Monday, September 29, 2014

ரேமண்ட் கார்வர் “ஒரு பெரிய நல்ல காரியம்”





ரேமண்ட் கார்வரின் “வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு


ஒரு பெரிய ,நல்ல காரியம்..


                              முக்கியமாக நாங்கள் கண்டுணர்ந்தது,வாசிப்பு எவ்வளவு மேலோட்டமானது என்பதை,யதார்த்தவாதம் எவ்வளவு வீரியமான கதை சொல்லல்முறை என்பதை,நன்றாக எழுதப்பட்டால்,சிறுகதை எத்தனை அபாரமான வடிவம் என்பதை.
                                  -நூலின் முன்னுரையிலிருந்து...



             ஏற்கனவே இருந்துகொண்டிருக்கும் ஆக்கங்களின் உள்ளடக்கப் போதாமையை, அவை காலத்தின் முதுகிலேறி அமர முடியாமல் படும் சிரமங்களைக் கண்ட மனம் தான் முதலில் மொழிபெயர்ப்பு என்னும் கூடு பாயும்வித்தையை நிகழ்த்தியிருக்க வேண்டும். நம் படைப்புச் செயல்பாட்டின் மீதான அதிருப்தி அதை முன்னெடுத்து செல்வதற்கான முனைப்பு என்றும் இதைக் கருதலாம்.நாவலை எவ்வாறு மேற்கிலிருந்து பெற்றோமோ அதே போலத் தான் சிறுகதையும்.அதன் வடிவம்,மொழி,கூறுமுறை,உத்தி போன்றவை ஒரு சிறுகதைக்கு அளிக்கும் பங்கு அளப்பரியது.ஆனால் அதற்குள் அனுபவங்களைச் சொல்வதிலுள்ள நுட்பம்,வாழ்க்கை மீதான் தனித்த நோக்கு போன்றவற்றை எவரிடமிருந்தும் கடன் பெற்று விட முடியாது. என்ற போதிலும்  அதில் நம் இலக்கிய முன்னோடிகளின் சாயல் ஏதோ ஒரு விதத்தில் விழுந்திருப்பதைப் போலவே வேற்று மொழி ஆக்கங்களின் மீதான வாசிப்பு சார்ந்த பிரதிபலிப்பிலிருந்தும் தப்ப முடியாது.ஆச்சர்யமாக இங்கு இருவேறு தேசத்து இலக்கியங்களே கோலோச்சியிருக்கின்றன.பிற தேசத்து இலக்கியங்களின் பெயர்ப்புகள் உண்டென்றாலும் ரஷ்ய,இலத்தீன் அமெரிக்க இலக்கிய மொழியாக்கங்கள் போல அவை பெரும் வீச்சாக பரவவில்லை(விதிவிலக்குகள் காம்யூவின் அந்நியன்மற்றும் காஃப்கா வின் விசாரணை’). ரஷ்ய,இலத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் தமிழ் வாழ்க்கையோடு கொண்டிருந்த ஒரு விதமான நெருக்கத்தையே அதற்கு காரணமாக கூறத் தோன்றுகிறது.


ஐரோப்பிய மொழியிலிருந்து க.நா.சு மொழிபெயர்க்கத் தேர்ந்தெடுத்த படைப்புகளை நோக்கினால அவரது கவனம் விழுந்ததும் இந்தக் கூறின் மீது தான் என்பது தெரியவரும்.வாசகனுக்கு மனவிலகலையோ,இது தனக்கானது அல்ல என்னும் அன்னியத்தன்மையையோ,ஒவ்வாமையையோ ஏற்படுத்தாத மொழிபெயப்புகளே தமிழில் நிலைபெற்றிருக்கின்றன.போதுமான புகழும் போதிய ஆதாயமும் கிடைக்காத இத்துறைக்கு தங்கள் இதயத்தையும் நேரத்தையும் அளித்து இலக்கியத்தின் நுரையீரலுக்கு புதிய காற்றைக் கொண்டு வந்து சேர்க்கும் இவர்களை ‘அர்பணிப்பாளர்கள்என்னும் சொல்லால் அழைக்கவே விரும்புகிறேன்.பொறுப்புணர்ச்சி அற்றவர்களையும் தன் மேதமையைக் காட்ட இந்த உலக்த்திற்குள் நுழைந்து உலவித் திரிபவர்களையும் நாம் மறந்து விடுவோம்.ஏனெனில் பெயக்கப்படும் ஆக்கத்திற்கு அதன் மொழிபெயர்ப்பாளன் , அவனாகவே எடுத்துக் கொண்ட சிறிதளவு சுதந்திரத்துடன் எவ்வளவு விசுவாசமாக இருக்கிறானோ அதை விடவும் அந்த மொழிபெயப்பு நிகழ்ந்த மொழியின் வாசகன் அவனுக்கு அதைவிடவும்  நன்றி உடையவனாக இருப்பான்.அந்த வகையில் கார்வரோடு இணைந்து இந்த நான்கு மொழிபெயப்பாளர்களும் உருவாக்கியிருக்கும் இந்த ‘கதீட்ரல்வாசகனை மனச்சலனங்களுக்கு உட்படுத்தும் அதே வேளையில் அவன் மனதிலிருக்கும் யதார்த்தம் பற்றிய இளப்பான பார்வையை மறுபரிசீலனை செய்யத் தூண்டகின்றன.   
           


