Sunday, January 27, 2019

தவளைகளும் மீன்களும்


தவளைகளும் மீன்களும்


புத்தகக் காட்சி 2019 குறித்த பார்வை

பண்டிகைக் காலங்களில் திடீரென முளைக்கும் பர்மா, சைனா பஜார்களின் முன்புறத்திலும், நெருக்கடியான கடைத் தெருக்களில் அடுத்தடுத்து அமைந்திருக்கும் ஹோட்டல்களின் முன்னாலும்  வேலை ஆட்கள் நின்று கொண்டு அந்தப் பக்கமாக போவோரையும் வருவரையும் ’உள்ள வாங்கம்மா, வாங்கய்யா ,வாங்கண்ணா..’ என கையைப் பிடித்து இழுக்காத குறையாக அழைத்துக் கொண்டே நின்றிருப்பதைப் பலரும் கண்டிருக்கலாம். கிட்டத்தட்ட சமீப வருடங்களில் எழுத்தாளன் தன் நூல் சந்தைக்கு வருவதிலிருந்து  ரேக்கில் அடுக்கி வைக்கப்பட்டு கடையைச் சாத்தும் இறுதி நாள் வரை மேற்சொன்ன சிப்பந்திகளின்(அந்தச் சிப்பந்திகள் பரிதாபகரமானவர்கள்) வேலையைச் செய்து கொண்டே இருக்கிறான்.  முகநூலெங்கும் இந்த இரைச்சல்களின் சத்தம் நாராசத்தை எட்டுவது கூட  உறைப்பதில்லை.  புத்தகம் பண்டமோ சரக்கோ அல்ல அது எழுத்தாளன் தன் வாழ்வின் ஒரு பகுதியிலிருந்து (ஒரு பகுதி தானா..!) கிழித்தெடுத்து தைத்துக் கொடுத்த பிரதி என்கிற போதம் பலருக்கும் இல்லை. ஆர்வக்கோளாறு அல்லது நரம்பு சம்பந்தமான பதற்றம் தான் அந்த இடைவிடாத கூவல்களுக்குக் காரணமோ என நினைக்க வைக்கிறது. இந்த நரம்பியல் பிரச்சனை மூத்தோர்கள் சிலருக்குக் கூட உண்டு.




இலக்கியம் அறிமுகமான ஆண்டுக்கு பிறகு வந்த சென்னை புத்தகச் சந்தையிலிருந்து(2003) பதின்வயதின் இறுதியிலிருந்து ஒரு வருடம் கூட இடைவிடாது தொடர்ந்து சென்று கொண்டே இருக்கிறேன். வாசகனாக பரவசத்துடன் படைப்பாளிகளைச் சந்தித்துப் பேசியதிலிருந்து என்றும் சொல்லலாம்.  புத்தகச் சந்தைக்கு உள்ளேயும் வெளியேயும் நின்று பேசிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களைக் காண்பது தனி அனுபவமாக இருந்திருக்கிறது. முன்பெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே சட்டென நின்று பேசத் தொடங்கி அது அப்படியே வளர்ந்து செல்வதை ஆர்வத்துடன் குறுக்குக் கேள்விகள் கேட்டு இடைமறித்தது அதை அவர்கள் மதித்தது அனைத்தும் இது போன்ற புத்தகச் சந்தைகளில் தான் நடந்திருக்கின்றன. சில ஆண்டுகளாக அதற்கான இடமே இல்லை.  அதற்கான இடத்தையோ வாய்ப்பையோ பப்பாசி வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் உருவாக்கித் தரவேயில்லை.


