யதார்த்தத்தின் அழகியலும் . . .
நவீனத்துவத்தின் தீவிரமும் . . .
“வாளின்றி,
கேடயம் மட்டுமே கொண்ட ஒரு வீரன் எதிராளியின் வாள்வீச்சு தன் மீது பாயாமல் தடுத்துக்கொள்வதுபோல் படைப்பை முன்வைத்துத் தான் படைப்பாளி வாழ்க்கையின் வாள்வீச்சைத் தடுத்துக் கொள்கிறான்.”
- சுந்தர ராமசாமி
ஒரு படைப்பாளியின் எழுத்து மனநிலைக்கும் கனவு நிலைக்கும் தீவிரமும் நெருக்கமுமான உறவுண்டு. இரண்டுமே சுயபோதத்தை மறக்கடித்துத் தன்னை இழக்கும் நிலைக்குக் கொண்டு செல்லக் கூடியவை. அந்த எல்லையின்மை அளிக்கும் சுதந்திரத்தின் மூலமே அப் படைப்பாளி கொண்டிருந்த முன்தீர்மானங்கள் சூறையில் சிக்கிய துரும்புபோலக் காணாமல் போகின்றன. பின் அவன் அந்தப் படைப்பு வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்படுகிறான். அதனை ஒழுங்குபடுத்தும் கரை போல பிரக்ஞை இருந்துகொண்டிருக்கும். பிரக்ஞையின்றி - ஆழமான பொருளில் - படைப்பு இல்லை. ஏனெனில் படைப்பு விழித்திருப்பவனின் கனவு. மேலும் படைப்பாளி தன் படைப்பு சார்ந்து கொண்டிருக்கும் விருப்பத்தைக் காட்டிலும் அப்படைப்பு உள்ளூர கொண்டிருக்கும் வேட்கை அபரிமிதமானது.
எனவேதான் கற்றுக்கொள்ளும் பேராவலுடனும் அது தரும் லாகிரியில் மூழ்கி எழும் மனதுடனும் எதையும் முட்டித் திறக்கும் மன வலிமையுடனும் படைப்பின் வாசலுக்கு வருகிறவர்களுக்கே தன் கணக்கற்ற கதவுகளை அது திறந்து கொண்டே செல்கிறது. (எனக்குப் புறப்படும் இடம் தெரியும். போகுமிடம் தெரியாது - ஜே.ஜே.) அவ்வாறான ஆக்கங்களை உருவாக்கிய படைப்பாளிகளே முந்தைய கலைச் சாதனைகளுக்குச் சவால் விட்டிருக்கிறார்கள்.
மேலும் நேற்றைய படைப்பு மரபின் நிழலில் ஒதுங்குவது, அதனால் கிட்டும் வெற்றி யில் குளிர்காய்வது, ஒரு சிறிய வழி கிடைத்ததும் செக்கு மாடு போல அதையே சுற்றிச்சுற்றி வருவது போன்றவற்றில் சிறிதும் நம்பிக்கையின்றி விமர்சனங்களுக்கு அஞ்சாமல் நேற்று இல்லாத ஒன்றைப் படைப்பவர்களே மொழியின் பெரும் கலைஞர்களாக,
தேர்ந்த ஆளுமைகளாக உருவாகியிருக்கிறார்கள்.
வாழ்க்கையின் மேல் தீராத மோகமும் அதனாலேயே அதன்மீது கூர்மையான விமர்சனங்களையும் கொண்டவனே மேலான படைப்பாளி. வாழ்க்கை அளிக்கும் சிக்கல்களுக்கும் ஏற்றத்தாழ்வுகளுக்கும் கொடுமைகளுக்கும் அஞ்சி படைப்பின் பின்னால் ஒளிந்துகொள்பவன் கோழை. மாறாக இந்தத் துக்கங் களுக்கு தன் படைப்பின் வழியாக முகங்கொடுத்து அதைச் சகல வாசகர்களும் உணர்ந்துகொள்ளும்படியாக மாற்றுவதே அவனது முதன்மையான செயலாகவிருக்கும். இதனை விடுத்து வாழ்க்கையைக் கறுப்பு வெள்ளையாகக் காண்பவர்கள் அக நெருக்கடிகளின் வீர்யத்தை மழுங்கடித்து எளிய கணக்குகள் போல பிரச்சனையை அணுகி ஆயத்த தீர்வுகளின் பக்கமாக நம்மை நகர்த்துகிறார்கள். இவர்கள் வாசக மனங்களில் ஒரு சிறிய அகல்விளக்கைக்கூட இறுதிவரை ஏற்றமுடிவதேயில்லை. இவர்களுக்கு நேரெதிராக நிற்பவனுக்கே படைப்பாளியின் இருக்கையைப் போட வேண்டும். ஏனெனில் அவனது, “உள்ளொளி இருளில் மிருகங்களின் கண்கள்போல் பரவசம் ஊட்டக் கூடியது.” அந்த உள்ளொளியை நம்பி ஏற்றுக்கொள்கிறவனிடமே காலம் மண்டியிடும். அவனது வாள்வீச்சு மூலமே ஜோடனைகளையும் பண்டங்களையும் படைப்பெனக் கருதும் பேதமை ஒழிந்து ஒரு சுயமான படைப்பு தன் அனைத்து சாத்தியங்களுடன் தீவிரமாக வெளிப்படும்.