             பதிமூன்று கதைகளை உள்ளடக்கியிருக்கும் ரேமண்ட் கார்வரின் இக்கதைகள், ஒவ்வொரு காலகட்டத்திலும் அவரது புனைகதைகள் அடைந்த மாற்றங்களையும் செறிவையும் குறுக்குவெட்டாக இல்லாமல் நேரடியாகவே காட்டும் மொழியாக்கத் தொகுப்பு இது.அதற்கேற்ற சிறுகதைகளை தேர்ந்தெடுத்திருப்பது போலவே அவை காலவரிசைப்படியும்  அமைக்கப்பட்டிருக்கின்றன.வாசகனை மருட்டும் அல்லது நெற்றி நரம்புகள் புடைக்கச் செய்யும் மொழிநடை அல்ல கார்வருடையது.வர்ணணைகளையும் விட்டு விலகி நிற்பது.எனவே எளிமையானது.ஆனால் ஆழம் மிக்கது.உட்பொருட்களையும் ரகசிய கதவுகளையும் தன்னகத்தே வைத்திருப்பது.பழகிப் போன ஒரு சொல்லை எங்கு எவ்வாறு பயன்படுத்தினால் அது எப்படி ஒளிரும் என்பதை நுட்பமாக அறிந்து வைத்திருப்பவர் இவர்.ஒரு வாக்கியத்தில் அல்லது வெறும் சிறு உரையாடலில் கார்வர் இட்டுச் செல்லும் வழித்தடங்கள் நம் மனதைக் கிளறக் கூடியவை.சொற்களை விரயமாக்காமல் சிக்கனமும் செட்டான சித்திரிப்பு மொழிநடையும் கொண்டவை கார்வரின் கதையுலகம்.அதனால் தான் அவரால் நாவல் எழுத முடிந்திருக்கவில்லையோ?என நினைக்க வைக்கிறது.



ஏனெனில் எளிமையாகத் தோன்றக்கூடிய இந்த யதார்த்தக் கதைகளைத் தான் கார்வர் இருபது முறை திருத்தி எழுதியதாக செங்கதிரின் முன்னுரையில் ஒரு வரி வருகிறது.இருபது முறை என்பது திருத்தம் அல்ல செதுக்கல்.தமிழில் இன்னும் தன் எழுத்தை திருத்துவது இருந்து கொண்டிருக்கிறது.ஆனால் இப்போது செதுக்கல் அனேகமாக இல்லை என்றே சொல்லிவிடலாம்.
        

             சிறிய கதைகளும்(இரு பக்கங்கள்) சிறுகதைகளும் நெடுங்கதைகளுமாக விரவிக் கிடக்கும் இத்தொகுப்பை கவனமாக படித்தால் 1980-க்கு பிறகு கார்வர் எழுதிய கதைகள் தான் அவரது ஆளுமையை நமக்கு உணர்த்துகின்றன என்பது புரியவருகிறது.அதற்கு அக்கதைகளில் கூடியிருக்கும் செறிவும் சொல்முறை சார்ந்த கவனமும் சாட்சிகளாக இருக்கின்றன.தன் முந்தைய கதைகளிலேயே அவர் காட்டியிருக்கும் உலகை அதன் பிறகு இன்னும் அருகாகப் போய் மனங்களின் புரிபடாத்தன்மையை அதன் நிழலாட்டத்தை வெவ்வேறு புள்ளிகளில் தொட்டுக்காட்டும் கார்வர் அதில் தன் சொந்த வாழ்க்கையின் சில பக்கங்களை புனைகதைகளுக்கே உரித்தான வெளிபாட்டு அமைதியுடன் முன்வைக்கிறார்.அந்தப் புள்ளிகளை தன் வாசிப்பின் வழியே இணைத்துப் புரிந்து கொள்ளும் நுட்பமான மனம் சில தருணங்களில் மனநகர்வுக்கு ஆட்படுவதை தவிர்க்க முடியாது என்றே படுகிறது.
          