இந்த ஆண்டு இரண்டு நாட்கள் புத்தகச் சந்தையினுள் இருந்தேன்.  பிற ஆண்டுகளைக் காட்டிலும் கூடுதலான ஸ்டால்களால் சந்தை பெரிதாக ஆகியிருந்தது. இதன் பலன் என்னவென்று கேட்டால் கால் வலியால் காலி நாற்காலியைக் கண்கள் தேடிக் கொண்டேயிருந்ததைத் தான் சொல்ல முடியும்.  ஒருவர்  வாங்கிய காப்பியின் சூடு தாங்காமல் நாற்காலி மேல் வைத்தார்.  உடல்வலியால் அதைப் பார்க்காத வேறொருவர் பெருமூச்சோடு உட்காரப் போக பின்புறம் கொதித்து அதே வேகத்தில் எழுந்து ஓடியக் கூத்துகள் கூட நடந்தன. 


எழுத்தாளர்கள் வருடந்தோறும் புத்தகம் (அ) புத்தகங்களை வெளியிடுவதற்கு இரு காரணிகளே இருக்கக் கூடும். சம்பந்தப்பட்ட எழுத்தாளர் படைப்பூக்கக் காலத்தில் இருக்க வேண்டும். இல்லையெனில் அது ஒரு நோய்க்கூறாக மனதில் படிந்திருக்க வேண்டும். இந்த வருடம் சுற்றி வந்ததில் நோயாளிகளையே அதிகம் பார்க்க முடிந்தது. இந்த நோயாளிகளின் பிரச்சனை என்னவென்றால் யாருக்கோ பதில் சொல்ல வருடந்தோறும் நூலை (அ) நூல்களை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். சதவீதத்தில் முதலாமவர்களை விட இவர்களே அதிகம்.


முன்னரெல்லாம் முக்கியமான படைப்பாக ஏதோவொன்றைக் குறித்தப் பேச்சுகள் அல்லது விவாதங்கள் அந்தப் பெரிய வளாகத்தினுள் வளைய வருவதைக் கேட்டிருக்கிறேன்.  கடந்த சில ஆண்டுகளாக தமிழில் எழுதத் தெரிந்த அனைவரும் எழுத்தாளர்களாகத் தங்களை அறிவித்துக் கொண்டதால் அதற்கான சிறுவாய்ப்பு கூட இல்லாமல் போய்விட்டதை உணர்ந்தேன்.


நூல்களின் அதிக விலை குறித்த அதிருப்தி இந்த புத்தகச் சந்தையிலும் எதிரொலித்தது. கிட்டத்தட்ட பக்கத்துக்கு ஒரு ரூபாய்க்கு மிகாமல் விலைகள் இருந்தன.  நான்கு நூல்களுக்கே ஆயிரம் ரூபாய் தேவைப்படும் என்றால் அதிருப்தி எழத்தானே செய்யும். பதிப்பாளர்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களில்  இது முக்கியமானதாகத் தோன்றுகிறது.


நட்சத்திர எழுத்தாளர்கள் எனக் கூறப்படுகிற மூவரின் மீதான பிரம்மையிலிருந்தும் மயக்கத்திலிருந்தும் வாசகர்கள் மட்டுமல்ல, அச்சு, இணைய மற்றும் காட்சி ஊடகங்களும் வெளியேற வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த மும்மூர்த்திகளில் ஒருவர் மட்டுமே  நட்சத்திரம் எனச் சொல்லிக் கொள்ளக்கூடியத் தகுதி கொண்டவர். ‘நட்சத்திர வழிபாடு’ திரைத்துறையோடு ஒழிந்து போகட்டும். பன்முக அடையாளங்களை மறைக்கும் இந்த ஆராதனைகள் எதற்கு? இவர்கள் எழுதவந்த காலத்திலும் அதற்குப் பின்னும் எழுதத் தொடங்கி , படைப்பூக்கத்துடன் தொடர்ந்து எழுத்துலகில் தங்களை நிறுவிக்கொண்டிருக்கும்  இமையம், ஷோபாசக்தி,  ஆ.இரா.வேங்கடாசலபதி, கண்மணி குணசேகரன் போன்றவர்களும் முக்கியமான படைப்பாளிகள் என்பதை உணர்ந்து ஊடகங்கள் பழைய பல்லக்குகளை கைவிட்டால் அது சூழலுக்கு நன்மை பயக்கும். 