தன் பதினெட்டாவது வயதில் சிலேட்டில் தமிழ் எழுதக் கற்றுக்கொண்ட சுந்தர ராமசாமியின் முதல் கதை வெளியானபோது அவருக்கு வயது இருபத்தியொன்று. எழுத்துலகில் தன் வழித்தடம் எதுவெனக் கண்டுகொள்ள முக்கிய காரணியாக விளங்கிய அவரது மனஅடுக்கில் வாழ்நாள் முழுக்க முதல் நிலையில் இருந்த புதுமைப்பித்தனின் நேரடி பாதிப்பைக்கொண்ட (முதலும் முடிவும்) கதையது. பின்னர் அவர் எழுதியவை முற்போக்குக் கதைகளின் அசல் முகத்தை வெளிப்படுத்தின. லட்சியவாதிகளின் கனவு சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியாவில் வெறும் பகல் கனவாகிப் போனதில் எழுந்த அறச்சீற்றம் என்றே அவரது முற்போக்குக் கதைகளைக் (தண்ணீர், அக்கரைச் சீமையிலே) கொள்ள வேண்டும். யதார்த்தத் தளத்தில் நுட்பமாக எழுதப்பட்டுள்ள, வாசகனை ஒருவித மனஎழுச்சிக்கு ஆட்படுத்தும் கதை ‘கோவில் காளையும் உழவு மாடும்’. (மனிதத் துக்கத்தைச் சார்ந்த விசாரணை எல்லாமே முற்போக்கானது.
மனிதத் துக்கத்தை விசாரிப்பவன், எந்த நிலையிலும் மனிதத் துக்கத்திற்கு ஒரு விடை காண வேண்டும் என்று தேடிச் செல் பவன் எப்போதும் ஒரு முற்போக்காளன் தான் - சு.ரா.) தமிழ் முற்போக்குக் கதைகளின் உச்சம் என இக்கதையைத் தயக்கமின்றிக் கூறலாம்.
பின்னர் முற்போக்குக் கதைகளிலிருந்து விலகி சு.ரா. எழுதிய கதைகள் வாழ்க்கையின் உள்அழகையும் மனதின் நுட்பமான இடங்களையும் நோக்கி செல்லக்கூடியவைகளாக இருந்தன. கதையில் நேர்த்தியும் கூறுமுறை சார்ந்த நுட்பமும் மொழி குறித்த அழகுணர்வும் எழுதத் தொடங்கிய குறுகிய காலத்திலேயே சு.ரா. அடைந்ததற்கானச் சிறந்த உதாரணங்களாகப் ‘பிரசாதம்’, ‘சன்னல்’ போன்ற கதைகள் உள்ளன. ‘பிரசாதம்’ கதையிலுள்ள ஈரம் ஒவ்வொருமுறை அக்கதையினை வாசிக்கும்போதும் நெஞ்சில் படர்வதை எந்த நுட்பமான வாசகனும் உணர முடியும். இக்கதை ஒருவிதத் துள்ளல் மனநிலைக்கு நம்மை இட்டுச் செல்கிறதென்றால், ‘சன்னல்’ முந்தைய மன நிலையைக் காலி செய்கிறது எனலாம்.
சு.ரா.வின் பல கதைகளில் சிறுவர்களும் கிழவர்களும் பிரதானமான பாத்திரங்களாக இருக்கிறார்கள். குழந்தைகளின் அகவுலகை நுட்பமாக எழுத்தில் கொண்டு வருவது ஆகச் சவாலான ஒன்றே. அதற்குக் குழந்தைகளின் கண்களில் உலகைக் காணும் மனம் படைப்பாளிக்குக் கூடிவர வேண்டும்.