              இயல்பும் யதார்த்தமும் கொண்ட ஆனால் நுண்ணிய அவதானிப்புகளால் நேர்த்தியான மொழியில் உருவாக்கப்பட்டிருக்கும் கதீட்ரல்,ஒரு சிறிய,நல்ல காரியம்,ஜுரம் ஆகிய கதைகள் ஆகச் சிறப்பான வாசிப்பனுபவத்தைத் தருகின்றன.அதிலும் முதலிரு கதைகள் காய்ந்து போன சருகுகளால் மூடிக்கிடக்கும் மனச்சுனையைத் தூண்டி படைப்புக் கனவை உசுப்பக் கூடியவையாக இருக்கின்றன.தன் மனைவியின் (பார்வையற்ற) நண்பனின் வருகையால் ஒருவனுக்குள் உண்டாகும் எரிச்சலை முதலிரு வாக்கியத்திலேயே கார்வர் நுட்பமாக சுட்டி விடுகிறார்.அவனை குருடன்என அறிமுகப்படுத்துவதிலேயே அந்த எரிச்சல் வெளிப்பட்டுவிடுகிறது.பின்னர் அவர்களுக்குள் மனதளவில் இணக்கமான நட்பு-குறிப்பாக அந்த எரிச்சல் கொண்டிருந்தவனுக்கு-மெல்ல வளர்ந்த பின்னர் அவனை பார்வையற்றவன்என்ற சொல் கொண்டே சுட்டுகிறான்.குருடன் என்னும் கடுஞ்சொல் பின்னர்  மிதமான சொல்லாக ஆகிவிடுவதை வைத்தே அவர்களுக்குள்ளிருக்கும் உறவின் இடைவெளி வெகுவாக குறைந்து விட்டிருப்பதை கார்வர் உணர்த்தி விடுகிறார்.இதன் மூலம் ஒரு சொல்லுக்குப் பின்னிருக்கும் அர்த்தங்களுக்கு அவர் அளித்திருக்கும் முக்கியத்துவத்தை அறிய முடிகிறது.அதைக் கச்சிதமாக தமிழில் பிடித்து இக்கதைக்குள் கொண்டு வந்திருக்கும் செங்கதிர் அதன் மூலம் கதையுடனான நம் பயணத்தின் தொலைவைக் கூட்டி விடுகிறார்.அவ்விருவருக்குமான சிறு சிறு உரையாடல் மூலம் மேலும் அவர்கள் நெருக்கமாகி எழுப்பும் கதீட்ரலை  காணும் வாசகன் சில கணநேர மெளனத்திற்குப் பின் தன் மனதிற்குள்ளாக எழுப்பும் கதீட்ரல் அதற்கு நிகராக மேலெழுவதை அவனே வியப்புடன் உணரக் கூடும்.
            

                     தன் மகனது பிறந்த தினத்துக்கு கேக் ஆர்டர் செய்வதிலிருந்து எளிமையாக தொடங்கும் “ஒரு சிறிய, நல்ல காரியம்அதை உள்ளூர உணர்ச்சிகளை அடக்கி கட்டுக்குள் வைத்திருக்கும் தம்பதியினரின் துயரை (அந்த மருத்துவரும் கூட அதைக் காட்டிக் கொள்வதில்லை)அவர்களது  மனதின் திரிபுநிலையில் கூட அடங்கிய தொனியில் ஆனால் வாசிப்பவனுக்கு ஆழமான மனவலியை ஏற்படுத்தி விடுமளவிற்கு கார்வரால்  சொல்லப் பட்டிருக்கிறது.புற உலகின் காட்சிகளை வெகு துல்லியத்துடன் ஆனால் அளவெடுத்த சொற்களால் அவர் தீட்டுவதைக் கண்டு  இந்த கதையை கார்வர் எவ்வளவு முறை திருத்தி எழுதியிருப்பார் என்ற எண்ணமே முதலில் வந்தது.அந்தளவிற்கு கட்டுக்கோப்பான நடையைக் கொண்ட கதை இது.மிகை உணர்ச்சிக்கு அதிகளவில் இடமிருக்கும் ஒரு கதையில் அதற்கு இடந்தராமலும் அதை வைத்து கண்ணீரால் பக்கங்களை நனைக்காமலும்  கார்வர் நகர்த்திச் சென்றாலும் கூட இக்கதை தரும் பாதிப்பு வலுவானது தான்.அவளது மொத்தக் கோபமும் இயலாமையும் அந்த தொலைபேசித் தொல்லையாளனான ரொட்டிக்கடைக்காரனிடம் ஒற்றை வசவுச் சொல்லால்(தேவிடியாப் பையா!)வெடிப்பதில் சமநிலையோ அல்லது போலியான சமாதானமோ அடைகிறது.சம்பரதாயமாக இல்லாத இந்தக் கதையின் முடிவுக்கு அருகே கதையின் தலைப்பைக் கொண்டு வந்து வைத்ததும் அந்த துயரின் அளவு மேலும் உயர்ந்து விடுவதைக் கண்டேன். இக்கதையை எம்.கோபாலகிருஷ்ணன் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்.
       

 

                   தமிழ் வாசகனுக்கு அன்னியமாகத் தோன்றக்கூடிய ஒரு வாழ்க்கை முறையையொட்டி  எழுதப்பட்டுள்ள ஜுரம்வாசகனுக்கு மனத்தொந்தரவை தோற்றுவிக்கும் கூறுகள் நிரம்பிய கதை.குழந்தைகளை விட்டுவிட்டு வேறொருவருடன் வாழச் சென்று விட்ட மனைவி அவளது முந்தைய கணவனோடு சுமூக உறவை மேற்கொள்ளும் பொருட்டு தொலைபேசியில் பேசுவது வாசகனுக்கு அசூசையையும் என்ன இது?என்ற கோபத்தையும் உருவாக்கிவிடுகிறது.இது போன்ற ஒரு கதையோ அதற்குள் செயல்படும் மனமோ தமிழில் இந்தளவிற்குச் சாத்தியமில்லை.ஆனால் கார்வர் அவருக்கேயுரிய கதை சொல்லும் பாணியில் அந்த ஜுரத்தை படிப்பவனுக்கும்கடத்தி விடுகிறார்.மொழிபெயப்பாளர் விஜய ராகவன் சரளமாக இக்கதையை மொழிபெயர்த்திருக்கிறார்.
            

