிறான்

 நிலையற்ற நீரில் மூழ்கும் மனிதன்.”


மகாகவி நாலப்பாடு நாராயண மேனோன் கூறியதைப் போல நான் சொன்னேன்:  ‘பாவம் மனிதன்!

 

செறுகாடு ஜோசப் முண்டச்சேரி(கண்ணாடி அணிந்திருப்பவர்)யுடன். புகைப்பட உதவி ; நிர்மால்யா. 


செறுகாடு அவர்களின் தன்வரலாற்று நூலான ‘வாழ்க்கைப் பாதை’ (தமிழில்:நிர்மால்யா) புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் ஓர் அத்தியாயம் இது. இப்பகுதியை மொழிபெயர்ப்பாளரின் சம்மதத்துடனேயே வலையேற்றி இருக்கிறேன். 

----------------------

வாழ்க்கைப் பாதை - செறுகாடு : தமிழில் - நிர்மால்யா ; சாகித்ய அகாதமி வெளியீடு.