வைக்கம் முகம்மது பஷீரின் படைப்புலகை இதற்கு முன் னுதாரணமாகக் கூறலாம்.
‘கிடாரி’, ‘ஒன்றும் புரியவில்லை’ போன்ற கதைகளில் வரும் குழந்தைகளின் களங்கமின்மையின் ஒளி நம்மேல் விழுந்து மேலும் அவர்களை நெருங்கிச் சென்று அறிய நம்மைத் தூண்டுகிறது. அதேபோல ‘ஸ்டாம்பு ஆல்பம்’ கதையைச் சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ராஜப்பா தன் உயிர்போல அதுவரைக் கருதி வந்த ஆல்பத்தை அவன் பொறாமைகொண்டிருந்த நாகராஜனிடம் தந்துவிட்டு அழும்போது, அது நம் மனப்பாசியின் தோலை உரித்து, காற்றின்றி அடைந்து கிடக்கும் இருண்ட மனஅறை களை அகலத் திறக்கிறது. ‘இலக்கியத்தின் பயன் என்ன?’ எனக் கேட்பவர்களை இது போன்ற கதைகளின் முன் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். தமிழில் அதுபோல குழந்தைகளின் உலகை நுட்பமாக அணுகி கூர்ந்த அவதானிப்புகளில் எழுதப்பட்டவை கிருஷ்ணன் நம்பியின் ஆக்கங்கள். சிறுவர்களின் உலகம் சார்ந்து எழுதப்பட்டுள்ளபோதிலும்
வாசிப்பவனை வேறொரு இடத்திற்கு நகர்த்திவிடக் கூடிய கு. அழகிரிசாமியின் ‘அன்பளிப்பு’, ‘ராஜா வந்திருக்கிறார்’
மற்றும் கி.ரா.வின் ‘கதவு’ போன்ற கதைகளை முக்கியமாகக் குறிப்பிட்டுக் கூற வேண்டும்.
விரிவான வாசிப்பும் வயது தரும் அனுபவத்தின் செறிவும் கூடக்கூட நம் பால்யத்தின் மீது சூழ்ந்திருக்கும் புகைமூட்டங்கள் மெல்ல விலகும் போலும். அதனால்தான் சு.ரா.வின் கதைகளில் எஸ்.எல்.பி பள்ளியின் இருப்பும் அவரது பள்ளிக் காலத்து இளம் பிராய நாட்களும் மீண்டும் மீண்டும் எழுதப்பட்டுள்ளன.
‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் வாழைத் தோட்டத்தில் பாலு, ரமணி, லச்சம் மூவரும் சமையல் செய்து பரிமாறி விளையாடும் பகுதியை ஆகக்கூடியத் துல்லியத்துடன், வாசிக்கையில் சிரிக்கத் திறந்த உதடுகள் அவ்வரிகள் கடக்கக் கடக்க மேலும் மேலும் விரிந்துகொண்டே சென்று அக்குழந்தைகளின் குதூகலத்தில் இரண்டறக் கலந்து அதை அனுபவிக்கும்படியாக அச்சித்திரிப்பை, நேற்றுக் கண்டதுபோல சு.ரா. அனாயாசமாக உருவாக்கிக் காட்டுகிறார்.நிம்மதியின்மையினால் மனம் தத்தளிப்பதிலிருந்து விடுபடாமல் சு.ரா.வின் ஒரு கதையிலிருந்து பிறிதொரு கதைக்குச் செல்ல முடியாது. ‘கிடாரி’, ‘லீலை’ போன்றவை இத்தரத்தினா லானவை. இக்கதைகள் அளிக்கும் உணர்விலிருந்து உடனே மீண்டுவிட முடியும் எனத் தோன்றவில்லை. லௌகீக உலகினுள் சுற்றித்திரியும் நண்பர்களின் குணங்கள், காலச் சுழற்சியில் அதற் கேற்ப இயைந்து செல்லும்படியாக அவர்களிடம் உருவான மாற்றங்களை எள்ளல் நடையில் சூசகமாக உணர்த்தும் கதை ‘வாழ்வும் வசந்தமும்’. தனக்குத் திருப்தியளித்த கதையென இக்கதை இடம்பெற்றுள்ள தொகுப்பில் சு.ரா. குறிப்பிட்டுள்ள கதையிது. கு. அழகிரிசாமியால் வெகுவாகச் சிலாகிக்கப்பட்ட பெருமையும் இக்கதைக்கு உண்டு.