                       ”எங்கிருந்து அழைக்கிறேன் நான்?மற்றும் பெட்டிகள் ஆகியவை தொகுப்பின் சிறந்த கதைகள்.விஸ்தாரமான தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் வேறு தொனியில் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கதை போல “அவர்கள் யாரும் உன்னுடைய கணவர்கள் இல்லைசிறுகதை இருக்கிறது.ஆனால் வேறொரு முறையில் வேறொரு அர்த்தத்தில் தமிழுக்கு இக்கதை அவசியமானது.சற்றே பெரிய விஷயமொன்றை சிறிய உடலுக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் கதை “அற்ப விஷயங்கள்.”Little things” என்னும் ஆங்கிலத் தலைப்பை “அற்ப விஷயங்கள்என மோகனரங்கன் தமிழ்ப் படுத்தியிருப்பது இந்த மொழிபெயர்ப்பாளர்களின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.


தொகுப்பின் ஒட்டுமொத்த தொனிக்கும் பொருந்தாத சிறுகதை செக்காவின் இறுதிநாட்களை அடிப்படையாக் கொண்டு கார்வர் எழுதியிருக்கும் “சின்னஞ் சிறு வேலை”.செக்காவின் மீதான கார்வரின் மதிப்பைக் காட்டும் இக்கதை அவரது இறுதிக் கதையாக அமைந்துவிட்டிருக்கிறது.அதே போல கார்வரின் மீது கதை தேர்வாளர் செங்கதிர் கொண்டிருக்கும் மரியாதை தான் இக்கதை  தேர்வு செய்யப் பட்ட்தற்கான சேர்க்கப்பட்டிருப்பதற்கான காரணமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.

            
         மதுவும் புகையும் ரேமண்ட் கார்வரின் கதையுலகில் நிறைந்திருக்கின்றன.எளிமையானவர்களால் சூழப்பட்டிருக்கும் இக்கதையுலகம் அவர்களை நெருங்கிச் சென்று காட்ட முயல்கிறது.எனவே தான் குடிநோயாளிகளும் புகைபோக்கியைத் துப்புரவு செய்பவர்களும் (எங்கிருந்து அழைக்கிறேன் நான்?) மதுவை வெகு இயல்பாக தண்ணீர் போல உபயோகிப்பவர்களும் (கதீட்ரல்), விடுமுறை தினத்தில் மீன்பிடிப்பவர்களும்(வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு) விற்பனைப் பிரதிநிதிகளும் சிற்றுண்டி விடுதி பணியாளர்களும்(“அவர்கள் யாரும் உன்னுடைய கணவர்கள் இல்லை” )ரொட்டிக்கடைகாரர்களும்(ஒரு சிறிய, நல்ல காரியம்)சகஜமாக புழங்குகிறார்கள்.இவர்கள் நிம்மதியற்றவர்கள்.மணவாழ்க்கையின் மீது கசப்பும் ஒரு வித விலகல் தன்மையும் இவர்களுக்கு இருந்து கொண்டிருக்கிறது.அதனால் தான் வேறொரு துணையைத் தேடி இணைந்து கொள்கிறார்கள்.பெரும்பாலான கதாபாத்திரங்கள் இளம்வயதிலேயே காதல் கொண்டு மணம்புரிந்து கொள்கிறார்கள்.(கார்வரின் முதல் திருமணம் அவரது 18வது வயதில் நடந்ததை இங்கு நினைவு படுத்திக் கொள்ளலாம்.)பின்னர் சச்சரவிட்டு தற்காலிகமாக சமாதானமும் அடைந்து விடுகிறார்கள். 

         
             குறிப்பிட்டுக் கூறப்பட வேண்டிய மற்றொன்று இந்தத் தொகுதியில் வரும் கார்வரின் பாத்திரங்கள் உள்ளூர பதட்டங்களால் சூழப்பட்டவர்கள்.குறிப்பாக பெண்கள்.பெட்டிகள்கதையில் வரும் வீட்டை மாற்றிக் கொண்டேயிருக்கும் அந்த வயதான அம்மாவும், ஒரு சிறிய, நல்ல காரியத்தில் அவர்கள் ரொட்டிக்காரனோடு பேசத் தொடங்குவதும்,படுக்கையில் தம்பதிகள் ஓயாமல் பேசியபடியே(இந்தப் படுக்கையை உபயோகிக்கும் யாரும்)இருப்பதும்,அந்த ஜுரம் அவனுக்கு விடாமல் அடித்துக் கொண்டேயிருப்பதும் அந்த பதட்டத்தின் வெளிப்பாடுகள் தான். வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்புநெடுங்கதையில் அதை நேரடியாகவே அந்தப் பெண்ணின் மூலம் நம்மால் காணமுடியும்.