தமிழகமெங்கும் பரவலாக புத்தகக் கண்காட்சி நடைபெற்றாலுமே  கூட சென்னையே பதிப்பாளர்களுக்குப் போதுமான ஆக்ஸிஜனைத் தரக் கூடியது. இந்த விற்பனையே கூட மிகைப்படுத்திச் சொல்லப்படுவதாக பரவலான புகார்கள் உள்ளது. தீவிர இலக்கிய நூல்களில் க்ளாஸிக்குகள் தான் இன்றும் அதிக வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்த மகிழ்ச்சியில் சங்கடமும் கலந்திருக்கிறது. அந்த நூல்களின் முதல் பதிப்பு வெளியாகி முப்பதிலிருந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்து விட்டது. சுந்தர ராமசாமியோ அசோகமித்திரனோ ஜானகிராமனோ ஆ.மாதவனோ இந்தப் படைப்புகளை எழுதிய போதே இவ்வளவு கவனிப்பிற்கும் வாசக ஆதரவுக்கும் உரியவர்களாக இருந்திருந்தால்  இந்தச் சமூகத்தின் விழிப்புநிலையை எண்ணி உவகை கொண்டிருக்க முடியும். இடைப்பட்டக் காலங்களில் பலரும் பேசி எழுதி உரையாடி கூட்டங்கள் போட்டு மூடியிருந்த அந்த பெருங்கதவை சிறுகச் சிறுகத் திறந்திருக்கின்றனர். அப்படியாயின் கடந்த சில ஆண்டுகளில்  எழுத வந்திருக்கும் தீவிர இலக்கியக்காரர்கள் தவளைகள் எழுப்பும் ’ட்ரெண்டிங்’  சத்தங்களைக் கடந்து  தன் இடம் எதுவென அறிந்து கொள்ள மேலும் முப்பதாண்டு, நாற்பதாண்டு காலங்கள் காத்திருக்க வேண்டுமோ..! கிழடு தட்டிய வயோதிகத்தில் பார்வைக் குறைபாட்டுடன் இருக்கையில் இந்த அற்புதம்  நிகழ்ந்தால் என்ன? நிகழாமல் போனால் தான் என்ன? சர்ச்சையின் பொருட்டு எழுத்தாளரின் நூல்கள் கவனம் பெற்று கூடுதல் விற்பனை ஆகிறதென்றால் அதிலும் பெருமைப்பட ஏதுமில்லை.


விற்பனைக் குறித்து பதிப்பாளர்களளை விடவும் எழுதுகிறவர்கள் இன்று அதிகக் கவலைகளுடன் இருப்பதாகத் தோன்றுகிறது.  இவ்வளவுக்கிடையே 90 சதவீதம் ‘பல்ப்’ நூல்களை வெளியிட்டுவிட்டு ’என் விற்பனையை இருட்டடிருப்பு செய்தாயே..’ என பத்திரிகையை நோக்கி பிலாக்கணம் வைத்த பதிப்பாளரின்  ’வேடிக்கைப் பதிவு’ம் முகநூலில் அரங்கேறியது.


‘இந்து தமிழ்’ நாளிதழ் புத்தகச் சந்தையையொட்டி தினந்தோறும் ஒரு பக்கத்தை ஒதுக்கிச் சேவை ஆற்றியது. சில நல்ல நேர்காணல்கள் இந்நாட்களில் வெளியாகி அந்த எழுத்தாளனின் முகத்தையும் மனதையும் உலகுக்குக் காட்டின. இவர்களின் தனிப்பட்ட ஆர்வங்களை பத்திரிகையின் குரலாக வெளிப்படுத்தியதில் முதிர்ச்சியின்மை வெளிப்பட்டது.  இந்நாளிதழ் கவனிக்கப் பரிந்துரைத்த பாதி நூல்கள் அந்த பக்கத்தில் நகைச்சுவை இல்லாமலிருந்த குறையைப் போக்கியது.