‘கூறியது கூறல்’, ‘போலச்செய்தல்’ இவை இரண்டையுமே எழுத்தை மேல்நோக்கிய பயணம் என எண்ணும் படைப்பாளி ஒருபோதும் செய்வதில்லை. சில ஆண்டு இடைவெளிக்குப் பின் மீண்டும் எழுதத் துவங்கிய சு.ரா.வின் படைப்புகளில் மேலும் படைப்புநுட்பங்கள் கூடி அவை வேறொரு தளத்தை நோக்கிச் சென்றன. இதனை அபூர்வமான நிகழ்வென்றே கூற வேண்டும். முந்தைய கதைகள் அளித்த மகுடத்தை இறக்கி வைத்துவிட்டு கரகோஷங்களைத் தலையசைப்புகளால் மட்டுமே ஏற்றுக்கொண்டு புதிய களத்தை நோக்கி, அதன் வெற்றி தோல்விகளைத் துச்சமாக எண்ணியபடி முன்நோக்கிச் சென்ற பயணம் இது. அது அளித்த சவால்களை எதிர்கொண்ட படைப்பாளியின் ஆளுமையைப் பெருமளவில் அடையாளம் காட்டக் கூடியவையாக இக்காலகட்டத்துக் கதைகள் அமைந்துள்ளன.
மறைபொருளின் நுட்பத்திற்கும் உணர்த்துதலின் ரகசியத்திற்கும் மொழியின் கவித்துவத்திற்கும் சாட்சியங்களாக, எந்தவொரு வாசகனையும் மனஎழுச்சியின் மலைமுகட்டிற்கு அழைத்துச் செல்பவைகளாக இக்கதைகள் உள்ளன. இவ்வாறான சிறுகதைகளுக்கு முதல் விதை ‘முட்டைக்காரி’யிலேயே வெளிப்பட்டுவிடுவதைச் சற்று ஆழ்ந்து நோக்கினால் உணர முடியும். புனைகதைகளில் சு.ரா. வின் மொழி அடர்த்தியும் செறிவும் கொண்டு திணறச் செய்யும் ஒன்றாக ஆனபோது
(‘அழைப்பு’, ‘கொந்தளிப்பு’,
‘வழி’) அக்காலத்தில் அவர் எழுதிய கவிதைகள் எளிமையின் கோலத்தையே கொண்டிருந்தன. இக்காலகட்டத்துக் கதைகளை நவீனத்துவச் சாதனைக் கதைகள் என்று தயக்கமின்றி அழைக்கலாம்.
சுந்தர ராமசாமிக்குப் பெரும்பெயர் ஈட்டித்தந்த
‘பல்லக்குத் தூக்கிகள்’லிருந்து அவரது கதையுலகை அவதானித்தால் அவை கூரைகளுக்கு வெளியே நிகழ்வதைக் கண்டுகொள்ளலாம். அன்றைய சமகாலக் கதைகளில் பெரும்பாலானவை வீட்டுச்சுவர்களுக்குள் நிகழ்பவையாக உறவுகளை அலசுபவையாக இருந்தபோது இக்கதைகள் தனிமனித துக்கத்தின் வேரை நோக்கிச் சென்றன. நிம்மதியின்மையின் பெரும் பாரம் அழுத்த அதன் ஊற்றுக்கண்ணைக் கண்டு (காண இயலுமா?) அதிலிருந்து விடுபடத் துடிக்கும் (கயிற்றிலிருந்து விடுபட்ட பம்பரத்தின் துக்கத்தை நான் சொல்ல முற்படும்போது, சொல்லச் சொல்ல பம்பரத்திற்கும் கயிற்றுக்குமான உறவைப் பற்றியே சொல்லிக்கொண்டிருக்கிறேன் - ‘கொந்தளிப்பு’) மனதின் குரலை (‘பல்லக்குத் தூக்கிகள்’, ‘கொந்தளிப்பு’, ‘அழைப்பு’) இவற்றில் கேட்கிறோம். அதனூடாக மனித இருப்பின் மேல் எண்ணற்ற கேள்விகளை வாசகனின் மனதில் துளிர்க்கச் செய்யும் ஆக்கங்கள் இவை. அதேபோல வெவ்வேறு வாசிப்புத் தளங்கள் கொண்டிருந்தும்,
குறியீட்டு ரீதியில் புரிந்துகொள்ளும் போது மேலதிக அர்த்தத்தை அளிக்கும் கதை ‘குரங்குகள்’.