        
           இந்தக் கதைகளுக்கு கார்வர் வைத்திருக்கும் தலைப்புகள் அதன் கருப்பொருளுடன் இணக்கமான உறவைக் கொண்டிருப்பது கதைக்கு வலு சேர்க்கிறது. எங்கிருந்து அழைக்கிறேன் நான்?என்னும் தலைப்பு கவிதையொன்றின் அழகிய வரி போல ஓசைநயத்துடன் மனதில் பதிகிறது.அது போலவே கதையின் முடிவுகள் கூடுதல் அழுத்தத்தை கதைகளுக்கு தருக்கின்றன.
        
     
             தமிழ்த்தனமாக மொழிபெயர்ப்பு இருக்க வேண்டும் என்பதற்காக “சாப்பாட்டு ராமன் என்னும் சொல்லை பயன்படுத்துவதில் தவறில்லை தான்.ஆனால் பாரதி தன் காதலியை “கண்ணம்மாஎன அழைத்தது போலவே  அமெரிக்கா காதலனும் தன் காதலியை அழைப்பது ஒரு வகையில் ரசமாகத் தான் இருக்கிறது.ஆனால் வாசிக்கையில் நெருடுகிறது.கண்ணே..என வேறு இடத்தில் உபயோகப்படுத்தியிருக்கும் இதே மொழிபெயர்ப்பாளர் இங்கு ஏன் கவனிக்காமல் விட்டார் எனத் தெரியவில்லை.அதே போல சில கதைகளில் அமெரிக்கத் தம்பதிகள் கொங்கு தமிழில் உரையாடிக் கொள்வது கதைக்குள் ஒட்டாமல் விலகியே நிற்கிறது.அங்கு பொதுத் தமிழை பயன்படுத்தியிருக்கலாம்.மேலும் முன்னுரையில் செங்கதிர் காய்ச்சல் எனச் சுட்டி எழுதும் கதை, தொகுப்பிற்குள்  ஜுரம்எனத் தலைப்பிடப்பட்டிருக்கிறது.
                 
       தமிழில் எளிமையான கதைகளுக்கு உதாரணமாக  ஜானகிராமன்,கு.அழகிரிசாமி,அசோகமித்திரன் ஆகிய மூவரும் உடனடியாக நினைவுக்கு வருகிறார்கள்.ஆனால்  தமிழில் கார்வரோடு ஒப்புநோக்கத்தக்க  படைப்பாளி என அசோகமித்திரனைத் தான் சொல்ல முடியும்.எளிமையும் நுட்பமும்  ஆழமும் கொண்ட ஆக்கங்களை அதே அளவு தரத்துடன் எழுதியவர் அவர்.  
        







ரேமண்ட் கார்வரின் படைப்பாளுமையை காட்டும் வகையில் அவருக்கென்று தனியாகத் தொகுப்பு தமிழில் வந்திருப்பது இதுவே முதன் முறை.இதற்கு முன் கார்வரின் கதைகளை உதிரியாக மொழிபெயத்தவர்களின் பெயர்களை முன்னுரையில் குறிப்பிட்டிருக்கும் ஒழுக்கம் மெச்சத்தகுந்தது.இந்நூலின் கதைகளை தேர்ந்தெடுத்துத் தொகுத்திருக்கும் செங்கதிர் அதற்கு எழுதியிருக்கும் முன்னுரை விமர்சன ஆய்வு போல அமைந்திருக்கிறது. அதில் வாசகனுக்கு கார்வரைப் பற்றியும் அவரது கதைகளைப் பற்றியும் தொகுக்கப்பட்ட கதைகளின் பின்னிருக்கும் ரசனை பற்றியும் செங்கதிர் பேசியிருப்பது கதைகளுக்குள் நுழைவதற்கு மிக நல்ல தொடக்கமாக அமைந்திருக்கிறது. யதார்த்தவாதம் உறுதிப்பட்டுவிட்ட இப்போதைய காலக்கட்டத்தில் இந்நூல் வெளிவந்திருப்பது ஒரு வகையில் நல்லது தான்.இன்னும் அவை நுட்பமும் செறிவும் அழகும் கொண்டு கார்வரால் எழுதப்பட்டிருக்கும் இக்கதைகள் உதவக்கூடும்.இந்த நான்கு மொழிபெயர்ப்பாளர்களும் கார்வரின் உலகை தமிழுக்கு சிறப்பாக கொண்டுவந்திருக்கிறார்கள்.அழகிய வடிவமைப்பைக் கொண்டிருக்கும் இன்னும் நூலை காலச்சுவடு பதிப்பகம் நன்றாக  வெளியிட்டிருக்கிறது.

(13.09.2014 அன்று ஈரோட்டில் இலக்கிய சுற்றமும் காலச்சுவடும் இணைந்து நடத்திய மொழிபெயர்ப்பு அரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி : மலைகள் இணைய இதழ்

வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு-ரேமண்ட் கார்வர்-தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பு-காலச்சுவடு பதிப்பகம்.