சிற்றிதழ் வழியாக உருவான நெடுங்கால பரிச்சயத்திற்கு பின் அயல்தேச எழுத்தாளனின் மொழிபெயர்ப்பு நூல் இங்கு வெளியாகி பெரும் சலனங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. சில ஆண்டுகளாக தமிழில் வராத என நினைத்திருந்த நூல்களெல்லாம் உரிமை பெற்று வரத்தொடங்கியது சாதகமான அம்சம் என்றால் முதன்முதலாக அந்த மொழியாக்கத்தின் வழி மட்டும் மூல ஆசிரியன் பெயரை அறிந்து கொள்ளும் விபரீத்தை பாதகமானதாகக் கருத வேண்டியிருக்கிறது. வந்து கொட்டப்படுகிறவற்றுள் மொழிபெயத்தவரின் பெயர் அளிக்கும் நன்நம்பிக்கையின் பொருட்டே அந்த நூலை வாங்குவது குறித்து யோசிப்பவனாக இருக்கிறேன்.


எழுத்தாளனின் இறப்பின் வழியாக மட்டுமே அவனது பெயரை அறிந்து கொள்ளும் சமூகமாகவே இன்றும் இருந்து கொண்டிருக்கிறோம். ந.முத்துசாமி, பிரபஞ்சன் போன்றோரை அவ்வாறே தமிழுலகு தெரிந்து கொண்டது. இவர்கள் இருவருக்குமான தனித்த அரங்குகளை பப்பாசி ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அப்பளத்தையும் சுண்டலையும் கடிக்கும் இடைவெளியில் மக்களின் காதுக்குள் அவர்கள் நுழைந்திருப்பார்கள். ஆனால் பப்பாசி இன்னும் வி.ஐ.பிக்களையும் லேனா தமிழ்வாணன்களையுமே மேடை ஏற்றிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு மூடன் ‘பேச வந்திருக்கிறேன். என்னை உற்சாகமூட்ட ஒரு தடவை எல்லோரும் நன்றாக கை தட்டுங்கள்..’ என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்ததை ஒருமுறை பார்க்க நேர்ந்தது.


இந்தப் புத்தகச் சந்தையைச் சுற்றி வந்து கொண்டிருந்த போது ‘நீ எழுதவில்லை என பட்டினி கிடக்கும் வாசகன் யார்?’ என்ற ‘ஜே.ஜே சில குறிப்புகள்’ நாவலில் வரும் வரி மீண்டும் மீண்டும் மனதில் ஒலித்துக் கொண்டே இருந்தது. எவருமில்லையல்லவா..! இது புரிந்தால் தன்னைக் குறித்த மிகைவிளம்பரங்களுக்கும் அதீத கற்பனைகளுக்கும் அவசியமே இல்லாமல் போய்விடும் என்று தோன்றுகிறது. புத்தகம் பேசுவதற்குப் பதிலாக எழுதியவனே அது குறித்து ஓயாமல் பேசிக் கொள்கிறான்.


போலிகளுக்கும் தவளைகளுக்கும் புகழ்மாலைகள் விழும் போது மீன்களின் காதிற்குள் புகைவரத் தான் செய்கிறது. அந்த தவளைகள் இல்லாமல் போகும் நாளிலும் இந்த மீன்கள் நீந்திக் கொண்டிருக்குமல்லவா..! தூண்டிகளுக்கும் வலைகளுக்கும் அகப்படாமல் இருப்பது மீன்களின் சமார்த்தியம். தான் நீருக்கும் இருக்கிறோம் நீந்திக் கொண்டிருக்கிறோம் என்பதே இந்த மீன்களுக்கு போதுமானது. 


ஆம். நீருக்குள் அமைதியாக மீன்கள் நீந்திக் கொண்டிருக்கும்.

(மின்னம்பலம் இணைய இதழ் கேட்டுக் கொண்டதற்கிணங்க எழுதப்பட்டக் கட்டுரையின் முழு வடிவம்)