பெண்ணின் மனவுலகை நுட்பமாக அணுகும் ‘ரத்னாபாயின் ஆங்கிலம்’
பிரசுரமான காலத்திலிருந்து பலராலும் தொடர்ந்து கவனப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிற சிறுகதை. லௌகீக உலகில் ரத்னாபாயின் கனவுகள் நொறுங்கிவிட அவள் மொழியின் தளுக்கில் தன் உயிரைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் அடையும் ஆசுவாசத்தைச் சிக்கனமான மொழியில் உணர்த்தும் கதையிது. இதன் உட்கூறாகக் கிட்டும் பொருளை உளவியல் சார்ந்து நெருங்கும்போது இலக்கியம் நமக்களிக்கும் வாசிப்பின் எல்லைகள் முடிவற்றவை எனப் புரியவரும். இதே இடத்தில் வைத்து கவனிக்கப்பட வேண்டிய மற்றொரு கதை ‘லீலை’. கதையில் பெண்ணின் வலி சொல்லப்படுவதில்லை, உணர்த்தப்படுகிறது.
அதனால்தான் அவ்வுணர்வு நம்முள் ஆழச் சென்று தைக்கிறது.
இந்தியச் சமூகத்தில் தந்தையுடன் இணக்கமான உறவைப் பேணும் மகன்கள் வெகு அபூர்வம் என்றே தோன்றுகிறது. சு.ரா.வைச் சிறுபிராயத்திலிருந்து வெருட்டிய, அவர் வாழ்நாள் முழுக்கக் கடும் விமர்சனம்கொண்டிருந்த உறவு அவருடைய தந்தையினுடையது. இவ்வுறவோடு அவருக்கு ஏற்பட்ட மன மோதல்களை, முரண்களை அவர் தன் படைப்புகளில் வெவ் வேறு தொனிகளில் வெளிப்படுத்துவதை அப்படைப்புலகோடு விரிவான வாசகவுறவு கொண்டுள்ள பலரும் அறிந்திருக்கக் கூடும். அவரது மொத்த எழுத்துக்களில் பாலு, தந்தையின் சில நிமிட ஸ்பரிசங்களுக்கு ஆளாவது ‘பக்கத்தில் வந்த அப்பா’ என்ற கதையில் மட்டுமே. ஆனால் ‘குழந்தைகள் பெண்கள் ஆண்கள்’ நாவலில் அவர் உருவாக்கும் தந்தையின் சித்திரத்தில் பல்வேறு சாதகமான மாற்றங்களைக் காண முடிகிறது. அது காலம் அவருக்கு அளித்த அனுபவத்தின் வழியாக தன் தந்தையை விலகி நின்று பார்த்ததன் காரணமாக இருக்கக்கூடும்.
யதார்த்தத் தளத்தைக்கொண்டு நுட்பமாக ‘வாசனை’யைப் படைத்திருந்தாலும்கூட அது ஒன்றுக்கு மேற்பட்ட அர்த்த அடுக்குகளைக் கொண்ட கதையே. அதைக் குறியீட்டு ரீதியான வாசிப்புக்குட்படுத்தும்போது முந்தைய வாசிப்பில் சாதாரணமாகக் கடந்து சென்ற இடங்கள் அர்த்தபுஷ்டியுடன் நம்மிடம் நெருங்கி வருவது தெரியும்.கனவு கண்டு மனம் விம்மித்தணிய, ஆக வேண்டும் என எண்ணிய நிலைக்கும் ஊசலாட்டங்களோடு அமைந்துவிட்ட இருப்புக்கும் இடையேயுள்ள, லௌகீக உலகிற்கும் அ -லௌகீக உலகிற்கும் எப்போதும் தீராமல் இருந்துகொண்டிருக்கும் ஓயாத சமரைக் கவித்துவம் மிக்க மொழியின் மூலம் அபூர்வமான சொல்லாட்சிகளோடு,
நுட்பமான கூறுமுறையின் ஊடாக சு.ரா. உருவாக்கியுள்ள
‘ஆத்மாராம் சோயித்ராம்’
கதையையும் கனவுகள் லபிக்காத அன்றாடத்தனங்களின் மீது எரிச்சலும் அலட்சியமும் கொண்டிருக்கும் கதைசொல்லி தன் உலகிற்கு நேரெதிரேயிருந்து வந்து சேரும் மதுக்குஞ்சுவைச் சந்திக்கும் புள்ளியில்
- அவரவரது பின்னணிகளோடு - ஆக்கப்பட்டுள்ள
‘பள்ளம்’ கதையையும் மீண்டும் மீண்டும் வாசித்து அதன் இடைவெளிகளிலுள்ள அர்த்தங்களை வாசகமனம் தானாக நிரப்பிக்கொள்ளும் என்று தோன்றுகிறது.