***************
 

Tuesday, September 23, 2014

தூரன் குணாவின் ’திரிவேணி’ சிறுகதைத் தொகுப்பு




   தூரன் குணாவின் திரிவேணி





                                     உலகமெங்கிலும் கதைகள்  உருவான தோற்றுவாய் குறித்த யூகங்கள் பலவாறாக இருக்கக் கூடும். கதை என்ற மொந்தையான ஒன்றை ஏற்றுக் கொள்ள முடியாத நுட்பமான மனம் தான் சிறுகதை என்னும் வடிவத்தைப் பற்றி அதில் வகைபேதமான வாழ்வின் சித்தரங்களை தீட்டிக் காட்டுவது குறித்து யோசித்திருக்க வேண்டும்.அதற்கு முன் அவை பேசுபொருளாக கொண்டிருந்தது ஆள்வோர்களின் வீரதீர பிரஸ்தாபங்களையும் அவர்களது பிம்பங்களை மிகைப்படுத்திக் கட்டியெழுப்ப வரலாறு போலத் தோன்றக்கூடிய புனைவுகளையும் தான்(வாய் மொழி மற்றும் நாட்டார் கதைகள் விதிவிலக்குகள்.) ஆனால் அவை இங்கு பரிணாமங்கள் பெற்று நிலைகொண்டு ஜனநாயகமானது கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் தான்.தமிழில் அப்படிப்பட்ட முதல் அடிச்சுவடு புதுமைப்பித்தனாலேயே வைக்கப்பட்டது.





ஆம்!அது மண்ணில் உழல்பவர்களை அவர்களது வாழ்வின் துயரங்களை மனிதனது சிறுமைகளை ஆற்றலோடும் நுட்பத்தோடும் தன் சிறுகதைகளில்(அதன் நுட்பம் கூடிய போதும் கூடாத போதும்) வெளிப்படுத்திய புதுமைப்பித்தன் என்னும் மேதையின் வருகைக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.அவர் சிறுகதை என்னும் வடிவத்தைக் கைகொண்டது தமிழின் நல்லூழ் என்றே சொல்ல வேண்டும்.அவர் கோலோச்சி உச்சம் பெற்று விட்டுச் சென்ற சிறுகதையை புதிய தலைமுறையைச் சேர்ந்த ஒருவன் கையிலெடுக்கையில் அவரும் அவருக்குப் பின் வந்து நின்று நிலைப்பெற்ற முன்னோடிகளின் ஆக்கங்களும் அவனை நோக்கி கையசைக்கும்.கண் சிமிட்டும்.தன் மடியில் இருத்திக் கொள்ள அழைக்கும்.அதிலிருந்தெல்லாம் மீண்டு தனித்துவமான படைப்பாளியாக மலர முயல்வதும் அப்பாதை நோக்கிய பயணத்தில் சுணங்காமல் செல்வதுமே இளம் எழுத்தாளனின் முதன்மையான நோக்கமாக இருக்கமுடியும்.
                


                             
                     அவ்வகையில் கவிஞனாக இரு தொகுப்புகளை வெளியிட்டு கவனம் பெற்ற தூரன் குணாவின் பதிமூன்று கதைகள் உள்ளடக்கிய முதல் தொகுப்பு “திரிவேணி”.வாழ்வின் அனுபவங்களைப் பின்னணியாக கொண்டிருக்கும்  குணாவின் கதையுலகில் இன்று அரிதாகவே தென்படும் கிராமங்களையும் அதன் வகைமாதிரியான மனிதர்களையும் சில கதைகள்  ளன்களாக கொண்டிருக்கின்றன.கதையை கவிதையிலிருந்து வேறுபடுத்தி புரிந்து கொண்டிருக்கிறார் என்பதை தொகுப்பின் முதல் கதையிலேயே (கொவ்வை படர்ந்த வேலி) வாசனுக்கு உணர்த்திவிடுவதன் மூலம் அவனை தொகுப்பிற்குள் முன்னோக்கிச் செல்ல தூண்டுதலை அளிக்கிறார்.கொங்கு நிலப்பரப்பின் பிரத்யேக காட்சிகளையும் கதைகளையும் உருவாக்கிய பெருமாள் முருகன்.என்.ஸ்ரீராம் போல குணாவும் தன் நிலம் பற்றி தன் திறன் கொண்டு கதைகளை எழுதியிருக்கிறார். அதில் உழன்று திரிந்த ஒருவன் வேலையின் பொருட்டு கணினி மென்பொருளானாக வேற்றூரிலும் வேறு தேசத்திலும் சந்திக்கும் அடையாளச் சிக்கல்களையும் சொந்த நிலம் சார்ந்த ஏக்கப் பெருமூச்சுகளையும் குணா தன் கதைகளில் பதிவு செய்யத் தவறவில்லை.


                
          சிறுகதைகளின் ஆகிவந்த வடிவங்களிலேயே இக்கதைகள் நடைபயின்றிருந்தாலும் கூட வெவ்வேறு வயது மற்றும் காலங்களின் நினைவை தன் வாழ்க்கைக்குள்ளிலிருந்து கதைசொல்லி மீட்டெடுக்கும் போது அதில் வெளிப்படும் நம்பகத்தன்மை அக்கதைகளோடு நம்மை ஒன்றச் செய்கின்றன.மேலும் அணையாத சிகரெட் கங்குடன் இத்தொகுப்பிற்குள் உலவித் திரியும் இளைஞன் ஒருவனைப் பின்தொடர்ந்து சென்றால் நம்மிடம் நெருப்புக் குச்சி கேட்டு விடுவோனோ என்னும் அளவிற்கு அதன் நெடியும் சாம்பலும் கதைகளெங்கும் விரவிக் கிடக்கின்றன.குணா காட்டும் கதைகளில் வருபவனது கூச்சத்திலும் கோபத்திலும் காமத்திலும் இயலாமையிலும் நம்மை அல்லது நம்மில் ஒரு பகுதியை கண்டுகொண்டதற்கு பின்னே அவனது கதைகளை நோக்கி மேலும் நகர முற்படுகிறோம்.



                                    தொகுப்பில் சிறந்த கதைகளென மின்மினிகள் எரியும் மூன்றாம் ஜாமம்,சகடம்,இருளில் மறைபவர்கள் ஆகிய கதைகளை சுட்டலாம்.குறிப்பிடத் தகுந்த கதை சுக்கிலம்.
             

           
        திருமணமாகாத இரு முதிர் இளைஞர்களைக் காணச் செல்லும் கதைசொல்லி அவர்கள் முன் பாட்டிலைத் திறந்த பிறகு சகோதரர்களின் வாழ்க்கைக்குள்ளிலிருந்து(அவர்களில் ஒருவன் ஊமை) துயரமும் கோபங்களும் சண்டைகளும் அவர்களது ஆற்றாமையும் வெளிப்படும் விதம் கதையில் கூடி வந்திருக்கிறது.நடப்பவைகள் அனைத்திற்கும் சாட்சியாக சமாதனப்படுத்துவனாக மட்டுமே கதைசொல்லி இருக்க நேர்கிறது.அந்த துயரை வாசகனின் மனதில் கடத்திவிடும்படி அக்கதையின் முடிவை இயல்பாக குணா முடித்திருக்கிறான்.

                 நோயின் வலியில் கிடக்கும் மாமனையும் ஆரோக்கியமும் மிதப்பும் கொண்ட இளைஞனையும் அருகருகாக வைத்து நகரும் கதை ‘சகடம்’.இதற்குள்ளாக உறவுகளின் சுயநலம் சார்ந்த சிறு ஆட்டத்தையும் கண்டுகொள்ளும்படி கதை இருக்கிறது.அவனது வயது சார்ந்த குதூகலங்களும் காமத்தின் ஏக்கங்களுமாக நகரும் கதை இறுதி நோக்கிச் செல்ல செல்ல நோயின் வாதையை மிகையேதுமின்றி சித்தரிப்பதில் கவனம் கொண்டிருக்கிறது.இக்கதைக்குள்ளும் சரி  பிற கதைகளிலும் சரி பிரத்யேகப் பாத்திரம் தனிமையோடிருக்கிறது அல்லது தனித்து விடப்படுகிறது.அது போலவே சுயகேள்விகளின் பிடிக்குள் கிடந்து மருளும் ஒருவனையும் அடிக்கடி காண முடிகிறது.புறவெளியின் காட்சிகளை நுட்பமாக (சில இடங்களில் தேவையில்லாமலும்) குறிப்பெடுத்துச் செல்லும் குணா அது அகத்தின் ஏதோ ஒரு புள்ளியின் பிரதிபலிப்பாகவே  ஆக்குறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
             

                   
                 காமத்திற்கான ஏக்கமும் அது சார்ந்த விழைவும் பெரும்பாலான கதைகளுகளின் அடியில் ஓடிக் கொண்டேயிருக்கிறது.அந்த விழைவை அனுபவமாக மாற்றிக் கொள்ள முடியாமல் அவனது கூச்சம் குறுக்கே சுவரென நிற்கிறது.அதன் சாட்சியாக “இருளில் மறைபவர்கள்கதையை கூறலாம். அது கைகூடும் போது சற்றும் எதிர்பாராத ஒன்றை காண நேர்கிற அந்த இளைஞன் தான் கூடித் தனித்திருக்க அழைத்துச் சென்றவளை ,கூட்டிச் சென்றபடியே ஆனால் அதற்குரிய காசைக் கொடுத்து இறக்கிவிட்டுச் செல்கிறான்.இக்கதையை வாசிக்கும் போது இக்கதைக்கருவுக்கு சம்பந்தம் இல்லையென்றாலும் இவளை விடவும் உற்சாகம் மிக்க ஒருவளை நண்பர்கள் சூழ்ந்து வெளியிடத்துக்கு கூட்டிச் செல்லும் ஜெயகாந்தனின் “எங்கோ யாரோ யாருக்காகவோநினைவுக்கு வந்தது.அவரது சிறந்த கதைகளுள் ஒன்று அது.
          