இத்தொகுப்பின் ஆகச்சிறந்த கதையென ‘கோலம்’ கதையையே சுட்டுவேன்.
தேர்ந்தெடுத்த வண்ணங்களால் இழைக்கப்பட்ட அற்புதமான ஸ்படிக ஓவியம்போலவும் பல இடங்களில் பார்வையாளனின் நுட்பத்தைக் கோரும் அரூப ஓவியம்போலவும் இக்கதையின் காட்சி ரூபங்கள் உள்ளன. கிழவன் கிழவிக்கும் இடையேயுள்ள நேசம், தனிமையில் அவர் கள் நிராதரவாக இருக்க நேர்ந்துவிட்டபோதிலும் அவர்களது ஒரே செல்வம்போல இருக்கும் பேத்தியின் அனுசரணை, பின் அவர்கள் தேடிக்கொள்ளும் முடிவு போன்றவை கூடுதல் குறை வற்ற விவரணைகளாலும் பிசிறற்ற மொழிநடையாலும் நேர்த்தி யாகச் சொல்லப்பட்டுள்ளது.
துக்கத்தின் இழை இக்கதை முழுவதும் பின்னிப்பிணைந்து கிடக்கிறது. இக்கதையை வாசித்ததும் நம்மீது கவிழும் மௌனத்தைப் பெருமூச்சுகளாலேயே கரைக்க இயலும். மனஅமைதியைத் தொந்தரவுக்குட்படுத்தும் ஆற்றல் கொண்டது ‘கோலம்’.
இந்திய மொழிகளில் வெளியான சிறந்த கதைகளோடு வைத்து மதிப்பிடப்பட வேண்டியது ‘காகங்கள்’. சு.ரா.வை அவரது ஊரிலிருந்து பிரித்துப் பார்க்கவே முடியாது என்று தோன்றுகிறது. வெவ்வேறு கதைகளில் வெவ்வேறு பின்னணி யோடு புகைமூட்ட மொழியிலும் தெளிவான சித்தரிப்புகளோடும் மாறிமாறி ஊரின் சித்திரம் வெளிப்பட்டபடியே இருக்கின்றன. (இதில் நினைவோடை நூல்களின் வரிசையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும், குறிப்பாகக் கிருஷ்ணன் நம்பியின் நினைவோடை) அதுபோல ஊரின் வரைபடத்தை நுட்பமாகக் கூறும் கதை எனவும் ‘காகங்கள்’ கதையைக் கூறலாம். மனிதச் சமூகத்தின் வளர்ச்சி காரணமாக இயற்கையுடனிருந்த எண்ணற்ற உறவுச்சங்கிலிகள், பிற உயிர்களிடம் கொண்டிருந்த காருண்யம் மிக்க சினேகம் போன்றவை மிக மோசமான முறையில் சீரழிந்துள்ளன. அவ்வாறு ஒருவழிப் பாதையின் மூலம் காகங்களுக்குக் கிட்டிவந்த உணவு ஒரு அதிகாலையில் இல்லா மல் ஆகும் நிலையை முன்வைத்து மனிதமதிப்பீடுகளின் வீழ்ச்சியையும் அமைப்புகளின் மீது கூரான விமர்சனத்தையும் நுட்பமாக முன்வைக்கும் ஆக்கம் ‘காகங்கள்’.
வெகு அற்புதமாக அவரது மண் சார்ந்த இடக்குகளுடன் படைக்கப்பட்டுள்ள சிறுகதை ‘மேல்பார்வை’. இதில் வரும் கூடைக்காரக் கிழவிக்கும் ஆண்களை ஒழுங்குபடுத்தும் விளையாட்டு வீராங்கனை பொற்கொடிக்கும் இடையேயுள்ள பெரும் காலத்தின் இடைவெளி, அவ்விருவருக்குமுள்ள இருப்பு சார்ந்த இடைவெளி, அப்பெண்ணின் மோவாயைச் செல்லமாக அக்கிழவி கொஞ்சுவதன் மூலம் இல்லாமல் ஆகிவிடுகிறது.