                சுக்கிலம்தொகுப்பின் பிற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஆனால் நுட்பமான கதை.தன் விந்துவை பரிசோதனைக்கு அனுப்பி அதன் வீர்யத்தை சோதனை செய்ய முடிவெடுத்தவனின் மனநிலையையொட்டி பின்னப்பட்டிருக்கும் கதையில் அதனால் நேரும் கோபங்கள்,எரிச்சல்,ஒரு வித பயம் போன்றவற்றை கதைக்குள் கழிவிரக்கத்தை தூண்டாதபடி இயல்பாகவும் நேர்த்தியாகவும் தூரன் குணாவால் சொல்லப்பட்டிருக்கிறது.குறிப்பாக அதன் சாதகமான முடிவை அறிந்து கொண்ட பின் மனம் இலகுவாகி அவன் சிகரெட் பற்ற வைப்பதும் அத்துடன் கதையை முடித்திருப்பதையும் சொல்லலாம்.இதே போன்றதொரு கருவை அடிப்படையாகக் கொண்டு ஈழத்துச் சிறுகதையாளர்களில் கவனிக்கப் படவேண்டிய ஆசிரியரான சாந்தனின் “நீக்கல்கள்இன்னும் உக்கிரம் கொண்டது.


                 
            தொகுப்புக் கதைகளுக்குள் பெரும்பாலானவற்றில் ஆச்சர்யமான ஒன்றை உணர முடிந்தது.அது கதையை கொண்டு செலுத்துபவன் அல்லது ஆதாரப் புள்ளியாக இருப்பவனது பெயரே இல்லை.அவன்”,இவன் என்றோ தன்னிலையாகவோ தான் எழுதப்பட்டிருக்கிறது.இதற்கு முன்னோடியாக மெளனியைச் சொல்லலாம் என்றாலும் அவரது கதைகளின் பொதுப்பெயராக “சேகரன்ஆங்காங்கே  தலைக் காட்டும்.இதில் அதுவும் இல்லை.
           

                                         
                              தொகுப்பில் சில கதைகள் முடிவுகளின் பலவீனம் காரணமாக அது சென்று அடைந்திருக்க வேண்டிய இடங்களை இழந்திருக்கின்றன.திரிவேணியை அப்படியாக முடித்திருப்பது கதையை எங்கும் கொண்டு சேர்க்கவில்லை.அது போலவே “கர்ண மகாராசா”.இயல்பாக சென்று கொண்டிருக்கும் கதையின் நடுவே அக்கதைக்கு சம்பந்தமேதுமில்லாத புதிய டெக்னிக்கை பிரயோகித்து முடித்திருக்க வேண்டியதில்லை.இன்னும் சற்று முயன்றிருந்தால் இப்போதிருப்பதை விடவும் நன்றாக வந்திருக்க வேண்டிய கதைகைக்கிளைச் சிலுவை”.எவ்வளவு முயன்றும் “குளம்படி நிலம்என்னும் கதைக்குள் புகவே முடியவில்லை. செயற்கையாக உருவாக்கப்பட்ட அல்லது திருகப்பட்ட மொழிநடையில் எழுதப்பட்ட கதையாகவே தோன்றுகிறது.இது என் தனிப்பட்ட வாசிப்பு சார்ந்த முடிவு தான்.வேறு ஒருவருக்கு முக்கியமான கதையாக படக்கூடும்.கோணங்கியின் பாதிப்பையும் இக்கதைக்குள் கண்டேன்.மின்மினிகள் எரியும் மூன்றாம் ஜாமம்என்னும்  கதையின் தலைப்பு  கோணங்கி தன் கதைக்கு வைக்கும் தலைப்பு போல இருக்கிறது.கள்ளம்,கார்ப்ரெட்ஆகிய கதைகள் வலுவானதாக இல்லை.


                                      
                  யதார்த்த கதை சொல்லல் முறையை தூரன் குணா பெரும்பாலான கதைகளில் நன்றாக கை கொண்டிருந்தாலும் அதில் செறிவும் ஆழமும் இன்னும் கூடும் போது அவரது கதைகளுக்கான இடம் மேலும் முக்கியத்துவம் பெறும்.அவ்வாறான கதையை அவர் எழுதக்கூடும் என்பதற்கான சுவடுகளை அதிகமாகவே தன் முதல் தொகுப்பில் தூரன் குணா வாசகனுக்கு உணர்த்தியிருக்கிறார்.
                                           
                                        புத்தகத்தின் சாரத்தை நவீன மொழியில் உணர்த்தும் பின் அட்டைக் குறிப்புகள் எழுதப்படும் காலத்தில் அவ்வாறான குறிப்பிற்கு பதில் கதையின் தலைப்புகளை அச்சிட்டிருப்பது ஏமாற்றத்தை அளித்தது.நூலிற்குள் கதைகளுக்கான பொருளடக்கமோ ஆசிரியரின் குறிப்புகளோ இல்லை.இவ்வாறான பிழைகள் எளிதாக களைந்திருக்க கூடியவை தான்.தொகுப்பை  பாதரசம் பிழையின்றி  வெளியிட்டுள்ளது.

(31.08.2014  கோவை இலக்கிய சந்திப்பு நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நன்றி : மணல் வீடு (மு.ஹரிகிருஷ்ணன்)