இக்கதையைப் படித்து முடித்த பின்னும் அவ்விருவர் மீதும் நம் பிரியம் சுரந்தபடியேயுள்ளது. இதே தரத்தில் வைத்து அணுகப்பட வேண்டிய கதை ‘நாடார் சார்’. இவ்விரு கதை களும் சு.ரா.வுக்குப் பிடித்தமான எஸ்.எல்.பி. பள்ளியையும் அதன் மைதானத்தையும் மையமாகக் கொண்டு எழுதப்பட்டவை.
பெரும் களேபரத்தின் அடர்த்தியை, ஜனநெரிசலின் மூச்சுத் திணறலை அப்போது மனிதர்களுக்குப் புறஉலகோடு நிகழும் மோதலை சு.ரா. அபாரமான தன் மொழித் தேர்ச்சியால் வாசக மனதில் பீதி படரும்படி செய்துவிடுகிறார். (‘போதை’, ‘பட்டு வாடா’, ‘ஒரு ஸ்டோரியின் கதை’). ‘பட்டுவாடா’ வாசகனையே அக்கூட்டத்திற்குள் சிக்கித் திணறும் ஒருவனாக எண்ணச் செய்யுமளவிற்கு மொழி அமைப்பைக் கொண்டது.
கதையில் மொழியின் சிக்கனம் வியப்பில் ஆழ்த்துகிறது.
(வேலை தண்டவாளத்தில் விழுந்திருந்தது - பட்டுவாடா) இக்கட்டிடம் தன் முதல் தோற்றத்தில் காப்காவின் ‘விசாரணை’யின் நாயகன் யோசப். க. ஓவியனைக் காணச் செல்லும் கட்டிடத்தின் சிறு சாயலைக் கொண்டிருப்பினும்கூட அடுத்தடுத்துக் கட்டிடத்தின் தோற்றத்தை விவரித்துச் செல்கையில் இது சு.ரா.வினால் கட்டப்பட்ட புனைவுலகம் என்பது விளங்குகிறது.
எளிய ஆனால் ஆழமான கதைகளையும் (‘விகாசம்’, ‘மேல் பார்வை’, ‘நாடார் சார்’, ‘ஈசல்கள்’) கதையின் சொல்முறை மற்றும் கருப்பொருள் சார்ந்து முன்னோக்கிச் செல்லும் கதைகளையும்
(‘அழைப்பு’, ‘எதிர்கொள்ளல்’,
‘பட்டுவாடா’) சு.ரா. ஒரே காலத்தில் மாறிமாறி எழுதிவந்திருக்கிறார். எளிமையின் மீது நமக்கு ஒருவித அலட்சியம் உண்டு. எனவேதான் மொழியைச் செயற்கையாகத் திருகுவதன் மூலம் ஒரு கதை அசாதாரணத் தன்மையை அடைந்து விடுகிறது என்ற தப்பெண்ணம் கொண்டிருக்கிறோம். தோற்றத்தில் எளிமையும் உள்ளூர ஆழத்தையும் கொண்ட பல கதைகளைச் சு.ரா. எழுதியிருக்கிறார். அசோகமித்திரனின் படைப்புலகமும் கு. அழகிரிசாமியின் படைப்புலகமும் நமக்கு நுட்பமாக உணர்த்துவதும் அதைத்தான். எழுதத் தெரிவுசெய்யும் விஷயத்தின் கனம் சார்ந்து அந்த விதையின் வீர்யம் சார்ந்தே அப்படைப்புமொழி வெளிப்படும் எனக் கண்டுகொள்ள ஆகச்சிறந்த உதாரணம் சுந்தர ராமசாமியின் சிறுகதைகளின் உலகம் தான்.
சு.ரா.வின் கதையுலகில் காலம் சார்ந்த கணிப்புகள் அல்லது கணக்குகள் அடியோட்டமாக வந்துகொண்டேயிருக் கின்றன. ‘ஓசையின் அதிகபட்ச உச்சியில் நான் என் மனதிற்குள் மாற்று’ என்று சொல்லிக்கொள்ளும் நிமிஷத்தில் கியர்கள் மாறி விழும் - காகங்கள். ‘நான் ஓடி இறங்குவதற்கும் அந்த இடத்தில் அவர்கள் வந்து சேருவதற்கும் சரியாக இருக்கும்’ - வழி. ‘சன்னல்’ கதையில் சில இடங்கள், ‘முட்டைக்காரி’யில் அந்தக் கிழவன் அப்பெண்ணைப் பின்தொடர்ந்து அயர்ச்சியடைந்து மீண்டும் பின்தொடரும் சித்திரத்தில் அக்கால கணிப்புகள் பல இடங்களில் வெளிப்படுகிறது.
மேலும் சில உதாரணங்களைக் கூறி இதை நிறுவ முடியும். தன் மனதில் உள்ள காலம் சார்ந்த கணிப்புகளை வெளியே நிகழும் காலம் சார்ந்த முடிவுகளோடு எப்போதும் தன் மனதில் உரசி ஆராய்ந்தபடியே இருந்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. சு.ரா. இளம்வயதில் படுக்கையில் நீண்டநாட்களைக் கழித்திருந்ததும், நடையின் மேல் தீவிர விருப்பம் கொண்டிருந்தவர் என்பதும் இதற்கு முக்கியமான காரணங்களாக இருக்கக்கூடும்.
மேலும் ‘காலம்’ அவரது எழுத்துகளில் நீங்காது இடம்பெற்றுவிட்ட படிமம்.
சிறு இடைவெளிவிட்டு அவர் சிறுகதைகள் எழுதியதை ‘ஆரோக்கியம் எழுதிய கதைகள்’ என அழைத்தார். சொகுசாக நிழலில் ஒதுங்கி இளைப்பாறும் மூப்பையோ தேக்கத்தையோ அவரது இக்கதைகள் அடையவேயில்லை என்பதோடல்லாமல் புதிய களங்களை, புதிய மொழியை நோக்கி அவர் முன்னகர்ந்திருப்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
ஏனெனில் அவர் ஓயாமல் வாசித்துக்கொண்டேயிருந்தார். எழுத்து சார்ந்து பெரிய கனவைக்கொண்டிருந்தார்.
அமெரிக்க வாழ்க்கை சார்ந்த சுயஅனுபவங்களை வியப்போடும் அக்கறையோடும் சூட்சுமத்தோடும் நுட்பமாக எழுதினார்
(‘களிப்பு’, ‘தனுவும் நிஷாவும்’, ‘மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம்’). இதில் பெரும்பாலான பாத்திரங்கள் தங்கள் சொந்தப் பெயரிலேயே கதைக்குள் உலவினார்கள். இதற்கு முன் சு.ரா.விடம் இல்லாத அம்சம் இது. கச்சிதமான யதார்த்தக் கதைகளான ‘கதவுகளும் ஜன்னல் களும்’, ‘ஈசல்கள்’, ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ போன்றவை அவர் இறுதிக்காலத்தில் எவ்வளவு தீவிரமாகச் செயல்பட்டார் என்பதற்கும் கலையின் மீது அவருக்கிருந்த பிடிப்பும் ஆற்றலும் சிறிதுகூட மங்கியிருக்கவில்லை மாறாக கூடுதல் ஒளியினை அடைந்தன என்பதற்கும் படைப்புச் சாட்சியங்களாக இக்கதைகள் உள்ளன. (இதில் ‘ஈசல்கள்’ கதையையும் ‘பிள்ளை கெடுத்தாள் விளை’ கதையையும் பக்கநெருக்கடி காரணமாக தொகுப்பில் சேர்க்க முடியவில்லை.)
சு.ரா.வின் மொத்தக் கதையுலகமே ஒன்றுக்கொன்று தொடர்பற்ற வெவ்வேறான நிறங்களையும் தனக்கேயுரிய பிரத்யேகத் தன்மைகளையும் கொண்டு இயங்கக் கூடியது. எந்த வாசகனையும் தன் தற்போதைய இருப்பின்மீது சந்தேகத்தைக் கிளப்பி வாழ்க்கை பற்றிய போதாமைகளை நுட்பமாக உணர்த்தி அவன் கூர்மதி கொள்ள அவனுக்கு மனத்தூண்டலை அளிப்பவை இக்கதைகள். மொழியின் சாத்தியத்தை இந்தளவிற்கு விரித்த படைப்பாளிகள் தமிழில் மிகக் குறைவு. எழுத்தின் மீது சு.ரா. கொண்டிருந்த தீராத வேட்கையின், ஓயாத தேடலின் விளைவுகளே அவரது படைப்புலகம். அதனாலேயே அது எண்ணற்ற வாயில்களுடன் நம்மை வரவேற்கிறது. அவ்வாறான கதைகளைத் தந்த கலைஞனின் கதைத்தொகுதியின் முன் உங்களை நிறுத்துவதில் பெருமிதம் கொள்கிறேன்.
(காலச்சுவடு பதிப்பக வெளியீடான சு.ரா வின் “வாசனை”-க்கு கதைகளைத் தேர்ந்தெடுத்து தொகுத்து எழுதிய முன்னுரை)